அத்தியாயம் : 85
வசனங்களின் எண்ணிக்கை: 22
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. நட்சத்திரங்களைக் கொண்ட வானத்தின்மீது சத்தியமாக!627
2. வாக்களிக்கப்பட்ட அந்த நாளின்மீது சத்தியமாக!
3. சாட்சியாளரின்மீதும், சாட்சி கூறப்படுபவரின்மீதும் சத்தியமாக!
4, 5. எரிபொருட்களைக் கொண்ட நெருப்புக் குண்டங்களை உடையோர் சபிக்கப்பட்டனர்.
6. அப்போது அவர்கள் அதன் அருகில் இருந்தனர்.
7. அவர்கள் இறைநம்பிக்கையாளர்களை என்ன செய்தார்கள் என்பதற்கு அவர்களே சாட்சிகளாவர்.
8. மிகைத்தவனும், புகழுக்குரியவனுமாகிய அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டார்கள் என்பதற்காகவே அவர்களைப் பழிவாங்கினார்கள்.
9. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியதாகும். ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கிறான்.
10. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் துன்புறுத்திப் பின்னர் பாவ மன்னிப்புத் தேடாமல் இருப்போருக்கு நரக வேதனை உண்டு. மேலும் அவர்களுக்கு எரிக்கும் வேதனையும் உண்டு!
11. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தோருக்குச் சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதுவே மாபெரும் வெற்றியாகும்.
12. உமது இறைவனின் பிடி மிகவும் கடுமையானது.
13. அவனே படைப்பை ஆரம்பித்து, (அது அழிந்த) பின்னர் மீண்டும் படைக்கிறான்.
14. அவன் மன்னிப்புமிக்கவன்; பேரன்பு கொண்டவன்.
15. அர்ஷுக்குரியவன்; மகிமை மிக்கவன்.
16. தான் நாடியவற்றைச் செய்பவன்.
17, 18, உம்மிடம் ஃபிர்அவ்ன், ஸமூது ஆகிய படைகளைப் பற்றிய செய்தி வந்ததா?
19. எனினும் இறைமறுப்பாளர்கள் பொய்யெனக் கூறுவதிலேயே இருக்கின்றனர்.
20. அல்லாஹ்வோ அவர்களுக்கு அப்பாலிருந்து சூழ்ந்தறிகிறான்.
21, 22. மேலும், இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டிலுள்ள மகத்துவமிக்க குர்ஆனாகும்.