அத்தியாயம் : 98
வசனங்களின் எண்ணிக்கை: 8
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. வேதக்காரர்களிலும், இணைவைப்போரிலும் உள்ள இறை மறுப்பாளர்கள் தம்மிடம் தெளிவான சான்று வரும்வரை (வழிகேட்டிலிருந்து) விலகுவோராக இல்லை.652
2. (இவர்) அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள தூதர். அவர் தூய ஏடுகளை ஓதிக் காட்டுகிறார்.
3. அதில் உறுதியான சட்டங்கள் உள்ளன.
4. வேதம் வழங்கப்பட்டோர், தம்மிடம் தெளிவான சான்று வந்த பிறகே பிளவுபட்டனர்.
5. அவர்கள் வாய்மை நெறியில் நின்று, அல்லாஹ்வுக்கே வணக்கத்தை உரித்தாக்கியவர்களாக அவனை வணங்கவும், தொழுகையை நிலைநிறுத்தவும், ஸகாத்தைக் கொடுக்கவுமே ஆணையிடப்பட்டிருந்தனர். இதுவே நேரான மார்க்கமாகும். 653
6. வேதக்காரர்களிலும், இணைவைப்போரிலும் உள்ள இறை மறுப்பாளர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்பினங்களில் மிகக் கெட்டவர்கள்.
7. யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களே படைப்பினங்களில் மிகச் சிறந்தவர்கள்.
8. அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குரிய கூலி நிலையான சொர்க்கங்களாகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது, தமது இறைவனை அஞ்சுவோருக்குரியது.