அல்ஃபத்ஹ் – வெற்றி

அத்தியாயம் : 48

வசனங்களின் எண்ணிக்கை: 29

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (நபியே!) தெளிவான, பெரும் வெற்றியை உமக்கு வழங்கியுள்ளோம்.480
2, 3. அல்லாஹ் உமது முந்திய, பிந்திய பாவங்களை மன்னிப்பதற்காகவும், அவன் தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்துவதற்காகவும், நேரான பாதையை உமக்குக் காட்டுவதற்காகவும், வலிமைமிக்க உதவியை உமக்கு வழங்குவதற்காகவும் (இவ்வாறு வெற்றியளித்தான்.)481
4. இறைநம்பிக்கையாளர்கள் தமது நம்பிக்கையை மென்மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அவர்களின் உள்ளங்களில் அமைதியை இறக்கி வைத்தான். வானங்களிலும் பூமியிலும் உள்ள படைகள் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
5. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கங்களில் நுழையச் செய்வதற்காகவே (இவ்வாறு செய்தான்.) அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களின் தீமைகளை அவர்களை விட்டும் அழிப்பதற்காகவும் (இதைச் செய்தான்.) அல்லாஹ்விடம் இது மகத்தான வெற்றியாக உள்ளது.
6. அல்லாஹ்வைப் பற்றித் தீய எண்ணம் கொண்ட நயவஞ்சக ஆண்கள், பெண்கள், இணைவைக்கும் ஆண்கள், பெண்கள் ஆகியோரைத் தண்டிப்பதற்காகவும் (இதைச் செய்தான்.) அவர்களுக்கே மோசமான கேடு உள்ளது. அவர்கள்மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்து விட்டான். அவர்களுக்கு நரகத்தையே தயார்படுத்தியுள்ளான். அது சேருமிடத்தில் கெட்டது.
7. வானங்களிலும், பூமியிலும் உள்ள படைகள் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
8. (நபியே!) நாம் உம்மை சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியுள்ளோம்.
9. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வதற்காகவும், அவனை நீங்கள் மகத்துவப்படுத்திக் கண்ணியப்படுத்துவதற்காகவும், காலையிலும், மாலையிலும் நீங்கள் அவனைப் போற்றுவதற்காகவும் (தூதரை அனுப்பியுள்ளோம்.)
10. (நபியே!) உம்மிடம் உடன்படிக்கை செய்தவர்கள், அல்லாஹ்விடமே உடன்படிக்கை செய்துள்ளார்கள். அவர்களின் கைகளுக்கு மேல் அல்லாஹ்வின் கை உள்ளது. யார் (அதை) முறிக்கிறாரோ அவர் தமக்கு எதிராகவே முறிக்கிறார். அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுபவருக்கு மகத்தான கூலி வழங்குவான்.
11. கிராமவாசிகளில் (போருக்கு வராமல்) பின்தங்கி விட்டோர், “எங்களின் செல்வங்களும், குடும்பமும் எங்களைத் திசைதிருப்பி விட்டன. எங்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவீராக!” என்று உம்மிடம் கூறுவார்கள். தமது உள்ளங்களில் இல்லாததைத் தமது நாவுகளால் கூறுகின்றனர். “அல்லாஹ் உங்களுக்கு ஏதேனும் தீங்கை நாடினால், அல்லது ஏதேனும் நன்மையை நாடினால் அவனிடமிருந்து உங்களுக்கு (அதைத் தடுக்க)ச் சிறிதளவேனும் ஆற்றல் பெற்றவர் யார்?” என்று கேட்பீராக! அவ்வாறல்ல! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
12. மாறாக, இத்தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் தமது குடும்பத்தினரிடம் ஒருபோதும் திரும்பி வரவே மாட்டார்கள் என்று நீங்கள் நம்பினீர்கள். உங்கள் உள்ளங்களில் இது அலங்கரித்துக் காட்டப்பட்டது. நீங்கள் தீய எண்ணம் கொண்டீர்கள். நீங்கள் அழிந்து போகும் கூட்டமாக ஆகிவிட்டீர்கள்.
13. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அந்த இறைமறுப்பாளர்களுக்குக் கொழுந்து விட்டெரியும் நரகத்தைத் தயார்படுத்தியுள்ளோம்.
14. வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியோரை அவன் மன்னிக்கிறான். தான் நாடியோரைத் தண்டிக்கிறான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
15. போர்க்களத்தில் கிடைக்கும் வெற்றிப் பொருட்களை எடுப்பதற்காக அவற்றை நோக்கி நீங்கள் சென்றால் “எங்களை விடுங்கள்! நாங்களும் உங்களைப் பின்தொடர்கிறோம்” எனப் (போருக்கு வராமல்) பின்தங்கிவிட்டோர் கூறுவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கூற்றை மாற்ற நினைக்கின்றனர். “எங்களைப் பின்தொடராதீர்கள். இவ்வாறுதான் முன்னரே அல்லாஹ் கூறியுள்ளான்” என்று கூறிவிடுவீராக! அப்போது அவர்கள் “இல்லை, நீங்கள் எங்கள்மீது பொறாமைப்படுகிறீர்கள்” என்று கூறுவார்கள். அவர்கள் குறைந்தளவே விளங்கிக் கொள்வோராக இருக்கின்றனர்.
16. (நபியே! போருக்கு வராமல்) பின்தங்கிவிட்ட கிராமவாசிகளிடம், “கடும் பலசாலிகளான ஒரு கூட்டத்தாருக்கு எதிராக நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அவர்களுடன் போரிடுவீர்கள். அல்லது அவர்கள் அடிபணிவார்கள். எனவே நீங்கள் கட்டுப்பட்டால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய கூலியை வழங்குவான். இதற்கு முன்னர் நீங்கள் புறக்கணித்தது போல் புறக்கணிப்பீர்களாயின் உங்களைத் துன்புறுத்தும் வேதனையால் தண்டிப்பான்”என்று கூறுவீராக!
17. (போரில் கலந்து கொள்ளாமலிருப்பது) குருடர்கள்மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர்கள்மீதும் குற்றமில்லை. நோயாளியின்மீதும் குற்றமில்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரைச் சொர்க்கங்களில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். யாரேனும் புறக்கணித்தால் அவரைத் துன்புறுத்தும் வேதனையால் தண்டிப்பான்.
18, 19. இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்திற்கு அடியில் உம்மிடம் உடன்படிக்கை செய்தபோது அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்திருந்தான். அவர்கள்மீது அமைதியை இறக்கினான். அவர்களுக்கு உடனடி வெற்றியையும், ஏராளமான வெற்றிப் பொருட்களையும் வழங்கினான். அவற்றை அவர்கள் கைப்பற்றிக் கொள்வார்கள். அல்லாஹ் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.482
20. நீங்கள் கைப்பற்றிக் கொள்ளும் ஏராளமான வெற்றிப் பொருட்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்து, அதை உங்களுக்கு விரைவாகவும் வழங்கினான். உங்களை(த் தாக்குவதை) விட்டும் மக்களின் கரங்களைத் தடுத்தான். இறைநம்பிக்கை கொண்டோருக்கு இது ஒரு சான்றாக ஆவதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு செய்தான்)
21. (வெற்றிப் பொருட்களில்) வேறு சிலவற்றையும் (வாக்களித்துள்ளான்.) அவற்றின்மீது நீங்கள் (இன்னும்) ஆற்றல் பெறவில்லை. அவற்றை அல்லாஹ் நன்கறிந்துள்ளான். ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
22. உங்களுடன் இறைமறுப்பாளர்கள் போரிட்டால் புறமுதுகு காட்டி ஓடுவார்கள். பின்னர் எந்தப் பாதுகாவலரையும், உதவியாளரையும் காண மாட்டார்கள்.
23. இதற்கு முன்சென்றோர் விஷயத்தில் (இதுதான்) அல்லாஹ் ஏற்படுத்திய வழிமுறையாகும். அல்லாஹ்வின் வழிமுறையில் எவ்வித மாற்றத்தையும் காண மாட்டீர்.
24. மக்காவின் பள்ளத்தாக்கில் அவர்கள்மீது உங்களுக்கு வெற்றியளித்தபின், அவர்களின் கைகளை உங்களை விட்டும், உங்களின் கைகளை அவர்களை விட்டும் அவனே தடுத்தான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்.483
25. அவர்களே இறைமறுப்பாளர்கள். அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களையும் பலிப் பிராணிகளையும் தடுத்தனர். அவையோ தமக்குரிய எல்லையை அடையாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. (மக்காவிலுள்ள) உங்களுக்குத் தெரியாத இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள்மீதும், பெண்கள்மீதும் அறியாமல் நீங்கள் தாக்குதல் தொடுத்து, அவர்களின்(மீது தாக்குதல் நடத்தியதன்) காரணமாக உங்களுக்குச் சங்கடம் ஏற்பட்டுவிடும் என்றில்லாவிட்டால் (போரிட உங்களுக்கு அனுமதி வழங்கியிருப்பான்). அல்லாஹ், தான் நாடியோரைத் தன் அருளில் நுழையச் செய்வதற்காகவே (இவ்வாறு செய்கிறான்). அவர்கள் (இறைமறுப்பாளர்களிடமிருந்து) பிரிந்திருந்தால் அவர்களிலுள்ள இறைமறுப்பாளர்களைத் துன்புறுத்தும் வேதனையால் தண்டித்திருப்போம்.484
26. இறைமறுப்பாளர்கள் தமது உள்ளங்களில் அறியாமைக்காலக் குலப்பெருமையைக் கொண்டிருந்த நேரத்தில் அல்லாஹ் தனது தூதர்மீதும், இறைநம்பிக்கை கொண்டோர்மீதும் தனது அமைதியை இறக்கினான். அவர்களை இறையச்சக் கொள்கையில் உறுதிப்படுத்தினான். அவர்கள் அதற்குத் தகுதி படைத்தவர்களாவும், அதன் சொந்தக்காரர்களாகவும் இருந்தனர். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
27. அல்லாஹ், தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மைப்படுத்தி விட்டான். அல்லாஹ் நாடினால் உங்கள் தலைகளை மழித்தும், (முடியைக்) குறைத்தும் நீங்கள் பயமின்றிப் பாதுகாப்புடன் மஸ்ஜிதுல் ஹராமிற்குள் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இதுதவிர உடனடி வெற்றியையும் வழங்கியுள்ளான்.485
28. எல்லா மார்க்கங்களைவிட இ(ம் மார்க்கத்)தை மேலோங்கச் செய்வதற்காக அவனே நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் தனது தூதரை அனுப்பினான். சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்.486
29. முஹம்மத், அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்பவர்கள் இறைமறுப்பாளர்கள்மீது கடுமையாகவும், தமக்குள் இரக்கமுடையோராகவும் இருப்பார்கள். அவர்களை ருகூவு செய்வோராகவும், ஸஜ்தா செய்வோராகவும் காண்பீர். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து அருளையும், திருப்தியையும் வேண்டுகின்றனர். அவர்களின் முகங்களிலுள்ள ஸஜ்தாவின் வடுவே அவர்களின் அடையாளமாகும். இதுவே தவ்ராத்தில் அவர்களுக்குரிய எடுத்துக்காட்டாகும். இன்ஜீலில் அவர்களின் எடுத்துக்காட்டானது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்தி அதைப் பலப்படுத்தியது. பின்னர் அது தடித்துத் தனது தண்டின்மீது நிமிர்ந்து நிற்கிறது. அது விவசாயிகளை ஈர்க்கிறது. இறைநம்பிக்கையாளர்கள் மூலம் இறைமறுப்பாளர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துவான் என்பதே இதற்குக் காரணம். அவர்களில் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.