அல்பகரா – மாடு
வசனங்களின் எண்ணிக்கை: 286
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
- அலிஃப், லாம், மீம்.3
- இது வேதமாகும். இதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. இறையச்சமுடையோருக்கு வழிகாட்டியாகும்.
- அவர்கள் மறைவானவற்றின்மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் வழங்கியதிலிருந்து செலவும் செய்வார்கள்.
- (நபியே!) இன்னும் அவர்கள், உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புவார்கள். இறுதி நாளையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.
- இவர்களே தம் இறைவனின் நேர்வழியில் உள்ளவர்கள். இவர்களே வெற்றி பெறுவோர்.
- இறைமறுப்பாளர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களுக்குச் சமமே! அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
- அவர்களின் உள்ளங்கள்மீதும், செவிப்புலன்மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகள்மீது திரை இருக்கிறது. அவர்களுக்குக் கடும் வேதனையும் உள்ளது.
- அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டோம் என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். ஆனால் அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் அல்ல!
- அவர்கள் அல்லாஹ்வையும், இறைநம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற முனைகின்றனர். ஆனால் அவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர். (இதை) அவர்கள் உணர மாட்டார்கள்.
- அவர்களுடைய உள்ளங்களில் நோயுள்ளது. ஆகவே அவர்களுக்கு நோயை அல்லாஹ் அதிகப்படுத்தி விட்டான். அவர்கள் பொய்யுரைப்போராக இருந்ததன் காரணமாக அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உள்ளது.
- “பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “நாங்கள் சீர்திருத்தவாதிகளே” என அவர்கள் கூறுகின்றனர்.
- அறிந்து கொள்க! அவர்களே குழப்பவாதிகள். எனினும் அவர்கள் உணர்வதில்லை.
- “மக்கள் இறைநம்பிக்கை கொண்டது போல் நீங்களும் இறைநம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “மூடர்கள் இறைநம்பிக்கை கொண்டது போல் நாங்களும் இறைநம்பிக்கை கொள்வோமோ?” எனக் கேட்கின்றனர். அறிந்து கொள்க! அவர்கள்தான் மூடர்கள். எனினும் அவர்கள் அறிவதில்லை.
- அவர்கள், இறைநம்பிக்கை கொண்டோரைச் சந்தித்தால், “நாங்களும் இறைநம்பிக்கை கொண்டிருக்கிறோம்” என்று கூறுகின்றனர். தமது ஷைத்தான்க(ளான தீயவர்க)ளுடன் அவர்கள் தனித்திருக்கும்போது “நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம். நாங்கள் (இறைநம்பிக்கையாளர்களைக்) கேலி செய்பவர்களே!” என்று கூறுகின்றனர்.
- அவர்களை அல்லாஹ் கேலி செய்கிறான்; தமது வரம்புமீறலில் தடுமாறுவோராக அவர்களை விட்டுவிடுகிறான்.
- இத்தகையோரே நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை விலைக்கு வாங்கியவர்கள். அவர்களின் வியாபாரம் லாபமளிக்கவில்லை. அவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
- அவர்களுக்கு எடுத்துக்காட்டு, நெருப்பு மூட்டிய ஒருவனைப் போன்றதாகும். அவனைச் சுற்றிலும் அது ஒளி வீசியபோது அவர்களுடைய ஒளியை அல்லாஹ் போக்கி விட்டான். அவர்கள் பார்க்க முடியாதவாறு அவர்களை இருள்களில் விட்டு விட்டான்.
- (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் (நேர்வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
- அல்லது (இவர்களுக்கு எடுத்துக்காட்டு), வான்மழை போன்றதாகும். அதில் இருள்களும், இடியும், மின்னலும் உள்ளன. இடிகளால் மரணத்திற்குப் பயந்து, தமது விரல்களைத் தமது காதுகளில் வைக்கின்றனர். இறைமறுப்பாளர்களை அல்லாஹ் சூழ்ந்தறிபவன்.
- அம்மின்னல், அவர்களின் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது. அது அவர்களுக்கு ஒளிவீசும் போதெல்லாம் அதில் அவர்கள் நடக்கின்றனர். அவர்களுக்கு இருளாகிவிடும் போது நின்று விடுகின்றனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களின் செவிகளையும் பார்வைகளையும் பறித்திருப்பான். ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
- மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனை வணங்குங்கள். இதன் மூலம் நீங்கள் (நரகத்திலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.
- அவன்தான் உங்களுக்குப் பூமியை விரிப்பாகவும், வானத்தைக் கூரையாகவும் ஆக்கினான். வானிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் விளைச்சல்களிலிருந்து உங்களுக்கு உணவை வெளிப்படுத்தினான். எனவே, நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
- நமது அடியாருக்கு நாம் இறக்கிய (இவ்வேதத்)தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இதுபோன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.
- நீங்கள் (இதைச்) செய்யவில்லை என்றால் – உங்களால் செய்யவே முடியாது – நரகத்திற்கு அஞ்சிக் கொள்ளுங்கள். மனிதர்களும், கற்களுமே அதன் எரிபொருள் ஆவர். அது இறைமறுப்பாளர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
- “இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோருக்குச் சொர்க்கங்கள் உள்ளன” என்று (நபியே!) நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றின் கனியிலிருந்து அவர்களுக்கு உணவு வழங்கப்படும் போதெல்லாம் “இதற்கு முன்னரும் இதுவே எங்களுக்கு வழங்கப்பட்டது” என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால் அதைப்போன்ற வேறொன்றே அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு அங்குத் தூய துணைகளும் உள்ளனர். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
- கொசுவையோ, அதைவிட அற்பமானதையோ உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. இறைநம்பிக்கை கொண்டோர், அது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று அறிந்து கொள்கின்றனர். இறைமறுப்பாளர்களோ “இதை உதாரணமாகக் கூறுவதன் மூலம் அல்லாஹ் என்ன நாடுகிறான்?” என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தைக் கொண்டு அதிகமானோரை அவன் வழிகேட்டில் விடுகின்றான். அதிகமானோருக்கு நேர்வழி காட்டுகிறான். பாவிகளைத் தவிர (எவரையும்) இதைக் கொண்டு அவன் வழிகேட்டில் விடுவதில்லை.
- அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்திய பின்னரும் அதை முறிக்கின்றனர். இணைக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் ஆணையிட்டதை (உறவை)த் துண்டித்து விடுகின்றனர். மேலும் பூமியில் குழப்பம் செய்கின்றனர். அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
- உயிரற்றவர்களாக இருந்த உங்களை உயிர் பெறச் செய்த அல்லாஹ்வை எப்படி மறுக்கின்றீர்கள்? பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். பின்னர் உங்களை உயிர் பெறச் செய்வான். பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
- அவன்தான் பூமியிலுள்ள எல்லாவற்றையும் உங்களுக்காகப் படைத்தான். பிறகு வானத்தை நாடினான். அவற்றை ஏழு வானங்களாகச் செம்மைப்படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
- “வழித்தோன்றல்களை ஏற்படுத்தும் ஒரு படைப்பை பூமியில் உருவாக்கப் போகிறேன்” என்று வானவர்களிடம் உமது இறைவன் கூறியபோது, “குழப்பம் செய்து, இரத்தம் சிந்தக் கூடியவர்களையா அதில் நீ உருவாக்கப் போகிறாய்? நாங்கள்தான் உன்னுடைய புகழைக் கொண்டு உன்னைப் போற்றுகிறோமே! உன்னைத் தூயவன் என்று கூறுகின்றோமே!” என்று அவர்கள் கூறினர். “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்” என்று அவன் கூறினான்.
- ஆதமுக்கு எல்லாவற்றின் பெயர்களையும் அவன் கற்றுக் கொடுத்தான். பிறகு அவற்றை வானவர்களிடம் எடுத்துக்காட்டினான். “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்குச் சொல்லுங்கள்” என்று கூறினான்.
- “(இறைவா!) நீயே தூயவன். எங்களுக்கு நீ எதைக் கற்றுத் தந்தாயோ அதைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நீயே நன்கறிந்தவன், நுண்ணறிவாளன்” என்று (வானவர்கள்) கூறினர்.
- “ஆதமே! நீர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!” என்று அவன் கூறினான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்தபோது “வானங்கள், பூமியின் மறைவானவற்றை நான் அறிவேன். நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருந்தவற்றையும் நான் அறிவேன்” என்று உங்களிடம் நான் கூறவில்லையா?” என அவன் கேட்டான்.
- வானவர்களை நோக்கி, “ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர மற்றவர்கள் பணிந்தனர். அவன் மறுத்தான்; பெருமை கொண்டான்; இறைமறுப்பாளர்களில் ஆகிவிட்டான்.
- “ஆதமே! இச்சொர்க்கத்தில் நீரும், உமது மனைவியும் வசியுங்கள். அங்கு நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். இம்மரத்தை நெருங்காதீர்கள். (மீறினால்) நீங்கள் அநியாயக்காரர்களில் ஆகி விடுவீர்கள்” என்று கூறினோம்.
- அவ்விருவரையும் அதிலிருந்து ஷைத்தான் பிறழச் செய்தான். அவர்களிருந்த நிலையிலிருந்து அவ்விருவரையும் வெளியேற்றினான். “நீங்கள் இறங்கி விடுங்கள். உங்களில் சிலர், வேறு சிலருக்குப் பகைவராவீர்கள். உங்களுக்குப் பூமியில் தங்குமிடமும், குறிப்பிட்ட காலம்வரை வாழ்க்கை வசதியும் உண்டு” என்று கூறினோம்.
- ஆதம், தமது இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டார். எனவே அவன் அவரை மன்னித்தான். அவனே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
- “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி வரும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்” என்று கூறினோம்.
- யார் மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கூறினார்களோ அவர்களே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
- இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கிய எனது அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். என்னையே அஞ்சுங்கள்.
- உங்களிடம் இருக்கின்ற (தவ்ராத் வேதத்)தை உண்மைப்படுத்துவதாக நான் அருளியதை நம்புங்கள். இதை மறுப்போரில் முதன்மையானவர்களாக ஆகி விடாதீர்கள். எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். என்னையே அஞ்சுங்கள்.
- நீங்கள் தெரிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலந்து விடாதீர்கள். உண்மையை மறைத்தும் விடாதீர்கள்.
- தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஸகாத்தைக் கொடுங்கள். ருகூவு செய்பவர்களுடன் ருகூவு செய்யுங்கள்.
- நீங்கள் வேதத்தை வாசித்துக் கொண்டு, உங்களையே நீங்கள் மறந்துவிட்டு மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? சிந்திக்க மாட்டீர்களா?
- பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். பணிந்து நடப்பவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) அது பெரும் பாரமாக இருக்கும்.
- தமது இறைவனைத் தாங்கள் சந்திக்கக் கூடியவர்கள் என்றும், அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள் என்றும் (பணிந்து நடப்போரான) அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
- இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கிய எனது அருட்கொடையையும், உலகத்தாரைவிட உங்களை நான் சிறப்பித்ததையும் நினைத்துப் பாருங்கள்.
- ஒருநாளை அஞ்சிக் கொள்ளுங்கள்! (அந்நாளில்) ஒருவர் மற்றவருக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. யாரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. யாரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் உதவியளிக்கப்படவும் மாட்டார்கள்.
- கடும் வேதனையால் உங்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றியதை நினைத்துப் பாருங்கள். உங்கள் ஆண் குழந்தைகளை அவர்கள் அறுத்துக் கொன்று, பெண்களை உயிருடன் வாழ விட்டார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து பெரும் சோதனை இருந்தது.
- நாம் உங்களுக்காகக் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றியதையும், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நாம் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்ததையும் நினைத்துப் பாருங்கள்.
- நாற்பது இரவுகளை மூஸாவுக்கு நாம் வாக்களித்ததையும் பின்னர் (அதற்காக) அவர் சென்ற பிறகு நீங்கள் அநியாயம் செய்து, காளைக் கன்றை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பாருங்கள்.
- இதன் பின்னரும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
- நீங்கள் நேர்வழி பெறுவதற்காக நாம் மூஸாவுக்கு வேதத்தையும், (உண்மை, பொய்யை) பிரித்துக் காட்டக் கூடியதையும் வழங்கியதை நினைத்துப் பாருங்கள்.
- “என் சமுதாயத்தினரே! காளைக் கன்றை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டதால் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொண்டீர்கள். எனவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமனிப்புக் கோரி, உங்களையே மாய்த்துக் கொள்ளுங்கள். உங்களைப் படைத்தவனிடம் அதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று மூஸா தமது சமூகத்தாரிடம் கூறியதை நினைத்துப் பாருங்கள். எனவே அவன் உங்களை மன்னித்தான். அவன் மன்னிப்புமிக்கவன். நிகரிலா அன்பாளன்.
- “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காணும்வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று நீங்கள் கூறியபோது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இடிமுழக்கம் உங்களைத் தாக்கியது.
- பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவற்காக உங்கள் மரணத்திற்குப் பிறகு உங்களை உயிர்ப்பித்தோம்.
- உங்கள்மீது மேகங்களை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனப்படும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள். அவர்கள் நமக்கு அநியாயம் செய்யவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்வோராக இருந்தனர்.
- “இந்த ஊருக்குள் நுழையுங்கள். அதில் நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். (அதன்) நுழைவாயிலில் பணிந்தவர்களாகச் செல்லுங்கள். ‘ஹித்ததுன்’ (மன்னிப்பாயாக!) என்று கூறுங்கள். உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு(க் கூலியை) அதிகப்படுத்துவோம்” என்று நாம் கூறியதை நினைத்துப் பாருங்கள்! 4
- ஆனால் அநியாயக்காரர்கள், தமக்குக் கூறப்பட்டதை(த் திரித்து, அது) அல்லாத வேறு சொல்லாக மாற்றி விட்டனர். எனவே பாவம் செய்வோராக இருந்ததால் அநியாயக்காரர்கள்மீது வானிலிருந்து வேதனையை இறக்கினோம்.
- மூஸா தமது சமுதாயத்திற்காகத் தண்ணீர் வேண்டியபோது “இப்பாறையை உமது கைத்தடியால் அடிப்பீராக!” என்று கூறினோம். உடனே அதிலிருந்து பன்னிரண்டு நீரூற்றுகள் பீறிட்டு ஓடின. ஒவ்வொரு பிரிவினரும் தமது நீரருந்தும் இடத்தை அறிந்து கொண்டனர். “அல்லாஹ் வழங்கிய உணவிலிருந்து உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்” (என்று கூறினோம்.)
- “மூஸாவே! நாங்கள் ஒரே வகையான உணவைப் பொறுத்துக் கொள்ளவே மாட்டோம். எங்களுக்காக உமது இறைவனிடம் இறைஞ்சுவீராக! பூமி விளைவிக்கும் அதன் கீரை, வெள்ளரி, கோதுமை, பருப்பு மற்றும் வெங்காயம் போன்றவற்றை அவன் எங்களுக்கு வெளியாக்கித் தருவான்” என்று நீங்கள் கூறியபோது, “எது சிறந்ததோ அதற்குப் பகரமாகத் தாழ்ந்ததைக் கேட்கிறீர்களா? ஏதேனும் ஒரு நகரத்தில் இறங்கி விடுங்கள். நீங்கள் கேட்டது உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் கூறினார். அவர்கள்மீது இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளானார்கள். இதற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை மறுப்பவர்களாகவும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்பவர்களாகவும் இருந்ததுதான். அவர்கள் மாறு செய்து, வரம்பு மீறுவோராக இருந்ததும் இதற்குக் காரணம்.
- இறைநம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள் மற்றும் ஸாபியீன்கள் ஆகியோரில் அல்லாஹ்வின்மீதும், இறுதி நாள்மீதும் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தோருக்குத் தமது இறைவனிடம் நற்கூலி உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
- தூர் மலையை உங்களுக்கு மேலாக உயர்த்தி, “நாம் வழங்கிய (தவ்ராத் வேதத்)தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இறையச்சம் உடையோர் ஆவதற்காக அதில் உள்ளவற்றை நினைவு கூருங்கள்” என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கியதை நினைத்துப் பாருங்கள்.
- அதற்குப் பிறகும் நீங்கள் புறக்கணித்து விட்டீர்கள். அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கருணையும் உங்கள்மீது இல்லாதிருந்தால் நீங்கள் நஷ்டமடைந்தோரில் ஆகியிருப்பீர்கள்.
- உங்களில் (ஒரு பகுதியினர்) சனிக்கிழமை வரம்பு மீறினர். எனவே “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களிடம் கூறினோம். இதை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள்.
- அக்காலத்தில் இருந்தவர்களுக்கும், அதற்குப் பின்வருவோருக்கும் அதைப் பாடமாகவும், இறையச்சமுடையோருக்கு அறிவுரையாகவும் ஆக்கினோம்.
- “ஒரு மாட்டை நீங்கள் அறுக்குமாறு உங்களுக்கு அல்லாஹ் ஆணையிடுகிறான்” என்று மூஸா தமது சமூகத்தாருக்குக் கூறிய போது “எங்களைக் கேலி செய்கிறீரா?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கு, “நான் அறிவீனர்களுள் ஒருவனாக ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று அவர் கூறினார்.
- “எங்களுக்காக உமது இறைவனிடம் இறைஞ்சுவீராக! அது எத்தகையது என அவன் எங்களுக்கு விளக்குவான்” என அவர்கள் கூறினர். அதற்கு அவர், “அது கிழடும் அல்ல; கன்றும் அல்ல; அதற்கு இடைப்பட்ட நடுத்தரமான மாடு’ என்று (இறைவன்) கூறுகிறான். ஆகவே உங்களுக்கு இடப்பட்ட ஆணையை நிறைவேற்றுங்கள்” என்று கூறினார்.
- “எங்களுக்காக உமது இறைவனிடம் இறைஞ்சுவீராக! அதன் நிறம் என்னவென்று அவன் எங்களுக்கு விளக்குவான்” என அவர்கள் கூறினர். “அது காண்போரைக் கவர்கின்ற அடர்த்தியான மஞ்சள் நிற மாடு!’ என (இறைவன்) கூறுகிறான்” என்று அவர் கூறினார்.
- “எங்களுக்காக உமது இறைவனிடம் இறைஞ்சுவீராக! அது எத்தகையது என அவன் எங்களுக்கு விளக்குவான். எங்களுக்கு மாடுகள் ஒரே மாதிரியாக தோற்றமளிக்கின்றன. அல்லாஹ் நாடினால் நாங்கள் நல்வழி காண்போம்” என்று கூறினர்.
- “நிலத்தை உழுவதற்கோ, விளைநிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கோ அது பழக்கப்படுத்தப்படாத மாடாகும். (அது) குறைகளற்றது. அதில் எந்தத் தழும்பும் இருக்காது’ என்று (இறைவன்) கூறுகிறான்” என அவர் கூறினார். “நீர் இப்போதுதான் சரியான விபரம் கொண்டு வந்தீர்” என்று கூறி, அவர்கள் (அதனைச்) செய்ய விரும்பாத நிலையிலேயே அதை அறுத்தனர்.
- “நீங்கள் ஒருவரைக் கொலை செய்தபோது, அதுபற்றி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டீர்கள். நீங்கள் மறைத்துக் கொண்டிருந்தவற்றை அல்லாஹ் வெளியாக்குபவன்.
- “(கொல்லப்பட்ட) அவரை, அ(ந்)த (மாட்டி)ன் ஒரு பகுதியால் அடியுங்கள்” என்று கூறினோம். இவ்வாறே இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிக்கிறான். நீங்கள் சிந்திப்பதற்காகத் தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான்.
- இதன்பிறகும் உங்கள் உள்ளங்கள் இறுகி விட்டன. அவை பாறைகளைப் போன்று அல்லது அவற்றைவிடக் கடினமாகி விட்டன. (ஏனெனில்) பாறைகளில் கூட ஆறுகள் பீறிட்டு ஓடுகின்றன. சில பாறைகள் பிளந்து, அவற்றிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறது. அல்லாஹ்வின் அச்சத்தால் கீழே விழுபவையும் அவற்றில் உள்ளன. நீங்கள் செய்வதுபற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
- (வேதமுடையோரான) அவர்கள் உங்களை நம்புவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வசனங்களைச் செவியுற்று, அதை நன்கு விளங்கிக் கொண்ட பிறகும் தெரிந்துகொண்டே அதைத் திரித்து விடுகின்றனர்.
- அவர்கள் இறைநம்பிக்கை கொண்டோரைச் சந்திக்கும்போது, “நாங்களும் இறைநம்பிக்கை கொண்டோம்” எனக் கூறுகின்றனர். அவர்களில் சிலர், வேறு சிலருடன் தனித்திருக்கும்போது “அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்தியதை நீங்கள் அவர்களுக்குத் தெரிவிக்கின்றீர்களா? அதைக் கொண்டு உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதிடுவார்களே! சிந்திக்க மாட்டீர்களா?” எனக் கூறுகின்றனர்.
- அவர்கள் மறைத்து வைப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் அல்லாஹ் அறிகிறான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா?
- அவர்களில் கல்வியறிவற்றவர்களும் உள்ளனர். அவர்கள் கற்பனைக் கதைகளைத் தவிர வேதத்தை அறிய மாட்டார்கள். அவர்கள் யூகம் செய்வோர் தவிர வேறில்லை
- தமது கரங்களால் ஒரு நூலை எழுதிப் பின்னர் அதன் மூலம் அற்ப விலையைப் பெறுவதற்காக, “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்று கூறுவோருக்குக் கேடுதான். அவர்களின் கரங்கள் எழுதியதாலும் அவர்களுக்குக் கேடுதான். (அதனைக் கொண்டு) அவர்கள் சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்.5
- “சில குறிப்பிட்ட நாட்களைத் தவிர (நரக) நெருப்பு எங்களைத் தீண்டவே செய்யாது” என அவர்கள் கூறுகின்றனர். “நீங்கள் அல்லாஹ்விடம் ஏதேனும் வாக்குறுதியைப் பெற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின் அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்யவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின்மீது புனைந்து கூறுகிறீர்களா?” என்று கேட்பீராக!
- அவ்வாறல்ல! யார் தீமையைச் செய்து, அவர்களின் குற்றம் அவர்களைச் சூழ்ந்து கொண்டதோ அவர்களே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
- இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களே சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
- இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம், “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது; பெற்றோர்கள், உறவினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோருக்கு நன்மை செய்ய வேண்டும்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஸகாத்தை கொடுங்கள்!” என்று நாம் உறுதிமொழி வாங்கியதை நினைத்துப் பாருங்கள். பின்னர் உங்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அலட்சியம் செய்து புறக்கணித்து விட்டீர்கள்.
- “நீங்கள் (ஒருவருக்கொருவர்) இரத்தங்களைச் சிந்திக் கொள்ளாதீர்கள்! உங்கள் ஊர்களிலிருந்து உங்களைச் சார்ந்தோரை வெளியேற்றாதீர்கள்!” என்று உங்களிடம் உறுதிமொழி வாங்கியதை நினைத்துப் பாருங்கள். பின்னர் நீங்களே சாட்சியாகவும் இருந்து உறுதிப்படுத்தினீர்கள்.
- பின்னர் நீங்களே உங்களைச் சார்ந்தோரைக் கொலை செய்கிறீர்கள். உங்களில் ஒரு பிரிவினரை வெளியேற்றுவது உங்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும் அவர்களின் ஊர்களிலிருந்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள். பாவத்திலும், பகைமையிலும் அவர்களுக்கு எதிராக உதவி செய்கிறீர்கள். அவர்கள் கைதிகளாக உங்களிடம் வந்தால் (உங்கள் வேதத்தின்படி) நஷ்டஈடு கொடுத்து அவர்களை விடுவிக்கிறீர்கள். வேதத்தில் சிலவற்றை நம்பி, சிலவற்றை மறுக்கிறீர்களா? உங்களில் இதைச் செய்வோருக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. அவர்கள் மறுமை நாளில் கடும் வேதனையின் பக்கம் திருப்பப்படுவார்கள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
- இத்தகையோரே மறுமைக்குப் பதிலாக இவ்வுலக வாழ்வை விலைக்கு வாங்கியவர்கள். ஆகவே அவர்களுக்கு வேதனை குறைக்கப்பட மாட்டாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
- நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின் தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கி, அவரை (ஜிப்ரீல் எனும்) ரூஹுல் குதுஸ் மூலம் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாதவற்றை உங்களிடம் தூதர் கொண்டு வரும்போதெல்லாம் ஆணவம் கொள்கிறீர்களா? (தூதர்களில்) சிலரைப் பொய்யரெனக் கூறினீர்கள்; சிலரைக் கொலை செய்தீர்கள்.
- “எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று (யூதர்கள்) கூறுகின்றனர். அவ்வாறல்ல! அவர்களின் இறைமறுப்பின் காரணமாக அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். எனவே அவர்கள் குறைவாகவே இறைநம்பிக்கை கொள்கிறார்கள்.
- தம்மிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் வேதம், அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது (அதை மறுத்தனர்). இதற்கு முன் அவர்கள் இறைமறுப்பாளர்களுக்கு எதிராக வெற்றியை வேண்டிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அறிந்து வைத்திருந்த (இவ்வேதமான)து அவர்களிடம் வந்தபோது அதை மறுத்து விட்டனர். எனவே, இறைமறுப்பாளர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கின்றது.
- அல்லாஹ் அருளியதை மறுக்க வேண்டும் என்பதற்காக, எதற்குப் பகரமாகத் தங்களை விற்று விட்டார்களோ அது மிகக் கெட்டது. அல்லாஹ், தனது அடியார்களில் தான் நாடியோர்மீது தனது அருளை இறக்கியதில் அவர்கள் பொறாமை கொண்டதே இதற்குக் காரணம். அவர்கள் (இறைவனின்) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாயினர். இறைமறுப்பாளர்களுக்கு இழிவுதரும் வேதனை உள்ளது.
- “அல்லாஹ் அருளிய (இவ்வேதத்)தை நம்புங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “எங்களுக்கு அருளப்பட்ட (தவ்ராத்)தை நாங்கள் நம்புகிறோம்” எனக் கூறி அதற்குப் பின்னுள்ள (இவ்வேதத்)தை மறுக்கின்றனர். இதுவே அவர்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தக்கூடிய சத்தியம் ஆகும். “நீங்கள் இறைநம்பிக்கை கொண்டோராக இருந்தால் இதற்கு முன் எதற்காக அல்லாஹ்வின் தூதர்களைக் கொலை செய்தீர்கள்?” என்று கேட்பீராக!
- உங்களிடம் மூஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவருக்குப் பிறகு நீங்கள் அநியாயம் செய்து, காளைக் கன்றை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்.
- உங்களுக்கு மேல் தூர் மலையை உயர்த்தி, “நாம் வழங்கியதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! செவிசாயுங்கள்!” என்று உங்களிடம் நாம் உடன்படிக்கை ஏற்படுத்தியதை நினைத்துப் பாருங்கள். “நாங்கள் செவியுற்றோம்; மாறு செய்தோம்” என்று அவர்கள் கூறினர். அவர்கள் மறுத்த காரணத்தால் காளைக் கன்று(மீதான நேசம்) அவர்களின் உள்ளங்களில் ஊட்டப்பட்டது. நீங்கள் இறைநம்பிக்கை கொண்டோராக இருந்தால் உங்களின் (காளைக் கன்றின்மீதான) நம்பிக்கை உங்களுக்கு எதை ஏவுகிறதோ அது கெட்டது.
- “அல்லாஹ்விடம் இருக்கும் மறுமை வீடு, மற்ற (சமுதாய) மக்களுக்கு இல்லாமல் உங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்குமென்றால், (அதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள்” என்று கூறுவீராக!
- அவர்களின் கைகள் செய்த (தீய)வற்றின் காரணமாக அவர்கள் ஒருபோதும் அதை விரும்பவே மாட்டார்கள். அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன்.
- (நபியே!) அவர்கள், மற்ற மனிதர்களை விடவும், இணைவைப்பவர்களை விடவும் வாழ்க்கையின்மீது பேராசை கொண்டவர்களாக இருப்பதை நீர் காண்பீர். அவர்களில் ஒருவன் தனக்கு ஆயிரம் ஆண்டுகள் வாழ்நாள் வழங்கப்பட வேண்டும் என விரும்புவான். (அவ்வாறு) வாழ்நாள் வழங்கப்படுவது அவனை வேதனையை விட்டும் காப்பாற்றாது. அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
- (நபியே!) “ஜிப்ரீலுக்கு யார் எதிரியாக இருக்கிறாரோ (அவர் அல்லாஹ்வுக்கும் எதிரியாவார்). ஜிப்ரீல்தான் அல்லாஹ்வின் ஆணைப்படி இ(வ்வேதத்)தை உமது உள்ளத்தில் இறக்கி வைத்தார். (இது) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்தக் கூடியதாகவும், இறைநம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது” என்று கூறுவீராக!
- யார் அல்லாஹ்வுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காலுக்கும் எதிரியாக இருக்கிறார்களோ அந்த இறைமறுப்பாளர்களுக்கு அல்லாஹ்வும் எதிரியாவான்.
- நாம் தெளிவான வசனங்களையே உமக்கு அருளியுள்ளோம். பாவிகளைத் தவிர (வேறெவரும்) அவற்றை மறுக்க மாட்டார்கள்.
- அவர்கள் உடன்படிக்கை செய்யும் போதெல்லாம் அவர்களில் ஒரு பிரிவினர் அதை முறித்துவிடவில்லையா? மேலும் அவர்களில் பெரும்பாலோர் இறைநம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
- அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் வழங்கப்பட்டவர்களில் ஒரு கூட்டத்தினர் எதையும் அறியாதவர்களைப் போன்று அல்லாஹ்வின் வேதத்தைத் தம் முதுகுகளுக்குப் பின்னால் வீசி எறிந்து விட்டனர்.
- மேலும் அவர்கள் சுலைமானுடைய ஆட்சியின்போது ஷைத்தான்கள் ஓதியவற்றைப் பின்பற்றினார்கள். சுலைமான் (இறைவனை) மறுக்கவில்லை. மாறாக, பாபிலோனில் (வாழ்ந்த) ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மக்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து (இறைவனை) மறுத்தனர். (ஜிப்ரீல், மீக்கால் ஆகிய) இரு வானவர்களுக்கும் (அது) அருளப்படவில்லை. “நாங்கள் சோதனையாகவே இருக்கிறோம். நீ (இதைக் கற்பதன் மூலம் இறைவனை) மறுத்துவிடாதே!” என்று கூறாமல் (ஹாரூத் மாரூத் எனும்) அவர்கள் எவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே, கணவன் மனைவிக்கு இடையில் எதைக் கொண்டு பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அவர்கள், அதன் மூலம் அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவர்களாக இல்லை. தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதையும் பயனளிக்காததையுமே அவர்கள் கற்றுக் கொள்கின்றனர். அதை யார் விலைக்கு வாங்கிக் கொண்டாரோ அவருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை என்பதை உறுதியாக அறிந்துள்ளனர். அவர்கள் அறிந்து கொள்வோராக இருந்தால், எதற்குப் பகரமாக அவர்கள் தம்மையே விற்று விட்டார்களோ அது மிகக் கெட்டது.
- அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, (இதிலிருந்து) விலகிக் கொண்டால் அல்லாஹ்விடம் உள்ள கூலியே மிகச் சிறந்தது. (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
- இறைநம்பிக்கை கொண்டோரே! (‘எங்கள் இடையரே!’ என்ற பொருளும் கொண்ட) ‘ராஇனா’ என்று கூறாதீர்கள். (‘எங்களைக் கவனிப்பீராக!’ என்ற பொருள் தரும்) ‘உன்ளுர்னா’ என்று கூறுங்கள். செவிதாழ்த்துங்கள்! இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
- உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு எந்த நன்மையும் அருளப்படுவதை வேதமுடையோரில் உள்ள இறைமறுப்பாளர்களும், இணைவைப்போரும் விரும்ப மாட்டார்கள். அல்லாஹ் தனது அருளைத், தான் நாடியோருக்கு உரித்தாக்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
- ஒரு வசனத்தை நாம் மாற்றினாலோ, அல்லது மறக்கச் செய்தாலோ, அதைவிடச் சிறந்ததை அல்லது அதுபோன்றதைக் கொண்டு வருவோம். ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன் என்பதை நீர் அறியவில்லையா?
- வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு எந்தப் பாதுகாவலரும், உதவியாளரும் இல்லை.
- இதற்கு முன்னர் மூஸாவிடம் (தேவையற்ற கேள்விகள்) கேட்கப்பட்டதைப் போன்று உங்களின் தூதரிடம் நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா? யார் (தனது) இறைநம்பிக்கையை இறைமறுப்பாக மாற்றிக் கொள்கிறாரோ அவர் நேர்வழி தவறி விட்டார்.6
- வேதமுடையோரில் அதிகமானோர், தமக்கு உண்மை தெளிவான பிறகும் தமது உள்ளங்களில் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக, நீங்கள் இறைநம்பிக்கை கொண்ட பிறகு உங்களை இறைமறுப்பாளர்களாக மாற்றிவிட வேண்டுமென்று விரும்புகின்றனர். அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டு வரும்வரை அவர்களை விட்டு விடுங்கள்; அலட்சியம் செய்யுங்கள்! ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.7
- தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! நன்மையில் உங்களுக்காக எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
- “யூதர்களாகவோ அல்லது கிறித்தவர்களாகவோ இருப்போரைத் தவிர (வேறெவரும்) சொர்க்கம் செல்லவே மாட்டார்கள்” என்று (வேதமுடையோர்) கூறுகின்றனர். இது அவர்களின் கற்பனையே ஆகும். “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்” என்று (நபியே) கேட்பீராக!
- அவ்வாறல்ல! யார் நன்மை செய்து, தமது முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்கிறாரோ அவருக்குத் தமது இறைவனிடம் கூலி உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
- வேதத்தைப் படித்துக் கொண்டே “கிறித்தவர்கள் எதிலும் இல்லை” என யூதர்கள் கூறினர்; “யூதர்கள் எதிலும் இல்லை” எனக் கிறித்தவர்கள் கூறினர். அவ்வாறு அவர்கள் கூறுவதைப் போன்றே அறியாதவர்களும் கூறினர். அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அதில் அவர்களிடையே மறுமை நாளில் அல்லாஹ் தீர்ப்பளிப்பான்.
- அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனது பெயர் நினைவுகூரப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயற்சிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? பயந்தவர்களாகவே தவிர அவற்றில் நுழையும் உரிமை இத்தகையோருக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு உள்ளது. மறுமையில் அவர்களுக்குக் கடும் வேதனையும் உண்டு.
- கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே, நீங்கள் எங்குத் திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் இருக்கின்றது. அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.8
- “அல்லாஹ், (தனக்கு) மகனை ஏற்படுத்திக் கொண்டான்” என அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறல்ல! அவன் தூயவன். வானங்கள் மற்றும் பூமியில் இருப்பவை அவனுக்கே உரியவை. அவனுக்கே அனைத்தும் கட்டுப்படுகின்றன.
- (அல்லாஹ்வே) வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ‘ஆகி’விடும்.
- “எங்களிடம் அல்லாஹ் பேச வேண்டாமா? அல்லது ஏதேனும் சான்று எங்களுக்கு வர வேண்டாமா?” என்று அறியாதோர் கேட்கின்றனர். இவர்கள் கேட்பதைப் போன்றே இவர்களுக்கு முன்னிருந்தோரும் கேட்டனர். அவர்களின் உள்ளங்கள் ஒத்திருக்கின்றன. உறுதியாக நம்பும் சமுதாயத்தினருக்கு நமது சான்றுகளைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.
- (நபியே!) உம்மை நற்செய்தி சொல்பவராகவும், எச்சரிக்கை செய்யக் கூடியவராகவும் உண்மையுடன் நாமே அனுப்பி வைத்தோம். நரகவாசிகளைப் பற்றி நீர் விசாரிக்கப்பட மாட்டீர்.
- நீர் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரை யூதர்களும், கிறித்தவர்களும் உம்மைப் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். “அல்லாஹ்வின் வழியே நேர்வழி” என்று கூறுவீராக! உமக்கு ஞானம் வந்த பிறகு அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பவனோ, உதவி செய்பவனோ இல்லை.
- யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்து, அதைப் படிக்க வேண்டிய முறைப்படி படிக்கிறார்களோ அவர்களே அதை நம்புகிறார்கள். யார் அதை மறுக்கிறார்களோ அவர்களே நஷ்டமடைந்தோர்.
- இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு அளித்திருக்கும் எனது அருட்கொடையையும், அகிலத்தாரைவிட உங்களை நான் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள்.
- ஒருவர், மற்றவருக்கு எந்த நன்மையும் செய்ய முடியாத ஒரு நாளை அஞ்சிக் கொள்ளுங்கள். எந்த ஈட்டுத் தொகையும் யாரிடமிருந்தும் (அந்நாளில்) ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எந்தப் பரிந்துரையும் அவருக்குப் பயன் தராது. அவர்கள் உதவியளிக்கப்படவும் மாட்டார்கள்.
- இப்ராஹீமை, அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்தபோது அவர் அவற்றை முழுமையாக நிறைவு செய்தார். “மக்களுக்கு (வழிகாட்டும்) தலைவராக உம்மை ஆக்குகிறேன்” என்று (இறைவன்) கூறினான். “என் தலைமுறைகளிலிருந்தும் (அவ்வாறு ஆக்குவாயாக!)” என்று அவர் கூறினார். “(உமது தலைமுறையிலுள்ள) அநியாயக்காரர்களை எனது வாக்குறுதி சேராது” என்று அவன் கூறினான்.
- (கஅபா எனும்) இந்த ஆலயத்தை மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும், பாதுகாப்புத் தலமாகவும் நாம் ஆக்கியதை நினைத்துப் பாருங்கள். மேலும் ‘மகாமு இப்ராஹீமை’த் தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுங்கள். “தவாஃப் செய்வோர், இஃதிகாஃப் இருப்போர் மற்றும் ருகூவு, ஸஜ்தா செய்வோர் ஆகியோருக்காக எனது ஆலயத்தைத் தூய்மையாக்குங்கள்” என இப்ராஹீமிடமும் இஸ்மாயீலிடமும் வாக்குறுதி வாங்கினோம்.9
- “என் இறைவனே! (மக்கா எனும்) இந்த ஊரைப் பாதுகாப்புத் தலமாக ஆக்குவாயாக! இவ்வூர்வாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குப் பழங்களை உணவாக அளிப்பாயாக!” என்று இப்ராஹீம் கூறிய போது, “யார் (என்னை) மறுக்கிறாரோ அவரையும் சிறிது காலம் சுகம் அனுபவிக்கச் செய்வேன். பிறகு அவரை நரக வேதனையில் தள்ளுவேன். அது சேருமிடத்தில் கெட்டது” என்று அவன் கூறினான்.
- இப்ராஹீமும், இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்தியபோது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன்; நன்கறிந்தவன்” (என்று கூறினர்.)
- “எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் தலைமுறைகளை உனக்குக் கட்டுப்படும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வணக்க முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீயே மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்”
- “எங்கள் இறைவனே! (எங்கள் தலைமுறையினரான) அவர்களிலிருந்து ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! அவர் உனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டி, வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மையாக்குவார். நீயே மிகைத்தவன், நுண்ணறிவாளன்” (என்றும் கூறினர்.)
- தன்னையே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர (வேறு) யார் இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் அவர் நல்லோரில் இருப்பார்.
- “கட்டுப்படுவீராக!” என அவரிடம் அவரது இறைவன் கூறியபோது, “நான் அகிலங்களின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்” என்று கூறினார்.
- “என் பிள்ளைகளே! உங்களுக்காக இம்மார்க்கத்தை அல்லாஹ் தேந்தெடுத்துள்ளான். எனவே முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்க வேண்டாம்” என்பதையே தம் மக்களுக்கு இப்ராஹீமும், யஃகூபும் அறிவுறுத்தினர்.
- யஃகூபுக்கு மரணம் நெருங்கிய வேளையில் நீங்கள் உடன் இருந்தீர்களா? அவர், தமது புதல்வர்களிடம் “எனக்குப் பின் யாரை வணங்குவீர்கள்?” என்று கேட்டபோது “உமது இறைவனும், உமது முன்னோர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோர்தம் இறைவனுமாகிய ஒரே இறைவனைத்தான் நாங்கள் வணங்குவோம். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்” என்று பதிலளித்தனர்.
- அது சென்றுவிட்ட ஒரு சமுதாயம். அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே! நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நீங்கள் வினவப்பட மாட்டீர்கள்.
- “நீங்கள் யூதர்களாகவோ அல்லது கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்” என (வேதமுடையோர்) கூறுகின்றனர். “அவ்வாறல்ல! சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக!
- “நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவரது தலைமுறைகளுக்கு அருளப்பட்டதையும், மூஸா, ஈஸா ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டதையும், (மற்ற) நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். (நபிமார்களான) அவர்களில் எவருக்கிடையிலும் பாகுபாடு காட்ட மாட்டோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டோர்” என்று கூறுங்கள்.10
- நீங்கள் இறைநம்பிக்கை கொண்டதைப் போன்றே அவர்களும் இறைநம்பிக்கை கொண்டால் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் புறக்கணிப்பார்கள் என்றால் அவர்கள் பிளவிலேயே இருக்கின்றனர். அவர்களின் விஷயத்தில் அல்லாஹ் உமக்குப் போதுமானவன். அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
- “அல்லாஹ் தீட்டும் வர்ண(மான இம்மார்க்க)த்தையே (நாங்கள் பின்பற்றுவோம்.) வர்ணம் தீட்டுவதில் அல்லாஹ்வை விட மிக அழகானவன் யார்? நாங்கள் அவனையே வணங்குபவர்கள்” (என்று கூறுவீராக!)
- “அல்லாஹ்வைப் பற்றி எங்களிடம் தர்க்கம் செய்கிறீர்களா? அவன் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். எங்களின் செயல்கள் எங்களுக்கே! உங்களின் செயல்கள் உங்களுக்கே! நாங்கள் அவனுக்கே மனத்தூய்மையுடன் செயல்படுவோர்” என்று கூறுவீராக!
- “இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவரது தலைமுறைகள் யூதர்களாகவோ அல்லது கிறித்தவர்களாகவோ இருந்தார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்களா? நன்கறிந்தவர்கள் நீங்களா? அல்லது அல்லாஹ்வா?” என்று கேட்பீராக! அல்லாஹ்விடமிருந்து தனக்கு வந்த சாட்சியத்தை மறைப்பவனை விட அநியாயக்காரன் யார்? நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
- அது சென்றுவிட்ட ஒரு சமுதாயம். அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே! நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நீங்கள் வினவப்பட மாட்டீர்கள்.
- “(முஸ்லிம்களாகிய) அவர்கள் (முன்னோக்கிக் கொண்டு) இருந்த தொழும் திசையை விட்டும் அவர்களைத் திருப்பியது எது?” என்று மக்களில் மூடர்கள் கேட்பார்கள். “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்விற்கே உரியவை. தான் நாடியோரை அவன் நேர்வழியில் செலுத்துகிறான்” என்று கூறுவீராக!11
- இவ்வாறே (மற்ற) மக்களுக்கு நீங்கள் சாட்சிகளாக இருப்பதற்காகவும், உங்களுக்கு இத்தூதர் சாட்சியாக இருப்பதற்காகவும் உங்களை நடுநிலைச் சமுதாயமாக ஆக்கினோம்.12 ‘வந்த வழியே திரும்பிச் செல்வோர் யார்? இத்தூதரைப் பின்பற்றுவோர் யார்?’ என்பதை வெளிப்படுத்திக் காட்டுவதற்காகவே நீர் ஏற்கனவே இருந்த தொழும் திசையை நாம் நிர்ணயித்தோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பெரும் பாரமாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வீணாக்க மாட்டான். அல்லாஹ் மனிதர்கள்மீது கருணை உள்ளவன்; நிகரிலா அன்பாளன்.13
- (நபியே!) உமது முகம் (கிப்லா மாற்றத்தை எதிர்பார்த்து) வானத்தை நோக்கித் திரும்புவதைப் பார்க்கிறோம். எனவே, நீர் எதை விரும்புகிறீரோ அந்தத் தொழும் திசை நோக்கி உம்மைத் திருப்புவோம். உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கிருந்தபோதும் (தொழுகையில்) உங்கள் முகங்களை அதன் திசையில் திருப்புங்கள். வேதம் வழங்கப்பட்டவர்கள், ‘இது, தம்முடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை’ என்பதை அறிவார்கள். அவர்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
- வேதம் வழங்கப்பட்டோரிடம் அனைத்துச் சான்றுகளை நீர் கொண்டு வந்த போதிலும் உமது தொழும் திசையை அவர்கள் பின்பற்றப் போவதில்லை. அவர்களுடைய தொழும் திசையை நீரும் பின்பற்றப் போவதில்லை. அவர்களில் சிலர், வேறு சிலரின் தொழும் திசையைப் பின்பற்றக்கூடியவர்களாக இல்லை. உமக்கு ஞானம் வந்த பிறகு அவர்களின் விருப்பங்களை நீர் பின்பற்றினால் அப்போது அநியாயக்கார்களுள் ஒருவராக ஆகிவிடுவீர்.
- யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிந்து கொள்வதைப் போன்று (நபியாகிய) இவரை அறிகின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் தெரிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
- இந்த உண்மை உமது இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவர்களில் ஒருவராக ஆகிவிடாதீர்!
- ஒவ்வொருவருக்கும் அவர் முன்னோக்கும் ஒரு திசை உள்ளது. எனவே நன்மையான காரியங்களில் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டுவந்து சேர்ப்பான். ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
- நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழும்போது) உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
- நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழும்போது) உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! மக்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்றவர்களிடம் உங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இருக்கக் கூடாது என்பதற்காகவும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப்படுத்துவதற்காகவும் நீங்கள் எங்கிருந்தாலும் அதன் திசையில் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். அவர்களுக்கு நீங்கள் பயப்படாதீர்கள்! எனக்கே பயப்படுங்கள்! இதனால் நேர்வழி பெறுவீர்கள்.
- நமது வசனங்களை உங்களுக்கு ஓதிக் காட்டி, உங்களைத் தூய்மையாக்கி, உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுத் தந்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுத் தரும் ஒரு தூதரை உங்களிலிருந்தே உங்களுக்கு நாம் அனுப்பியது போன்றே (உங்களுக்கான தொழும் திசையையும் ஏற்படுத்தி அருள் புரிந்தோம்.)
- எனவே, என்னை நினைவுகூருங்கள்! நானும் உங்களை நினைவு கூர்வேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! என்னை மறுத்து விடாதீர்கள்!
- இறைநம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.
- அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுவோரை ‘மரணித்தவர்கள்’ என்று கூறாதீர்கள். மாறாக, அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.
- உங்களை ஓரளவு பயம் மற்றும் பசியைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றைக் குறைத்தும் நாம் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
- அவர்களுக்கு எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நாங்கள் அவனிடமே திரும்பக் கூடியவர்கள்” என்று கூறுவார்கள்.14
- இத்தகையோர்மீதுதான் அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்பும் அருளும் உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றவர்கள்.
- ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ் ஏற்படுத்திய அடையாளங்களில் உள்ளவை. எனவே இந்த (கஅபா) ஆலயத்தை ஹஜ் அல்லது உம்ரா செய்பவர் அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்றமில்லை. நன்மையை யார் மிகுதியாகச் செய்கிறாரோ (அவருக்கு) அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; நன்கறிந்தவன்.15
- நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் வேதத்தில் மக்களுக்கு நாம் தெளிவாக்கிய பிறகு, யார் மறைக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். சபிப்ப(தற்கு உரிமையுடைய)வர்களும் சபிக்கின்றனர்.
- பாவ மன்னிப்புக் கோரி, (தம்மைச்) சீர்திருத்திக் கொண்டு, தெளிவாக எடுத்துரைத்தவர்களைத் தவிர! அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
- யார் (அல்லாஹ்வை) மறுத்து, இறைமறுப்பாளர்களாகவே மரணித்து விடுகிறார்களோ அவர்கள்மீது அல்லாஹ், வானவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபமும் உண்டாகும்.
- அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை குறைக்கப்படவோ, கால அவகாசம் அளிக்கப்படவோ மாட்டாது.
- உங்கள் கடவுள் ஒரே கடவுள்தான். அளவிலா அருளாளனும் நிகரிலா அன்பாளனுமாகிய அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை.
- வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறி மாறி வந்து கொண்டிருப்பதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றை(ச் சுமந்து) கொண்டு கடலில் ஓடும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் மழையை இறக்கி, அதன் மூலம் பூமியை, அது இறந்தபின்பு உயிர்ப்பிப்பதிலும், அதில் அனைத்து உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்குமிடையில் கட்டுப்படுத்தப்பட்ட மேகத்திலும் சிந்திக்கின்ற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.
- அல்லாஹ் அல்லாதவர்களை இணை(க்கடவுள்)களாக ஏற்படுத்திக் கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போல் அவர்களை நேசிப்பவர்களும் மக்களில் உள்ளனர். அல்லாஹ்வை நேசிப்பதில் இறைநம்பிக்கை கொண்டவர்கள் மிக உறுதியானவர்கள். அநியாயக்காரர்கள் வேதனையைக் காணும்போது(ள்ள நிலையை) அறிவார்களாயின் அனைத்து ஆற்றலும் அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் (என்பதை உணர்ந்து கொள்வர்.)
- பின்பற்றப்பட்டவர்கள், பின்பற்றியவர்களை விட்டும் விலகி, அவர்கள் வேதனையையும் கண்டு, அவர்களுக்கிடையே இருந்த தொடர்புகள் முறிந்துவிடும்போது (அல்லாஹ்வின் ஆற்றலை அறிந்து கொள்வர்.)
- “(மீண்டும் உலகிற்குத்) திரும்பும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்குமானால் அவர்கள் எங்களை விட்டு விலகியதைப் போன்று நாங்களும் அவர்களை விட்டு விலகிக் கொள்வோமே!” என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இவ்வாறுதான் அவர்களின் செயல்களை அவர்களுக்குத் துக்கமளிப்பவையாக அல்லாஹ் காட்டுவான். அவர்கள் நரகத்திலிருந்து வெளியேறுபவர்களும் அல்லர்.
- மனிதர்களே! பூமியில் இருப்பவற்றில் தூய்மையாகவுள்ள அனுமதிக்கப்பட்டவற்றை உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். அவனே உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
- தீயதையும், மானக்கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே அவன் உங்களுக்கு ஏவுகிறான்.
- “நீங்கள் அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்படும்போது, “அவ்வாறல்ல! எதன்மீது எங்கள் முன்னோரைக் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். அவர்களுடைய முன்னோர் எதையும் சிந்திக்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா?
- இறைமறுப்பாளர்களுக்கு (அறிவுரை கூறுவதற்குரிய) எடுத்துக்காட்டானது, வெறும் சப்தத்தையும், கூச்சலையுமே செவியேற்பவை(களான கால்நடை)களைச் சப்தமிட்டு அழைப்பவனின் எடுத்துக்காட்டைப் போன்றதாகும். (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
- இறைநம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு அளித்திருப்பவற்றில் தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றி செலுத்துங்கள்.16
- தானாகச் செத்தது, (ஓட்டப்பட்ட) இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்குப் பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். விரும்பிச் செல்லாமலும், வரம்பு மீறாமலும் யாரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர்மீது குற்றமில்லை. அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
- வேதத்தில் அல்லாஹ் அருளியதை மறைத்துவிட்டு, அதற்காக அற்ப விலையைப் பெறுவோர் தமது வயிறுகளில் நரக நெருப்பையே சாப்பிடுகிறார்கள். மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேச மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உள்ளது.
- அவர்களே நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பிற்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கியவர்கள். அவர்கள் நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது?
- இதற்குக் காரணம், அல்லாஹ் உண்மையுடன் இவ்வேதத்தை இறக்கிவைத்(தும் அவர்கள் மறைத்)ததுதான். இவ்வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் பெரும் பிளவிலேயே உள்ளனர்.
- கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ உங்கள் முகங்களைத் திருப்புவதில் (மட்டுமே) நன்மை இல்லை. மாறாக, அல்லாஹ்வையும், மறுமை நாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டு, அவன்மீதுள்ள அன்பின் காரணமாக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும் செல்வத்தை வழங்கி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்து, வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுபவர்களும், கடும் வறுமையிலும், நோயிலும், போர்க் காலத்திலும் பொறுமையை மேற்கொள்வோருமே நன்மை செய்வோராவர். அவர்களே உண்மையாளர்கள். மேலும் அவர்களே இறையச்சமுடையவர்கள்.
- இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டோருக்காகப் பழிவாங்குதல் உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (கொலை செய்தவன்) சுதந்திரமானவன் என்றால் அந்தச் சுதந்திரமானவனும், அடிமை என்றால் அந்த அடிமையும், பெண் என்றால் அந்தப் பெண்ணும் (பழிவாங்கப்பட வேண்டும்). கொல்லப்பட்டவனின் சகோதரனால் (பொறுப்பாளரால்) கொலையாளிக்கு ஏதேனும் மன்னிப்பு வழங்கப்பட்டால் நியாயமான முறையைப் பின்பற்றி (ஈட்டுத் தொகையை) அழகிய முறையில் அச்சகோதரனுக்கு வழங்க வேண்டும். இது உங்கள் இறைவனின் சலுகையும், அருளும் ஆகும். இதன் பின்னர் யார் வரம்பு மீறுகிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.17
- அறிவுடையோரே! பழிவாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்க்கை உள்ளது. நீங்கள் (குற்றங்களிலிருந்து) விலகிக் கொள்ளலாம்.
- உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும்போது அவர் செல்வத்தை விட்டுச் சென்றால் பெற்றோருக்கும், உறவினருக்கும் நியாயமான முறையில் மரண சாசனம் செய்வது உங்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது. (இது) இறையச்சமுடையோருக்குக் கடமையாகும்.
- (மரண சாசனமான) அதைச் செவியுற்ற பின் யார் மாற்றிக் கூறுகிறார்களோ அதன் குற்றம் அதை மாற்றுபவர்களையே சாரும். அல்லாஹ் செவியேற்பவன், நன்கறிந்தவன்.
- மரண சாசனம் செய்பவரிடம் அநியாயத்தையோ அல்லது பாவத்தையோ யாரேனும் அஞ்சி, அவர்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தினால் அவர்மீது குற்றமில்லை. அல்லாஹ் மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
183, 184 இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள்மீதும் குறிப்பிட்ட நாட்கள் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். உங்களில் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளட்டும். அதற்குச் சக்தி பெற்றவர்கள் (நோன்பு நோற்கா விட்டால்) ஓர் ஏழைக்கு உணவளிப்பது (அதற்குரிய) பரிகாரமாகும். நன்மையை யார் மிகுதியாகச் செய்கிறாரோ அது அவருக்குச் சிறந்தது. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்குச் சிறந்தது.18
- ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மக்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதன் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர், அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளட்டும். உங்களுக்கு அல்லாஹ் எளிதையே நாடுகிறான். உங்களுக்கு அவன் சிரமத்தை நாடவில்லை. நீங்கள் எண்ணிக்கையை முழுமைப்படுத்துவதற்கும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி, நன்றி செலுத்துவதற்காகவும் (இச்சலுகையை வழங்கினான்.)
- (நபியே!) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நான் அருகில் இருக்கிறேன். என்னிடம் பிரார்த்திக்கும்போது பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன். எனவே, அவர்கள் நேர்வழி பெறுவதற்காக எனக்கே கட்டுப்பட்டு, என்னையே நம்பட்டும்” (என்று நான் கூறுவதைத் தெரிவிப்பீராக!)
- நோன்புக்கால இரவில் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். உங்களை நீங்களே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்துள்ளான். எனவே அவன் உங்கள் பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்று உங்களை மன்னித்தான்.19 இனி நீங்கள் அவர்களுடன் கூடி, அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். (இரவு என்ற) கருப்புக் கயிற்றிலிருந்து அதிகாலை எனும் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!20 பிறகு இரவு (தொடங்கும்) வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள். நீங்கள் பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது (உங்கள் மனைவியரான) அவர்களுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அவற்றை நெருங்காதீர்கள். மனிதர் இறையச்சமுடையோர் ஆவதற்காக இவ்வாறே தனது வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
- உங்கள் செல்வங்களை, உங்களுக்கிடையே தவறான முறையில் உண்ணாதீர்கள்! நீங்கள் அறிந்து கொண்டே மக்களின் செல்வங்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் உண்பதற்காக, உங்கள் செல்வங்களை அதிகாரிகளிடம் (லஞ்சம் கொடுப்பதற்குக்) கொண்டு செல்லாதீர்கள்.
- பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். “அவை மக்களுக்கும், ஹஜ்ஜுக்கும் காலம் காட்டுபவை” என்று கூறுவீராக! (இஹ்ராமுடைய நிலையில்) உங்கள் வீடுகளுக்குள் நீங்கள் அவற்றின் பின்(வாசல்) வழியாக வருவதில் நன்மை இல்லை. மாறாக, இறைவனை அஞ்சுபவரே நன்மை உடையவராவார். வீடுகளுக்குள் அவற்றின் (முன்)வாசல்கள் வழியாகவே வாருங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!21
- உங்களை எதிர்த்துப் போரிடுவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறிவிடாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்கமாட்டான்.
- (போரில்) நீங்கள் அவர்களைக் காணும் இடத்தில் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியது போன்றே நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! குழப்பம் விளைவிப்பது, கொலையைவிடக் கொடியது. மஸ்ஜிதுல் ஹராமில் உங்களை எதிர்த்து அவர்கள் போர் புரியும்வரை அதில் நீங்கள் அவர்களை எதிர்த்துப் போர் புரியாதீர்கள். ஆனால் அவர்கள் (அங்கு) உங்களை எதிர்த்துப் போர் புரிந்தால் அவர்களைக் கொல்லுங்கள். இறைமறுப்பாளர்களுக்கான கூலி இவ்வாறே இருக்கும்.
- அவர்கள் விலகிக் கொண்டால் அல்லாஹ் மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
- குழப்பம் நீங்கி, வணக்க வழிபாடு அல்லாஹ்வுக்காக ஆகும்வரை அவர்களை எதிர்த்துப் போரிடுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால் அநியாயக்காரர்களைத் தவிர்த்து (மற்றவர்களிடம்) பகைமை (கொண்டு போரிடக்) கூடாது.22
- புனித மாதத்திற்கு நிகர் புனித மாதம்தான். புனிதங்(கள் பாழ்படுத்தப்பட்டால் அவை)களுக்குப் பழிவாங்குதல் உண்டு. எனவே உங்கள்மீது யாரேனும் வரம்பு மீறினால், அவர்கள் உங்களிடம் வரம்பு மீறியதைப் போன்றே நீங்களும் அவர்களிடம் வரம்பு மீறுங்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். இறையச்சமுடையோருடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.23
- அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்! உங்கள் கைகளை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.24
- நீங்கள் அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுங்கள். நீங்கள் தடுக்கப்பட்டால் பலிப் பிராணியில் இயன்ற ஒன்று (அறுக்கப்பட வேண்டும்.) பலிப் பிராணி, தனது எல்லையை அடையும்வரை உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்.25 உங்களில் யாரேனும் நோயாளியாகவோ அல்லது தனது தலையில் நோவினை உள்ளவராகவோ இருந்(து தலையை மழித்)தால் நோன்பு நோற்பது அல்லது தர்மம் செய்வது அல்லது பலியிடுவது உரிய பரிகாரமாகும்.26 நீங்கள் பாதுகாப்பான சூழலை அடைந்து, யாரேனும் ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்தால் அவர் பலிப் பிராணியில் இயன்றதை (அறுக்க வேண்டும். அதைப்) பெற்றுக் கொள்ளாதவர் ஹஜ்ஜில் மூன்று நாட்களும், (ஊருக்குத்) திரும்பியதும் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இது முழுமையான பத்து ஆகும். இது, யாருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) வசிக்கவில்லையோ அவர்களுக்குரியது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.27
- ஹஜ்(ஜின் காலம்) அறியப்பட்ட மாதங்களாகும்.28 அவற்றில் ஹஜ்ஜை கடமையாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின்போது இல்லறத்தில் ஈடுபடுவதும், பாவம் செய்வதும், தர்க்கம் புரிவதும் கூடாது. நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் அல்லாஹ் அதனை அறிகிறான்.29 (ஹஜ்ஜுக்குரிய) பயணப் பொருட்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். பயணப் பொருட்களில் மிகச் சிறந்தது இறையச்சமாகும். அறிவுடையோரே! எனக்கே அஞ்சுங்கள்.30
- (ஹஜ் பயணத்தில் வியாபாரம் செய்து) உங்களுடைய இறைவனின் அருளை நீங்கள் தேடிக் கொள்வது உங்கள்மீது குற்றமில்லை. நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பும்போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவனை நினைவு கூருங்கள்.31
- பிறகு, மக்கள் திரும்புகின்ற (அரஃபா எனும்) இடத்திலிருந்தே நீங்களும் திரும்புங்கள். அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். அல்லாஹ் மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்.32
- உங்கள் ஹஜ் வணக்க முறைகளை நீங்கள் நிறைவேற்றி விட்டால், உங்கள் முன்னோர்களை நீங்கள் நினைவுகூர்வதைப் போன்று அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூருங்கள். “எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலேயே (அனைத்தையும்) வழங்குவாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை.
- “எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை(த் தருவாயாக!) மறுமையிலும் நன்மையைத் தருவாயாக! நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர்.33
- அவர்கள் செய்தவற்றுக்கான கூலி அவர்களுக்கு உண்டு. அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
- குறிப்பிட்ட நாட்களில் (மினாவில்) அல்லாஹ்வை நினைவு கூருங்கள். இரண்டு நாட்களில் விரைவாகப் புறப்படுபவர்மீது குற்றமில்லை. தாமதித்துப் புறப்படுபவர்மீதும் குற்றமில்லை. (இது அல்லாஹ்வை) அஞ்சுவோருக்கு உரியதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- இவ்வுலக வாழ்க்கையைக் குறித்து உம்மைக் கவரும் விதமாகப் பேசுபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவன் தனது உள்ளத்தில் இருப்பதற்கு அல்லாஹ்வை சாட்சியாக்குகிறான். அவனோ கடுமையாகத் தர்க்கம் செய்பவன்.
- அவன் (உம்மை விட்டுத்) திரும்பிச் சென்றால் பூமியில் குழப்பம் விளைவித்து, அதில் விவசாயத்தையும் கால்நடைகளையும் அழிக்க முயற்சிக்கிறான். குழப்பத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
- “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று அவனிடம் கூறப்பட்டால், (அவனது) கவுரவம் அவனைப் பாவத்தில் தள்ளி விடுகிறது. எனவே அவனுக்கு நரகமே போதுமானது. தங்குமிடத்தில் அது கெட்டது.
- அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி தம்மையே சமர்ப்பித்து விடும் மனிதர்களும் இருக்கின்றனர். அடியார்கள்மீது அல்லாஹ் கருணையுடையவன்.34
- இறைநம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.
- உங்களிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் நீங்கள் சறுக்கினால், அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- அல்லாஹ்வும் வானவர்களும் மேகக் குடைகளில் தம்மிடம் வந்து, காரியம் முடிக்கப்படுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அனைத்துக் காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும்.
- இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு எத்தனை தெளிவான சான்றுகளை வழங்கினோம் என்பதை அவர்களிடமே கேட்பீராக! அல்லாஹ்வின் அருட்கொடை தன்னிடம் வந்த பிறகு யாரேனும் அதை மாற்றினால், (அவனைத்) தண்டிப்பதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்.
- இறைமறுப்பாளர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை அலங்காரமாக்கப் பட்டுள்ளது. அவர்கள் இறைநம்பிக்கை கொண்டோரை ஏளனம் செய்கின்றனர். ஆனால் இறையச்சமுடையோர் மறுமை நாளில் அவர்களுக்கு மேலாக இருப்பார்கள். தான் நாடியோருக்கு அல்லாஹ் கணக்கின்றி வழங்குகிறான்.
- மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயமாக இருந்தனர். (அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டபோது) நற்செய்தி கூறுபவர்களாகவும் எச்சரிக்கை செய்பவர்களாகவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மனிதர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அதில் அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்காக மெய்ப் பொருளுடைய வேதத்தையும் நபிமார்களுடன் இறக்கி வைத்தான். வேதம் வழங்கப்பட்டவர்கள், தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பிறகும் தமக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே அதில் கருத்து வேறுபாடு கொண்டனர். அவர்கள் எந்த உண்மையில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அதில் இறைநம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது நாட்டத்தின்படி நேர்வழி காட்டினான். அல்லாஹ், தான் நாடியோரை நேரான பாதையில் செலுத்துகிறான்.
- “உங்களுக்கு முன்சென்றோர் (அடைந்த சோதனைகளைப்) போன்று உங்களுக்கும் வராமல் நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என எண்ணிக் கொண்டீர்களா? அவர்களுக்கு வறுமையும் நோயும் ஏற்பட்டது. இறைத் தூதரும், அவருடனிருந்த இறைநம்பிக்கை கொண்டோரும், “அல்லாஹ்வின் உதவி எப்போது?” என்று கூறுமளவுக்கு உலுக்கப்பட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் உதவி அருகில் இருக்கிறது.
- அவர்கள் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “செல்வத்திலிருந்து நீங்கள் எதைச் செலவிடுகிறீர்களோ அது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியது. நீங்கள் நன்மையான எதைச் செய்தாலும் அதை அல்லாஹ் நன்கறிந்தவன்” என்று கூறுவீராக!
- போர் புரிவது உங்களுக்கு வெறுப்பாக இருந்தாலும் அது உங்களின்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. ஒரு விஷயம் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதை நீங்கள் வெறுக்கக் கூடும். ஒரு விஷயம் உங்களுக்குத் தீயதாக இருக்கும் நிலையில் அதை நீங்கள் விரும்பக் கூடும். அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
- (நபியே!) புனித மாதத்தில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அதில் போர் புரிவது பெரும்பாவம் தான். அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை மறுப்பதும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பதும், அதற்குரியோரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் பெரிய பாவமாகும். குழப்பம் விளைவிப்பது கொலையைவிடக் கொடியது” எனக் கூறுவீராக! அவர்கள் சக்தி பெற்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் யார் தனது மார்க்கத்தை விட்டு வெளியேறி, இறை மறுப்பாளராகவே மரணிக்கிறாரோ அவர்களின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிட்டன. அவர்களே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
- இறைநம்பிக்கை கொண்டோரும், ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்தோருமே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றர். அல்லாஹ் மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
219, 220. (நபியே!) மதுவையும், சூதாட்டத்தையும் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் மக்களுக்குப் பெரும் பாவமும் (சில) பயன்களும் இருக்கின்றன. அவ்விரண்டிலும் உள்ள பயன்களைவிடப் பாவம் மிகப் பெரியதாகும்” என்று கூறுவீராக!35 அவர்கள் எதைச் செலவிட வேண்டும்? என்று உம்மிடம் கேட்கின்றனர். “தேவைக்குப் போக எஞ்சியதை!” என்று கூறுவீராக! இவ்வுலகையும் மறுமையையும் பற்றி நீங்கள் சிந்திப்பதற்காக அல்லாஹ் இவ்வாறே உங்களுக்கு வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்……
……அநாதைகளைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவர்களுக்கு நல்லதைச் செய்வது சிறந்தது. அவர்களுடன் நீங்கள் கலந்து வாழ்ந்தால் (அவர்கள்) உங்கள் சகோதரர்களாவர். நன்மை செய்பவரிலிருந்தும் குழப்பம் செய்பவரை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடியிருந்தால் உங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி இருப்பான். அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவாளன்” என்று கூறுவீராக!
- இணை வைக்கும் பெண்களை, அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும்வரை திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் பெண் உங்களைக் கவர்ந்த போதிலும் அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவளாவாள். இணை வைக்கும் ஆண்கள், இறைநம்பிக்கை கொள்ளும்வரை அவர்களுக்கு (இறைநம்பிக்கை கொண்ட பெண்களைத்) திருமணம் செய்து கொடுக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களைக் கவர்ந்த போதிலும் அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவனாவான். அவர்கள் நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ், தனது ஆணைப்படி சொர்க்கத்தையும் மன்னிப்பையும் நோக்கி அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்குத் தனது வசனங்களை அவன் தெளிவுபடுத்துகிறான்.
- (நபியே!) மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஒரு தொந்தரவாகும். எனவே, மாதவிடாய் காலத்தில் பெண்களை விட்டும் (இல்லறத்தில் ஈடுபடாமல்) விலகி விடுங்கள்! அவர்கள் தூய்மையடையும்வரை அவர்களிடம் நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் உங்களுக்கு ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்! அல்லாஹ், பாவ மன்னிப்புக் கோருவோரை நேசிக்கிறான்; தூய்மையானவர்களையும் நேசிக்கிறான்” என்று கூறுவீராக!36
- உங்கள் மனைவியர் உங்களுடைய விளைநிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பியவாறு உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள். உங்களுக்காக (அல்லாஹ் விதித்ததை) முற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) இறைநம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!37
- நீங்கள் நன்மை செய்வதற்கும், இறையச்சத்துடன் இருப்பதற்கும், மனிதர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அல்லாஹ்வை உங்கள் சத்தியங்களால் ஒரு தடையாக ஆக்கி விடாதீர்கள். அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
- அல்லாஹ், உங்களின் வீணான சத்தியங்களுக்காக உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். மாறாக, உங்கள் உள்ளங்கள் (உறுதியாகச்) செய்த செயல்களுக்காகவே உங்களைக் குற்றம் பிடிப்பான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; சகிப்புத் தன்மையுடையவன்.38
- தம் மனைவியருடன் இல்லறத்தில் ஈடுபடுவதில்லை என்று சத்தியம் செய்தவர்களுக்கு நான்கு மாதங்கள் தவணை உண்டு. (இத்தவணைக்குள் தமது மனைவியரிடம்) அவர்கள் திரும்பி விட்டால் அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
- அவர்கள் மணவிலக்கை உறுதிப்படுத்திக் கொண்டால் அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
- மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்கள் தமக்(கு மறுமணம் செய்வதற்)காக மூன்று மாதவிடாய் காலம் எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருந்தால், அவர்களின் கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை அவர்கள் மறைக்கக் கூடாது. இ(க்காத்திருப்புக் காலத்)தில் அவர்கள் இணக்கத்தை நாடினால் அப்பெண்களைத் திருப்பி அழைத்துக் கொள்வதற்கு அவர்களுடைய கணவர்களே அதிக உரிமை படைத்தவர்கள். பெண்கள்மீதுள்ள கடமைகளைப் போன்றே அவர்களுக்கு முறைப்படியான உரிமைகளும் உண்டு. அவர்களைவிட ஆண்களுக்கு ஒருபடி உயர்வுண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
- இந்த(த் திருப்பி அழைத்துக் கொள்ளும்) மணவிலக்கு இரண்டு தடவைதான். பின்னர் முறைப்படி சேர்ந்து வாழ வேண்டும்; அல்லது அழகிய முறையில் விடுவித்துவிட வேண்டும். நீங்கள் மனைவியருக்கு வழங்கியவற்றில் எதையும் (மணவிலக்கிற்குப் பின்) பெற்றுக் கொள்ள உங்களுக்கு அனுமதியில்லை. எனினும், (ஒரு பெண், தன் கணவனிடமிருந்து மணவிலக்குக் கோரினால்) அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அவர்கள் அஞ்சி, மேலும் அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்களும் அஞ்சினால் அவள் (மணக் கொடையை) ஈடாகக் கொடுத்து (கணவனைப் பிரிந்து) விடுவதில் இருவர்மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். இவற்றை நீங்கள் மீறாதீர்கள். அல்லாஹ்வின் வரம்புகளை யார் மீறுகிறார்களோ அவர்களே அநியாயக்காரர்கள்.
- அவன் அவளை (மூன்றாவது தடவை) மணவிலக்குச் செய்து விட்டால், அதன் பிறகு அவனல்லாத வேறு கணவனை அவள் திருமணம் செய்யும் வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவள் அல்ல. இவனும் அவளை மணவிலக்குச் செய்து விட்டால் (அவளும், முந்தைய கணவனும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்டுவார்கள் என்று எண்ணினால் அவ்விருவரும் மீண்டும் (திருமணம் செய்து) சேர்ந்து கொள்வது அவர்கள்மீது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். அறிந்து கொள்ளும் சமுதாயத்திற்கு இவற்றை அவன் தெளிவாக்குகின்றான்.
- பெண்களை நீங்கள் மணவிலக்குச் செய்து, அவர்கள் தமது தவணையை நெருங்கினால் முறைப்படி அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அல்லது (தவணை முடிந்ததும்) அவர்களை முறைப்படி விட்டுவிடுங்கள். வரம்பு மீறித் துன்புறுத்தும் நோக்கத்தில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்பவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடையையும் அவன் உங்களுக்கு அருளிய வேதத்தையும், ஞானத்தையும் நினைத்துப் பாருங்கள். இதன் மூலம் அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- பெண்களை நீங்கள் மணவிலக்குச் செய்து, அவர்கள் தமது தவணையை அடையும்போது, அப்பெண்கள் தம(து விருப்பத்து)க்குரிய கணவர்களை, அவர்கள் தமக்கிடையே பொருந்திக் கொண்டு நன்முறையில் (மறு) திருமணம் செய்வதைத் தடுக்காதீர்கள். இதன் மூலம், உங்களில் அல்லாஹ்வின்மீதும், மறுமை நாள்மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதுவே உங்களுக்கு மிகவும் அப்பழுக்கற்றதும் தூய்மையானதும் ஆகும். அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.39
- (மணவிலக்குச் செய்யப்பட்ட மனைவியின் மூலம்) பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என விரும்புபவருக்காகத் தாய்மார்கள் இரண்டு முழு ஆண்டுகள் தமது குழந்தைகளுக்குப் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நன்முறையில் உணவளிப்பதும், ஆடை வழங்குவதும் தந்தைக்குக் கடமையாகும். எவரும் அவரது சக்திக்கு மீறி நிர்ப்பந்திக்கப்பட மாட்டார். தாய் தனது குழந்தையின் காரணமாகவோ, அல்லது தந்தை தனது குழந்தையின் காரணமாகவோ சிரமப்படுத்தப்பட மாட்டார்கள். (தந்தை இறந்து விட்டால்) வாரிசுதாரர்மீது இதுபோன்ற கடமை உள்ளது. இருவரும் உடன்பட்டு, ஆலோசித்துப் பாலூட்டுவதை நிறுத்த விரும்பினால் இருவர்மீதும் குற்றமில்லை. செவிலித் தாய் மூலம் உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால், நீங்கள் கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள்மீது குற்றமில்லை. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ், நீங்கள் செய்வதைப் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- உங்களில் எவரும் மனைவியரை விட்டுவிட்டு மரணித்தால், அப்பெண்கள் தமக்(கு மறுமணம் செய்வதற்)காக நான்கு மாதம் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும். தமது தவணையை நிறைவு செய்துவிட்டால் அவர்கள் தமது விஷயத்தில் முறைப்படி (மறு திருமண ஏற்பாடுகளைச்) செய்து கொள்வதில் உங்கள்மீது குற்றமில்லை. அல்லாஹ், நீங்கள் செய்வதை நுட்பமாக அறிபவன்.
- (காத்திருப்புக் காலத்தில்) அப்பெண்களிடம் திருமண விருப்பத்தை ஜாடைமாடையாகத் தெரிவிப்பதோ அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்துக் கொள்வதோ உங்கள்மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்துள்ளான். எனினும் அவர்களிடம் இனிய சொற்களைக் கூறுவதைத் தவிர ரகசியமாக வாக்குறுதி அளித்து விடாதீர்கள். நிர்ணயிக்கப்பட்ட அதற்குரிய தவணை நிறைவடைவதற்குள் திருமண ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி விடாதீர்கள். உங்கள் உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் அறிகிறான் என்பதை அறிந்து, அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், சகிப்புத் தன்மையுடையவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- நீங்கள் பெண்களைத் தீண்டாமலோ அல்லது அவர்களுக்கு மணக்கொடையை நிர்ணயிக்காமலோ அவர்களை மணவிலக்குச் செய்தால் உங்கள்மீது குற்றமில்லை. வசதியுடையவர் தனது சக்திக்கேற்பவும், வசதி குறைந்தவர் தனது சக்திக்கேற்பவும் அழகிய முறையில் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குங்கள். (இது) நன்மை செய்வோர்மீது கடமையாகும்.
- நீங்கள் அவர்களுக்கு மணக்கொடையை நிர்ணயித்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன் மணவிலக்குச் செய்தால் நீங்கள் நிர்ணயித்ததில் சரிபாதி (அவர்களுக்கு) உண்டு. அப்பெண்கள் விட்டுக் கொடுத்தாலோ அல்லது திருமண ஒப்பந்தம் யாருடைய அதிகாரத்தில் இருக்கிறதோ – அ(க்கண)வர் விட்டுக் கொடுத்தாலோ தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. உங்களுக்கிடையே தாராளத்தன்மையை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
- (ஐவேளை) தொழுகைகளையும், (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக நில்லுங்கள்.40
- (எதிரிகளின் தாக்குதலுக்கு) நீங்கள் பயந்தால் நடந்தவாறோ அல்லது வாகனத்தில் பயணித்தவாறோ (தொழுகையை நிறைவேற்றுங்கள்!) நீங்கள் அச்சமற்ற நிலையை அடைந்துவிட்டால், நீங்கள் அறியாமல் இருந்தவற்றை அவன் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு அல்லாஹ்வை நினைவு கூருங்கள்!
- உங்களில் மரணிக்கும் தறுவாயில் இருந்து, மனைவியரை விட்டுச் செல்வோர், “ஒரு வருடம்வரை (அவர்களை வீடுகளிலிருந்து) வெளியேற்றாமல் வாழ்க்கை வசதி செய்து கொடுக்க வேண்டும்” என்று தமது மனைவியருக்காக மரண சாசனம் செய்ய வேண்டும். ஆனால் அவர்களாகவே வெளியேறினால், தமது விஷயத்தில் முறைப்படி (எந்த ஏற்பாட்டையும்) அவர்கள் செய்து கொள்வதில் உங்கள்மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.41
- மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்களுக்கு(க் கணவனிடமிருந்து) நியாயமான முறையில் வாழ்க்கை வசதிகள் உண்டு. (இது) இறையச்சமுடையோர்மீது கடமையாகும்.
- நீங்கள் சிந்திப்பதற்காக அல்லாஹ் தனது வசனங்களை இவ்வாறே உங்களுக்கு விளக்குகிறான்.
- மரணத்திற்குப் பயந்து, தம் வீடுகளை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா? அவர்களோ ஆயிரக்கணக்கில் இருந்தனர். “நீங்கள் மரணித்து விடுங்கள்” என்று அவர்களிடம் அல்லாஹ் கூறினான். பிறகு அவன், அவர்களை உயிர் பெறச் செய்தான். மனிதர்கள்மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
- அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள்! அல்லாஹ் செவியேற்பவன், நன்கறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
- அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்பவர் யார்? அப்போது அதை அவன் பன்மடங்காக அவருக்குப் பெருகச் செய்கிறான். அல்லாஹ், (செல்வத்தைச் சிலருக்குக்) குறைத்தும், (சிலருக்குத்) தாராளமாகவும் கொடுக்கிறான். நீங்கள் அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
- மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீல் வழித்தோன்றல்களின் தலைவர்களை நீர் அறியவில்லையா? அவர்கள் தமது நபியிடம், “எங்களுக்கு ஒரு மன்னரை நியமிப்பீராக! நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்” என்று கூறியபோது, “உங்கள்மீது போர் விதிக்கப்பட்டால் நீங்கள் போரிடாமல் இருந்துவிடக் கூடும் அல்லவா?” என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள், “எங்கள் வீடுகளையும், எங்கள் பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கூறினர். அவர்கள்மீது போர் விதிக்கப்பட்டபோது அவர்களில் குறைவானவர்களைத் தவிர மற்றவர்கள் பின்வாங்கி விட்டனர். அல்லாஹ், அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
- அவர்களிடம், “அல்லாஹ் உங்களுக்கு தாலூத் என்பவரை மன்னராக அனுப்பியுள்ளான்” என்று அவர்களுடைய நபி கூறினார். அதற்கவர்கள், “நாங்களே அவரைவிட ஆட்சியதிகாரத்திற்கு மிகவும் தகுதியானவர்களாக இருக்கும் நிலையில், எங்கள்மீது அவருக்கு எப்படி அதிகாரம் இருக்க முடியும்? மேலும் அவருக்குச் செல்வ வளமும் அளிக்கப்படவில்லையே!” என்று கூறினர். உங்களைவிட அவரையே அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான். அவருக்கு அறிவாற்றலையும் உடல் வலிமையையும் வாரி வழங்கியுள்ளான். அல்லாஹ், தான் நாடியோருக்குத் தன்னிடமிருந்து ஆட்சியை வழங்குகிறான். அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.
- “ஒரு பெட்டகம் உங்களிடம் வருவதே அவருடைய ஆட்சிக்கான சான்றாகும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து அமைதியும், மூஸாவின் குடும்பத்தார் மற்றும் ஹாரூனின் குடும்பத்தார் விட்டுச் சென்றவற்றில் மீதமிருப்பவையும் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டோராக இருந்தால் இதில் உங்களுக்குச் சான்றுள்ளது” என அவர்களிடம் அவர்களுடைய நபி கூறினார்.
- தாலூத், படைகளுடன் புறப்பட்டபோது, “ஓர் ஆற்றின் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். யார் அதிலிருந்து பருகினாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல. தனது கையால் ஒரு தடவை அள்ளியோரைத் தவிர அதை யார் அருந்தவில்லையோ அவரே என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார். அவர்களில் குறைவானவர்களைத் தவிர மற்றவர்கள் அதிலிருந்து அருந்தினர். பின்னர் அவரும், அவருடனிருந்த இறைநம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்தபோது “இன்று ஜாலூத்துடனும், அவனது படையுடனும் (மோதுவதற்கு) எங்களிடம் சக்தியில்லை” என்று (ஆற்றில் அதிகமாக நீரருந்தியோர்) கூறினர். அல்லாஹ்வைச் சந்திக்கவிருக்கிறோம் என்று யார் உறுதியாக நம்பினார்களோ அத்தகையவர்கள், “எத்தனையோ சின்னஞ்சிறு படைகள் அல்லாஹ்வின் நாட்டப்படி பெரும்படைகளை வெற்றி கொண்டுள்ளன. பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்” என்று கூறினர்.
- அவர்கள் ஜாலூத்தையும், அவனது படைகளையும் எதிர்கொண்டபோது, “எங்கள் இறைவனே! எங்கள்மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இறைமறுப்பாளர்களான இக்கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக!” என்று கூறினர்.
- அவர்கள், ஜாலூத்தின் படைகளை அல்லாஹ்வின் நாட்டப்படித் தோற்கடித்தனர். (தாலூத் படையிலிருந்த) தாவூத், ஜாலூத்தைக் கொன்றார். அல்லாஹ் அவருக்கு ஆட்சியதிகாரத்தையும் ஞானத்தையும் வழங்கி, தான் நாடியதை அவருக்குக் கற்றுக் கொடுத்தான். மனிதர்களில் சிலரைச் சிலர் மூலம் அல்லாஹ் தடுக்கா விட்டால் இவ்வுலகம் சீரழிந்து விடும். எனினும் அகிலத்தார்மீது அல்லாஹ் அருளுடையவன்.
- இவை அல்லாஹ்வின் வசனங்களாகும். உண்மையைக் கொண்டுள்ள இவற்றை (நபியே!) உமக்கு ஓதிக் காட்டுகிறோம். நீர் இறைத் தூதர்களில் உள்ளவர்.
- அந்தத் தூதர்களில் சிலரைவிட வேறு சிலரை மேன்மைப்படுத்தி உள்ளோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியுள்ளான். அவர்களில் சிலருக்குப் பதவிகளை உயர்த்தியுள்ளான். மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளைக் கொடுத்தோம். அவரை (ஜிப்ரீல் எனும்) ரூஹுல் குதுஸ் மூலம் பலப்படுத்தினோம். அல்லாஹ் நாடியிருந்தால், அவர்களுக்குப் பின்வந்தவர்கள் தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பிறகும் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். எனினும் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அவர்களில் சிலர் இறைநம்பிக்கை கொண்டனர். அவர்களில் சிலர் மறுத்தனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். எனினும் அல்லாஹ், தான் நாடியதைச் செய்கிறான்.
- இறைநம்பிக்கை கொண்டோரே! எவ்வித கொடுக்கல் – வாங்கலும், நட்பும், பரிந்துரையும் இல்லாத ஒருநாள் வருவதற்கு முன்பாக, உங்களுக்கு நாம் அளித்தவற்றிலிருந்து செலவிடுங்கள். இறைமறுப்பாளர்களே அநியாயக்காரர்கள்.
- அல்லாஹ், அவனைத் தவிர எந்தக் கடவுளுமில்லை. அவன் என்றென்றும் உயிரோடு இருப்பவன்; எப்போதும் நிலைத்திருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, பெருந் தூக்கமோ ஏற்படாது. வானங்களில் இருப்பவையும் பூமியிலிருப்பவையும் அவனுக்கே உரியவை. அவனுடைய அனுமதியின்றி அவனிடம் பரிந்துரை செய்பவர் யார்? அவன், அவர்களுக்கு முன்னுள்ளவற்றையும், அவர்களுக்குப் பின்னுள்ளவற்றையும் அறிகிறான். அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து, அவன் நாடியதைத் தவிர எந்த ஒன்றையும் அவர்களால் அறிந்துகொள்ள முடியாது. அவனது (குர்ஸ் எனும்) இருக்கையானது வானங்கள், பூமியைவிட விசாலமானது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமம் அல்ல. அவன் உயர்ந்தவன்; மகத்தானவன்.42
- இம்மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஏனெனில், வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. ஷைத்தான்களை மறுத்து, அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத உறுதியான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.43
- இறைநம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் பாதுகாவலன். அவர்களை இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் அவன் கொண்டு செல்கின்றான். ஆனால் இறைமறுப்பாளர்களுக்கோ ஷைத்தான்களே பாதுகாவலர்கள். அவர்கள், அந்த இறைமறுப்பாளர்களை ஒளியிலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு செல்கின்றனர். அவர்களே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
- அல்லாஹ், தனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கியதன் காரணமாக, இப்ராஹீமிடம் அவரது இறைவனைப் பற்றி தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் அறியவில்லையா? “எனது இறைவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கின்றான்” என்று இப்ராஹீம் கூறியபோது, “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணிக்கவும் வைக்கிறேன்” என்று அவன் கூறினான். அதற்கு இப்ராஹீம், “அவ்வாறாயின், அல்லாஹ் சூரியனை கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கிறான். நீ அதை மேற்கிலிருந்து உதிக்கச் செய்” என்று கூறினார். அப்போது அந்த இறைமறுப்பாளன் வாயடைத்துப் போனான். அநியாயக்காரக்கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
- அல்லது, அடியோடு வீழ்ந்து கிடந்த ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரை (நீர் அறியவில்லையா?) “இந்த ஊர் அழிந்த பின்னர் அதை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று கேட்டார். எனவே, அவரை நூறு ஆண்டுகள் அல்லாஹ் மரணிக்கச் செய்து, பிறகு அவரை உயிர்ப்பித்தான். “எவ்வளவு காலம் தங்கியிருந்தீர்?” என்று கேட்டான். அதற்கவர், “ஒருநாள் அல்லது ஒருநாளில் சிறிது நேரம் தங்கியிருந்தேன்” என்று கூறினார். “இல்லை! நீர் நூறு ஆண்டுகள் தங்கியிருந்தீர். உமது உணவையும் பானத்தையும் கவனிப்பீராக! அது கெட்டுப் போகவில்லை. உமது கழுதையைக் கவனிப்பீராக! எலும்புகளை எப்படி நாம் ஒன்று சேர்த்துப் பிறகு அதற்கு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதைக் கவனிப்பீராக! மனிதர்களுக்கு உம்மை ஒரு சான்றாக நாம் ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்)” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவானபோது, “ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்” எனக் கூறினார்.
- “என் இறைவனே! இறந்தவர்களை எவ்வாறு நீ உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” என இப்ராஹீம் கூறியபோது, “நீர் நம்பவில்லையா?” என்று அவன் கேட்டான். “அவ்வாறில்லை! எனினும் என் உள்ளம் நிம்மதி பெறுவதற்காகத்தான்” என்று அவர் கூறினார். “நான்கு பறவைகளை எடுத்து, அவற்றை உம்மிடம் வருமாறு பழக்கிக் கொள்வீராக! பிறகு (அவற்றைத் துண்டு துண்டாக்கி) ஒவ்வொரு மலையிலும் அவற்றிலிருந்து ஒரு பகுதியை வைப்பீராக! பிறகு அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் வேகமாக வந்து சேரும். அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவாளன் என்பதை அறிந்து கொள்வீராக!” என்று (இறைவன்) கூறினான்.
- அல்லாஹ்வுடைய பாதையில் தமது செல்வங்களைச் செலவிடுவோர்க்கு எடுத்துக்காட்டு, ஒரு வித்தின் தன்மையைப் போன்றது. அது ஏழு கதிர்களை விளைவிக்கிறது. ஒவ்வாரு கதிரிலும் நூறு வித்துக்கள் உள்ளன. அல்லாஹ், தான் நாடியோருக்குப் பன்மடங்காகக் கொடுக்கின்றான். அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.
- அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவு செய்து, பின்னர் தாம் செலவு செய்ததில் சொல்லிக் காட்டுவதையும், நோவினை செய்வதையும் யார் கலந்து விடாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் இருக்கிறது. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
- தர்மம் செய்தபின், அதனைத் தொடர்ந்து நோவினை செய்வதைவிட இனிய சொற்களும், மன்னிப்பும் சிறந்தது. அல்லாஹ் தேவைகளற்றவன்; சகிப்புத்தன்மையுடைவன்.
- இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின்மீதும், மறுமை நாள்மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தன் செல்வத்தைச் செலவிடுபவனைப் போன்று, சொல்லிக் காட்டியும் நோவினை செய்தும் உங்கள் தர்மங்களை வீணாக்கி விடாதீர்கள். இத்தகையவனுக்கு எடுத்துக்காட்டு, மண் படிந்திருக்கும் ஒரு வழுக்குப் பாறையின் தன்மையைப் போன்றது. அதில் பெருமழை பொழிந்து அதை வெறும் பாறையாக ஆக்கிவிட்டது. அவர்கள், தாம் சம்பாதித்தவற்றிலிருந்து எந்தப் பலனையும் அடைய மாட்டார்கள். இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
- அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடுவதற்காகவும், தமது உள்ளங்களிலுள்ள உறுதிப்பாட்டின் காரணமாகவும் தமது செல்வங்களைச் செலவு செய்வோர்க்கு எடுத்துக்காட்டு, உயரமான இடத்திலுள்ள தோட்டத்தைப் போன்றது. அதில் பெருமழை பொழிந்ததும் அது இரு மடங்கு விளைச்சலைத் தந்தது. பெருமழை பொழியாவிட்டாலும் சிறு தூறல் போதுமானது. நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
- ஒரு மனிதருக்குப் பேரீச்சைகளும் திராட்சைகளும் கொண்ட ஒரு தோட்டம் உள்ளது. அதன் கீழ் ஆறுகள் ஒடுகின்றன. அவருக்கு அதில் அனைத்துக் கனிகளும் கிடைக்கின்றன. அவருக்குப் பலவீனமான பிள்ளைகளே இருக்கும் நிலையில் அவரோ முதுமையும் அடைந்துவிட்டார். அப்போது, நெருப்பைத் தன்னகத்தே கொண்ட புயற்காற்று அ(த்தோட்டத்)தைத் தாக்கி எரித்து விடுகிறது. இதை உங்களில் எவரேனும் விரும்புவீர்களா? அல்லாஹ், இவ்வாறே தனது வசனங்களை நீங்கள் சிந்திப்பதற்காக உங்களுக்குத் தெளிவாக விளக்குகிறான்.
- இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியில் உங்களுக்காக நாம் வெளிப்படுத்தியவற்றிலிருந்தும் நல்லவற்றைச் செலவிடுங்கள். அவற்றில் கெட்டவற்றைச் செலவிட எண்ணாதீர்கள். (அதை உங்களுக்கு யாரேனும் தந்தால்) நீங்கள் கண்களை மூடிக்கொண்டே தவிர அதைப் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். அல்லாஹ் தேவைகளற்றவன், புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.44
- உங்களை ஷைத்தான் வறுமையைக் கொண்டு அச்சுறுத்துகிறான்; உங்களுக்கு மானக்கேடானவற்றை ஏவுகிறான். அல்லாஹ்வோ, தன்னிடமிருந்து உங்களுக்கு மன்னிப்பையும் அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.
- அவன், தான் நாடியோருக்கு ஞானத்தைக் கொடுக்கிறான். யாருக்கு ஞானம் வழங்கப்பட்டதோ அவர் அதிகமான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளார். அறிவுடையோரைத் தவிர எவரும் படிப்பினை பெறுவதில்லை.
- (உங்கள்) செல்வத்திலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அல்லது நீங்கள் எதை நேர்ச்சை செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் இல்லை.
- நீங்கள் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதுதான். அதை நீங்கள் மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகவும் நல்லது. அது உங்கள் தீமைகளை, உங்களை விட்டும் அழித்துவிடும். அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.
- (நபியே!) அவர்களை நேர்வழியில் செலுத்தும் பொறுப்பு உம்மீது இல்லை. மாறாக, அல்லாஹ்வே தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். நீங்கள் நல்லவற்றிலிருந்து எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே! அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடியே அன்றி நீங்கள் செலவிடாதீர்கள்! நீங்கள் நல்லவற்றிலிருந்து எதைச் செலவிட்டாலும் உங்களுக்கு முழு அளவில் (திருப்பித்) தரப்படும். நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.45
- (சம்பாதிப்பதற்காகப்) பூமியில் பயணம் செய்ய இயலாதவண்ணம், அல்லாஹ்வின் பாதையில் தடுத்து வைக்கப்பட்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியதாகும். (அவர்களுடைய) சுயமரியாதையின் காரணமாக அவர்களைச் செல்வந்தர்கள் என்று அறியாதவர் எண்ணிக் கொள்வர். அவர்களுடைய அடையாளத்தின் மூலம் அவர்களை நீர் அறிந்து கொள்வீர். அவர்கள் மக்களிடம் வலிந்து கேட்க மாட்டார்கள். நீங்கள் நல்லவற்றிலிருந்து எதைச் செலவிட்டாலும் அதை அல்லாஹ் நன்கறிந்தவன்.46
- இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் தமது செல்வங்களைச் செலவிடுவோருக்கு அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குரிய கூலி உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
- வட்டி (வாங்கிச்) சாப்பிடுவோர், ஷைத்தான் தீண்டியவன் பைத்தியமாக எழுவதுபோல் அன்றி (மறுமையில்) எழ மாட்டார்கள். “வியாபாரமே வட்டியைப் போன்றதுதான்” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துள்ளான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தபின் (வட்டியிலிருந்து) யார் விலகிக் கொள்கிறாரோ அவருக்கு முன்னர் வாங்கியது உரியது. அவருடைய முடிவோ அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டியின் பக்கம்) திரும்புவோரே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
- வட்டியை அல்லாஹ் அழித்து, தர்மங்களை வளரச் செய்கிறான். அல்லாஹ், பாவிகளான நன்றிகெட்டவர்கள் எவரையும் நேசிப்பதில்லை.
- இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுப்போருக்கு, அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்குரிய கூலி இருக்கின்றது. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
- இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் (உங்களுக்கு வராமல்) நிலுவையிலுள்ள வட்டியை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்.
- நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போர்ப் பிரகடனம் செய்து விடுங்கள். நீங்கள் பாவ மன்னிப்புக் கோரினால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்குரியது. நீங்களும் அநியாயம் செய்யக்கூடாது. உங்களுக்கும் அநியாயம் செய்யப்படக் கூடாது.
- (கடன் பெற்றவர்) சிரமப்படுபவராக இருந்தால் வசதி பெறும் வரை கால அவகாசம் அளியுங்கள். நீங்கள் அறிவோராக இருந்தால் (அதை) தர்மமாக விட்டுவிடுவதே உங்களுக்குச் சிறந்தது.
- ஒரு நாளை அஞ்சிக் கொள்ளுங்கள். அதில்தான் நீங்கள் அல்லாஹ்விடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் சம்பாதித்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
- இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் குறிப்பிட்ட தவணை அடிப்படையில் ஒருவருக்கொருவர் கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! உங்களுக்கிடையே எழுதுபவர் நேர்மையாக எழுதட்டும். அவருக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்ததைப் போன்று எழுதுவதற்கு அந்த எழுத்தர் மறுக்காது எழுதிக் கொடுக்கட்டும். கடன் பெற்றவர், எழுதுவதற்கான வாசகம் சொல்லட்டும். அவர் தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சி நடக்கட்டும். அவர் அதிலிருந்து எதையும் குறைத்துவிட வேண்டாம். கடன் பெற்றவர் விபரமற்றவராகவோ அல்லது பலவீனமானவராகவோ அல்லது வாசகம் சொல்வதற்கு இயலாதவராகவோ இருந்தால் அவருடைய பொறுப்பாளர் நேர்மையாக வாசகம் சொல்லட்டும். உங்களில் இரண்டு ஆண்களைச் சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். இரண்டு ஆண்கள் இல்லையென்றால், சாட்சிகளில் நீங்கள் பொருந்திக் கொள்ளும் ஒரு ஆணையும் இரண்டு பெண்களையும் (ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.) ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி தவறிழைத்தால் மற்றொருத்தி அவளுக்கு நினைவுபடுத்துவாள். சாட்சிகள் அழைக்கப்படும்போது மறுத்துவிட வேண்டாம். (கடன் தொகை) சிறியதாயினும் பெரியதாயினும் தவணை குறிப்பிட்டு அதை எழுதிக் கொள்வதில் அலட்சியம் காட்டாதீர்கள்! இது, அல்லாஹ்விடம் மிக நீதியானதும், சாட்சியத்திற்கு மிக உறுதியானதும், நீங்கள் சந்தேகிக்காமல் இருப்பதற்கு நெருக்கமானதும் ஆகும். எனினும், உங்களுக்கிடையே தவணை குறிப்பிடாமல் செய்து கொள்ளும் உடனடி வியாபாரமாக இருந்தால் அதை எழுதிக் கொள்ளாமல் இருப்பதில் உங்கள்மீது குற்றமில்லை. நீங்கள் ஒப்பந்தங்கள் செய்யும்போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எழுத்தரோ, சாட்சியோ துன்புறுத்தப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள்மீது பாவமாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வே உங்களுக்குக் கற்றுத் தருகிறான். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.
- நீங்கள் பயணத்தில் இருந்து, எழுத்தர் கிடைக்கா விட்டால் அடைமானங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களில் ஒருவரையொருவர் நம்பினால், நம்பப்பட்டவர் தனது நம்பகத் தன்மையை நிறைவேற்றட்டும். அவர் தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சி நடக்கட்டும். சாட்சியத்தை மறைக்காதீர்கள்! யார் அதை மறைக்கிறாரோ அவரது உள்ளம் பாவம் செய்கிறது. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
- வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் அல்லாஹ்வுக்கே உரியவை. உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதை மறைத்தாலோ அல்லாஹ் அதுகுறித்து உங்களை விசாரிப்பான். தான் நாடியோருக்கு மன்னிப்பு வழங்குவான்; தான் நாடியோரைத் தண்டிப்பான். ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்.47
- தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை இத்தூதர் நம்பிக்கை கொண்டார். இறைநம்பிக்கையாளர்களும் (இதை நம்பினார்கள்.) அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். “அவனுடைய தூதர்களில் எவருக்கிடையிலும் பாகுபாடு காட்ட மாட்டோம். நாங்கள் செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவனே! உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே திரும்ப வேண்டியுள்ளது” என்று அவர்கள் கூறுகின்றனர்.48
- யாரையும் அவருடைய சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் நிர்ப்பந்திக்க மாட்டான். அவர் செய்த நன்மை, அவருக்கே உரியது. அவர் செய்த தீமை, அவருக்கே எதிரானது. “எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைப் பிடித்து விடாதே! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது நீ சுமத்தியது போன்று எங்கள்மீதும் சுமையைச் சுமத்தி விடாதே! எங்கள் இறைவனே! எங்களுக்குச் சக்தியில்லாதவற்றை எங்கள்மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்களுக்குக் கருணை காட்டுவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக!” (என்றும் கூறுகின்றனர்.)