அத்தியாயம் : 29
வசனங்களின் எண்ணிக்கை: 69
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
- அலிஃப், லாம், மீம்.
- அவர்கள், “இறைநம்பிக்கை கொண்டோம்” என்று கூறியதற்காகச் சோதிக்கப்படாமல் விட்டுவிடப்படுவார்கள் என மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
- இவர்களுக்கு முன்பிருந்தோரையும் சோதித்தோம். அல்லாஹ், உண்மையாளர்களை நன்கறிவான்; பொய்யர்களையும் நன்கறிவான்.
- தீமைகளைச் செய்வோர் நம்மை மிகைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் தீர்ப்பளிப்பது மிகக் கெட்டது.
- யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ (அவருக்கு) அல்லாஹ்வின் தவணை வந்தே தீரும். அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
- யார் இறைவழியில் முயற்சி மேற்கொள்கிறாரோ அவர் தமக்காகவே முயற்சி மேற்கொள்கிறார். அல்லாஹ், அகிலத்தாரிடமிருந்து தேவைகளற்றவன்.
- இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோரை விட்டும் அவர்களின் தீமைகளை அழிப்போம். அவர்கள் செய்து கொண்டிருந்த அழகிய செயல்களுக்கான கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.
- தன் பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு அறிவுறுத்தி உள்ளோம். எதைப் பற்றி உனக்கு அறிவு இல்லையோ அதை எனக்கு இணையாக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் நீ அவ்விருவருக்கும் கட்டுப்பட வேண்டாம். என்னிடமே நீங்கள் திரும்பி வர வேண்டியுள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அப்போது உங்களுக்கு அறிவிப்பேன்.381
- யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நல்லவர்களுடன் சேர்த்து வைப்போம்.
- “அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டோம்” என ஒருசில மனிதர்கள் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ்வின் விஷயத்தில் (பிறரால்) அவர்கள் துன்புறுத்தப்படும்போது, மனிதர்களால் ஏற்படும் அத்துன்பத்தை அல்லாஹ்வின் தண்டனையைப் போன்று எடுத்துக் கொள்கின்றனர். உமது இறைவனிடமிருந்து உதவி வரும்போது, “நாங்கள் உங்களுடனே இருந்தோம்” எனக் கூறுகின்றனர். அல்லாஹ், அகிலத்தாரின் உள்ளங்களில் இருப்பதை நன்கறிந்தவனாக இல்லையா?
- இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும் நன்கறிவான்.
- இறைநம்பிக்கை கொண்டோரை நோக்கி, “எங்கள் வழியைப் பின்பற்றுங்கள்! நாங்கள் உங்கள் பாவங்களைச் சுமந்து கொள்கிறோம்” என்று இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர். இவர்களுடைய பாவங்களில் சிறிதளவைக் கூட அவர்கள் சுமப்போராக இல்லை. அவர்கள் பொய்யர்களே!
- அவர்கள் தமது (பாவச்) சுமைகளையும், தமது சுமைகளுடன் மற்ற(வர்களின் பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள். அவர்கள் பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்படுவார்கள்.
- நூஹை அவரது சமுதாயத்திற்குத் தூதராக அனுப்பினோம். அவர், ஆயிரம் ஆண்டுகளில் ஐம்பது ஆண்டுகள் நீங்கலாக அவர்களிடையே வாழ்ந்தார். அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்த நிலையில் அவர்களைப் பெருவெள்ளம் பிடித்துக் கொண்டது.
- நாம் அவரையும், கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். அதை அகிலத்தாருக்கு ஒரு சான்றாகவும் ஆக்கினோம்.
- இப்ராஹீமையும் (தூதராக அனுப்பினோம்.) அவர் தமது சமுதாயத்தினரை நோக்கி “அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனை அஞ்சுங்கள்! நீங்கள் அறிந்தோராக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
- அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளையே வணங்குகிறீர்கள். பொய்யையே கற்பனை செய்கிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை உங்களுக்கு உணவளிப்பதற்குச் சக்தி பெறாது. எனவே, அல்லாஹ்விடமே உணவைத் தேடுங்கள்! அவனை வணங்கி, அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்.
- நீங்கள் பொய்யெனக் கூறினால், (அதேபோல்) உங்களுக்கு முன்சென்ற சமுதாயத்தினரும் பொய்யெனக் கூறியுள்ளனர். தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்மீது வேறெதுவும் இல்லை.
- அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் தோற்றுவித்துப் பின்னர் அதனை மீண்டும் படைக்கிறான் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? அல்லாஹ்வுக்கு இது மிக எளிதானது.
- “பூமியில் பயணம் செய்து அல்லாஹ் எவ்வாறு படைப்பைத் தோற்றுவித்துப் பின்னர் மற்றொரு தடவை உருவாக்குகிறான் என்பதைக் கவனியுங்கள்!” என்று கூறுவீராக! ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
- அவன், தான் நாடியவர்களை வேதனைப்படுத்துகிறான். தான் நாடியவர்களுக்கு அருள் புரிகிறான். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
- பூமியிலும், வானத்திலும் நீங்கள் (அவனிடமிருந்து) தப்பிப்போர் அல்ல! அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பாதுகாவலரும், உதவியாளரும் இல்லை.
- “யார் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் மறுக்கிறார்களோ அவர்கள் எனது அருளில் நம்பிக்கையிழந்து விட்டனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது” (என இறைவன் கூறுவதாக இப்ராஹீம் கூறினார்.)
- “இவரைக் கொன்று விடுங்கள்! அல்லது எரித்து விடுங்கள்!” என்று கூறியதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது. எனினும் நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரைக் காப்பாற்றினான். நம்புகின்ற சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
- “அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டதெல்லாம், இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையிலான பற்றின் காரணமாகத்தான். பிறகு மறுமை நாளில் உங்களில் சிலர், சிலரை மறுப்பார்கள். மேலும் உங்களில் சிலர், சிலரைச் சபிப்பார்கள். உங்களின் தங்குமிடம் நரகம். உங்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை” என்று (இப்ராஹீம்) கூறினார்.
- அவர்மீது லூத் நம்பிக்கை கொண்டார். (இப்ராஹீம்,) “நான் என் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்கிறேன். அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்” என்று கூறினார்.
- இஸ்ஹாக்கையும், யஃகூப்பையும் அவருக்குப் பரிசாகக் கொடுத்தோம். அவரது வழித்தோன்றலில் நபித்துவத்தையும், வேதத்தையும் அளித்தோம். அவருக்கு இவ்வுலகில் அவரது கூலியை வழங்கினோம். மறுமையில் அவர் நல்லோர்களில் உள்ளவராவார்.
- லூத்தையும் (தூதராக அனுப்பினோம்.) அவர் தமது சமுதாயத்தை நோக்கி, “அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் செய்யாத மானக்கேடான காரியத்தைச் செய்கிறீர்கள்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
- “நீங்கள் (இச்சைக்காக) ஆண்களிடம் செல்கிறீர்களா? மேலும் நீங்கள் (இதற்காக) வழியை மறிக்கிறீர்கள். உங்கள் அவையிலும் வெறுக்கத்தக்க அக்காரியத்தைச் செய்கிறீர்கள்” (என்றும் கூறினார்.) அதற்கு, “நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் தண்டனையை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று கூறியதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.
- “என் இறைவனே! குழப்பம் விளைவிக்கும் இக்கூட்டத்திற்கு எதிராக எனக்கு நீ உதவி செய்வாயாக!” என்று அவர் பிரார்த்தித்தார்.
- நம் தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்தபோது “நாங்கள் இந்த ஊர்வாசிகளை அழிக்கப் போகிறோம். இங்குள்ளவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” என்று கூறினர்.
- (அதற்கு இப்ராஹீம்,) “அங்கு லூத் இருக்கிறாரே!” என்று கேட்டார். “அங்கே இருப்பவர்களை நாங்கள் நன்கறிவோம். அவரையும், அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம். அவரது மனைவியைத் தவிர. அவள் (வேதனையில்) தங்கிவிடுவோரில் உள்ளவள்” என்று அவர்கள் கூறினர்.
- நம் தூதர்கள் லூத்திடம் வந்தபோது, அவர்களைப் பற்றி அவர் கவலைக்குள்ளானார்; மன வேதனையடைந்தார். “நீர் பயப்படவோ, கவலைப்படவோ வேண்டாம். உம்மையும், உமது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம், உமது மனைவியைத் தவிர. அவள் (வேதனையில்) தங்கி விடுவோரில் உள்ளவள்” என்று அவர்கள் கூறினர்.
- “இவ்வூர்வாசிகள் பாவம் செய்து கொண்டிருந்ததால் அவர்கள்மீது நாங்கள் வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைப்போம்” (என்றும் கூறினர்).
- சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு அங்குத் தெளிவான சான்றினை விட்டு வைத்திருக்கிறோம்.
- மத்யன்வாசிகளிடம் அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்.) “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! மறுமை நாளை எதிர்பாருங்கள்! பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்!” என்று அவர் கூறினார்.
- அவர்கள் அவரைப் பொய்யரெனக் கூறினர். எனவே அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தமது வீடுகளில் முகம் குப்புற வீழ்ந்து கிடந்தனர்.
- ஆது, ஸமூது சமுதாயத்தினரையும் (அழித்தோம்.) அ(வர்கள் அழிக்கப்பட்ட)து அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து உங்களுக்குத் தெளிவாகி விட்டது. அவர்களின் செயல்களை, அவர்களுக்கு ஷைத்தான் அலங்கரித்துக் காட்டினான். அவர்கள் விளக்கமுடையோராக இருந்தும் நேர்வழியை விட்டும் தடுத்து விட்டான்.
- காரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (அழித்தோம்.) அவர்களிடம் மூஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தார். ஆனால் அவர்கள் பூமியில் ஆணவத்துடன் நடந்து கொண்டனர். அவர்கள் (நம்மை) மிகைப்போராக இருக்கவில்லை.
- ஒவ்வொருவரையும் அவரவரது பாவத்தின் காரணமாகப் பிடித்தோம். அவர்களில் சிலர்மீது கல்மழையை இறக்கினோம்; சிலரைப் பெரும் சப்தம் பிடித்துக் கொண்டது; சிலரைப் பூமிக்குள் புதையுண்டு போகச் செய்தோம்; சிலரை (நீரில்) மூழ்கடித்தோம். அவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் செய்யவில்லை. எனினும், அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டனர்.
- அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டோருக்கு எடுத்துக்காட்டு, சிலந்திப் பூச்சியைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை (வலை பின்னி) ஏற்படுத்திக் கொண்டது. வீடுகளில் மிகப் பலவீனமானது சிலந்திப் பூச்சியின் வீடுதான். அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டுமே!
- அல்லாஹ்வையன்றி அவர்கள் எதைப் பிரார்த்திக்கிறார்களோ அதை அவன் அறிவான். அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
- இந்த எடுத்துக்காட்டுகளை மனிதர்களுக்காக நாம் எடுத்துரைக்கிறோம். எனினும், அறிவுடையவர்களைத் தவிர வேறெவரும் இதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
- வானங்களையும், பூமியையும் அல்லாஹ் நியாயமான காரணத்துடனே படைத்துள்ளான். இதில் இறைநம்பிக்கையாளர்களுக்குச் சான்றுள்ளது.
- (நபியே!) உமக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை எடுத்துரைப்பீராக! தொழுகையை நிலைநிறுத்துவீராக! தொழுகை, மானக்கேடானவற்றையும், தீமைகளையும் தடுக்கின்றது. அல்லாஹ்வை நினைவுகூர்வது மிகப் பெரியதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிகிறான்.382
- வேதமுடையோரில் அநியாயக்காரர்களைத் தவிர மற்றவர்களுடன் சிறந்த முறையில் அன்றி விவாதம் செய்யாதீர்கள்! “எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும், உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நம்பினோம். எங்களுடைய கடவுளும், உங்களுடைய கடவுளும் ஒருவன்தான். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்”என்று கூறுங்கள்.383
- (நபியே!) இதுபோன்றே உமக்கும் இவ்வேதத்தை அருளியுள்ளோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கியிருந்தோமோ அவர்கள் இதை நம்புகிறார்கள். (மக்காவாசிகளான) இவர்களிலும் இதை நம்புவோர் உள்ளனர். இறைமறுப்பாளர்களைத் தவிர வேறெவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
- (நபியே!) இதற்கு முன் எந்த வேதத்தையும் நீர் படிப்பவராக இருக்கவில்லை. உமது வலது கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்பட்டிருப்பார்கள்.
- எனினும், இவை அறிவு வழங்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இருக்கும் தெளிவான வசனங்களாகும். அநியாயக்காரர்களைத் தவிர வேறெவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
- “இவரது இறைவனிடமிருந்து இவர்மீது அற்புதங்கள் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். (நபியே!) “அல்லாஹ்விடமே அற்புதங்கள் உள்ளன. நான் பகிரங்கமாக எச்சரிப்பவன்தான்!” என்று கூறுவீராக!
- அவர்களுக்கு ஓதிக்காட்டப்படுகின்ற இவ்வேதத்தை நாம் உமக்கு அருளியிருப்பது அவர்களுக்குப் போதுமானதாக இல்லையா? இதில், இறைநம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு அருளும், படிப்பினையும் உள்ளது.
- (நபியே!) “எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ்வே போதுமானவன். அவன் வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அறிகிறான். பொய்மையை நம்பி, யார் அல்லாஹ்வை மறுக்கிறார்களோ அவர்களே நஷ்டமடைந்தோர்” என்று கூறுவீராக!
- (நபியே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகக் கோருகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட ஒரு தவணை இல்லாதிருந்தால் அவர்களிடம் அவ்வேதனை வந்திருக்கும். எனினும், அது அவர்கள் அறியாத விதத்தில் திடீரென அவர்களிடம் வந்தே தீரும்.
- (நபியே!) அவர்கள் உம்மிடம் வேதனையை அவசரமாகக் கோருகின்றனர். இறைமறுப்பாளர்களை நரகம் சூழ்ந்து கொள்ளும்.
- அந்நாளில் அவர்களுக்கு மேலிருந்தும், கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை வேதனை சூழ்ந்து கொள்ளும். (இறைவன்,) “நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்!” என்று கூறுவான்.
- இறைநம்பிக்கை கொண்ட என் அடியார்களே! என்னுடைய பூமி விரிந்து பரந்தது. எனவே, என்னையே வணங்குங்கள்!
- ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே! பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
- யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சொர்க்கத்திலுள்ள மாளிகைகளில் தங்க வைப்போம். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றில் நிரந்தரமாக இருப்பார்கள். நற்செயல் செய்வோரின் கூலி மிகச் சிறந்தது.
- அவர்கள் பொறுமையை மேற்கொள்வார்கள்; தமது இறைவன் மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள்.
- எத்தனையோ உயிரினங்கள் தமக்குரிய உணவைச் சுமந்து கொண்டிருப்பதில்லை. அல்லாஹ்தான் அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
- (நபியே!) “வானங்களையும், பூமியையும் படைத்து, சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தியவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே அவர்கள் கூறுவார்கள். ஆயினும், அவர்கள் எவ்வாறு திசைதிருப்பப்படுகின்றனர்?
- அல்லாஹ், தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான். அவருக்கு அளவுடனும் கொடுக்கிறான். அல்லாஹ், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
- “பூமி இறந்த பின்னர், வானிலிருந்து மழையைப் பொழிவித்து அதன்மூலம் அப்பூமியை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால், ‘அல்லாஹ்’ என்றே அவர்கள் கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!”என்று கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
- இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டுமே அன்றி வேறில்லை. அவர்கள் அறிவோராக இருந்தால் மறுமை உலகமே (நிரந்தரமான) வாழ்க்கையாகும்.
- அவர்கள் கப்பலில் பயணிக்கும்போது, அல்லாஹ்வுக்கே வணக்கத்தை உரித்தாக்கி, அவனிடம் பிரார்த்திக்கின்றனர். அவர்களை அவன் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்தால் அப்போது இணைவைக்கின்றனர்.
- அவர்களுக்கு நாம் வழங்கியதில் அவர்கள் நன்றி மறந்து, (இவ்வுலகில்) சுகமனுபவிப்பதே இதற்குக் காரணம். விரைவில் அறிந்து கொள்வார்கள்.
- அவர்களைச் சுற்றியுள்ள மக்கள் (எதிரிகளால்) சூறையாடப்படும் நிலையில், (மக்கா எனும்) பாதுகாப்புமிக்க புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பொய்மையை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை மறுக்கிறார்களா?
- அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட, அல்லது தன்னிடம் உண்மை வந்தபோது அதைப் பொய்யெனக் கூறுபவனைவிட மிகவும் அநியாயக்காரன் யார்? இறைமறுப்பாளர்களுக்குரிய தங்குமிடம் நரகத்தில் இல்லையா?
- நமது விஷயத்தில் முயற்சி செய்வோரை நம்முடைய வழிகளில் செலுத்துவோம். அல்லாஹ், நன்மை செய்பவர்களுடன் இருக்கிறான்.