அல்ஃபுர்கான் – பிரித்துக் காட்டுவது

அத்தியாயம் : 25

வசனங்களின் எண்ணிக்கை: 77

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அகிலத்தாரை எச்சரிக்கை செய்வதற்காக (உண்மை – பொய்யைப்) பிரித்துக் காட்டக்கூடியதைத் தன் அடியார்மீது அருளியவன் பாக்கியமிக்கவன்.
2. அவனுக்கே வானங்கள், பூமியின் ஆட்சி உரியது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுக்கு அதிகாரத்தில் எந்தக் கூட்டாளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்து அதைச் சரியாக அமைத்தான்.
3. அவனையன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அவர்களோ எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் தமக்கே எந்தத் தீமையையும், நன்மையையும் செய்வதற்குச் சக்தி பெற மாட்டார்கள். அவர்கள் மரணத்திற்கோ, வாழ்வுக்கோ, உயிர்ப்பித்து எழுப்பவோ அதிகாரம் பெற மாட்டார்கள்.
4. “இது இவரே புனைந்து கூறிய பொய்யைத் தவிர வேறில்லை. இதற்காக வேறொரு கூட்டத்தினர் இவருக்கு உதவியுள்ளனர்” என்று இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் அநியாயத்தையும், பொய்யையுமே கொண்டு வந்துள்ளனர்.
5. “இது முன்னோரின் கட்டுக் கதைகள். அதனை இவர் (மற்றொருவரைக் கொண்டு) எழுதச் செய்துள்ளார். அது இவருக்குக் காலையிலும், மாலையிலும் படித்துக் காட்டப்படுகின்றது” என்றும் கூறுகின்றனர்.
6. “வானங்கள், பூமியில் உள்ள இரகசியத்தை அறிபவனே இதனை அருளினான். அவன் மன்னிப்புமிக்கவனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்” என்று கூறுவீராக.
7, 8. “இத்தூதருக்கு என்ன ஆனது? இவர் உணவு உண்கிறார்; கடைத் தெருக்களில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து எச்சரிப்பதற்காக இவரிடம் ஒரு வானவர் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருக்கு ஒரு புதையல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து, அதிலிருந்து இவர் சாப்பிட வேண்டாமா?” என அவர்கள் கேட்கின்றனர். “சூனியம் செய்யப்பட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்” எனவும் அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்.
9. உமக்கு எவ்வாறு எடுத்துக்காட்டுகளைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழிகெட்டு விட்டனர். எனவே அவர்கள் சரியான பாதைக்கு (வர) சக்தி பெற மாட்டார்கள்.
10. (உமது இறைவனாகிய) அவன் பாக்கியமிக்கவன். அவன் நாடினால் இதைவிட மேலான சொர்க்கங்களை உமக்கு வழங்குவான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். உமக்காக மாளிகைகளையும் ஏற்படுத்துவான்.
11. எனினும், அவர்கள் உலகம் அழியும் நேரத்தைப் பொய்யெனக் கூறுகின்றனர். அந்நேரத்தைப் பொய்யெனக் கூறுவோருக்குக் கொழுந்து விட்டெரியும் நரகத்தைத் தயார்படுத்தியுள்ளோம்.
12. அது, தொலைதூரத்திலிருந்து அவர்களைப் பார்க்கும்போதே அதன் சீற்றத்தையும், இரைச்சலையும் கேட்பார்கள்.
13. அவர்கள் (தப்பிக்க முடியாதவாறு) கட்டப்பட்ட நிலையில் அங்குள்ள நெருக்கடிமிக்க இடத்தில் வீசப்படும்போது, அங்கு அழிவை அழைப்பார்கள்.
14. “இன்று ஒரேயொரு அழிவை அழைக்காதீர்கள்! ஏராளமான அழிவை அழையுங்கள்!” (என்று கூறப்படும்.)
15. “இது சிறந்ததா? அல்லது இறையச்சமுடையோருக்கு வாக்களிக்கப்பட்ட நிலையான சொர்க்கமா?” என்று கேட்பீராக! அது அவர்களுக்கு வெகுமதியாகவும் சேருமிடமாகவும் இருக்கிறது.
16. அங்கு அவர்கள் விரும்பியவையெல்லாம் அவர்களுக்கு உண்டு. (அதில்) நிரந்தரமாக இருப்பார்கள். இது உமது இறைவனின் பொறுப்பேற்கப்பட்ட வாக்குறுதியாக உள்ளது.
17. அந்நாளில் அவன் அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவர்களையும் ஒன்றுதிரட்டி, “என் அடியார்களான இவர்களை நீங்கள்தான் வழிகெடுத்தீர்களா? அல்லது தாமாகவே வழிகெட்டு விட்டார்களா?” என்று கேட்பான்.
18. “நீ தூயவன்! உன்னையன்றி வேறு பொறுப்பாளர்களை நாங்கள் எடுத்துக் கொள்வது எங்களுக்குத் தகுதியானதல்ல. எனினும், நீ அவர்களுக்கும் அவர்களின் முன்னோருக்கும் வாழ்க்கை வசதிகளை வழங்கினாய். இறுதியில் அவர்கள் (உன்னை) நினைவுகூர்வதையே மறந்தனர். அவர்கள் அழிந்து போகும் கூட்டமாகி விட்டனர்” என அவர்கள் பதிலளிப்பார்கள்.
19. “நீங்கள் கூறியதில் இவர்கள் உங்களைப் பொய்யாக்கி விட்டனர். எனவே உங்களால் (வேதனையைத்) தடுக்கவோ, உதவிபெறவோ இயலாது. உங்களில் அநியாயம் செய்தவர்களைக் கடும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்” (என்று இணைவைத்தோரை நோக்கிக் கூறப்படும்.)
20. (நபியே!) உமக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்களை உணவு உண்பவர்களாகவும், கடைத்தெருக்களில் நடமாடுபவர்களாகவுமே அனுப்பி வைத்தோம். உங்களில் ஒருசிலரை, வேறுசிலருக்குச் சோதனையாக ஆக்கியுள்ளோம். நீங்கள் பொறுமையை மேற்கொள்வீர்களா? உமது இறைவன் பார்ப்பவனாக இருக்கிறான்.
21. நம்மைச் சந்திப்பதை நம்பாதவர்கள், “எங்களிடம் வானவர்கள் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது எங்கள் இறைவனை நாங்கள் பார்க்க வேண்டாமா?” என்று கேட்கின்றனர். அவர்கள் தமது உள்ளங்களில் கர்வம் கொண்டு, கடுமையாக வரம்பு மீறிச் சென்று விட்டனர்.
22. அவர்கள் வானவர்களைக் காணும் நாளில், குற்றவாளிகளுக்கு அன்றைய தினம் எந்த நற்செய்தியும் இருக்காது. “முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது” என அவர்கள் கூறுவார்கள்.
23. நாம் அவர்கள் செய்த செயல்களில் கவனம் செலுத்தி, அவற்றைப் பரத்தப்பட்டப் புழுதியாக ஆக்கி விடுவோம்.
24. அந்நாளில் சொர்க்கவாசிகள் சிறந்த தங்குமிடத்திலும், அழகிய ஓய்விடத்திலும் இருப்பார்கள்.
25. அந்நாளில் மேகங்களுடன் வானம் பிளவுபட்டு, வானவர்கள் கூட்டம் கூட்டமாக இறக்கி வைக்கப்படுவார்கள்.
26. அந்நாளில் உண்மையான அதிகாரம் அளவிலா அருளாளனுக்கே உரியது. இறைமறுப்பாளர்களுக்கு அது மிகக் கடுமையான நாளாக இருக்கும்.
27, 28, 29. அந்நாளில் அநியாயக்காரன், “இத்தூதருடன் நானும் சரியான வழியை எடுத்திருக்கலாமே! எனக்கு ஏற்பட்ட கேடே! இன்னாரை நான் நண்பனாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கக் கூடாதா? என்னிடம் அறிவுரை வந்த பிறகும் அதிலிருந்து அவன் என்னை வழிகெடுத்துவிட்டான். ஷைத்தான், மனிதனுக்கு மோசடி செய்பவனாக இருக்கிறான்” என்று தனது கைகளைக் கடித்தவாறு கூறுவான்.
30. “என் இறைவனே! இந்தக் குர்ஆனை என் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டனர்” என்று தூதர் கூறுவார்.
31. இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை ஏற்படுத்தியுள்ளோம். உமது இறைவன் நேர்வழி காட்டுவதற்கும், உதவி செய்வதற்கும் போதுமானவன்.
32. இறைமறுப்பாளர்கள், “இந்தக் குர்ஆன் ஒரே தொகுப்பாக இவர்மீது அருளப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கேட்கின்றனர். இவ்வாறே உமது உள்ளத்தை இதன் மூலம் உறுதிப்படுத்துவதற்காகவே (பிரித்து அருளினோம்.) இதைப் படிப்படியாகவும் இறக்கி வைத்தோம்.
33. அவர்கள் எத்தகைய எடுத்துக்காட்டை உம்மிடம் கொண்டு வந்தாலும், நாம் உண்மையையும் சிறந்த விளக்கத்தையும் உமக்கு வழங்குகிறோம்.
34. முகம் குப்புற(க் கிடக்குமாறு) நரகத்தை நோக்கி ஒன்று திரட்டப்படுவோரே தரங்கெட்டவர்கள்; நேர்வழி தவறியவர்கள்.366
35. மூஸாவுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம். அவருக்கு, அவரது சகோதரர் ஹாரூனையும் உதவியாளராக ஆக்கினோம்.
36. “நமது சான்றுகளைப் பொய்யெனக் கூறிய கூட்டத்தாரிடம் இருவரும் செல்லுங்கள்!” என்று கூறினோம். (அக்கூட்டத்தார் மறுத்ததால்) அவர்களை அடியோடு அழித்தோம்.
37. நூஹுடைய சமுதாயத்தினர், தூதர்களைப் பொய்யரெனக் கூறியபோது அவர்களை (நீரில்) மூழ்கடித்து, மக்களுக்குப் படிப்பினையாக ஆக்கினோம். அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயார்படுத்தியுள்ளோம்.
38. ஆது சமுதாயம், ஸமூது சமுதாயம், கிணற்றுவாசிகள், அவர்களுக்கு இடைப்பட்ட ஏராளமான தலைமுறையினர் ஆகியோரையும் (நினைவு கூர்வீராக!)
39. ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய படிப்பினைகளை எடுத்துரைத்தோம். (அவர்கள் மறுத்ததால்) அனைவரையும் அடியோடு அழித்தோம்.
40. இவர்கள் கெட்ட மழை பொழிவிக்கப்பட்ட ஊருக்கு(ச் சென்று) வந்துள்ளனர். இவர்கள் அதனைப் பார்த்திருக்கவில்லையா? எனினும் (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவதை நம்பாமல் இருக்கின்றனர்.
41. (நபியே!) அவர்கள் உம்மைப் பார்த்தால் “இவரையா அல்லாஹ் தூதராக அனுப்பியுள்ளான்?” என்று உம்மைக் கேலியாக எடுத்துக் கொள்கின்றனர்.
42. “நமது கடவுள்கள்மீது நாம் உறுதியாக இல்லையென்றால் அவற்றைவிட்டும் இவர் நம்மை வழிகெடுக்க முயன்றிருப்பார்” (என்று கூறுகின்றனர்.) அவர்கள் தண்டனையைக் காணும்போது, மிக வழிகெட்ட பாதையில் யார் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வார்கள்.
43. (நபியே!) தன் சுயவிருப்பத்தைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனை நீர் பார்த்தீரா? அவனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?
44. அவர்களில் அதிகமானோர் செவியுறுகிறார்கள் என்றோ, சிந்திக்கிறார்கள் என்றோ நீர் எண்ணிக் கொண்டீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள். அவ்வாறல்ல! (அவற்றைவிட) அவர்கள் மிகவும் வழிகெட்டவர்கள்.
45. உமது இறைவன் எப்படி நிழலை நீட்டுகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடினால் அதை நிலைபெற்றதாக ஆக்கியிருப்பான். சூரியனை அந்நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.
46. பின்னர் அதை எளிதாக நம் பக்கம் எடுத்துக் கொள்கிறோம்.
47. அவனே உங்களுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை ஓய்வாகவும் ஆக்கினான்; பகலை வாழ்வா(தாரத்தை தேடுவதற்கா)க ஆக்கினான்.
48. அவனே தனது (மழையெனும்) அருளுக்கு முன் நற்செய்தியாகக் காற்றுகளை அனுப்புகிறான். வானிலிருந்து தூய மழையை நாம் பொழிவிக்கிறோம்.
49. வறண்ட பூமியை அதன்மூலம் நாம் உயிர்ப்பிக்கவும், நாம் படைத்துள்ள கால்நடைகளுக்கும், பெரும்பாலான மனிதர்களுக்கும் அதைப் புகட்டுவதற்குமே (மழையைப் பொழிவிக்கிறோம்.)
50. அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களிடையே இதை விவரிக்கிறோம். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இறைமறுப்பைத் தவிர மற்றதை மறுக்கின்றனர்.
51. நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் எச்சரிப்பவரை அனுப்பியிருப்போம்.
52. எனவே (நபியே) இறைமறுப்பாளர்களுக்குக் கட்டுப்படாதீர்! அவர்களிடம் இ(வ்வேதத்)தைக் கொண்டு கடுமையாகப் போரிடுவீராக!
53. அவன்தான் இரண்டு கடல்களை ஒன்றிணைத்தான். ஒன்று, சுவையானதும் இனிமையானதுமாகும். மற்றொன்று, உப்பானதும் கசப்பானதுமாகும். அவ்விரண்டுக்கும் இடையே திரையையும், பலமான தடையையும் ஏற்படுத்தியுள்ளான்.
54. அவனே நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அம்மனிதனுக்குப் பெற்றோர்வழி உறவுகளையும், திருமணவழி உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றல் மிக்கவனாக இருக்கிறான்.
55. அல்லாஹ்வையன்றி அவர்கள் தமக்கு நன்மை செய்யாதவற்றையும், தீமை செய்யாதவற்றையும் வணங்குகின்றனர். இறைமறுப்பாளன் தனது இறைவனுக்கு எதிராக (ஷைத்தானுக்கு) உதவுபவனாக இருக்கிறான்.
56. (நபியே!) உம்மை நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
57. (நபியே!) “இதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. தம் இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்ள விரும்புபவரைத் தவிர (எதையும் எதிர்பார்க்கவில்லை)” என்று கூறுவீராக!
58. மரணிக்காமல், (என்றென்றும்) உயிருடன் இருப்பவன்மீதே நம்பிக்கை வைப்பீராக! அவனது புகழைக் கொண்டு போற்றுவீராக! தன் அடியார்களின் பாவங்களை நன்கறிவதற்கு அவனே போதுமானவன்.
59. அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்து, பின்னர் அர்ஷின்மீது அமர்ந்தான். (அவன்) அளவிலா அருளாளன். இதைப் பற்றி நன்கறிந்தவனிடமே கேட்பீராக!
60. அவர்களிடம், “அளவிலா அருளாளனுக்கு ஸஜ்தா செய்யுங்கள்!” எனக் கூறப்பட்டால், “அளவிலா அருளாளன் என்பவன் யார்? நீர் எங்களுக்கு ஏவுகின்ற ஒருவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?” என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகரிக்கிறது.
61. வானத்தில் நட்சத்திரங்களை உண்டாக்கி, அதில் (சூரியன் எனும்) ஒளிவிளக்கையும், பிரகாசிக்கும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமிக்கவன்.
62. சிந்திக்க விரும்புவோருக்காகவும், நன்றி செலுத்த விரும்புவோருக்காகவும் அவனே இரவையும், பகலையும் மாறிமாறி வருவதாக ஆக்கியுள்ளான்.
63. அளவிலா அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவுடன் நடப்பார்கள்; அவர்களிடம் அறிவீனர்கள் பேசினால் ‘ஸலாம்’ என்று கூறி (விலகி) விடுவார்கள்.
64. அவர்கள் தமது இறைவனுக்கு ஸஜ்தா செய்வோராகவும், நின்று வணங்கியும் இரவைக் கழிப்பார்கள்.
65, 66. “எங்கள் இறைவனே! நரக வேதனையை எங்களை விட்டும் திருப்புவாயாக! அதன் வேதனை நிரந்தரமானதாகும். வசிப்பிடத்திலும் தங்குமிடத்திலும் அது கெட்டது” என்று அவர்கள் பிரார்த்திப்பார்கள்.
67. அவர்கள் செலவு செய்தால் வீண்விரயம் செய்ய மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். அதற்கு மத்தியில் அது நடுநிலையாக இருக்கும்.
68. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்க மாட்டார்கள். அல்லாஹ் புனிதமாக்கிய எந்த உயிரையும் நியாயமின்றிக் கொல்ல மாட்டார்கள்; விபச்சாரம் செய்ய மாட்டார்கள். யார் இதைச் செய்கிறாரோ அவர் தண்டனையை அடைவார்.367
69. அவருக்கு மறுமை நாளில் தண்டனை இரட்டிப்பாக்கப்படும். அதில் இழிவுபடுத்தப்பட்டவராக என்றென்றும் இருப்பார்.
70. பாவ மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்தோரைத் தவிர! அவர்களுடைய தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
71. பாவ மன்னிப்புக் கோரி, நற்செயல் செய்பவர், அல்லாஹ்வை நோக்கி முழுமையாகத் திரும்பி விடுகிறார்.
72. அவர்கள் பொய்சாட்சி சொல்ல மாட்டார்கள்; வீணானவற்றைக் கடந்து செல்லும்போது கண்ணியமாக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள்.
73. அவர்களுக்குத் தம் இறைவனின் வசனங்கள் மூலம் நினைவூட்டப் பட்டால், அவற்றின்மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் வீழ்ந்துவிட மாட்டார்கள்.
74. “எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிலும், எங்கள் வழித்தோன்றல்களிலும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியை அளிப்பாயாக! எங்களை இறையச்சமுடையோருக்கு வழிகாட்டியாக ஆக்குவாயாக!” என்று பிரார்த்திப்பார்கள்.
75, 76. அவர்கள் பொறுமையை மேற்கொண்டதால் அவர்களுக்கு மாளிகை கூலியாக வழங்கப்படும். அதில் அவர்கள் நல்வாழ்த்துகளோடு அமைதி ததும்ப வரவேற்கப்படுவார்கள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அது வசிப்பிடத்திலும், தங்குமிடத்திலும் சிறந்தது.
77. “நீங்கள் (சோதனையான கட்டத்தில்) பிரார்த்திக்காமல் இருந்திருந்தால் என் இறைவன் உங்களை ஒரு பொருட்டாகக் கருதி(க் காப்பாற்றி) இருக்க மாட்டான். (அவன் காப்பாற்றிய பிறகு) நீங்கள் பொய்யெனக் கூறி விட்டீர்கள். எனவே, அ(தற்குரிய தண்டனையான)து உறுதியாக ஏற்படும்” என்று கூறுவீராக!