அத்தியாயம் : 89
வசனங்களின் எண்ணிக்கை: 30
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அதிகாலையின்மீது சத்தியமாக!
2. பத்து இரவுகளின்மீது சத்தியமாக!634
3. இரட்டையின்மீதும், ஒற்றையின்மீதும் சத்தியமாக!
4. செல்லும்போதுள்ள இரவின்மீது சத்தியமாக!
5. இதில் அறிவுடையவருக்குச் சத்தியம் இருக்கின்றதல்லவா?
6, 7. தூண்களையுடைய ‘இரம்’ எனப்படும் ஆது சமுதாயத்தை உமது இறைவன் எவ்வாறு ஆக்கிவிட்டான் என்பதை நீர் சிந்திக்கவில்லையா?
8. அவர்களைப் போலொரு சமுதாயம் எந்த ஊரிலும் படைக்கப்படவில்லை.
9. பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்(து வசித்)த ஸமூது சமுதாயத்தையும்,
10. பெரும் படைகளைக் கொண்டிருந்த ஃபிர்அவ்னையும் (என்ன செய்தான் எனச் சிந்திக்கவில்லையா?)
11. அவர்கள் (தமது) ஊர்களில் வரம்பு மீறினர்.
12. அங்கு அதிகளவு குழப்பம் விளைவித்தனர்.
13. எனவே உமது இறைவன் அவர்களுக்கு எதிராக வேதனையின் சாட்டையைப் போட்டான்.
14. உமது இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
15. மனிதனை, அவனது இறைவன் கண்ணியப்படுத்தி, அவனுக்கு அருள்புரிந்துச் சோதிக்கும்போது, “எனது இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான்” என்று கூறுகிறான்.
16. ஆனால், அவனுக்கு வாழ்வாதாரத்தைக் குறைவாகக் கொடுத்து இறைவன் சோதிக்கும்போது, “என் இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான்” என்று கூறுகிறான்.
17. அவ்வாறல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவதில்லை.635
18. நீங்கள் ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டுவதுமில்லை.636
19. (பிறருடைய) வாரிசுச் சொத்துக்களையும் சேர்த்து உண்கிறீர்கள்
20. அளவு கடந்து செல்வத்தை நேசிக்கிறீர்கள்.
21. ஆனால், பூமி தூள் தூளாக ஆக்கப்படும்போது,
22. உமது இறைவனும், அணியணியாக வானவர்களும் வரும்போது,
23. அன்று நரகம் கொண்டுவரப்படும். அன்றுதான் மனிதன் படிப்பினை பெறுவான். அந்தப் படிப்பினை அவனுக்கு எங்கே பயனளிக்கப் போகிறது?637
24. “எனது (இந்த) வாழ்வுக்காக நான் (நற்செயல்களை) முற்படுத்தியிருக்க வேண்டுமே!” எனக் கூறுவான்.
25. அன்று இறைவன் வேதனை செய்வதுபோல் எவராலும் வேதனை செய்ய முடியாது.
26. அவன் இறுக்கிக் கட்டுவதைப் போல் யாராலும் கட்ட முடியாது.
27, 28, 29, 30 “நிம்மதியடைந்த ஆன்மாவே! திருப்தியுடனும், பொருந்திக் கொள்ளப்பட்ட நிலையிலும் உன் இறைவனிடம் திரும்புவாயாக! என் அடியார்களுடன் இணைந்து கொள்வாயாக! எனது சொர்க்கத்தில் நுழைவாயாக!” (என இறைவன் கூறுவான்.)