அல்கஹ்ஃப் – குகை

அத்தியாயம் : 18

வசனங்களின் எண்ணிக்கை: 110

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1, 2, 3. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவனது கடுமையான தண்டனை பற்றி எச்சரிப்பதற்காகவும், ‘நற்செயல்கள் செய்யும் இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்கூலி உண்டு; அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள்’ என நற்செய்தி கூறுவதற்காகவும், அவனே நேரிய இவ்வேதத்தைத் தன் அடியாருக்கு அருளினான். அதில் எவ்விதக் கோணலையும் அவன் ஏற்படுத்தவில்லை.
4. ‘அல்லாஹ், (தனக்குப்) பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்’ என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவே (இதை அருளினான்.)
5. அவர்களுக்கும், அவர்களின் முன்னோருக்கும் இதுபற்றி எந்த அறிவும் இல்லை. அவர்களின் வாய்களிலிருந்து வெளிப்படும் வார்த்தையில் இது மிகக் கடுமையானது. அவர்கள் பொய்யைத் தவிர எதையும் கூறவில்லை.
6. (நபியே!) இந்தச் செய்தியை அவர்கள் நம்பாததால் அவர்களின் போக்கின்மீது கவலைப்பட்டு உம்மையே மாய்த்துக் கொள்வீர் போலும்!
7. அவர்களில் நற்செயலுடையவர் யார் என அவர்களை நாம் சோதிப்பதற்காக இப்பூமிக்கு அதன்மீதுள்ளவற்றை அலங்காரமாக ஆக்கியுள்ளோம்.
8. நாம் அதில் உள்ளவற்றை (அழித்து)த் தரிசு நிலமாகவும் ஆக்கி விடுவோம்.
9. குகை மற்றும் ஏட்டுக்குரியோர் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியமானோராக இருந்தனர் என நீர் கருதுகிறீரா?
10. அந்த இளைஞர்கள் குகையில் தஞ்சமடைந்தபோது “எங்கள் இறைவனே! உன்னிடமிருந்து அருளை எங்களுக்குத் தருவாயாக! எங்கள் காரியத்தில் எங்களுக்கு நேர்வழியை எளிதாக்குவாயாக!” என்று பிரார்த்தித்தனர்.
11. எனவே, அக்குகையில் ஆண்டுக்கணக்கில் (உறங்குவதற்காக) அவர்களின் காதுகளை அடைத்தோம்.
12. பின்னர், அவர்கள் தங்கியிருந்த காலத்தை இரு பிரிவினரில் துல்லியமாகக் கணக்கிடுபவர் யார் என்பதை நாம் வெளிப்படுத்துவதற்காக அவர்களை எழுப்பினோம்.
13. அவர்களைப் பற்றிய செய்தியை உண்மையுடன் உமக்கு எடுத்துரைக்கிறோம். அவர்கள் தமது இறைவனை நம்பிய இளைஞர்கள். அவர்களுக்கு நேர்வழியை அதிகரித்தோம்.
14. “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனே எங்கள் இறைவன். அவனையன்றி வேறு கடவுளை நாங்கள் பிரார்த்திக்க மாட்டோம். அப்படிச் செய்தால் அநியாயமான கூற்றைக் கூறியவர்களாவோம்” என அவர்கள் (துணிவுடன்) நின்று கூறியபோது அவர்களின் உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.
15. “நமது சமுதாயத்தினரான இவர்கள் அவனையன்றி வேறு கடவுள்களை எடுத்துக் கொண்டனர். இவற்றுக்குத் தெளிவான ஆதாரத்தை அவர்கள் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்?”
16. “இவர்களை விட்டும், அல்லாஹ்வையன்றி இவர்கள் வணங்கிக் கொண்டிருப்பவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளும்போது குகையில் தஞ்சமடையுங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்கு வாரி வழங்குவான். உங்கள் காரியத்தை உங்களுக்கு மிக எளிதாக்குவான்” (என்றும் கூறினர்.)
17. அவர்கள் அக்குகையின் விசாலமான பகுதியில் இருக்கும் நிலையில் சூரியன் உதிக்கும்போது, அது அவர்களின் குகைக்கு வலது புறமாகச் சாய்வதையும், மறையும்போது அது இடது புறமாக அவர்களைக் கடந்து செல்வதையும் நீர் காண்பீர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளதாகும். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். யாரை அவன் வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவருக்கு நேர்வழி காட்டும் எந்தப் பொறுப்பாளரையும் நீர் காண மாட்டீர்.
18. அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோதும் விழித்துக் கொண்டிருப்பதாகவே கருதுவீர். அவர்களை வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் புரட்டுகிறோம். அவர்களின் நாய் தனது இரு முன்னங்கால்களையும் விரித்துக் கொண்டு வாசலில் இருக்கின்றது. நீர் அவர்களை உற்றுப் பார்த்தால் அவர்களை விட்டும் பின்வாங்கி, வெருண்டு ஓடியிருப்பீர். மேலும் அவர்களால் திகிலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பீர்.
19, 20. இவ்வாறே, அவர்கள் தமக்கிடையே விசாரித்துக் கொள்வதற்காக அவர்களை எழுப்பினோம். அவர்களில் ஒருவர், “நீங்கள் எவ்வளவு (நாள்) தங்கியிருந்தீர்கள்?” எனக் கேட்டார். “நாம் ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் தங்கியிருப்போம்” என்று பதிலளித்தனர். “நீங்கள் தங்கியிருந்ததை உங்கள் இறைவனே நன்கறிவான். உங்களுடைய இந்த வெள்ளிக் காசுடன் உங்களில் ஒருவரை நகரத்திற்கு அனுப்புங்கள்! தூய உணவு எதுவென அவர் கவனித்து, அதிலிருந்து உங்களுக்கு உணவை வாங்கி வரட்டும். அவர் நளினமாக நடந்து கொள்ளட்டும். யாரிடமும் உங்களைப் பற்றி அவர் தெரிவித்துவிட வேண்டாம். அவர்கள் உங்களைத் தெரிந்து கொண்டால் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவார்கள். அல்லது உங்களைத் தமது மார்க்கத்திற்குத் திருப்பி விடுவார்கள். அப்படி நடந்தால் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெறவே மாட்டீர்கள்” என்று சிலர் கூறினர்.
21. அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதையும், உலகம் அழியும் நேரமானது எந்தச் சந்தேகமும் இல்லாதது என்பதையும் அ(வ்வூரிலுள்ள)வர்கள் அறிந்து கொள்வதற்காக இவ்வாறே (குகைவாசிகளான) அவர்களை வெளிப்படுத்தினோம். அவர்களின் விஷயத்தில் அம்மக்கள் தமக்கிடையே தர்க்கித்துக் கொண்டபோது “அவர்கள்மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள். அவர்களைப்பற்றி அவர்களின் இறைவனே நன்கறிந்தவன்” என்று சிலர் கூறினர். “அவர்கள்மீது ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்துவோம்” என்று அவர்களின் விஷயத்தில் மிகைத்தவர்கள் கூறினர்.
22. “(குகைவாசிகள்) மூன்று பேர், அவர்களில் நான்காவது அவர்களின் நாய்” என்று இவர்கள் கூறுகிறார்கள். “ஐந்து பேர், அவர்களில் ஆறாவது அவர்களின் நாய்” என்று மறைவான விஷயத்தை ஊகமாகக் கூறுகிறார்கள். “ஏழு பேர், அவர்களில் எட்டாவது அவர்களின் நாய்” என்றும் கூறுகிறார்கள். “அவர்களின் எண்ணிக்கையை என் இறைவனே நன்கறிந்தவன். குறைவானவர்களைத் தவிர மற்றவர்கள் அவர்களை அறிய மாட்டார்கள்” என்று (நபியே!) கூறுவீராக! வெளிப்படையாகத் தெரிந்ததைத் தவிர அவர்களைப் பற்றித் தர்க்கம் செய்யாதீர்! மேலும், அவர்களைப் பற்றி இவர்கள் யாரிடமும் நீர் விபரம் கேட்க வேண்டாம்.
23, 24. எந்த விஷயத்திற்கும் ‘அல்லாஹ் நாடினால்’ (என்று சேர்த்துச் சொல்லியே) தவிர “நாளை நான் இதைச் செய்வேன்” என்று கூறாதீர்!! நீர் மறந்து விட்டால் உமது இறைவனை நினைவுகூர்வீராக! “இதைவிட நெருக்கமானதற்கு என் இறைவன் எனக்குச் சரியான வழியைக் காட்டலாம்” என்று கூறுவீராக!
25. அவர்கள் தமது குகையில் முந்நூறு ஆண்டுகள் தங்கினார்கள். மேலும் ஒன்பதை அதிகப்படுத்தினார்கள்.
26. “அவர்கள் தங்கியிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன். வானங்களிலும் பூமியிலும் மறைவானவை (பற்றிய ஞானம்) அவனுக்கே உரியது. அவன் எவ்வளவு நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவு நன்றாகக் கேட்பவன்! அவர்களுக்கு அவனையன்றி எந்தப் பாதுகாவலரும் இல்லை. தன்னுடைய அதிகாரத்தில் அவன் எவரையும் இணையாக்கிக் கொள்ள மாட்டான்” என்று கூறுவீராக!
27. (நபியே!) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை எடுத்துரைப்பீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவர் எவருமில்லை. அவனையன்றி எந்தப் புகலிடத்தையும் நீர் காணவே மாட்டீர்.
28. தமது இறைவனின் பொருத்தத்தை நாடி காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்திப்பவர்களுடன் உம்மை நிலைநிறுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்வின் அலங்காரத்தை நாடி அவர்களை விட்டும் உம் கண்கள் திரும்பிவிட வேண்டாம். நம்மை நினைப்பதை விட்டும் யாருடைய உள்ளத்தைக் கவனமற்றதாக்கி விட்டோமோ அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது சுய விருப்பத்தைப் பின்பற்றினான். அவனது காரியம் வரம்பு மீறியதாகி விட்டது.
29. “இந்த உண்மை உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ளது. விரும்புபவர் (இதை) நம்பிக்கை கொள்ளட்டும்; விரும்புபவர் மறுக்கட்டும். அநியாயக்காரர்களுக்கு நரகத்தைத் தயார்படுத்தியுள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் உதவி தேடினால், அவர்களுக்கு உருக்கப்பட்ட உலோகத்தைப் போன்ற தண்ணீர் வழங்கப்படும். அது அவர்களின் முகங்களைப் பொசுக்கி விடும். பானத்தில் அது கெட்டது. ஓய்விடத்தில் அது மோசமானது” என்று கூறுவீராக!
30. யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ அத்தகைய நற்செயல் செய்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
31. நிலையான சொர்க்கங்கள் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடும். அங்கு அவர்களுக்குத் தங்கக் காப்புகள் அணிவிக்கப்படும். அவர்கள் பச்சை நிற மெல்லிய பட்டாடைகளையும், அடர்த்தியான பட்டாடைகளையும் அணிவார்கள். அங்குச் சாய்மானங்களின்மீது சாய்ந்திருப்பார்கள். இது சிறந்த கூலியும், அழகிய ஓய்விடமும் ஆகும்.
32. அவர்களுக்கு இரு மனிதர்களை எடுத்துக்காட்டாகக் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு இரண்டு திராட்சைத் தோட்டங்களைக் கொடுத்தோம். அவற்றைச் சுற்றிலும் பேரீச்சை மரங்களை அமைத்தோம். அவ்விரண்டுக்கும் இடையே பயிர்களையும் அமைத்தோம்.
33. அவ்விரு தோட்டங்களும் தமது விளைச்சலைக் கொடுத்தன. அதில் அவை எந்தக் குறையும் வைக்கவில்லை. அவ்விரண்டுக்கும் இடையே ஆற்றைப் பாய்ந்தோடச் செய்தோம்.
34. அவனுக்கு இன்னும் பல விளைச்சல்களும் இருந்தன. அவன் தன் நண்பருடன் கலந்துரையாடும்போது, “நான் உன்னைவிட அதிக செல்வத்தைக் கொண்டவன்; ஆட்களாலும் வலிமை மிக்கவன்” என்று கூறினான்.
35, 36. அவன் தனக்குத்தானே அநியாயம் செய்தவனாகத் தன் தோட்டத்திற்குள் நுழைந்து “இது ஒருபோதும் அழிந்து விடுமென நான் எண்ணவில்லை. உலகம் அழியும் நேரம் ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. நான் என் இறைவனிடம் கொண்டு செல்லப்பட்டாலும் இதைவிடச் சிறந்த இடத்தையே பெற்றுக் கொள்வேன்” என்று கூறினான்.
37, 38. “உன்னை மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும் படைத்து, பிறகு உன்னை மனிதனாக ஒழுங்குபடுத்தினானே அவனையா நீ மறுக்கிறாய்? மாறாக, அவனே என் இறைவனாகிய அல்லாஹ்! என் இறைவனுக்கு யாரையும் நான் இணையாக்க மாட்டேன்” என்று அவனுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த அவனது நண்பர் கூறினார்.
39, 40, 41. “உன் தோட்டத்தில் நீ நுழைந்தபோது ‘அல்லாஹ் நாடியதே நடக்கும். அல்லாஹ்வின் உதவியின்றி (எங்களுக்கு) எந்த ஆற்றலும் இல்லை’ என்று கூறியிருக்க வேண்டாமா?299 பொருளாதாரத்திலும் பிள்ளைச் செல்வத்திலும் உன்னைவிடக் குறைந்தவனாக என்னை நீ கருதினால், உனது தோட்டத்தைவிடச் சிறந்ததை என் இறைவன் எனக்கு வழங்கக் கூடும். மேலும் வானிலிருந்து அழிவை அதன்மீது இறக்கி, அதனால் அது வழுக்கும் வெட்டவெளியாக ஆகிவிடலாம். அல்லது அதிலுள்ள தண்ணீர் வற்றிப் போய், அதை உன்னால் தேடிக் கண்டுபிடிக்க இயலாமல் போகலாம்” (என்றும் கூறினார்.)
42. அவனது விளைச்சல்கள் சுற்றி வளைக்கப்பட்டன. அது அடியோடு வீழ்ந்து கிடக்கும் நிலையில், அதற்காக அவன் செலவிட்டதைப் பற்றி (கவலைப்பட்டு) தன் கைககளைப் பிசைந்தவனாக, “என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்காது இருந்திருக்க வேண்டுமே!” என்று கூறினான்.
43. அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் எந்தக் கூட்டத்தினரும் இருக்கவில்லை. தனக்கே உதவக் கூடியவனாகவும் அவன் இருக்கவில்லை.
44. அவ்விடத்தில் உண்மையாளன் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உரியது. அவன் கூலி வழங்குவதில் சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் சிறந்தவன்.
45. இவ்வுலக வாழ்வுக்கான உதாரணத்தை அவர்களிடம் கூறுவீராக! (அது) வானிலிருந்து நாம் இறக்கிய மழையைப் போன்றது. அதனுடன் பூமியின் தாவரங்கள் கலந்தன. பின்னர் அவை (காய்ந்து) சருகுகளாக ஆயின. அவற்றைக் காற்று அடித்துச் செல்கிறது. ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் அலங்காரமே! நிலைத்து நிற்கும் நற்செயல்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், ஆதரவு வைப்பதில் சிறந்ததுமாகும்.
47. அந்நாளில் நாம் மலைகளைப் பெயர்த்து விடுவோம். பூமியைச் சமதளமாக நீர் காண்பீர். அவர்களை ஒன்றுதிரட்டுவோம்; அவர்களில் எவரையும் விட்டு வைக்க மாட்டோம்.300
48. அவர்கள் உமது இறைவன் முன்பு வரிசையாக நிறுத்தப்படுவார்கள். “தொடக்கத்தில் நாம் உங்களைப் படைத்ததைப் போன்றே நம்மிடம் வந்துள்ளீர்கள். ஆனால், உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரத்தை நாம் ஏற்படுத்தவே மாட்டோம் என்றுதானே நீங்கள் கருதிக் கொண்டிருந்தீர்கள்?” (என இறைவன் கேட்பான்.)
49. பதிவேடு வைக்கப்படும். குற்றவாளிகள் அதிலுள்ளவற்றைக் கண்டு பயந்து கொண்டிருப்பதை நீர் காண்பீர். “எங்களுக்கு ஏற்பட்ட கேடே! இந்த ஏட்டிற்கு என்ன நேர்ந்தது? சிறியதோ, பெரியதோ எதையும் பதியாமல் விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள். தாம் செய்தவற்றை நேரில் பார்ப்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநியாயம் செய்ய மாட்டான்.
50. நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று கூறியபோது, இப்லீஸைத் தவிர மற்றவர்கள் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அவன் தனது இறைவனின் ஆணைக்கு மாறு செய்தான். என்னை விட்டுவிட்டு அவனையும், அவனது வழித்தோன்றல்களையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்கள். அநியாயக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டது.
51. வானங்கள், பூமியைப் படைத்ததற்கும், அவர்களைப் படைத்ததற்கும் அவர்களை நான் சாட்சியாக்கவில்லை. வழிகெடுப்பவர்களை நான் உதவியாளராக எடுத்துக் கொள்வதில்லை.
52. “எனக்கு இணையானவர்களாக நீங்கள் கருதிக் கொண்டிருந்தவர்களை அழையுங்கள்!” என்று அந்நாளில் அவன் கூறுவான். அப்போது அவர்க(ளின் இணைக்கடவுள்க)ளை இவர்கள் அழைப்பார்கள். ஆனால் அவர்களோ இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். அவர்களுக்கிடையே ஒரு தடையை ஏற்படுத்துவோம்.
53. குற்றவாளிகள் நரகத்தைக் கண்டு, தாங்கள் அதில் விழப் போகிறோம் என்பதை அறிந்து கொள்வார்கள். அதிலிருந்து தப்பிக்கும் இடத்தைக் காண மாட்டார்கள்.
54. இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு உதாரணத்தையும் விவரித்துள்ளோம். மனிதன் அதிகமானவற்றில் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.301
55. மனிதர்களிடம் நேர்வழி வந்தபோது, அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, தமது இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருவதற்குத் தடையாக இருந்ததெல்லாம் முன்சென்றோர் (தண்டிக்கப்பட்ட) வழிமுறை தம்மிடம் வர வேண்டும்; அல்லது நேரடியாகத் தம்மிடம் வேதனை வர வேண்டும் என்பதற்காகத் தான்.
56. தூதர்களை, நற்செய்தி கூறுவோராகவும் எச்சரிப்பவர்களாகவும் அனுப்பியுள்ளோம். இறைமறுப்பாளர்கள் பொய்யைக் கொண்டு உண்மையை அழிப்பதற்காகப் பொய்யின் மூலமே வாதிடுகின்றனர். எனது வசனங்களையும், அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதையும் கேலியாக எடுத்துக் கொள்கின்றனர்.
57. தனது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டும், அவற்றைப் புறக்கணித்துத், தன் கைகள் முற்படுத்தியதை மறந்தவனைவிட அநியாயக்காரன் யார்? அதை அவர்கள் விளங்க முடியாதவாறு அவர்களின் உள்ளங்களில் திரைகளையும், காதுகளில் செவிடையும் ஏற்படுத்தியுள்ளோம். இந்நிலையில் அவர்களை நீர் நேர்வழிக்கு அழைத்தாலும் அவர்கள் ஒருபோதும் நேர்வழிக்கு வர மாட்டார்கள்.
58. உமது இறைவன் மன்னிப்புமிக்கவன்; கருணையுடையவன். அவர்கள் செய்தவற்றின் காரணமாக அவர்களை அவன் பிடிப்பதாக இருந்தால் அவர்களுக்குத் தண்டனையை விரைவுபடுத்தியிருப்பான். மாறாக அவர்களுக்கென வாக்களிக்கப்பட்ட நேரம் உள்ளது. அவனையன்றி எந்தப் புகலிடத்தையும் அவர்கள் காண மாட்டார்கள்.
59. அவ்வூர்களிலுள்ளவர்கள் அநியாயம் செய்தபோது அவர்களை அழித்தோம். அவர்களை அழிப்பதற்காக ஒரு தவணையையும் ஏற்படுத்தினோம்.
60. “இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தை நான் அடையும் வரையிலோ அல்லது நீண்ட காலத்தைக் கடக்கும் வரையிலோ (பயணத்தைத்) தொடர்ந்து கொண்டே இருப்பேன்” என்று மூஸா தமது பணியாளரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
61. அவ்விரண்டும் சங்கமிக்கும் இடத்தை அவர்கள் அடைந்தபோது தமது மீனை மறந்து விட்டனர். அது தனது பாதையைக் கடலில் சுரங்கமாக அமைத்துக் கொண்டது.
62. இருவரும் (அவ்விடத்தைக்) கடந்து விட்டபோது, “நமது காலை உணவை நம்மிடம் எடுத்து வா! நமது இப்பயணத்தில் களைப்படைந்து விட்டோம்” என்று அவர் தம் பணியாளரிடம் கூறினார்.
63. “அந்தப் பாறையில் நாம் ஓய்வெடுத்தபோது கவனித்தீரா? அப்போது நான் அந்த மீனை மறந்து விட்டேன். நான் அதை (உம்மிடம்) கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கடித்து விட்டான். ஆச்சரியமான முறையில் அது கடலில் தன் பாதையை அமைத்துக் கொண்டது” என்று (பணியாளர்) கூறினார்.
64. “நாம் தேடிக் கொண்டிருந்த இடம் அதுதான்” என்று (மூஸா) கூறினார். எனவே அவ்விருவரும் தமது அடிச்சுவடுகளைப் பின்பற்றித் திரும்பிச் சென்றனர்.
65. அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கி, நம்மிடமிருந்து கல்வியையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.302
66. “உமக்குக் கற்றுத் தரப்பட்ட நல்லவற்றை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின்தொடரலாமா?” என அவரிடம் மூஸா கேட்டார்.
67, 68. “என்னுடன் பொறுமையாக இருக்க உம்மால் இயலாது. உம்மால் முழுமையாக அறிய முடியாதவற்றில் எவ்வாறு பொறுமையாக இருப்பீர்?” என்று அவர் கேட்டார்.
69. “அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையுடையவனாகக் காண்பீர். எந்த விஷயத்திலும் உமக்கு மாறு செய்ய மாட்டேன்” என்று (மூஸா) கூறினார்.
70. “நீர் என்னைப் பின்தொடர்ந்தால், எந்த விஷயத்திற்கும் நானே உமக்கு விளக்கம் கூறாத வரை அதைப் பற்றி என்னிடம் நீர் கேட்கக் கூடாது” என்று அவர் கூறினார்.
71. இருவரும் நடந்து சென்று, முடிவில் ஒரு கப்பலில் ஏறியபோது அவர் அதில் துளையிட்டார். “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா இதில் துளையிட்டீர்? பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டீர்” என்று (மூஸா) கூறினார்.
72. “என்னுடன் பொறுமையாக இருக்க உம்மால் இயலாது என்று நான் கூறவில்லையா?” என (மூஸாவிடம்) அவர் கேட்டார்.
73. “நான் மறந்துவிட்டதற்காக என்னைக் குற்றம் பிடிக்காதீர்! என் விஷயத்தில் என்னைச் சிரமத்தில் ஆழ்த்தி விடாதீர்!” என்று (மூஸா) கூறினார்.303
74. இருவரும் சென்று முடிவில் ஓர் இளைஞனைச் சந்தித்தபோது, அவர் அவனைக் கொன்று விட்டார். “உயிர் (கொலை)க்குப் பகரமாக இல்லாமல், ஒரு தூய்மையான உயிரைக் கொன்று விட்டீரே! மோசமான காரியத்தைச் செய்து விட்டீர்!” என்று (மூஸா) கூறினார்.
75. “என்னுடன் பொறுமையாக இருக்க உம்மால் இயலாது என்று நான் உம்மிடம் கூறவில்லையா?” என (மூஸாவிடம்) அவர் கேட்டார்.
76. “இதற்குப் பின் எந்த விஷயத்தைப் பற்றியாவது உம்மிடம் நான் கேட்டால் என்னை நீர் சேர்த்துக் கொள்ள வேண்டாம். (பிரிவதற்கான) காரணத்தை என்னிடமிருந்து நீர் அடைந்து விட்டீர்” என்று (மூஸா) கூறினார்.
77. இருவரும் சென்று முடிவில் ஓர் ஊராரிடம் வந்தபோது, தமக்கு உணவளிக்குமாறு அவர்களிடம் வேண்டினர். ஆனால் அவர்கள், அவ்விருவருக்கும் விருந்தளிப்பதற்கு மறுத்து விட்டனர். அங்கு ஒரு சுவர் விழும் தருவாயில் இருப்பதை இருவரும் கண்டனர். அவர் அதை (விழாதவாறு) நிலைநிறுத்தினார். “நீர் விரும்பினால் இதற்கான கூலியைப் பெற்றிருக்கலாமே!” என்று (மூஸா) கூறினார்.
78. “எனக்கும் உமக்கும் இடையில் இதுதான் பிரிவாகும். எந்த விஷயத்தில் நீர் பொறுமை காக்க இயலவில்லையோ அதற்கான விளக்கத்தை உமக்கு அறிவிக்கப் போகிறேன்” என்று அவர் கூறினார்.
79. “அந்தக் கப்பல், கடலில் வேலை செய்யும் ஏழைகளுக்கு உரியது. நான் அதைச் சேதப்படுத்த நாடினேன். (ஏனெனில்) அவர்களுக்கு அப்பால் ஒரு மன்னன் இருக்கிறான். அவன் ஒவ்வொரு (நல்ல) கப்பலையும் கைப்பற்றிக் கொள்வான்.
80, 81. “அந்த இளைஞனின் பெற்றோர் இருவரும் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தனர். அவன் அவ்விருவரையும் வரம்பு மீறுவதிலும், இறைமறுப்பிலும் தள்ளிவிடுவான் என்று அஞ்சினோம். எனவே, அவ்விருவருக்கும் தூய்மையில் அவனைவிடச் சிறந்த, அன்பு செலுத்துவதில் நெருக்கமான ஒருவனை அவர்களின் இறைவன் ஈடாகக் கொடுப்பதை விரும்பினோம்”
82. “அந்தச் சுவர், அந்நகரத்திலுள்ள இரு அநாதைச் சிறுவர்களுக்கு உரியது. அதற்குக் கீழே அவர்களுக்குரிய புதையல் இருந்தது. அவர்களின் தந்தை நல்லவராக இருந்தார். எனவே அவ்விருவரும் பருவ வயதை அடைந்து, உமது இறைவனின் அருளால் தமக்குரிய புதையலை அவர்கள் வெளியே எடுத்துக் கொள்ள வேண்டும் என உமது இறைவன் விரும்பினான். இதை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. எதில் நீர் பொறுமை காக்க இயலவில்லையோ அதற்கான விளக்கம் இதுதான்” (என அவர் கூறினார்.)
83. (நபியே!) உம்மிடம் துல்கர்னைன் பற்றியும் கேட்கின்றனர். “அவரைப் பற்றிய விபரத்தை உங்களுக்கு நான் எடுத்துரைப்பேன்” என்று கூறுவீராக!
84. நாம் பூமியில் ஆட்சியதிகாரத்தை அவருக்குக் கொடுத்தோம். ஒவ்வொன்றுக்குமான வழியையும் அவருக்கு வழங்கினோம்.
85. அவர் ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
86. இறுதியில், சூரியன் மறையுமிடத்தை அவர் அடைந்தபோது, சேற்றுத் தண்ணீரில் அது மறைவதைக் கண்டார். அதற்கருகில் ஒரு சமுதாயத்தையும் கண்டார். “துல்கர்னைனே! நீர் (அவர்களை) தண்டிக்கலாம்; அல்லது அவர்கள் விஷயத்தில் நீர் நல்லதை எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினோம்.
87, 88. “நாம் அநியாயம் செய்பவனைத் தண்டிப்போம். பின்னர் அவன் தன் இறைவனிடம் கொண்டு செல்லப்படுவான். அப்போது அவனை இறைவன் மிகக் கடுமையாகத் தண்டிப்பான். இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்பவருக்கு நற்கூலி இருக்கிறது. நமது கட்டளையில் எளிதானதை அவருக்குக் கூறுவோம்” என்று (துல்கர்னைன்) கூறினார்.
89. பின்னர் அவர் ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
90. இறுதியில், அவர் சூரியன் உதிக்கும் இடத்தை அடைந்தபோது, அது ஒரு சமுதாயத்தின்மீது உதிப்பதைக் கண்டார். நாம் அவர்களுக்கு அதை விட்டும் (காத்துக்கொள்ளத்) தடுப்பு எதையும் ஏற்படுத்தவில்லை.
91. இவ்வாறே (அவர்களின் நிலை இருந்தது). மேலும் அவரிடம் உள்ளவற்றை முழுமையாக அறிந்திருந்தோம்.
92. பின்னர் அவர் ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
93. இறுதியில், இரண்டு மலைகளுக்கிடையேயுள்ள இடத்தை அவர் அடைந்தபோது அதன் அருகில் ஒரு சமுதாயத்தை கண்டார். அவர்கள், (பிறர்) பேசுவதைப் புரிந்து கொள்ள இயலாதோராக இருந்தனர்.
94. “துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் பூமியில் குழப்பம் செய்கின்றனர். எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் ஒரு தடுப்புச் சுவரை நீர் எழுப்புவதற்காக உமக்கு நாங்கள் ஒரு தொகையைத் தரலாமா?” என்று அவர்கள் கேட்டனர்.304
95, 96. “என் இறைவன் எனக்குத் தந்திருப்பதே சிறந்தது. எனவே (ஆள்) பலத்தைக் கொண்டு எனக்கு உதவுங்கள். உங்களுக்கும் அவர்களுக்குமிடையே உறுதியான தடுப்பை அமைக்கிறேன். இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று அவர் கூறினார். இறுதியாக, இரண்டு மலைகளின் உச்சி வரையிலான இடைவெளியை அவர் சமப்படுத்தியதும், “ஊதுங்கள்!” என்றார். அதை நெருப்புக் கங்காக ஆக்கியபோது, “உருக்கிய செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள். இதன்மீது ஊற்றுவேன்” என்று கூறினார்.
97. அவர்களால் அதில் ஏற இயலாது; அதில் துவாரமிடவும் இயலாது.
98. “இது என் இறைவனிடமிருந்துள்ள அருளாகும். என் இறைவனின் வாக்குறுதி வரும்போது இதை அவன் தூள் தூளாக்குவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானதாக உள்ளது” என்று கூறினார்.
99. அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் அலைமோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்களை மொத்தமாக ஒன்று சேர்ப்போம்.
100. அந்நாளில் இறைமறுப்பாளர்களுக்கு உறுதியாக நரகத்தை எடுத்துக் காட்டுவோம்.
101. என்னை நினைவு கூர்வதை விட்டும் அவர்களின் கண்கள் திரைக்குள் இருந்தன. அவர்கள் (அறிவுரைகளைச்) செவியேற்க இயலாதோராகவும் இருந்தனர்.
102. என்னை விட்டுவிட்டு, என் அடியார்களைப் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ள இறைமறுப்பாளர்கள் எண்ணுகிறார்களா? இறை மறுப்பாளர்களுக்குத் தங்குமிடமாக நரகத்தைத் தயார்படுத்தியுள்ளோம்.
103. “செயல்களில் மிக நஷ்டமடைந்தோரைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கவா?” என்று (நபியே!) கேட்பீராக!305
104. அவர்கள் யாரெனில், இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி பயனற்றுப் போனது. அவர்களோ, தாம் நற்செயல் புரிவதாக எண்ணிக் கொள்கின்றனர்.
105. அவர்கள்தான், தம் இறைவனின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் மறுத்தவர்கள். அதனால் அவர்களின் செயல்கள் அழிந்து விட்டன. எனவே மறுமை நாளில் அவர்களுக்காக எந்த எடையையும் நிறுவ மாட்டோம்.306
106. இதுவே அவர்களுக்குரிய நரகமெனும் கூலியாகும். அவர்கள் (என்னை) மறுத்து, என் வசனங்களையும் எனது தூதர்களையும் கேலியாகக் கருதியதே இதற்குக் காரணம்.
107. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தவர்களுக்குத் தங்குமிடமாக ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கங்கள் உள்ளன.307
108. அதில் நிரந்தரமாக இருப்பார்கள்; அங்கிருந்து இடம் மாறிச் செல்வதை விரும்ப மாட்டார்கள்.
109. “என் இறைவனின் வார்த்தைகளுக்காக, கடல் (முழுதும்) மையாக ஆனாலும் என் இறைவனின் வார்த்தைகள் (எழுதி) முடிவற்கு முன் அக்கடல் தீர்ந்து விடும். அதுபோன்ற மற்றொன்றை நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரியே!” என்று கூறுவீராக!308
110. “நான் உங்களைப் போன்ற மனிதனே! ‘உங்கள் கடவுள் ஒரே கடவுள்தான்’ என்று எனக்கு (தூதுச்செய்தி) அறிவிக்கப்படுகிறது. எனவே தமது இறைவனைச் சந்திக்க விரும்புபவர் நற்செயல் செய்யட்டும். தமது இறைவனை வணங்குவதில் யாரையும் அவர் இணையாக்க வேண்டாம்” என்று (நபியே!) கூறுவீராக! 309