அத்தியாயம் : 90
வசனங்களின் எண்ணிக்கை: 20
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1, 2. (நபியே!) நீர் இந்த (மக்கா) நகரில் தங்கியிருக்கும் நிலையில், இந்நகரின்மீது சத்தியம் செய்கிறேன்.
3. தந்தையின்மீதும், அவர் பெற்றெடுத்த பிள்ளையின்மீதும் சத்தியமாக!
4. மனிதனைக் கஷ்டத்தில் உள்ளவனாகவே நாம் படைத்துள்ளோம்.
5. தன்மீது எவரும் ஆற்றல் பெற மாட்டார் என அவன் நினைக்கிறானா?
6. “ஏராளமான செல்வத்தைச் செலவிட்டு விட்டேன்” எனக் கூறுகிறான்.
7. தன்னை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணிக் கொள்கிறானா?
8, 9. அவனுக்கு நாம் இரு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் ஏற்படுத்தவில்லையா?
10. (நல்லது, கெட்டது ஆகிய) இரு வழிகளை அவனுக்குக் காட்டியுள்ளோம்.
11. எனினும் அவன் கணவாயைக் கடக்கவில்லை.638
12. கணவாய் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
13, 14, 15. 16, 17. (அது) அடிமையை விடுதலை செய்வதும், உறவினராக இருக்கும் அநாதைக்கோ அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ பசியுடைய நாளில் உணவளிப்பதும் ஆகும்.639 பின்னர் இறைநம்பிக்கை கொண்டு, ஒருவருக்கொருவர் பொறுமையை மேற்கொள்ளுமாறும் அன்பு செலுத்துமாறும் அறிவுறுத்தக் கூடியவர்களில் ஆகிவிடுவதாகும்.
18. அவர்களே வலதுபுறத்தார்.
19. நமது வசனங்களை மறுப்போரே இடதுபுறத்தார்.
20. மூடப்பட்ட நெருப்பே அவர்கள்மீது இருக்கும்.