அத்தியாயம் : 21
வசனங்களின் எண்ணிக்கை: 112
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. மனிதர்களுக்கு, அவர்களுக்கான விசாரணை நெருங்கி விட்டது. அவர்களோ அலட்சியத்திலும் புறக்கணிப்பிலும் உள்ளனர்.328
2. அவர்களிடம் தமது இறைவனிடமிருந்து புதிய அறிவுரை வந்தால் கேலி செய்தவர்களாகவே அதைச் செவியேற்கின்றனர்.
3. அவர்களின் உள்ளங்கள் அலட்சியத்தில் உள்ளன. “இவர் உங்களைப் போன்ற மனிதரைத் தவிர வேறில்லை. நீங்கள் பார்த்துக் கொண்டே சூனியத்திடம் செல்கிறீர்களா?” என்று அநியாயக்காரர்கள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர்.
4. “வானத்திலும், பூமியிலும் (பேசப்படும்) கூற்றை என் இறைவன் அறிவான். அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்” என (தூதராகிய) அவர் கூறினார்.
5. “(இவை) குழப்பமான கனவுகளே! அப்படியல்ல! இதை இவர் புனைந்து கூறி விட்டார்; இல்லை! இவர் கவிஞரே! முன்னோருக்கு வழங்கப்பட்டதைப் போன்று ஒரு சான்றை அவர் நம்மிடம் கொண்டு வரட்டும்” என அவர்கள் கூறுகின்றனர்.
6. இவர்களுக்கு முன் நாம் அழித்துவிட்ட எந்த ஊராரும் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. இவர்களா இறைநம்பிக்கை கொள்ளப் போகிறார்கள்?
7. (நபியே!) உமக்கு முன்னர் ஆண்களையே தவிர நாம் தூதராக அனுப்பவில்லை. அவர்களுக்கு வேத அறிவிப்பை வழங்கினோம். நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேத) அறிவுடையோரிடம் கேளுங்கள்!
8. நாம் அவர்களுக்கு உணவு உண்ணாத உடலை ஏற்படுத்தவில்லை. அவர்கள் நிரந்தரமானவர்களாகவும் இருக்கவில்லை.
9. பின்னர், அவர்களுக்கு நாம் (கொடுத்த) வாக்குறுதியை நிறைவேற்றினோம். எனவே அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றி, வரம்பு மீறியவர்களை அழித்தோம்.
10. உங்களுக்கு ஒரு வேதத்தை அருளியுள்ளோம். அதில் உங்களுக்கான நற்போதனை உள்ளது. சிந்திக்க மாட்டீர்களா?
11. அநியாயம் செய்த எத்தனையோ ஊர்களை நாம் அடியோடு அழித்துள்ளோம். அதற்குப் பின் வேறு சமுதாயத்தைத் தோற்றுவித்தோம்.
12. அவர்கள் நமது தண்டனையை உணர்ந்தபோது, உடனடியாக அங்கிருந்து வெருண்டோடுகின்றனர்.
13. “நீங்கள் வெருண்டோடாதீர்கள்! நீங்கள் எதில் சுகபோகம் அளிக்கப்பட்டீர்களோ அதை நோக்கியும், உங்கள் தங்குமிடங்களை நோக்கியும் திரும்புங்கள்! நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்!” (என்று சொல்லப்பட்டது.)
14. அவர்கள், “எங்கள் கேடே! நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகி விட்டோம்” எனக் கூறினர்.
15. நாம் அவர்களை எரிந்து சாம்பலான அறுவடைப் பயிர்களாக ஆக்கும் வரை இதுவே அவர்களின் கூக்குரலாக இருந்தது.
16. நாம் வானத்தையும், பூமியையும், அவ்விரண்டுக்கு இடைப்பட்டவற்றையும் கேளிக்கையாகப் படைக்கவில்லை
17. நாம் விளையாட்டாக எதையும் எடுத்துக்கொள்ள விரும்பியிருந்தால் நம்மிடமிருந்தே அதை ஏற்படுத்தியிருப்போம். (ஆனால் அவ்வாறு) நாம் செய்வோராக இல்லை.
18. அவ்வாறல்ல! சத்தியத்தை அசத்தியத்தின்மீது எறிகிறோம். அது அசத்தியத்தை உடைத்து விடுகின்றது. உடனே அது அழிந்து விடுகிறது. நீங்கள் (பொய்யாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான்.
19. வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அவனுக்கே உரியவர்கள். அவனிடமுள்ள (வான)வர்கள் அவனை வணங்குவதில் கர்வம் கொள்ளவோ, களைப்படையவோ மாட்டார்கள்.
20. அவர்கள் சோர்வடையாமல் இரவிலும் பகலிலும் அவனைப் போற்றுகின்றனர்.
21. பூமியிலிருந்து அவர்கள் உருவாக்கிக் கொண்ட கடவுள்கள் (இறந்தோரை) உயிர்ப்பித்து எழுப்புவார்களா?
22. வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவ்விரண்டும் சீர்குலைந்து போயிருக்கும். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அர்ஷின் இறைவனான அல்லாஹ் தூயவன்.
23. அவன் செய்பவற்றைப் பற்றி விசாரணை செய்யப்பட மாட்டான். (அவனால்) அவர்கள்தான் விசாரணை செய்யப்படுவார்கள்.
24. அவனையன்றி அவர்கள் வேறு கடவுள்களை எடுத்துக் கொண்டார்களா? “உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்! இதோ என்னுடன் இருப்பவர்களின் போதனையும், எனக்கு முன்சென்றோரின் போதனையும் இருக்கின்றது” என (நபியே!) கூறுவீராக! ஆனால் அவர்களில் அதிகமானோர் உண்மையை அறிவதில்லை. அவர்கள் புறக்கணிப்பவர்கள்.
25. “என்னைத் தவிர வேறெந்தக் கடவுளும் இல்லை! எனவே, என்னையே வணங்குங்கள்!” என்று நாம் அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை.
26. “அளவற்ற அருளாளன் (வானவரிலிருந்து) பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்” எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். எனினும் அவர்கள் கண்ணியமிக்க அடியார்கள்.
27. அவர்கள் அவனை முந்திக் கொண்டு பேச மாட்டார்கள்; அவர்கள் அவனது ஆணைப்படியே செயல்படுவார்கள்.
28. அவர்களுக்கு முன்னுள்ளவற்றையும், பின்னுள்ளவற்றையும் அவன் அறிகிறான். அவன் பொருந்திக் கொண்டோருக்கே தவிர வேறெவருக்கும் அவர்கள் பரிந்துரைக்க மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்கக் கூடியவர்கள்.
29. அவர்களில் யாரேனும் “அல்லாஹ்வையன்றி நானே கடவுள்!” என்று கூறினால் அவருக்கு நரகத்தையே கூலியாகக் கொடுப்போம். அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம்.
30. வானங்களும், பூமியும் பிணைந்திருந்தன; அவ்விரண்டையும் நாமே பிரித்தெடுத்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து உருவாக்கினோம் என்பதையும் இறைமறுப்பாளர்கள் சிந்திக்கவில்லையா? அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்களா?
31. பூமி, அவர்களுடன் அசையாதிருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினோம். அவர்கள் வழியறிந்து கொள்வதற்காக அதில் விசாலமான பாதைகளையும் ஏற்படுத்தினோம்.
32. வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம். ஆனால் அதிலுள்ள சான்றுகளை அவர்கள் புறக்கணிக்கின்றனர்.
33. இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். ஒவ்வொன்றும் ஒரு சுற்றுப்பாதையில் நீந்துகின்றன.
34. (நபியே!) உமக்கு முன்னரும் எந்த மனிதருக்கும் நிரந்தரத்தை நாம் ஏற்படுத்தவில்லை. நீர் இறந்து விட்டால் அவர்கள் நிரந்தமாக இருக்கப் போகிறார்களா?
35. ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே! (உங்களை) பரிசோதித்துப் பார்ப்பதற்காக நன்மை, தீமை மூலம் உங்களைச் சோதிக்கிறோம். நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
36. (நபியே!) இறைமறுப்பாளர்கள் உம்மைக் கண்டால் “உங்கள் கடவுள்களைப் பற்றிக் (குறை) கூறுபவர் இவர்தானா?” என்று (கூறி) உம்மைக் கேலியாகவே கருதுகின்றனர். அவர்களோ ‘அர்ரஹ்மான்’ (அளவற்ற அருளாளன்) என்று கூறுவதை மறுக்கின்றனர்.
37. மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். (வேதனை பற்றிய) என் சான்றுகளை உங்களுக்குக் காட்டுவேன். எனவே என்னிடம் அவசரப்படாதீர்கள்!
38. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்குறுதி எப்போது (நிறைவேறும்)?” என அவர்கள் கேட்கின்றனர்.
39. தமது முகங்களையும் முதுகுகளையும் நரகத்தின் நெருப்பை விட்டும் தடுத்துக் கொள்ள முடியாமலும், அவர்கள் உதவி செய்யப்படாமலும் இருக்கும் அந்த நேரத்தை இறைமறுப்பாளர்கள் அறிந்திருந்தால் (இவ்வாறு கேட்க மாட்டார்கள்.)
40. எனினும், அது அவர்களிடம் திடீரென வந்து அவர்களைத் தடுமாறச் செய்யும். அவர்களால் அதைத் தடுக்க முடியாது. அவர்கள் அவகாசம் வழங்கப்படவும் மாட்டார்கள்.
41. (நபியே!) உமக்கு முன்னரும் தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். தூதர்களை எதைக் கொண்டு அவர்கள் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தோரைச் சூழ்ந்து கொண்டது.
42. “அளவற்ற அருளாளனிடமிருந்து இரவிலும் பகலிலும் உங்களைப் பாதுகாப்பவன் யார்?” என்று கேட்பீராக! ஆனால் அவர்களோ தமது இறைவனின் அறிவுரையைப் புறக்கணிக்கின்றனர்.
43. அவர்களுக்கு நம்மையன்றி அவர்களைப் பாதுகாக்கும் கடவுள்கள் இருக்கின்றனவா? அவை தமக்கே உதவ சக்தியற்றவை. அவர்கள் நம்மிடமிருந்து பாதுகாக்கப்பட மாட்டார்கள்.
44. எனினும், இவர்களையும், இவர்களது முன்னோரையும் அவர்களின் வாழ்நாள் நீடிக்கும்வரை சுகமனுபவிக்கச் செய்தோம். பூமியின் விளிம்புகளிலிருந்து அதைக் குறைப்பதற்கு நாம் வருவதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? இவர்களா வெல்லப் போகிறார்கள்?
45. (நபியே!) “நான் இறை அறிவிப்பைக் கொண்டே உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறுவீராக! எனினும் எச்சரிக்கப்படும்போது செவிடர்கள் அந்த அழைப்பைச் செவியுற மாட்டார்கள்.
46. உம் இறைவனின் தண்டனையில் சிறிதளவு அவர்களைத் தீண்டி விட்டால் “எங்களது கேடே! நாங்களே அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்றே கூறுவர்.
47. மறுமை நாளுக்காக நியாயத் தராசுகளை ஏற்படுத்துவோம். எனவே, எவரும் சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். கடுகின் விதையளவு இருந்தாலும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுப்பதற்கு நாமே போதுமானவர்கள்.329
48. (உண்மை, பொய்யை) பிரித்துக் காட்டக் கூடியதையும், ஒளியையும், இறையச்சமுடையோருக்கான அறிவுரையையும் மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் வழங்கினோம்.
49. அவர்கள் மறைவாக இருக்கும்போதும் தமது இறைவனை அஞ்சுவார்கள்; உலகம் அழியும் நேரத்தைப் பற்றியும் பயப்படுவார்கள்.
50. இது பாக்கியம் நிறைந்த நற்போதனையாகும். இதை நாம் இறக்கினோம். நீங்கள் இதையா மறுக்கிறீர்கள்?
51. இதற்கு முன்னர், இப்ராஹீமுக்கு அவருக்கான நேர்வழியை வழங்கினோம். அவரைப் பற்றி நாம் அறிந்தோராக இருந்தோம்.
52, 53. அவர் தமது தந்தையிடமும் தமது கூட்டத்தாரிடமும், “நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று கேட்டபோது, “இவற்றை எங்கள் முன்னோர் வணங்குவதை நாங்கள் கண்டோம்” என அவர்கள் கூறினர்.
54. “நீங்களும் உங்கள் முன்னோரும் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்!” என அவர் கூறினார்.
55. “நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளீரா? அல்லது விளையாடுகிறீரா?” என அவர்கள் கேட்டனர்.
56, 57. “அவ்வாறல்ல! வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனே உங்கள் இறைவன். அவனே அவற்றைப் படைத்தான். இதற்கு சாட்சி கூறுவோரில் நானும் ஒருவன். அல்லாஹ்வின்மீது சத்தியமாக! நீங்கள் திரும்பிச் சென்ற பிறகு உங்கள் சிலைகள் விஷயத்தில் நான் ஒரு தந்திரத்தைக் கையாள்வேன்” என அவர் கூறினார்.
58. அவர், அவற்றைத் துண்டு துண்டாக ஆக்கினார். அவற்றில் பெரியதைத் தவிர! அதனிடம் அவர்கள் திரும்பி வரக்கூடும் என்பதற்காக (அதை விட்டு வைத்தார்.)
59. “நமது கடவுள்களை இவ்வாறு செய்தவர் யார்? அவர் அநியாயக்காரர்களில் உள்ளவரே!” என அவர்கள் கூறினர்.
60. “இப்ராஹீம் என அழைக்கப்படும் ஓர் இளைஞர் அவற்றைப் பற்றிக் (குறை) கூறுவதைச் செவியுற்று இருக்கிறோம்” என்று சிலர் கூறினர்.
61. “மக்களின் கண்ணெதிரிரே அவரைக் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறக் கூடும்” என அவர்கள் கூறினர்.
62. “இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை இவ்வாறு செய்தது நீர்தானா?” எனக் கேட்டனர்.
63. “இல்லை! இதைச் செய்தது இவற்றிலுள்ள இந்தப் பெரிய சிலைதான். அவை பேசக் கூடியவையாக இருந்தால் அவற்றிடமே கேளுங்கள்!” என அவர் கூறினார்.330
64. அவர்கள் தங்கள் பக்கமே திரும்பி, “நீங்களே அநியாயக்காரர்கள்” என்று கூறிக் கொண்டனர்.
65. பின்னர் அவர்கள் தலைக்குனிவுக்கு உள்ளாக்கப்பட்டு, “இவை பேசாது என்பதுதான் உமக்குத் தெரியுமே!” (என்று கூறினர்.)
66, 67. “அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சிறிதும் நன்மையோ, தீமையோ செய்யாதவற்றை வணங்குகிறீர்களா? உங்களுக்கும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும் அசிங்கம்தான்! நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று அவர் கூறினார்.
68. “நீங்கள் (கடவுளுக்கு எதையேனும்) செய்வதாக இருந்தால் அவரைத் தீயில் எரித்து, உங்கள் கடவுள்களுக்கு உதவி செய்யுங்கள்!” என்று அவர்கள் கூறினர்.
69. “நெருப்பே! இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும், இதமாகவும் ஆகிவிடு!” என்று கூறினோம்.
70. அவருக்கு (எதிராக)ச் சதி செய்ய அவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களை நாம் நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.
71. அகிலத்தாருக்கு நாம் அருள்வளம் செய்த பூமிக்கு அவரையும், லூத்தையும் காப்பாற்றிக் கொண்டு வந்து சேர்த்தோம்.
72. அவருக்கு இஸ்ஹாக்கையும், அதிகப்படியாக யஃகூபையும் பரிசளித்தோம். அனைவரையும் நல்லவர்களாக ஆக்கினோம்.
73. அவர்களை நம் ஆணைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களாக ஆக்கினோம். நற்செயல்களைச் செய்யுமாறும், தொழுகையை நிலைநிறுத்துமாறும், ஸகாத்தை வழங்குமாறும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் நம்மையே வணங்கக் கூடியவர்களாக இருந்தனர்.
74. ஞானத்தையும், கல்வியையும் லூத்துக்கு வழங்கினோம். அவரை, அறுவெறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்த ஊரிலிருந்து காப்பாற்றினோம். அவர்கள் பாவம் செய்யும் கெட்ட கூட்டத்தினராக இருந்தனர்.
75. அவரை நமது அருளில் நுழைத்துக் கொண்டோம். அவர் நல்லோரில் உள்ளவர்.
76. நூஹை (நினைவுகூர்வீராக!) முன்னர் அவர் பிரார்த்தித்தபோது அவருக்கு நாம் பதிலளித்தோம். அவரையும், அவரது குடும்பத்தாரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.
77. நமது வசனங்களைப் பொய்யெனக் கூறிய கூட்டத்தாரிடமிருந்து அவரைக் காப்பாற்றினோம். அவர்கள் கெட்ட கூட்டத்தினராக இருந்தனர். எனவே அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
78. ஒரு கூட்டத்தாரின் ஆடுகள், ஒரு விளைநிலத்தில் இரவில் மேய்ந்தபோது, அதுபற்றித் தாவூதும், சுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக! நாம் அவர்களின் தீர்ப்பைக் கண்காணிப்போராக இருந்தோம்.
79. சுலைமானுக்கு அதைப் புரிய வைத்தோம். இருவருக்கும் ஞானத்தையும், கல்வியறிவையும் வழங்கினோம். மலைகளையும் பறவைகளையும் தாவூதுடன் சேர்ந்து (இறைவனைப்) போற்றுமாறு வசப்படுத்திக் கொடுத்தோம். நாம் (இதைச்) செய்வோராக இருந்தோம்.331
80. உங்கள் போரில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, உங்களுக்கான கவச உடைகள் தயாரிப்பதை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்களா?
81. வேகமாக வீசும் காற்றையும் சுலைமானுக்கு (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அது, நாம் அருள் வளம் செய்த பூமியை நோக்கி அவரது ஆணைப்படி வீசியது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.
82. அவருக்காகக் கடலில் முத்துக் குளிக்கும் ஷைத்தான்களும் இருந்தன. அவை, இதுவன்றி வேறு வேலைகளையும் செய்தன. நாமே அவற்றைக் கண்காணிப்போராக இருந்தோம்.
83, 84. அய்யூபையும் (நினைவுகூர்வீராக!) “எனக்குத் துன்பம் ஏற்பட்டுவிட்டது. நீ கருணையாளர்களில் மிக்க மேலான கருணையாளன்”என்று அவர் தமது இறைவனைப் பிரார்த்தித்தபோது அவருக்குப் பதிலளித்து, அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தையும், அவர்களுடன் அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு வழங்கினோம். இது நமது அருளும், வணங்குவோருக்குப் படிப்பினையுமாகும்.
85. இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்ல் ஆகியோரையும் (நினைவு கூர்வீராக!) அவர்கள் அனைவரும் பொறுமையாளர்களில் உள்ளவர்கள்.
86. நம் அருளில் அவர்களை நுழைத்துக் கொண்டோம். அவர்கள் நல்லோரில் உள்ளவர்கள்.
87. (யூனுஸ் நபியான) மீனுடையவரையும் (நினைவுகூர்வீராக!) அவர் கோபமாக வெளியேறியபோது, அவரை நெருக்கடிக்குள்ளாக்க மாட்டோம் என எண்ணிக் கொண்டார். “உன்னைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை; நீ தூயவன்; நான் அநியாயக்காரர்களில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து பிரார்த்தித்தார்.332
88. எனவே நாம் அவருக்குப் பதிலளித்து, அவரைத் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம். இவ்வாறே இறைநம்பிக்கையாளர்களைக் காப்பாற்றுவோம்.
89, 90. ஸக்கரிய்யாவையும் (நினைவுகூர்வீராக!) “என் இறைவனே! என்னைத் தன்னந்தனியாக விட்டுவிடாதே! நீயே உரிமையாளர்களில் மிகச் சிறந்தவன்”என்று அவர் தமது இறைவனைப் பிரார்த்தித்தபோது, அவருக்குப் பதிலளித்து, யஹ்யாவை அவருக்குப் பரிசளித்தோம். அவரது மனைவியை அவருக்காகச் சீராக்கினோம். அவர்கள் நற்காரியங்களில் விரைவோராக இருந்தனர். ஆசையுடனும், அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்தித்தனர். நமக்கே பணிவோராக இருந்தனர்.
91. தமது கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரையும் (நினைவுகூர்வீராக!) நம் உயிரிலிருந்து அவரிடம் ஊதினோம். அவரையும், அவரது மகனையும் அகிலத்தாருக்கு ஒரு சான்றாகவும் ஆக்கினோம்.
92. இதுவே ஒரே மார்க்கமான உங்கள் மார்க்கம். நானே உங்கள் இறைவன். எனவே என்னையே வணங்குங்கள்!
93. அவர்கள் தமது (மார்க்க) விஷயத்தில் தமக்கிடையே பிரிந்து விட்டனர். அனைவரும் நம்மிடம் திரும்பக் கூடியவர்கள்.
94. இறைநம்பிக்கையாளராக இருந்து நற்செயல்கள் செய்பவருக்கு, அவரது முயற்சி மறுக்கப்பட மாட்டாது. நாம் அதைப் பதிவு செய்வோராக இருக்கிறோம்.
95. எந்த ஊரை நாம் அழித்து விட்டோமோ, அவர்கள் (இவ்வுலகிற்குத்) திரும்பி வர மாட்டார்கள் என அதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது.
96. இறுதியாக, யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் ஒவ்வொரு மேட்டுப் பகுதியிலிருந்தும் விரைந்து வருமாறு திறந்துவிடப்படும்போது, (மறுமை நாள் நெருங்கி விடும்.)333
97. மேலும், உண்மையான வாக்குறுதி நெருங்கும்போது, உடனே இறைமறுப்பாளர்களின் கண்கள் இமைக்காமல் நின்று விடும். “எங்கள் கேடே! நாங்கள் இதைவிட்டும் அலட்சியமாக இருந்தோம். அவ்வாறல்ல! நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்” (என்று கூறுவார்கள்.)
98. நீங்களும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்தின் விறகுகளே! நீங்கள் அங்கு வரக் கூடியவர்கள்.
99. அவர்கள் கடவுள்களாக இருந்திருந்தால் இ(ந்நரகத்)தில் வந்து சேர்ந்திருக்க மாட்டார்கள். அதில் அவர்கள் அனைவரும் நிரந்தரமாக இருப்பார்கள்.
100. அங்கு அவர்களுக்குக் கதறலே உண்டு. அங்கு அவர்கள் (எதையும்) செவியுற மாட்டார்கள்.
101. யாருக்கு நம்மிடமிருந்து நன்மை முந்திவிட்டதோ அவர்கள் அ(ந்நரகத்)தை விட்டும் தூரமாக்கப்படுவார்கள்.
102. நரகத்தின் சிறு சப்தத்தைக் கூட அவர்கள் செவியுற மாட்டார்கள்; தமது உள்ளங்கள் விரும்புகின்ற (இன்பத்)தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
103. (மறுமையின்) பெரும் திடுக்கம் அவர்களைக் கவலைக்குள்ளாக்காது. “நீங்கள் வாக்களிக்கப்பட்ட உங்களுடைய நாள் இதுவே!” என்று (கூறியவர்களாக) அவர்களை வானவர்கள் சந்திப்பார்கள்.
104. எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவதுபோல் அந்நாளில் வானத்தைச் சுருட்டுவோம். முதலில் படைப்பை நாம் தொடங்கியது போலவே அதை மீட்டெடுப்போம். (இது) நம்மீது கடமையாகவுள்ள வாக்குறுதி! நாம் (இதைச்) செய்வோராகவே இருக்கிறோம்.334
105. “எனது நல்லடியார்கள்தான் இப்பூமிக்கு வாரிசாவார்கள்” என்று ஸபூர் வேதத்தில் நற்போதனைக்குப் பிறகு எழுதியிருந்தோம்.
106. இதில், வணங்குகின்ற சமுதாயத்திற்குச் சென்றடைய வேண்டிய (செய்தியான)து இருக்கிறது.
107. (நபியே!) உம்மை அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்.
108. “உங்களுடைய கடவுள் ஒரே கடவுள்தான் என்றே எனக்கு (தூதுச் செய்தி) அறிவிக்கப்படுகின்றது. எனவே நீங்கள் கட்டுப்படுகிறீர்களா?” என்று (நபியே!) கேட்பீராக!
109. அவர்கள் புறக்கணித்தால், “நான் உங்களுக்குச் சமமான முறையில் அறிவித்து விட்டேன். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது சமீபத்தில் இருக்கிறதா? அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறிய மாட்டேன்” என்று கூறுவீராக!
110. வெளிப்படையான பேச்சையும் அவன் அறிவான்; நீங்கள் மறைப்பதையும் அறிவான்.
111. இது உங்களுக்குச் சோதனையாக இருக்குமா? குறிப்பிட்ட காலம் வரையிலான இன்பமாக இருக்குமா என்பதை நான் அறிய மாட்டேன்.
112. “என் இறைவனே! உண்மையைக் கொண்டு தீர்ப்பளிப்பாயாக!” என்றும், “நீங்கள் (பொய்யாக) வர்ணிப்பதற்கு எதிராக அளவிலா அருளாளனாகிய எங்கள் இறைவனே உதவி தேடப்படுபவன்” என்றும் (இறைத்தூதர்) கூறினார்.