அல் அஸ்ர் – திருக்குர்ஆன் அத்தியாயத்தின் விளக்கவுரை – 1

மக்களை வழிநடத்துவதற்காக இறைவனால் ஏராளமான தூதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் மக்களுக்கு நேர்வழியை எடுத்துரைப்பதற்காக இறை வேதங்களையும் இறைவன் தந்துள்ளான்.
அந்த வரிசையில் இறுதித் தூதராக நபி(ஸல்) அவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்குக் குர்ஆன் எனும் வேதமும் வழங்கப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் நபி(ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு மொழியில் அருளப்பட்டது.
(நபியே!) அவர்கள் சிந்திப்பதற்காகவே இ(வ்வேதத்)தை உமது மொழியில் எளிதாக்கி வைத்துள்ளோம்.
அல்குர்ஆன் 44:58
திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டிருந்தாலும் அது அரபியர்களுக்கானது மட்டுமல்ல. அகிலத்தார் அனைவருக்குமான வேதம். மறுமை நாள் வரை மனிதர்களின் வழிகாட்டி.
ஒவ்வொரு இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு(வஹீ)தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4981
இத்தகைய வேதத்தை அரபு மொழியில் ஓதினால் மட்டும் போதாது.
அரபு மொழியில் குர்ஆனை ஓதுவதற்கு நன்மையுள்ளது. அதே சமயம் ஒவ்வொரு மக்களும் அதன் கருத்தைப் படித்துணர்ந்து சிந்திக்கின்ற போது ஈமான் மற்றும் இறையச்சத்தின் நறுமனம் அவர்களது வாழ்வில் வீசும்.
இறைநம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் பயந்து நடுங்கி விடும். அவனது வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் அது அவர்களுக்கு இறைநம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவன்மீதே நம்பிக்கை வைப்பார்கள்.
அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து செலவிடுவார்கள்.
அவர்களே உண்மையான இறை நம்பிக்கையாளர்கள். அவர்களுக்குத் தமது இறைவனிடம் அந்தஸ்துகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
அல்குர்ஆன் 8:2-4
அவர்கள் யாரெனில், அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் பயந்து நடுங்கும். தமக்கு ஏற்படும் துன்பங்களில் பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலைநிறுத்துவார்கள். அவர்களுக்கு நாம் வழங்கியதிலிருந்து செலவிடுவார்கள்.
அல்குர்ஆன் 22:35
இத்தூதர்மீது அருளப்பட்டதை அவர்கள் செவியுறும்போது, உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடுவதைக் காண்பீர். “எங்கள் இறைவனே! நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோம். எனவே, எங்களைச் சாட்சி கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள்.
அல்குர்ஆன் 5:83
அல்லாஹ்வே மிக அழகிய செய்தியை வேதமாக அருளினான். (அது) ஒன்றுக்கொன்று ஒப்பானதாகவும், திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் மெய்சிலிர்த்து விடுகின்றன, பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காக மிருதுவாகி விடுகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம், தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். அல்லாஹ், யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனுக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
அல்குர்ஆன் 39:23
(நபியே!) இந்தக் குர்ஆனை நாம் மலையின்மீது அருளியிருந்தால், அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து, பிளந்துவிடக் கூடியதைப் பார்த்திருப்பீர்! மனிதர்கள் சிந்திப்பதற்காகவே இந்த எடுத்துக்காட்டுகளை அவர்களுக்கு எடுத்துரைக்கிறோம்.
அல்குர்ஆன் 59: 21
இத்தகைய மாற்றங்களை அடைவதற்காக குர்ஆனைச் சிந்திக்க வேண்டுமென இறைவன் பல இடங்களில் கட்டளையிடுகிறான்.
இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லது (அவர்களின்) உள்ளங்களில் அதற்குரிய பூட்டுகள் உள்ளனவா?
அல்குர்ஆன் 47:24
(இது) பாக்கியம் நிறைந்த வேதமாகும். அவர்கள் இதன் வசனங்களைச் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் இதை உமக்கு அருளியுள்ளோம்.
அல்குர்ஆன் 38:29
அவர்கள் இந்த (வேத) வாக்கைச் சிந்திக்கவில்லையா? அல்லது கடந்து சென்ற அவர்களின் முன்னோரிடம் வராத எதுவும் அவர்களிடம் வந்துவிட்டதா?
அல்குர்ஆன் 23:68
அவர்களுக்குத் தம் இறைவனின் வசனங்கள் மூலம் நினைவூட்டப்பட்டால், அவற்றின்மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் வீழ்ந்துவிட மாட்டார்கள்.
அல்குர்ஆன் 25:73
குர்ஆனை விளங்கும்போது ஒரு வசனத்தை இன்னொரு வசனத்துடன் மோதவிடாமல் இறைவன் பயன்படுத்தியுள்ள வார்த்தையின் உண்மை விளக்கத்தை ஏனைய வசனங்கள் மற்றும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையின் துணை கொண்டு விளங்க வேண்டும்.
இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இது வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்.
அல்குர்ஆன் 4:82
(நபியே!) அவனே இவ்வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் தெளிவான கருத்துகளைக் கொண்ட வசனங்கள் உள்ளன. அவையே இவ்வேதத்தின் அடிப்படை. வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட மற்ற வசனங்களும் உள்ளன. தமது உள்ளங்களில் வழிகேடு உள்ளவர்கள், குழப்பத்தை நாடியும் அதற்கு(த் தவறான) விளக்கத்தைத் தேடியும் அதிலுள்ள வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட வசனங்களைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர வேறெவரும் அதன் (உண்மை) விளக்கத்தை அறிய மாட்டார்கள். “இதை நாங்கள் நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை!” என(க் கல்வியில் தேர்ந்த) அவர்கள் கூறுகின்றனர். அறிவுடையவர்களைத் தவிர வேறெவரும் படிப்பினை பெற மாட்டார்கள்.
அல்குர்ஆன் 3:7
மனிதர்களுக்காக அருளப்பட்டதை நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை அருளினோம்.
அல்குர்ஆன் 16:44
குர்ஆனின் கருத்தாழம் என்பது நினைக்க நினைக்க மயிர் சிலிர்க்கக் கூடியது. அத்தகைய குர்ஆனின் சூரா அஸ்ர் என்ற 103வது அத்தியாயத்தின் விளக்கத்தை இறைவன் கற்றுத் தரும் ஒழுங்குகளுடன் இன்ஷா அல்லாஹ் இத்தொடரின் மூலம் அறிவோம்.

அத்தியாயம் 103 – அல்அஸ்ர் (காலம்)
வசனங்களின் எண்ணிக்கை: 3

{وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3)} [العصر: 1 – 3]

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. காலத்தின் மீது சத்தியமாக!
2. மனிதன் நஷ்டத்திலேயே இருக்கிறான்.
3. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, உண்மையைக் கடைப்பிடிக்குமாறு ஒருவருக்கொருவர் அறிவுறுத்தி, பொறுமையை மேற்கொள்ளுமாறும் அறுவுறுத்திக் கொள்வோரைத் தவிர!

அறிமுகம்
இது திருக்குர்ஆனின் மிகச் சிறிய அத்தியாயங்களில் ஒன்றாகும். வெறும் மூன்று வசனங்களை மட்டும் கொண்டிருந்தாலும் இது தரும் கருத்துக்கள் ஏராளம் ஏராளம். மார்க்கத்தின் பல்வேறு அடிப்படைகளையும் அமல்களையும் மனித வாழ்க்கைக்கான வாழ்வியல் முறைகளையும் ஒழுங்குகளையும் உள்ளடக்கிய ஒரு அத்தியாயம்.
இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டது என்று அதிகமானோர் குறிப்பிடுகின்றனர். மதீனாவில் அருளப்பட்டது என்ற கருத்தையும் ஓரிருவர் முன் வைக்கின்றனர்.
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் காலத்தின் (அஸ்ர்) மீது இறைவன் சத்தியம் செய்திருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக வைக்கப்பட்டுள்ளது.
அஸ்ர் என்ற அரபு வார்த்தை ஒட்டுமொத்தக் காலத்தையும் குறிக்கும். நாம் அஸர் தொழுகையை எந்த நேரத்தில் தொழுகின்றோமோ அந்த குறிப்பிட்ட நேரத்தையும் குறிக்கும்.
இந்த இடத்தில் அஸர் தொழுகையின் நேரத்தைக் குறிக்க முன் பின் வார்த்தைகளில் முகாந்திரம் இல்லை என்பதால் இங்கே இந்த வார்த்தைக்குப் பொதுவாக “காலம்” என்ற முதன்மை அர்த்தமே வழங்கப்பட வேண்டும்.
மேலும், இது அஸர் தொழுகையைக் குறிக்கிறது. அஸர் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக அதன் மீது இறைவன் சத்தியம் செய்துள்ளான் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், இதற்கும் எந்த ஆதாரமும் முகாந்திரமும் இல்லை.
1. காலத்தின் மீது சத்தியமாக!
சத்தியம் தொடர்பான அடிப்படை
ஒருவர் தன் கருத்தை உறுதிப்படுத்துவதற்காக செய்வதே சத்தியமாகும். யார் மீது சத்தியம் செய்யப்படுகிறதோ அவரை அந்தக் கருத்திற்கு சாட்சியாக்குவதே அதன் பொருளாகும்.
இவ்வாறு பயன்படுத்தப்படும் சத்தியம் என்பது படைத்தவன் மீது மட்டுமே செய்யப்பட வேண்டும். படைப்பினங்கள் எதன் மீதும் யாரின் மீதும் சத்தியம் செய்வது நமக்கு ஆகுமானதல்ல.
ஏனெனில், நமது கருத்தின் உண்மைத் தன்மைக்கு அல்லாஹ்வை சாட்சியாக்கும் போது நமது உண்மைத் தன்மை அல்லாஹ்வுக்குத் தெரியும் என்பதற்காகவே சத்தியம் செய்கிறோம். அதுவே அல்லாஹ் அல்லாதோரின் மீது சத்தியம் செய்தால் நாம் உண்மையாளரா பொய்யரா என்பது அந்தப் பொருளுக்கோ மனிதருக்கோ தெரியும் என்றும், இறைவனைப் போல அந்தப் படைப்பினமும் அறியும் என்றும் கருத்து வருவதால் படைப்பினத்தின் மீது சத்தியம் செய்வதை இணை கற்பிக்கும் காரியமாக நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
“எவர் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்கள் மீது சத்தியம் செய்து வந்தார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், “உங்கள் முன்னோர்கள் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
நூல்: புகாரி 3836
எவர் சத்தியம் செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி (மௌனமாக) இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 2679
ஒரு மனிதர் “கஅபாவின் மேல் ஆணையாக’’ என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள். இதைக் கேட்டவுடன் “அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்யக் கூடாது’’ என்று கூறினார்கள். மேலும் “யார் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணைகற்பித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்’’ எனவும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
நூல்: புகாரி 1535
எனவே, பெரியோர்கள், இறந்தவர்கள், குர்ஆன் அல்லது தன்மீது என யாரின் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்வது ஆகுமானதல்ல.
இறைவனின் சத்தியம்
இறைவன் குர்ஆனில் பல்வேறு சத்தியங்களைச் செய்கிறான். அறுபதுக்கும் மேற்பட்ட விஷயங்களின் மீது இறைவன் சத்தியம் செய்வதாகச் சொல்லப்படுகிறது.
நாம் நமது உண்மை நிலையை நிருபிப்பதற்காக அனைத்தையும் அறிந்தவனான அல்லாஹ்வை சாட்சி ஆக்குவதற்காக சத்தியம் செய்கிறோம்.
ஆனால், அல்லாஹ்வுக்கு இது அவசியமும் இல்லை. அவனை விடப் பெரும் சக்தியும் யாரும் எதுவும் இல்லை.
அதனால் அவனது படைப்பினங்களின் சில குறிப்பிட்ட முக்கியத்துவங்களை உணர்த்துவற்காகவே அவற்றின் மீது இறைவன் சத்தியம் செய்கிறான். சாட்சியாக்குவதற்காக அல்ல.
எனவே, இறைவன் படைப்பினத்தின் மீது சத்தியம் செய்துள்ளான் என்பதற்காக நாமும் அவற்றின் மீது சத்தியம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அது இணை கற்பித்தலாகிவிடும்.
நமது சத்தியத்தின் காரணம் வேறு. இறைவனின் சத்தியத்தின் காரணம் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இறைவனின் சத்தியங்கள்
திருக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு விஷயங்களின் மீது சத்தியம் செய்கிறான். அல்லாஹ் படைப்பினங்கள் மீது செய்யும் சத்தியங்கள் குர்ஆனில் 78 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
15:72, 36:2, 38:1, 50:1, 37:1-3, 43:2, 44:2, 51:1 – 4, 51:7, 52:1-6, 53:1, 56:75, 68:1, 69:38, 39, 74:33, 34, 75:1, 2, 77:1-6, 79:1-5, 81:16-18, 84:16 -18, 85:1 – 3, 86:1,11,12, 89:1 – 4, 90:1-3, 91:1 – 7, 92:1 – 3, 93:1,2, 95:1-3 , 100:1-5, 103:1
தன் மீதே இறைவன் நேரடியாகவும் நபி(ஸல்) அவர்களைக் கூறச் சொல்லியும் சத்தியம் செய்யும் வசனங்கள் 9 ஆகும்.
19:68, 4:65, 10:53, 15:92, 16:56,63, 34:3, 51:23, 70:40
இதுவல்லாமல் மக்கள் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்வது போல உள்ள வசனங்கள் ஏராளம் உள்ளன.
காலத்தின் மேல் இறைவனின் சத்தியம்
மேற்படி படைப்பினங்களின்மீது இறைவன் செய்யும் சத்தியங்களில் நான்கில் ஒரு பங்கு என்ற அளவுக்குக் காலத்தின்மீது இறைவன் சத்தியம் செய்கிறான்.
103வது அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நொடி, நிமிடம், மணி, இரவு, பகல், நாள், வாரம், மாதம், வருடம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தக் காலத்தின் மீது இறைவன் சத்தியம் செய்திருந்தாலும் மற்ற இடங்களில் காலத்தின் ஒவ்வொரு பகுதியைக் குறித்தும், தன்மையைக் குறித்தும் சத்தியம் செய்கிறான்.
(நபியே!) உமது ஆயுளின் மீது சத்தியமாக! அவர்கள் தமது மதிமயக்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தனர்.
அல்குர்ஆன் 15:72
பின்னோக்கிச் செல்லும்போதுள்ள இரவின் மீது சத்தியமாக!
வெளிச்சமாகும்போதுள்ள காலைப்பொழுதின் மீது சத்தியமாக
அல்குர்ஆன் 74:33,34
நான் மறுமை நாள் மீது சத்தியம் செய்கிறேன்.
அல்குர்ஆன் 75:1
பின்னோக்கிச் செல்லும் போதுள்ள இரவின் மீது சத்தியமாக!
விடியும் போதுள்ள காலை நேரத்தின் மீதும் சத்தியமாக!
அல்குர்ஆன் 81:17,18
செவ்வானத்தின்மீதும், இரவின் மீதும், அது சேர்த்துக் கொண்டிருப்பவற்றின் மீதும், முழுமையாகும் போதுள்ள சந்திரன் மீதும் சத்தியம் செய்கிறேன்.
அல்குர்ஆன் 84:16 -18
வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது சத்தியமாக!
அல்குர்ஆன் 85:2
அதிகாலையின் மீது சத்தியமாக!
பத்து இரவுகளின் மீது சத்தியமாக!
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக!
செல்லும்போதுள்ள இரவின் மீது சத்தியமாக!
அல்குர்ஆன் 89:1,2,4,
(சூரியனாகிய) அதை வெளிப்படுத்திக் காட்டும் பகலின் மீது சத்தியமாக! அதை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!
அல்குர்ஆன் 91:3,4,
இரவு மூடிக் கொள்ளும்போது அதன்மீது சத்தியமாக!
பகல் ஒளிரும்போது அதன்மீது சத்தியமாக!
அல்குர்ஆன் 92:1,2,
முற்பகல்மீது சத்தியமாக!
இருள் சூழும்போது இரவின் மீது சத்தியமாக!
அல்குர்ஆன் 93:1,2,
காலத்தின்மீது சத்தியமாக!
அல்குர்ஆன் 103:1
காலத்தின்மீது இவ்வாறு பல்வேறு சத்தியங்களை இறைவன் செய்திருக்கிறான்.
இறைவன், குர்ஆனில் செய்த சத்தியங்களில் பெரும்பான்மையானவை காலம் தொடர்பான இருப்பதிலிருந்தே அதற்கு இறைவன் கொடுக்கும் முக்கியத்துவத்தை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

தொடரும் இன்ஷா அல்லாஹ்…