அல்ஹஜ் – ஹஜ் எனும் வணக்கம்

அத்தியாயம் : 22

வசனங்களின் எண்ணிக்கை: 78

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! உலகம் அழியும் நேரத்தின் அதிர்ச்சி பயங்கரமான நிகழ்வாகும்.335
2. அதை நீங்கள் பார்க்கும் நாளில், பாலூட்டும் ஒவ்வொரு பெண்ணும், தான் எதற்குப் பாலூட்டினாளோ அதை மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும் தனது கருவைப் பிரசவித்து விடுவாள். நீர் மக்களைப் போதையில் இருப்பவர்களாகக் காண்பீர். ஆனால் அவர்கள் போதையில் இருப்போர் அல்ல! மாறாக, அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானது.
3. மனிதர்களில், அல்லாஹ்வைப் பற்றி அறிவின்றித் தர்க்கம் செய்வோரும் உள்ளனர். அவர்கள், வரம்பு மீறிய ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகின்றனர்.
4. யார் ஷைத்தானைப் பொறுப்பாளனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை அவன் வழி கெடுத்துக் கொழுந்து விட்டெரியும் நரக வேதனையின் பக்கமே வழி காட்டுவான் என அவன்மீது விதிக்கப்பட்டு விட்டது.
5. மனிதர்களே! (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவதைப் பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்கு நாம் தெளிவுபடுத்துவதற்காக (இதை விவரிக்கிறோம்.) உங்களை(த் தொடக்கத்தில்) மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் சூல்கொண்ட கருமுட்டையிலிருந்தும், பின்னர் வடிவமைக்கப்பட்டதும், வடிவமைக்கப்படாததுமான சதைத் துண்டிலிருந்தும் படைத்தோம். நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறைகளில் தங்கச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். நீங்கள் இளமைப் பருவத்தை அடைவதற்காக (உங்களை வளரச் செய்கிறோம்.) உங்களில் (குறைந்த ஆயுளில்) கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். உங்களில் தள்ளாத வயதுவரை கொண்டு செல்லப்படுவோரும் உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் விபரம் தெரிந்த பின்பு (நினைவு தடுமாறி) எதையும் அறியாதோராகி விடுகின்றனர். மேலும், பூமியை வறண்டதாகக் காண்கிறீர்! நாம், அதன்மீது மழையைப் பொழிவிக்கும்போது அது செழித்து வளர்கிறது; பசுமையான (தாவர) வகைகள் ஒவ்வொன்றையும் முளைக்கச் செய்கிறது.336
6. இதற்குக் காரணம், ‘அல்லாஹ்வே உண்மையானவன்; அவனே இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; அவன் அனைத்துப் பொருட்களின்மீதும் ஆற்றல் உடையவன்’ என்பதாகும்.
7. உலகம் அழியும் நேரம் வரக்கூடியதே! அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அல்லாஹ் மண்ணறைகளில் உள்ளவர்களை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
8, 9. அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுப்பதற்காக, மனிதர்களில் அறிவோ, நேர்வழியோ, பிரகாசிக்கும் வேதமோ இன்றிக் கர்வம் கொண்டு அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கிப்பவனும் இருக்கிறான். இவ்வுலகில் அவனுக்கு இழிவு உள்ளது. அவனை, மறுமை நாளில் எரிக்கும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
10. உன் கைகள் முன்னர் செய்த (பாவச்) செயல்களே இதற்குக் காரணம். அடியார்களுக்கு அல்லாஹ் சிறிதும் அநியாயம் செய்ய மாட்டான்.
11. மனிதர்களில், ஓரத்தில் நின்று அல்லாஹ்வை வணங்குபவனும் இருக்கிறான். அவனுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அதில் திருப்தியடைகிறான். அவனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அப்படியே புரண்டு விடுகிறான். இம்மையிலும் மறுமையிலும் அவன் நஷ்டமடைந்து விட்டான். இதுதான் தெளிவான நஷ்டமாகும்.337
12. அவன் அல்லாஹ்வையன்றித் தனக்குத் தீமை செய்யாதவற்றையும், தனக்கு நன்மை செய்யாதவற்றையும் அழைக்கிறான். இதுவே தூரமான வழிகேடு.
13. யாருடைய தீமை, அவனது நன்மையைவிட மிக நெருக்கமாக இருக்கிறதோ அவனையே இவன் அழைக்கிறான். அவன் கெட்ட பாதுகாவலன்; கெட்ட நண்பன்.
14. யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அல்லாஹ், தான் நாடியதைச் செய்வான்.
15. அல்லாஹ், (தனது தூதராகிய) இவருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் உதவி செய்யவே மாட்டான் என்று நினைப்பவன் ஒரு கயிற்றின் மூலம் வானத்திற்குச் சென்று, பின்னர் (அந்த உதவியை) நிறுத்தட்டும். அவனது இந்தச் சூழ்ச்சி, அவனுடைய கோபத்தைப் போக்குமா எனப் பார்க்கட்டும்!
16. இவ்வாறே, நாம் இதைத் தெளிவான வசனங்களாக இறக்கியுள்ளோம். அல்லாஹ், தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.
17. இறைநம்பிக்கை கொண்டோர், யூதர்கள், ஸாபியீன்கள், கிறித்தவர்கள், நெருப்பை வணங்குவோர், இணைவைப்போர் ஆகியோருக்கிடையே அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அல்லாஹ், ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்.
18. வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் பெரும்பாலோரும் அல்லாஹ்வுக்கே தலைவணங்குகின்றனர் என்பதை நீர் சிந்திக்கவில்லையா? இன்னும் பெரும்பாலோர்மீது தண்டனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் யாரை இழிவுபடுத்துகிறானோ அவரைக் கண்ணியப்படுத்துபவர் யாருமில்லை. அல்லாஹ், தான் நாடியதைச் செய்வான்.
19, 20. இவர்களே தமது இறைவனைப் பற்றித் தர்க்கித்த இரு பிரிவினராவர்.338 இறைமறுப்பாளர்களுக்கு நெருப்பு ஆடைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அவர்களுடைய தலைகளின்மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதன் மூலம் அவர்களின் வயிற்றில் உள்ளவையும், தோல்களும் உருக்கப்படும்.
21. அவர்களுக்கு இரும்புச் சம்மட்டி (அடி)களும் உண்டு.
22. அவர்கள் துக்கத்தால் அங்கிருந்து வெளியேற விரும்பும் போதெல்லாம் அதிலேயே திருப்பி அனுப்பப்படுவார்கள். “எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்!” (என்று கூறப்படும்.)
23. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோரை அல்லாஹ் சொர்க்கங்களில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அங்கு அவர்களுக்குத் தங்கத்தாலான காப்புகளும், முத்துகளும் அணிவிக்கப்படும். அங்கு அவர்களின் ஆடை, பட்டால் ஆனதாகும்.339
24. அவர்கள் தூய கூற்றின் பக்கம் வழிகாட்டப்பட்டனர்; புகழுக்குரியவனின் பாதைக்கும் வழிகாட்டப்பட்டனர்.
25. யார் (அல்லாஹ்வை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்து, மக்களில் உள்ளூர்வாசிகளுக்கும், வெளியூர்வாசிகளுக்கும் நாம் சமமாக்கி வைத்துள்ள மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்து, அங்கு அநியாயம் செய்து புனிதத்தைச் சீர்குலைக்க நாடுகிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
26. (நபியே!) அந்த ஆலயத்தின் இடத்தில் இப்ராஹீமை நாம் தங்க வைத்ததை நினைவூட்டுவீராக! “எனக்கு எதையும் இணையாக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், வணங்குவோருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!” (என்று அவருக்குக் கூறினோம்.)
27. ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் நடந்தும், வெகு தொலைவுகளிலிருந்து வருகின்ற ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின்மீதும் உம்மிடம் வருவார்கள்.
28. அவர்கள் தமக்குரிய பலன்களை அடைவதற்காகவும், அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள்மீது அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறி (அறுத்தி)ட வேண்டும் என்பதற்காகவும் (வருவார்கள்.) எனவே, அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; சிரமப்படும் ஏழைக்கும் உணவளியுங்கள்.
29. பின்னர் அவர்கள் தமது அழுக்குகளை நீக்கித் தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்; பழமை வாய்ந்த இந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யட்டும்.340
30. இவை (ஹஜ் கிரியைகள்.) அல்லாஹ் புனிதமாக்கியவற்றை மகத்துவப்படுத்துபவருக்கு, அவரது இறைவனிடத்தில் அது சிறந்தது. உங்களுக்கு(த் தடையென்று) எடுத்துரைக்கப்படுவதைத் தவிர ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. சிலைகள் எனும் அசுத்தத்தை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; பொய்ப் பேச்சுகளையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
31. அல்லாஹ்வுக்காக வாய்மை நெறியில் நின்று, அவனுக்கு இணைவைக்காதவர்களாக (ஆகி விடுங்கள்.) அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் வானத்திலிருந்து விழுந்து, அவனைப் பறவைகள் கொத்திச் சென்றவனைப் போலாவான். அல்லது (பெரும்) காற்றால் தொலைதூரத்தில் தூக்கி எறியப்பட்டவனைப் போலாவான்.341
32. இதுவே (அவனது நிலை)! அல்லாஹ் ஏற்படுத்திய அடையாளங்களை யார் மகத்துவப்படுத்துகிறாரோ அதுவே (அவரது) உள்ளங்களிலுள்ள இறையச்சமாகும்.
33. (குர்பானிப் பிராணிகளாகிய) அவற்றில் குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குப் பலன்கள் உண்டு. பின்னர், அவை சென்றடைய வேண்டிய இடம் பழமை வாய்ந்த (கஃஅபா) ஆலயமாகும்.
34. அல்லாஹ் வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள்மீது அவன் பெயரைக் கூறுவதற்காகக் குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் கடவுள் ஒரே கடவுள்தான். எனவே அவனுக்கே கட்டுப்படுங்கள்! பணிந்து நடப்போருக்கு நற்செய்தி கூறுவீராக!
35. அவர்கள் யாரெனில், அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் பயந்து நடுங்கும். தமக்கு ஏற்படும் துன்பங்களில் பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலைநிறுத்துவார்கள். அவர்களுக்கு நாம் வழங்கியதிலிருந்து செலவிடுவார்கள்.
36. உங்களுக்கு(க் குர்பானி) ஒட்டகங்களை அல்லாஹ் ஏற்படுத்திய அடையாளங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மை இருக்கிறது. எனவே, நிறுத்தி வைத்து, அவற்றின்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூ(றி அ)றுங்கள்; அவற்றின் விலாப்புறங்கள் விழுந்து விட்டால், அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; இரந்து கேட்போருக்கும், (இரந்து கேட்காத) ஏழைகளுக்கும் உணவளியுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவற்றை இவ்வாறு உங்களுக்கு வசப்படுத்தியுள்ளோம்.342
37. அவைகளின் இறைச்சியோ, இரத்தமோ அல்லாஹ்வை அடையாது. மாறாக உங்கள் இறையச்சமே அவனை அடையும். அல்லாஹ், உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு அவைகளை உங்களுக்கு வசப்படுத்தினான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
38. அல்லாஹ், இறைநம்பிக்கை கொண்டோரை பாதுகாக்கிறான். நன்றி கெட்ட துரோகிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
39. போர் தொடுக்கப்பட்டோர் அநியாயத்திற்கு ஆளானதால் (எதிரிகளைத் திருப்பித் தாக்க) அவர்களுக்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்வே அவர்களுக்கு உதவும் ஆற்றலுடையவன்.343
40. அவர்கள் தமது வீடுகளிலிருந்து நியாயமின்றி வெளியேற்றப்பட்டார்கள். “எங்கள் இறைவன் அல்லாஹ்!” என்று அவர்கள் கூறியதைத் தவிர (இதற்கு எந்தக் காரணமுமில்லை.) அல்லாஹ், மனிதர்களில் சிலரைக் கொண்டு வேறு சிலரைத் தடுத்திருக்கா விட்டால் மடங்களும், கிறித்தவ ஆலயங்களும், யூதக் கோயில்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகக் கூறப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவுவோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்.
41. பூமியில் நாம் அவர்களுக்கு அதிகாரத்தை அளித்தால் தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; ஸகாத்தைக் கொடுப்பார்கள். நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பார்கள். செயல்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.
42, 43, 44. இவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால் இவர்களுக்கு முன்னர் நூஹுடைய சமுதாயம், ஆது, ஸமூது கூட்டத்தினர், இப்ராஹீமின் சமுதாயம், லூத்தின் சமுதாயம், மத்யன்வாசிகள் ஆகியோரும் பொய்யரெனக் கூறியுள்ளனர். மூஸாவும் பொய்யரெனக் கூறப்பட்டார். இறைமறுப்பாளர்களுக்கு நான் அவகாசம் அளித்துப் பின்னர் அவர்களைத் தண்டித்தேன். எனது தண்டனை எப்படி இருந்தது?
45. அநியாயம் செய்த எத்தனையோ ஊர்களை அழித்துள்ளோம். அவை அடியோடு வீழ்ந்து கிடக்கின்றன. எத்தனையோ பாழடைந்த கிணறுகள்! உறுதியான கோட்டைகள்! (கேட்பாரற்றுக் கிடக்கின்றன.)
46. அவர்கள் பூமியில் பயணிக்கவில்லையா? அப்படிச் செய்தால் அவர்களுக்கு விளங்கும் உள்ளங்களும், கேட்கும் காதுகளும் ஏற்பட்டிருக்கும். ஆயினும் கண்கள் குருடாகவில்லை. மாறாக, அவர்களின் உள்ளங்களிலுள்ள சிந்திக்கும் திறனே குருடாகி விட்டது.
47. (நபியே!) உம்மிடம் தண்டனையை அவசரமாகக் கோருகின்றனர். அல்லாஹ், தன் வாக்குறுதிக்கு மாறு செய்யவே மாட்டான். உமது இறைவனிடம் ஒருநாள் என்பது, நீங்கள் கணக்கிடுகின்ற ஆயிரம் ஆண்டுகளைப் போன்றதாகும்.344
48. அநியாயம் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு அவகாசம் அளித்து, அதன்பிறகே அவர்களைத் தண்டித்தேன். என்னிடமே மீளுதல் உள்ளது.
49. “மனிதர்களே! நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிப்பவன் மட்டுமே!” என்று (நபியே!) கூறுவீராக!
50. யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான உணவும் உண்டு.
51. யார் நமது வசனங்களைத் தோற்கடிக்க முயல்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்.
52. (நபியே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்தத் தூதரானாலும், நபியானாலும் அவர் (வேதத்தை) ஓதிக் காட்டும்போது, அவர் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் (மக்களிடம் சந்தேகத்தை) ஏற்படுத்தாமல் இருந்ததில்லை. ஆனால் ஷைத்தான் ஏற்படுத்தியதை அல்லாஹ் நீக்கி விடுகிறான். (அதன்) பின்னர் அல்லாஹ், தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
53. யாருடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், உள்ளங்கள் இறுகி விட்டவர்களுக்கும் ஷைத்தான் ஏற்படுத்தியதை ஒரு சோதனையாக ஆக்குவதற்காகவே (அல்லாஹ் இதைச் செய்தான்). எனினும் அநியாயக்காரர்கள் பெரும் பிளவிலேயே உள்ளனர்.
54. இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதைக் கல்வியறிவு வழங்கப்பட்டோர் அறிந்து இதை நம்புவதற்காகவும், அவர்களின் உள்ளங்கள் அவனுக்குக் கட்டுப்படுவதற்காகவும் (இதைச் செய்தான்). அல்லாஹ், இறைநம்பிக்கை கொண்டோரை நேரான வழியில் செலுத்துகிறான்.
55. உலகம் அழியும் நேரம் திடீரெனத் தம்மிடம் வரும்வரை, அல்லது கடினமான நாளின் வேதனை தம்மிடம் வரும்வரை இறைமறுப்பாளர்கள் இ(வ்வேதத்)தில் சந்தேகத்திலேயே இருந்து கொண்டிருப்பார்கள்.
56. அந்நாளில் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோர் இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில் இருப்பார்கள்.
57. யார் (நம்மை) மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களுக்கே இழிவு தரும் வேதனை உள்ளது.
58. அல்லாஹ்வின் பாதையில் யார் ஹிஜ்ரத் செய்து, பின்பு கொல்லப்படுகிறாரோ அல்லது இறந்து விடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அழகான உணவை வழங்குவான். அல்லாஹ்வே உணவளிப்போரில் மிக மேலானவன்.
59. அவர்கள் விரும்பும் இடத்தில் அவர்களை நுழையச் செய்வான். அல்லாஹ் நன்கறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
60. இதுவே (அவர்களுக்குரிய கூலி)! ஒருவர், தான் துன்புறுத்தப்பட்ட அளவிற்குப் பழிவாங்கிய பிறகு அவருக்குக் கொடுமை இழைக்கப்பட்டால் அவருக்கு அல்லாஹ் உதவுவான். அல்லாஹ் பிழை பொறுப்பவன்; மன்னிப்புமிக்கவன்.
61. இ(வ்வுதவியான)து, அல்லாஹ்வே இரவைப் பகலில் நுழைக்கிறான்; பகலை இரவில் நுழைக்கிறான்; அல்லாஹ் செவியேற்பவன்; பார்ப்பவன் என்பதாலாகும்.
62. அல்லாஹ்வே உண்மையானவன்; அவனையன்றி அவர்கள் எவற்றைப் பிரார்த்திக்கிறார்களோ அவை பொய்யானவை. அல்லாஹ் உயர்ந்தவன்; மிகப் பெரியவன் என்பதே இதற்குக் காரணம்.
63. அல்லாஹ்வே வானிலிருந்து மழையைப் பொழிவிக்கிறான்; அதனால் பூமி பசுமையாகி விடுகின்றது என்பதை நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் நுட்பமாக அறிபவன்; நன்கறிந்தவன்.
64. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவையாகும். அல்லாஹ்வே தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.
65. அல்லாஹ்வே பூமியில் உள்ளவற்றையும், தன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்காக வசப்படுத்தியுள்ளான் என்பதை நீர் சிந்திக்கவில்லையா? அவன் ஆணையிட்டாலே தவிர, பூமியின்மீது வானம் விழுந்து விடாதவாறு அவனே தடுத்து வைத்துள்ளான். அல்லாஹ், மனிதர்கள்மீது கருணை உள்ளவன்; நிகரிலா அன்பாளன்.
66. அவன்தான் உங்களுக்கு உயிரளித்தான்; பின்பு உங்களை மரணிக்கச் செய்வான்; பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். மனிதன் மிகவும் நன்றி கெட்டவன்.
67. (நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் அவ்வழிபாட்டைச் செய்கின்றனர். எனவே இவ்விஷயத்தில் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்ய வேண்டாம். உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! நீரே நேரான வழியில் இருக்கிறீர்.
68. அவர்கள் உம்மிடம் தர்க்கித்தால் “நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்” என்று கூறுவீராக!
69. நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதுபற்றி அல்லாஹ் உங்களுக்கிடையே மறுமை நாளில் தீர்ப்பளிப்பான்.
70. வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ்வே அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? இது பதிவேட்டில் உள்ளது. இது அல்லாஹ்வுக்கு இலகுவானது.
71. அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்தச் சான்றையும் இறக்கவில்லை; மேலும் இதுபற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளரும் இல்லை.
72. (நபியே!) அவர்களுக்கு நமது வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்படும்போது, இறைமறுப்பாளர்களின் முகங்களில் வெறுப்பைக் காண்பீர். அவர்கள், நமது வசனங்களைத் தமக்கு எடுத்துரைப்போரைத் தாக்க முனைகின்றனர். “நான் உங்களுக்கு இதைவிட மோசமானதை அறிவிக்கவா? (அதுவே) நரகம். அல்லாஹ் அதனை இறைமறுப்பாளர்களுக்கு வாக்களித்துள்ளான். அது சேருமிடத்தில் மிகக் கெட்டது” என்று கூறுவீராக!
73. மனிதர்களே! ஓர் எடுத்துக்காட்டு கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரிடம் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தாலும் அவர்களால் ஓர் ஈயைக் கூடப் படைக்க முடியாது. அவர்களிடமிருந்து அந்த ஈ எதையேனும் பறித்துச் சென்றால், அதனை அவர்களால் ஈயிடமிருந்து விடுவிக்கவும் முடியாது. அழைப்பவனும், அழைக்கப்படுபவனும் பலவீனமாக உள்ளனர்.345
74. அல்லாஹ்வை, அவனது தகுதிக்குத் தக்கவாறு அவர்கள் மதிக்கவில்லை. அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்.
75. அல்லாஹ்வே வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறான். அல்லாஹ் செவியேற்பவன்; பார்ப்பவன்.
76. அவர்களுக்கு முன்னுள்ளவற்றையும் பின்னுள்ளவற்றையும் அவன் அறிகிறான். அல்லாஹ்விடமே அனைத்துக் காரியங்களும் கொண்டு வரப்படும்.
77. இறைநம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தா செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மை செய்யுங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
78. அல்லாஹ்வுக்காகப் போரிட வேண்டிய முறைப்படி போரிடுங்கள்! அவனே உங்களைத் தேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தைப் போன்றே அவன் இம்மார்க்கத்தில் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருப்பதற்காகவும், நீங்கள் ஏனைய சமூகத்தாருக்குச் சாட்சியாக இருப்பதற்காகவும் இதற்கு முன்பும், இ(வ்வேதத்)திலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்! அவன்தான் உங்கள் பாதுகாவலன் ஆவான். அவன் மிகச் சிறந்த பாதுகாவலன்; மிகச் சிறந்த உதவியாளன்.346