அல்அன்ஃபால் – போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள்

அத்தியாயம் : 8

வசனங்களின் எண்ணிக்கை: 75

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (நபியே!) போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் உரியது” என்று கூறுவீராக! அல்லாஹ்வை அஞ்சி, உங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!205
2. இறைநம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் பயந்து நடுங்கி விடும். அவனது வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் அது அவர்களுக்கு இறைநம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவன்மீதே நம்பிக்கை வைப்பார்கள்.
3. அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து செலவிடுவார்கள்.
4. அவர்களே உண்மையான இறைநம்பிக்கையாளர்கள். அவர்களுக்குத் தமது இறைவனிடம் அந்தஸ்துகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
5, 6. இறைநம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினர், தமது கண்முன்னே மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுவோரைப் போன்று (பத்ருப் போரை) வெறுத்த நிலையில், உமது இறைவன் உமது வீட்டிலிருந்து உண்மையுடன் உம்மை வெளியேற்றியதுபோலவே உண்மை தெளிவான பின்னரும் அதுகுறித்து உம்முடன் வாதிக்கின்றனர்.
7. “(வாணிபக் கூட்டம் அல்லது எதிரிப்படை ஆகிய) இரண்டு கூட்டத்தில் ஒன்று உங்களுக்கு உண்டு” என அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை நினைத்துப் பாருங்கள்! ஆயுதமேந்தாத (வாணிபக்) கூட்டத்தினர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினீர்கள். அல்லாஹ்வோ தனது கட்டளைகளால் உண்மையை உறுதிப்படுத்தவும், இறைமறுப்பாளர்களை வேரறுக்கவும் நாடுகிறான்.
8. குற்றவாளிகள் வெறுத்தபோதும் அவன் பொய்யை அழித்து, உண்மையை உறுதிப்படுத்தவே (நாடுகிறான்.)
9. உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடியபோது “அணிவகுக்கும் வானவர்களில் ஆயிரம் பேரைக் கொண்டு உங்களுக்கு உதவுவேன்” என அவன் உங்களுக்குப் பதிலளித்தான்.206
10. நற்செய்தியாகவும், இதன் மூலம் உங்கள் உள்ளங்கள் நிம்மதி பெறுவதற்காகவும் இதை அல்லாஹ் ஏற்படுத்தினான். அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவியில்லை. அல்லாஹ் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
11. (நீங்கள்) நிம்மதி பெறுவதற்காகத் தன்னிடமிருந்து சிறு தூக்கத்தை உங்களுக்கு அவன் தழுவச் செய்ததை நினைத்துப் பாருங்கள்! மேலும் அவன் வானிலிருந்து உங்கள்மீது மழை பொழியச் செய்தான். அதன்மூலம் உங்களைத் தூய்மைப்படுத்தவும், ஷைத்தானின் அசுத்தத்தை உங்களை விட்டு நீக்கவும், உங்கள் உள்ளங்களை வலுப்படுத்தவும், அதன்மூலம் பாதங்களை உறுதிப்படுத்தவும் (இவ்வாறு செய்தான்.)207
12. உமது இறைவன் வானவர்களிடம், “நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே நீங்கள் இறைநம்பிக்கை கொண்டோரை உறுதிப்படுத்துங்கள்! இறைமறுப்பாளர்களின் உள்ளங்களில் பீதியைப் போடுவேன். எனவே கழுத்துகளின் மேல் வெட்டுங்கள்! அவர்களின் மூட்டுகள் ஒவ்வொன்றையும் வெட்டுங்கள்!” என்று அறிவித்ததை நினைத்துப் பார்ப்பீராக!
13. அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்ததே இதற்குக் காரணம். யாரேனும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்தால் அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்.
14. இதுவே (தண்டனை.) நீங்கள் இதைச் சுவையுங்கள்! இறைமறுப்பாளர்களுக்கு நரக வேதனை உள்ளது.
15. இறைநம்பிக்கை கொண்டோரே! படைதிரண்டு வரும் இறைமறுப்பாளர்களை நீங்கள் எதிர்கொண்டால் அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்!
16. போரிட இடம் மாறுபவராகவோ அல்லது படையுடன் சேர்ந்து கொள்பவராகவோ தவிர, அந்நாளில் யார் அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடுகிறாரோ அவர் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளாகி விட்டார். அவரது தங்குமிடம் நரகமாகும். சேருமிடத்தில் அது கெட்டது.208
17. நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக, அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான். (நபியே! அவர்கள்மீது) நீர் எறிந்தபோது (அதை) நீர் எறியவில்லை. மாறாக, அல்லாஹ்தான் எறிந்தான். இறைநம்பிக்கையாளர்களுக்குத் தன்னிடமிருந்து அழகிய அருட்கொடையை வழங்குவதற்காக (இவ்வாறு செய்தான்.) அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
18. இது (அல்லாஹ்வின் உதவி.) இறைமறுப்பாளர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் பலவீனப்படுத்துபவன்.
19. (இறை மறுப்பாளர்களே!) நீங்கள் தீர்ப்பைத் தேடுகிறீர்கள் என்றால், அந்தத் தீர்ப்பு உங்களிடம் வந்து விட்டது. நீங்கள் விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நல்லது. நீங்கள் (போருக்குத்) திரும்பினால் நாமும் திரும்புவோம். உங்கள் படை அதிகமாக இருந்தாலும் அது உங்களைச் சிறிதும் காப்பாற்றாது. இறைநம்பிக்கையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.209
20. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவியுற்றுக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!
21. அவர்கள் செவியேற்காதவர்களாக இருந்தும், “நாங்கள் செவியுற்றோம்” என்று கூறியோரைப் போன்று ஆகி விடாதீர்கள்!
22. அல்லாஹ்விடம் உயிரினங்களில் மிகக் கெட்டவர்கள் சிந்திக்காத செவிடர்களும், ஊமையர்களுமே ஆவர்.210
23. அவர்களிடம் அல்லாஹ் ஏதேனும் நன்மையை அறிந்திருந்தால் அவர்களைச் செவியேற்கச் செய்திருப்பான். அவர்களை அவன் செவியேற்கச் செய்திருந்தாலும் அவர்கள் புறக்கணித்தோராகத் திரும்பிச் சென்றிருப்பார்கள்.
24. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், உங்களுக்கு உயிரூட்டும் விஷயத்திற்காக உங்களை அழைக்கும்போது இத்தூதருக்கும் பதிலளியுங்கள். மனிதனுக்கும், அவனது உள்ளத்திற்குமிடையே அல்லாஹ் சூழ்ந்திருக்கிறான் என்பதையும், அவனிடமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!211
25. வேதனையை அஞ்சிக் கொள்ளுங்கள்! அது உங்களில் அநியாயக்காரர்களை மட்டுமே தாக்கும் என்பதில்லை! தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
26. நீங்கள் சிறுபான்மையினராகவும், பூமியில் பலவீனர்களாகவும், பிற மக்கள் உங்களைச் சூறையாடி விடுவார்கள் எனப் பயந்து கொண்டும் இருந்தபோது, அவன் உங்களுக்கு அடைக்கலம் தந்து, தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தி, தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்ததை நினைத்துப் பாருங்கள்! இதனால் நீங்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம்.
27. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் துரோகம் செய்யாதீர்கள்! உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களிலும் துரோகம் செய்யாதீர்கள்!
28. உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடமே மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
29. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தால் அவன் (நன்மை, தீமையைப்) பிரித்தறியும் நேர்வழியில் உங்களை ஆக்குவான். உங்களை விட்டும் உங்கள் தீமைகளை அழிப்பான். உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளை உடையவன்.
30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை வெளியேற்றிவிடவோ இறைமறுப்பாளர்கள் சூழ்ச்சி செய்ததை நினைத்துப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சியாளர்களில் அல்லாஹ் சிறந்தவன்.
31. நமது வசனங்கள் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டால் “நாங்கள் செவியுற்று விட்டோம்! நாங்கள் நினைத்தால் இதுபோல் நாங்களும் கூறுவோம். இது முன்னோரின் கட்டுக்கதைகளைத் தவிர வேறில்லை” எனக் கூறுகின்றனர்.
32. “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையாக இருக்குமானால் வானிலிருந்து கல்மழையை எங்கள்மீது இறக்கி விடு! அல்லது எங்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை அளித்து விடு!” என்று அவர்கள் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக!212
33. (நபியே!) நீர் அவர்களுடன் இருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்பவனாக இல்லை. அவர்கள் பாவ மன்னிப்புத் தேடும் நிலையிலும் அவர்களை அல்லாஹ் வேதனை செய்பவனாக இல்லை.
34. அவர்களை அல்லாஹ் வேதனை செய்யாமலிருக்க அவர்களிடம் என்ன காரணம் இருக்கிறது? அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். அதற்கு அவர்கள் பொறுப்பாளர்களாகவும் (இருக்கத் தகுதி) இல்லை. இறையச்சமுடையோரே அதன் பொறுப்பாளர்கள். எனினும் (இதனை) அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
35. அந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகை என்பது சீட்டியடிப்பதும், கைதட்டுவதும் தவிர வேறில்லை. நீங்கள் இறைமறுப்பாளர்களாக இருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்!
36. அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக இறைமறுப்பாளர்கள் தமது செல்வங்களைச் செலவிடுகின்றனர். இனிமேலும் அதைச் செலவிடுவார்கள். (இறுதியில்) அதுவே அவர்களுக்குப் பெரும் கவலையாக அமையும். (அதன்) பிறகு அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். மேலும், இறைமறுப்பாளர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
37. அல்லாஹ், நல்லவரிலிருந்து கெட்டவரைப் பிரிப்பதற்காகவும், கெட்டவரை ஒருவர்மீது ஒருவராக அடுக்கி வைத்து, அவ்வனைவரையும் ஒரு குவியலாக்கி, அதனை நரகத்தில் போடுவதற்காகவுமே (ஒன்று சேர்க்கப்படுவார்கள்). அவர்களே நஷ்டமடைந்தோர்.
38. அவர்கள் விலகிக் கொண்டால் முன்னர் செய்தவை அவர்களுக்கு மன்னிக்கப்படும். அவர்கள் (பாவத்திற்குத்) திரும்பினால் முன்சென்றோர் (தண்டிக்கப்பட்ட) வழிமுறை நடந்தே உள்ளது என்பதை இறைமறுப்பாளர்களிடம் கூறுவீராக!213
39. குழப்பம் இல்லாமல் ஆகி, மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே உரித்தாகும் வரை அவர்களுடன் போரிடுங்கள்! அவர்கள் விலகிக் கொண்டால் அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
40. அவர்கள் புறக்கணித்தால், உங்களுடைய பாதுகாவலன் அல்லாஹ்தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் மிகச் சிறந்த பாதுகாவலன்; மிகச் சிறந்த உதவியாளன்.
41. ‘நீங்கள் போரில் கைப்பற்றிய வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியது’ என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வையும், இரு படைகள் மோதிக் கொண்ட நாளான, தெளிவுபடுத்திய (பத்ருப் போர்) நாளில் நம் அடியார்மீது நாம் இறக்கி வைத்ததையும் நீங்கள் நம்பியிருந்தால் (இதுவே சட்டமாகும்.) ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.214
42. (பத்ருப் போரில்) நீங்கள் அருகிலுள்ள பள்ளத்தாக்கிலும், அவர்கள் தூரமான பள்ளத்தாக்கிலும், வாகனக் கூட்டத்தினர் உங்களுக்குக் கீழ்ப்புறமாகவும் இருந்ததை நினைத்துப் பாருங்கள்! நீங்கள் ஒருவருக்கொருவர் (களத்தைத்) தீர்மானித்திருந்தால் அந்த முடிவில் கருத்துவேறுபாடு கொண்டிருப்பீர்கள். எனினும், அழியக்கூடியவர்கள் தகுந்த ஆதாரத்துடன் அழிவதற்காகவும், உயிர் வாழ்பவர்கள் தகுந்த ஆதாரத்துடன் உயிர் வாழ்வதற்காகவும், முடிவு செய்துவிட்ட காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காக (இதைச் செய்தான்.) அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
43. (நபியே!) அவர்களைக் குறைவானவர்களாக அல்லாஹ் உமக்குக் கனவில் காட்டியதை நினைத்துப் பார்ப்பீராக! அவர்களை அதிகமானவர்களாக உமக்குக் காட்டியிருந்தால் நீங்கள் தைரியமிழந்து, இவ்விஷயத்தில் ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு கொண்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் பாதுகாத்தான். அவனே உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிபவன்.
44. (போரில்) நீங்கள் சந்தித்தபோது, உங்கள் கண்களுக்கு அவர்களைக் குறைவாகவும், அவர்கள் கண்களுக்கு உங்களைக் குறைவாகவும் அவன் காட்டியதை நினைத்துப் பாருங்கள்! முடிவு செய்துவிட்ட காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காக (இதைச் செய்தான்.) அல்லாஹ்விடமே காரியங்கள் அனைத்தும் கொண்டுவரப்படும்.
45. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் ஏதேனும் ஒரு படையினரை (போரில்) சந்திக்கும்போது உறுதியாக இருங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.215
46. அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! கருத்துவேறுபாடு கொள்ளாதீர்கள்! அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து விடுவீர்கள்! உங்கள் பலம் குன்றிவிடும். பொறுமையை மேற்கொள்ளுங்கள்! பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.
47. பெருமைக்காகவும், மக்களுக்குக் காட்டுவதற்காகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுப்பதற்காகவும் தமது வீடுகளிலிருந்து புறப்பட்டோரைப் போன்று ஆகி விடாதீர்கள்! அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்தறிபவன்.
48. அவர்களின் செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அலங்கரித்துக் காட்டி, “மனிதர்களில் இன்றைய தினம் உங்களை வெல்பவர் எவருமில்லை. நான் உங்களுக்கு உதவுபவன்” என்று கூறியதை நினைத்துப் பாருங்கள்! இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது அவன் பின்வாங்கித் திரும்பிச் சென்றான். “நான் உங்களை விட்டும் விலகிக் கொண்டேன். நீங்கள் காணாததை நான் காண்கிறேன். நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன். தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன்” என்று அவன் கூறினான்.
49. நயவஞ்சகர்களும், தமது உள்ளங்களில் நோயுள்ளோரும் “இவர்களை இவர்களது மார்க்கம் ஏமாற்றி விட்டது” என்று கூறியதை நினைத்துப் பாருங்கள்! யார் அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைக்கிறாரோ (அவருக்கு அவனே போதுமானவன்.) அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவாளன்.
50. இறைமறுப்பாளர்களை வானவர்கள் கைப்பற்றும்போது நீர் பார்ப்பீராயின், அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடிப்பார்கள். “எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்!” (என்று வானவர்கள் கூறுவார்கள்.)
51. உங்கள் கைகள் செய்தவையே இதற்குக் காரணம். அடியார்களுக்கு அல்லாஹ் சிறிதும் அநியாயம் செய்பவனல்ல!
52. (இவர்களது நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார் மற்றும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் மறுத்தனர். எனவே அவர்களை, அவர்களின் பாவங்களுக்காக அல்லாஹ் பிடித்தான். அல்லாஹ் மிக வலிமையானவன்; தண்டிப்பதில் கடுமையானவன்.
53. எந்த ஒரு சமுதாயத்தினரும் தனது நிலையை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையை அவன் மாற்றுபவனாக இல்லை என்பதுதான் இதன் காரணம். அல்லாஹ் செவியேற்பவன், நன்கறிந்தவன்.
54. (இவர்களது நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார் மற்றும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலையைப் போன்றது. அவர்கள் தமது இறைவனின் வசனங்களைப் பொய்யெனக் கூறினர். எனவே அவர்களின் பாவங்களுக்காக அவர்களை அழித்தோம். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம். அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாகவே இருந்தனர்.
55. அல்லாஹ்விடம் உயிரினங்களில் மிகக் கெட்டவர்கள் இறைமறுப்பாளர்களே! அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
56. அவர்களிடமே நீர் ஒப்பந்தம் செய்து கொண்டீர். பின்னர், ஒவ்வொரு முறையும் அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறிக்கின்றனர். அவர்கள் இறையச்சம் கொள்ள மாட்டார்கள்.
57. போரில் நீர் அவர்களை மிகைத்தால், அவர்களை (தாக்குவதைக்) கொண்டு அவர்களுக்குப் பின்னுள்ளவர்களைச் சிதறடிப்பீராக! இதனால் இவர்கள் படிப்பினை பெறலாம்.
58. ஏதேனும் ஒரு கூட்டத்தாரின் துரோகத்திற்கு நீர் பயந்தால், அவர்களிடம் (செய்த உடன்படிக்கையை) அதே அளவில் எறிந்து விடுவீராக! அல்லாஹ், துரோகிகளை நேசிக்க மாட்டான்.
59. தாங்கள் முந்தி விட்டதாக இறைமறுப்பாளர்கள் நினைக்க வேண்டாம். அவர்கள் தப்பிப்போர் அல்ல!
60. உங்களுக்கு முடிந்த அளவு வலிமையையும், தயார் நிலையிலுள்ள குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் திரட்டிக் கொள்ளுங்கள்! இதனால் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும், இவர்களல்லாத (நயவஞ்சகர்களான) மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்; அல்லாஹ்தான் அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அது உங்களுக்கே நிறைவாக வழங்கப்படும். நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.216
61. அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால் நீரும் அதன்பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைப்பீராக! அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
62. (நபியே!) அவர்கள் உம்மை ஏமாற்ற நினைத்தால் உமக்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனே தனது உதவியாலும், இறைநம்பிக்கையாளர்களைக் கொண்டும் உம்மைப் பலப்படுத்தினான்.
63. அவர்களின் உள்ளங்களுக்கிடையே அவனே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினான். இவ்வுலகிலுள்ள அனைத்தையும் நீர் செலவிட்டாலும் அவர்களின் உள்ளங்களுக்கிடையே உம்மால் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த இயலாது. எனினும் அவர்களுக்கிடையே அல்லாஹ்வே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினான். அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.217
64. நபியே! உமக்கும், உம்மைப் பின்பற்றும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ் போதுமானவன்.
65. நபியே! இறைநம்பிக்கையாளர்களைப் போருக்கு ஆர்வ மூட்டுவீராக! உங்களில் பொறுமையுடைய இருபது பேர் இருந்தால், இருநூறு பேரை வெற்றி கொள்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். அவர்கள் விளங்கிக் கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.218
66. உங்களிடம் பலவீனம் இருப்பதை அறிந்து, இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களில் பொறுமையுடைய நூறு பேர் இருந்தால் இருநூறு பேரை வெற்றி கொள்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் நாட்டப்படி இரண்டாயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.
67. பூமியில் (எதிரிகளை) முற்றாக ஒழித்துக் கட்டும்வரை, தமக்குப் போர்க் கைதிகளை ஏற்படுத்துவது எந்த நபிக்கும் தகுதியானதல்ல! நீங்கள் இம்மைச் செல்வங்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.219
68. அல்லாஹ்வின் விதி முந்தியிருக்காவிட்டால், நீங்கள் (பிணைத் தொகை) பெற்றுக் கொண்டதற்காக உங்களைக் கடும் வேதனை பிடித்திருக்கும்.
69. நீங்கள் போரில் கைப்பற்றிய பொருட்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், தூய்மையானதாகவும் உள்ள நிலையில் அவற்றை உண்ணுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன்.
70. நபியே! உங்கள் கைவசத்தில் இருக்கும் கைதிகளிடம், “உங்களுடைய உள்ளங்களில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து (பிணைத் தொகையாகப்) பெறப்பட்டதைவிடச் சிறந்ததை அவன் உங்களுக்குத் தருவான். மேலும் அவன் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்” என்று கூறுவீராக!220
71. அவர்கள் உமக்குத் துரோகம் செய்ய நினைத்தால், இதற்கு முன்பு அவர்கள் அல்லாஹ்வுக்கும் துரோகம் செய்துள்ளனர். எனவே அவர்கள்மீது (உமக்கு) அதிகாரமளித்தான். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
72. யார் இறைநம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டார்களோ அவர்களும், (அவர்களுக்கு) புகலிடம் தந்து உதவியோருமே ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள். யார் இறைநம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யவில்லையோ, அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களுடன் உங்களுக்கு எந்த உறவுமில்லை. எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி கோரினால் உதவுவது உங்களுக்குக் கடமையாகும். எந்தச் சமுதாயத்திற்கும் உங்களுக்குமிடையில் உடன்படிக்கை உள்ளதோ அவர்களுக்கு எதிராக (இந்த உதவி) இருக்கக் கூடாது. அல்லாஹ், நீங்கள் செய்வதைப் பார்ப்பவன்.
73. இறைமறுப்பாளர்கள் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக உள்ளனர். நீங்கள் இதைச் செய்யா விட்டால் பூமியில் கலகமும், பெரும் குழப்பமும் ஏற்பட்டுவிடும்.
74. யார் இறைநம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் போரிட்டார்களோ அவர்களும், (அவர்களுக்குப்) புகலிடம் தந்து உதவியோருமே உண்மையான இறைநம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் மதிப்புமிக்க உணவும் உள்ளது.
75. இதன்பின்னர் யார் இறைநம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, உங்களுடன் சேர்ந்து போரிட்டார்களோ அவர்களும் உங்களைச் சார்ந்தவர்களே! அல்லாஹ்வின் வேதத்தின்படி இரத்த உறவுகளே ஒருவருக்கொருவர் தகுதியானவர்கள். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.