அத்தியாயம் : 6 அல்அன்ஆம் – ஆடு, மாடு, ஒட்டகம்

அத்தியாயம் : 6

வசனங்களின் எண்ணிக்கை: 165

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. வானங்களையும், பூமியையும் படைத்து, இருள்களையும், ஒளியையும் ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (இதன்) பிறகும் இறைமறுப்பாளர்கள் தமது இறைவனுக்கு(ப் படைப்பினங்களைச்) சமமாக்குகின்றனர்.
2. அவனே களிமண்ணால் உங்களைப் படைத்தான். பிறகு (வாழ்வுக்கான) தவணையை நிர்ணயித்தான். (மறுமைக்கான) குறிப்பிட்ட மற்றொரு தவணையும் அவனிடம் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகிக்கிறீர்கள்.
3. வானங்களிலும் பூமியிலும் அவன்தான் அல்லாஹ். உங்கள் இரகசியத்தையும் வெளிப்படைத்தன்மையையும் அவன் அறிகிறான். நீங்கள் செய்வதையும் அவன் அறிகிறான்.
4. தமது இறைவனின் சான்றுகளில் அவர்களிடம் எந்தச் சான்று வந்தாலும் அதை அவர்கள் புறக்கணிப்பவர்களாகவே இருந்தனர்.
5. உண்மை அவர்களிடம் வந்தபோது அதைப் பொய்யெனக் கூறினர். அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதைப் பற்றிய செய்திகள் அவர்களிடம் வந்தே தீரும்.
6. இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையை நாம் அழித்திருக்கிறோம் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா? பூமியில் உங்களுக்குச் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்தோம். அவர்கள்மீது தொடர் மழையைப் பொழிவித்து, அவர்களின் கீழ் ஆறுகளையும் ஓடச் செய்தோம். அவர்களின் பாவச்செயல்களின் காரணமாக அவர்களை அழித்துவிட்டு, அவர்களுக்குப் பின் வேறொரு தலைமுறையைத் தோற்றுவித்தோம்.
7. (நபியே!) ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து, அதைத் தமது கைகளால் அவர்கள் தொட்டுப் பார்த்தாலும் “இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்றே இந்த இறைமறுப்பாளர்கள் கூறியிருப்பார்கள்.
8. “இவருடன் ஒரு வானவர் இறக்கப்பட வேண்டாமா?” என அவர்கள் கேட்கின்றனர். (அவ்வாறு) நாம் ஒரு வானவரை இறக்கியிருந்தால் (அவர்களின்) காரியம் முடிக்கப்பட்டிருக்கும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.
9. (தூதரான) அவரை ஒரு வானவராக அனுப்பியிருந்தாலும் அவரையும் மனிதராகவே ஆக்கியிருப்போம். (ஏற்கனவே) அவர்கள் எதில் குழம்பினார்களோ அதே குழப்பத்தை (இதிலும்) அவர்களுக்கு ஏற்படுத்தியிருப்போம்.
10. (நபியே!) உமக்கு முன்னரும் தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். அத்தூதர்களை எதைக் கொண்டு அவர்கள் கேலி செய்தார்களோ அது அவர்களையே சூழ்ந்து கொண்டது.
11. “நீங்கள் பூமியில் பயணம் செய்யுங்கள்! பொய்யெனக் கூறியோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனியுங்கள்” என்று கூறுவீராக!
12. “வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாருக்குச் சொந்தம்?” என்று கேட்டு, “அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! அவன் கருணை புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். மறுமை நாளில் உங்களை அவன் ஒன்றுசேர்ப்பான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தமக்குத் தாமே யார் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.170
13. இரவிலும், பகலிலும் வசிப்பவை அவனுக்கே சொந்தம். அவன் செவியேற்பவன், நன்கறிந்தவன்.
14. “வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்த அல்லாஹ்வை விடுத்து, வேறு பொறுப்பாளனை எடுத்துக் கொள்வேனா?” என்று கேட்பீராக! அவனே உணவளிக்கிறான்; அவன் உணவளிக்கப்படுவதில்லை. “கட்டுப்பட்டோரில் நான் முதன்மையானவனாக இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக! இணை வைப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
15. “நான் என் இறைவனுக்கு மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன்” என்று கூறுவீராக!
16. அந்நாளில் யார் அதிலிருந்து காப்பாற்றப்படுகிறாரோ அவருக்கே அவன் அருள் புரிந்தான். அதுவே தெளிவான வெற்றி.
17. அல்லாஹ் உமக்கு ஏதேனும் துன்பத்தை ஏற்படுத்தினால் அதை நீக்குபவன் அவனைத் தவிர யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தினால், ஒவ்வொரு பொருளின்மீதும் அவன் ஆற்றல் மிக்கவன்.
18. அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன். அவன் நுண்ணறிவாளன்; நன்கறிந்தவன்.
19. “(நபியே!) சாட்சியத்தில் மிகப் பெரியது எது?” என்று கேட்டு, “எனக்கும் உங்களுக்குமிடையே அல்லாஹ்வே சாட்சியாளன்” என்று கூறுவீராக! இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும் இதை அடைவோரையும் நான் எச்சரிப்பதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுடன் வேறு கடவுள்கள் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறுகிறீர்களா? “நான் (அவ்வாறு) சாட்சி கூற மாட்டேன்” என்று கூறுவீராக! “அவன் ஒரே ஒரு கடவுள்தான்! நீங்கள் இணைவைப்பதை விட்டும் நான் விலகியவன்” என்றும் கூறுவீராக!
20. யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் (நபியாகிய) இவரை அறிவார்கள். யார் தமக்குத் தாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
21. அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கூறுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.
22. அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் “நீங்கள் கற்பனை செய்து கொண்டிருந்த உங்கள் இணைக் கடவுள்கள் எங்கே?” என்று இணைவைத்தோரிடம் கேட்போம்.
23. “எங்கள் இறைவன் அல்லாஹ்வின்மீது சத்தியமாக! நாங்கள் இணைவைப்போராக இருக்கவில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களின் சாக்குப்போக்காக இருக்காது.
24. அவர்கள், தம்மைப் பற்றி எவ்வாறு பொய்யுரைக்கின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்து விட்டன.
25. உம்மிடம் செவியுறு(வதுபோல் பாவனை செய்)வோரும் அவர்களில் உள்ளனர். அதை விளங்க முடியாதவாறு அவர்களின் உள்ளங்களில் திரைகளையும், அவர்களின் காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் எல்லாச் சான்றுகளையும் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். அவர்கள் உம்மிடம் வரும்போது உம்முடன் தர்க்கம் செய்வார்கள். “இது முன்னோரின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை” என்று அந்த இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர்.
26. அவர்கள் இதைவிட்டும் (மற்றவர்களைத்) தடுத்து, தாமும் விலகிக் கொள்கின்றனர். அவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றனர். (இதை) அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
27. நரகத்தின் முன்பு அவர்கள் நிறுத்தப்படும்போது நீர் பார்த்தால், “நாங்கள் (உலகிற்குத்) திருப்பி அனுப்பப்பட வேண்டுமே! எங்கள் இறைவனின் வசனங்களைப் பொய்யெனக் கூறாமல் இறைநம்பிக்கையாளர்களாக ஆவோமே!” என்று கூறுவார்கள்.
28. அவ்வாறல்ல! இதற்கு முன் அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தவை அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டன. அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டாலும் அவர்கள் எதைவிட்டுத் தடுக்கப்பட்டார்களோ அதை நோக்கியே மீண்டும் செல்வார்கள். அவர்கள் பொய்யர்களே!
29. “இது, நமது உலக வாழ்வைத் தவிர வேறில்லை. நாம் உயிர்ப்பித்து எழுப்பப்பட மாட்டோம்” என அவர்கள் கூறுகின்றனர்.
30. அவர்கள் தமது இறைவன் முன்பு நிறுத்தப்படும்போது நீர் பார்த்தால், “இது உண்மையல்லவா?” என்று அவன் கேட்பான். அதற்கு அவர்கள், “ஆம்! எங்கள் இறைவன்மீது சத்தியமாக!” என்று கூறுவார்கள். “நீங்கள் (இதை) மறுத்துக் கொண்டிருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்!” என்று அவன் கூறுவான்.
31. அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யெனக் கூறியவர்கள் நஷ்டமடைந்து விட்டனர். உலகம் அழியும் நேரம் திடீரென அவர்களிடம் வரும்போது, அவர்கள் தமது பாவச் சுமைகளைத் தம் முதுகுகளில் சுமந்தவர்களாக “அ(வ்வுலகத்)தில் அலட்சியமாக இருந்ததால் எங்களுக்கு ஏற்பட்ட துயரமே!” என்று கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் எதைச் சுமக்கிறார்களோ அது மிகக் கெட்டது.
32. இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணும் அன்றி வேறில்லை. இறையச்சமுடையோருக்கு மறுமை வீடே மிகச் சிறந்தது. சிந்திக்க மாட்டீர்களா?
33. (நபியே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை. மாறாக, இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.
34. உமக்கு முன்பிருந்த தூதர்களும் பொய்யரெனக் கூறப்பட்டனர். நமது உதவி அவர்களுக்கு வரும்வரை, தாம் பொய்யரெனக் கூறப்பட்டதையும் துன்புறுத்தப்பட்டதையும் பொறுத்துக் கொண்டனர். அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவர் எவருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உம்மிடம் வந்தே இருக்கின்றது.
35. அவர்களுடைய புறக்கணிப்பு உமக்குப் பெரிதாகத் தோன்றினால், உமக்குச் சக்தியிருந்தால் பூமியில் சுரங்கத்தையோ அல்லது வானில் (ஏறும்) ஏணியையோ தேடி, அவர்களிடம் ஒரு சான்றைக் கொண்டு வருவீராக! அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை நேர்வழியில் ஒன்றிணைத்திருப்பான். எனவே, நீர் அறிவீனர்களுள் ஒருவராக ஆகிவிடவேண்டாம்.
36. யார் செவியேற்கிறார்களோ அவர்களே பதிலளிப்பார்கள். அல்லாஹ், இறந்தோரை உயிர்ப்பித்து எழுப்புவான். பின்னர் அவனிடமே அவர்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவார்கள்.
37. “அவருடைய இறைவனிடமிருந்து அவருக்கு ஓர் அற்புதம் இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர். “அல்லாஹ்வே அற்புதத்தை இறக்குவற்கு ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்ள மாட்டார்கள்.
38. பூமியிலுள்ள எந்த உயிரினமும், தமது இறக்கைகளால் பறக்கும் எந்தப் பறவையும் உங்களைப் போன்ற சமுதாயங்களே! அந்தப் பதிவேட்டில் எதையும் நாம் விட்டுவிடவில்லை. பின்னர் அவர்கள் தமது இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படுவார்கள்.
39. நமது வசனங்களைப் பொய்யெனக் கூறுவோர், இருள்களிலுள்ள செவிடர்களும் ஊமைகளும் ஆவர். யாரை அல்லாஹ் நாடுகிறானோ அவரை வழிகேட்டில் விட்டு விடுகிறான்; யாரை அவன் நாடுகிறானோ அவரை நேரான வழியில் செலுத்துகிறான்.
40. “அல்லாஹ்வின் வேதனை உங்களிடம் வந்தாலோ, அல்லது உலகம் அழியும் நேரம் உங்களிடம் வந்தாலோ அல்லாஹ் அல்லாதோரையா அழைப்பீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்பீராக!
41. மாறாக, நீங்கள் இணை வைத்தவற்றை மறந்துவிட்டு, அவனையே அழைப்பீர்கள். நீங்கள் எதற்காக அவனை அழைக்கிறீர்களோ அதை, அவன் நாடினால் நீக்கிவிடுவான்.
42. உமக்கு முன்னிருந்த சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம். மேலும் அ(ச்சமுதாயத்த)வர்கள் பணிவதற்காக வறுமையாலும் நோயாலும் அவர்களைப் பிடித்தோம்.
43. அவர்களிடம் நமது வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்கக் கூடாதா? மாறாக, அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை, அவர்களுக்கு ஷைத்தான் அலங்கரித்துக் காட்டினான்.
44. அவர்கள், தமக்கு அறிவுறுத்தப்பட்டதை மறந்தபோது எல்லாப் பொருட்களின் வாசல்களையும் அவர்களுக்குத் திறந்து விட்டோம். முடிவில், அவர்கள் தமக்கு வழங்கப்பட்டவற்றில் இன்புற்று இருந்தபோது திடீரென அவர்களைத் தண்டித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்து விடுகின்றனர்.
45. அநியாயம் செய்த கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர். அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
46. “அல்லாஹ் உங்கள் செவிப்புலனையும், பார்வைகளையும் பறித்து, உங்கள் உள்ளங்களில் முத்திரையிட்டு விட்டால், அவற்றை உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு யார் என்பதை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்பீராக! எவ்வாறு சான்றுகளை விவரிக்கிறோம் என்பதைக் கவனிப்பீராக! (இதன்) பின்னரும் அவர்கள் புறக்கணிக்கின்றனர்.
47. “அல்லாஹ்வின் வேதனை திடீரென்றோ அல்லது வெளிப்படையாகவோ உங்களிடம் வந்து விட்டால் அநியாயக்காரக் கூட்டத்தைத் தவிர (வேறெவரும்) அழிக்கப்படுவார்களா என்பதை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்பீராக!
48. தூதர்களை நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிப்போராகவுமே நாம் அனுப்புகின்றோம். யார் இறைநம்பிக்கை கொண்டு, தம்மைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
49. நமது வசனங்களைப் பொய்யெனக் கூறியோர், பாவம் செய்து கொண்டிருந்ததால் அவர்களை வேதனை பிடித்துக் கொள்ளும்.
50. (நபியே!) “என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருப்பதாக நான் உங்களிடம் கூற மாட்டேன். மறைவானதை நான் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர எதையும் நான் பின்பற்றுவதில்லை” என்று கூறுவீராக! “பார்வையற்றவனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!
51. தமது இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவதை அஞ்சுவோரை இதன் மூலம் எச்சரிப்பீராக! இதனால் அவர்கள் இறையச்சமுடையோர் ஆவார்கள். அவர்களுக்கு அவனைத் தவிர பொறுப்பாளனோ பரிந்துரையாளனோ இல்லை.
52. தமது இறைவனின் பொருத்தத்தை விரும்பி, காலையிலும் மாலையிலும் அவனைப் பிரார்த்திப்பவர்களை நீர் விரட்டி விடாதீர்! அவர்களை விசாரிப்பதில் உமக்கு எந்தப் பொறுப்புமில்லை. உம்மை விசாரிப்பதில் அவர்களுக்கு எந்தப் பொறுப்புமில்லை. அவர்களை நீர் விரட்டினால் அநியாயக்காரர்களுள் ஒருவராக ஆகி விடுவீர்.171
53. “நம்மிடையே (தாழ்ந்தோரான) இவர்கள்மீதா அல்லாஹ் அருள் புரிந்தான்?” என்று அவர்கள் கூறுவதற்காகவே அவர்களில் சிலரைக் கொண்டு சிலரை இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துவோரை அல்லாஹ் மிக அறிந்தவன் அல்லவா?
54. நமது வசனங்களை நம்பியோர் உம்மிடம் வந்தால் “உங்கள்மீது அமைதி உண்டாகட்டும்! உங்கள் இறைவன் கருணை புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். உங்களில் யாரேனும் அறியாமையால் தீமை செய்து, அதன் பிறகு பாவ மன்னிப்புக் கோரி, சீர்திருத்திக் கொண்டால் அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன்” என்று கூறுவீராக!
55. இவ்வாறும், குற்றவாளிகளின் பாதை தெளிவாவதற்காகவும் நாம் சான்றுகளை விவரிக்கிறோம்.
56. “அல்லாஹ்வையன்றி யாரை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ அவர்களை வணங்குவதை விட்டும் நான் தடுக்கப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக! “உங்களின் விருப்பங்களை நான் பின்பற்ற மாட்டேன். அவ்வாறு செய்தால் வழிதவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழியடைந்தவர்களுள் ஒருவனாகவும் இருக்க மாட்டேன்” என்றும் கூறுவீராக!
57. “நான் என் இறைவனிடமிருந்து பெற்ற தெளிவான சான்றின்மீது இருக்கிறேன். நீங்களோ அதைப் பொய்யெனக் கூறினீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகிறீர்களோ அது என்னிடம் இல்லை. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே தவிர வேறில்லை. அவன் உண்மையைக் கூறுகிறான். தீர்ப்பளிப்போரில் அவனே மிகச் சிறந்தவன்” என்று கூறுவீராக!
58. “நீங்கள் எதற்கு அவசரப்படுகிறீர்களோ அது என்னிடம் இருந்திருந்தால் எனக்கும் உங்களுக்குமிடையே காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அநியாயக்காரர்களை அல்லாஹ் மிக அறிந்தவன்” என்று கூறுவீராக!
59. மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அவற்றை அறிய முடியாது. அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிகிறான். அவன் அறியாமல் ஓர் இலைகூட உதிர்வதில்லை. பூமியின் இருள்களிலுள்ள விதையும், பசுமையானதும், உலர்ந்ததும் தெளிவான ஏட்டில் இல்லாமலில்லை.172
60. அவனே உங்களை இரவில் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதையும் அவன் அறிகிறான். குறிப்பிட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக அதில் உங்களை எழுப்புகிறான். பின்னர், நீங்கள் அவனிடமே திரும்பிச் செல்லவேண்டியுள்ளது. பிறகு, நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்.
61. அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன். உங்களுக்குப் பாதுகாவலர்களையும் அனுப்புகின்றான். முடிவில், உங்களில் ஒருவருக்கு மரணம் வரும்போது, நமது தூதர்கள் அவனைக் கைப்பற்றுகின்றனர். அவர்கள் (அதில்) சிறிதும் குறை வைக்கமாட்டார்கள்.
62. பின்னர், அவர்கள் தமது உண்மை அதிபதியான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவனுக்கே முழு அதிகாரமும் உரியது. அவன் கணக்கெடுப்பவர்களில் மிக விரைவானவன்.
63. “தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் உங்களைக் காப்பாற்றுபவன் யார்?” என்று கேட்பீராக! ‘இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றி விட்டால் நாங்கள் நன்றி செலுத்துவோராக இருப்போம்’ என்று பணிவாகவும், இரகசியமாகவும் அப்போது அவனிடமே பிரார்த்திக்கிறீர்கள்.
64. “அல்லாஹ்வே உங்களை இதிலிருந்தும், மற்ற எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுகிறான். (இதன்)பின்னரும் நீங்கள் இணை வைக்கிறீர்கள்” என்று கூறுவீராக!
65. “அவன் உங்களுக்கு மேலிருந்தோ, உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ உங்கள்மீது வேதனையை அனுப்புவதற்கும், உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலரின் கொடுமையை, வேறு சிலரை அனுபவிக்கச் செய்யவும் ஆற்றலுள்ளவன்” என்று கூறுவீராக! அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக எவ்வாறு வசனங்களை விவரிக்கிறோம் என்பதைக் கவனிப்பீராக!173
66. இது உண்மையாக இருந்தும், உமது சமுதாயத்தினர் இதைப் பொய்யெனக் கூறுகின்றனர். “நான் உங்களுக்குப் பொறுப்பாளனாக இல்லை” என்று கூறுவீராக!
67. ஒவ்வொரு விஷயத்திற்கும் (அது) நிறைவேறும் காலம் ஒன்று உண்டு. நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
68. நமது வசனங்களைப் பற்றி (விதண்டாவாதத்தில்) மூழ்குவோரை நீர் கண்டால், அவர்கள் அதை விட்டும் வேறு பேச்சில் மூழ்கும்வரை அவர்களைப் புறக்கணிப்பீராக! உம்மை ஷைத்தான் மறக்கச் செய்து விட்டால், நினைவு வந்த பின்னர் அந்த அநியாயக்காரக் கூட்டத்தாருடன் அமராதீர்!
69. அவர்களை விசாரிப்பதில் இறையச்சமுடையோருக்கு எந்தப் பொறுப்புமில்லை. எனினும் அவர்கள் இறையச்சமுடையோர் ஆவதற்காக அறிவுரை கூறுதல் உண்டு.
70. தமது மார்க்கத்தை விளையாட்டாகவும் வீணாகவும் எடுத்துக் கொண்டோரை விட்டு விடுவீராக! இவ்வுலக வாழ்வு அவர்களை ஏமாற்றி விட்டது. தான் செய்தவற்றுக்காக எவரும் அழிவுக்குள்ளாக்கப்படாமலிருக்க இதன் மூலம் அறிவுரை கூறுவீராக! அவனுக்கு அல்லாஹ்வையன்றி பொறுப்பாளனோ, பரிந்துரையாளனோ இல்லை. அவன் அனைத்தையும் ஈடாகக் கொடுத்தாலும் அது அவனிடமிருந்து ஏற்கப்பட மாட்டாது. இவர்களே தாங்கள் செய்தவற்றின் காரணமாக அழிவுக்குள்ளாக்கப்பட்டவர்கள். அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் அவர்களுக்குக் கொதிநீர் பானமும், துன்புறுத்தும் வேதனையும் உள்ளது.
71, 72. “அல்லாஹ்வை விட்டுவிட்டு எங்களுக்கு எந்த நன்மையும் தீமையும் செய்ய இயலாதவற்றையா நாங்கள் பிரார்த்திப்போம்? அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டிய பிறகு நாங்கள் வந்த வழியே திருப்பப்படுவோமா? ‘எங்களிடம் வந்துவிடு!’ என்று நேர்வழியின் பக்கம் அழைக்கும் நண்பர்கள் அவனுக்கு இருக்கும் நிலையில், யாரை ஷைத்தான்கள் வழிகெடுத்து பூமியில் தடுமாற விட்டு விட்டார்களோ அவனைப்போன்றா (ஆவோம்)” என்று கேட்பீராக! “அல்லாஹ் காட்டும் வழியே நேர்வழியாகும். அகிலங்களின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும், ‘தொழுகையை நிலைநிறுத்துங்கள், அவனையே அஞ்சுங்கள்’ என்றும் நாங்கள் பணிக்கப்பட்டுள்ளோம்” எனக் கூறுவீராக! இன்னும் அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
73. அவன் வானங்களையும், பூமியையும் நியாயமான காரணத்துடனே படைத்துள்ளான். அவன் “ஆகு!” என்று சொல்லும் நாளில் அது ஆகி விடும்…
…அவனது வார்த்தை உண்மையானது. ஸூர் ஊதப்படும் நாளில் அதிகாரம் அவனுக்கே உரியது. மறைவானதையும், வெளிப்படை யானதையும் அறிபவன். அவன் நுண்ணறிவாளன்; நன்கறிந்தவன்.174
74. இப்ராஹீம் தமது தந்தை ஆஸரிடம், “சிலைகளைக் கடவுள்களாக எடுத்துக் கொள்கிறீரா? உம்மையும், உமது கூட்டத்தாரையும் பகிரங்க வழிகேட்டிலேயே காண்கிறேன்” என்று கூறியதை நினைத்துப் பார்ப்பீராக!
75. இவ்வாறும், உறுதியான இறைநம்பிக்கை கொண்டவர்களில் ஒருவராக இப்ராஹீம் ஆவதற்காகவும் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியை அவருக்குக் காட்டினோம்.
76. அவரை இரவு சூழ்ந்தபோது நட்சத்திரத்தைக் கண்டு, “இதுதான் எனது இறைவன்” என்று கூறினார். அது மறைந்தபோது “மறையக்கூடியவற்றை நான் விரும்ப மாட்டேன்” என்றார்.
77. சந்திரன் உதயமாவதை அவர் கண்டபோது “இதுதான் எனது இறைவன்” என்று கூறினார். அது மறைந்தபோது, “எனது இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லை என்றால் நானும் வழிதவறிய கூட்டத்தில் ஒருவனாகி விடுவேன்” என்று கூறினார்.
78, 79. சூரியன் உதயமாவதை அவர் கண்டபோது “இதுதான் எனது இறைவன். இது மிகப் பெரியது” என்று கூறினார். அது மறைந்தபோது “என் சமுதாயமே! நீங்கள் இணையாக்குபவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டேன். வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவனை நோக்கி, சத்திய நெறியில் நின்றவனாக எனது முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை வைப்போரில் உள்ளவன் அல்ல” என்று கூறினார்.
80. அவரது சமுதாயத்தினர் அவருடன் வாதம் செய்தனர். “அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் வாதம் செய்கிறீர்கள்? அவனே எனக்கு நேர்வழி காட்டினான். நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் அஞ்ச மாட்டேன். எனது இறைவன் ஏதேனும் நாடினாலே தவிர (எந்தத் தீங்கும் ஏற்படாது.) எனது இறைவன் ஒவ்வொரு பொருளையும் ஞானத்தால் சூழ்ந்திருக்கிறான். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்.
81. “உங்களுக்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்காதவற்றை அவனுக்கு நீங்கள் இணையாக்க அஞ்சாதபோது, நீங்கள் இணையாக்குபவற்றுக்கு நான் எப்படி அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தோராக இருந்தால், இரு பிரிவினரில் அச்சமின்றி இருக்க அதிகத் தகுதியுடையோர் யார்?” (என்று கேட்டார்.)
82. இறைநம்பிக்கை கொண்டு, தனது இறைநம்பிக்கையுடன் (இணைவைத்தல் எனும்) அநியாயத்தைக் கலந்து விடாமல் இருப்போருக்கே பாதுகாப்பு உண்டு. அவர்களே நேர்வழி அடைந்தவர்கள்.175
83. இது நமது ஆதாரமாகும். இப்ராஹீமின் சமுதாயத்திற்கு எதிராக அவருக்கு இதை வழங்கினோம். நாம் நாடியோருக்கு அந்தஸ்துகளை உயர்த்துகிறோம். உமது இறைவனே நுண்ணறிவாளன். நன்கறிந்தவன்.
84. இஸ்ஹாக்கையும் யஃகூபையும் அவருக்குப் பரிசாக அளித்தோம். அனைவரையும் நேர்வழியில் செலுத்தினோம். இதற்கு முன் நூஹுக்கும் அவரது வழித்தோன்றல்களில் தாவூத், சுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.176
85. ஸகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் ஆகியோரையும் (நேர்வழியில் செலுத்தினோம்.) அனைவரும் நல்லவர்கள்.
86. இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் ஆகியோரையும் (நேர்வழியில் செலுத்தினோம்.) அனைவரையும் அகிலத்தாரைவிட சிறப்பித்தோம்.
87. அவர்களின் முன்னோர், அவர்களின் வழித்தோன்றல்கள், அவர்களின் சகோதரர்கள் ஆகியோரிலிருந்தும் தேர்ந்தெடுத்தோம். அவர்களை நேரான பாதையில் செலுத்தினோம்.
88. இது அல்லாஹ்வின் நேர்வழியாகும். தனது அடியார்களில் அவன் நாடியோருக்கு இதன் மூலம் நேர்வழி காட்டுகிறான். அவர்கள் இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நற்)செயல்கள் அவர்களை விட்டு அழிந்திருக்கும்.
89. அவர்களுக்கே நாம் வேதத்தையும், ஞானத்தையும், தூதுத்துவத்தையும் வழங்கினோம். அவர்கள் இதனை மறுத்தால், இதனை மறுக்காத வேறொரு சமுதாயத்திடம் இதனை ஒப்படைப்போம்.
90. அவர்களையே அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான். எனவே அவர்களின் நேர்வழியைப் பின்பற்றுவீராக! “இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்க மாட்டேன். இது உலகத்தாருக்கு அறிவுரையே தவிர வேறில்லை” என்று (நபியே) கூறுவீராக!
91. அல்லாஹ்வை அவனது தகுதிக்குத் தக்கவாறு அவர்கள் மதிக்கவில்லை. ஏனெனில், “எந்த மனிதர்மீதும் அல்லாஹ் எதையும் அருளவில்லை” என்று அவர்கள் கூறுகின்றனர். “மனித குலத்துக்கு ஒளியாகவும் நேர்வழிகாட்டியாகவும் மூஸா கொண்டு வந்த வேதத்தை அருளியவன் யார்? அதை நீங்கள் பல ஏடுகளாக்கி, அவற்(றில் சிலவற்)றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைக்கிறீர்கள். நீங்களும் உங்கள் முன்னோரும் அறியாமல் இருந்தவை உங்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது” எனக் கூறுவீராக! “அல்லாஹ்தான் (அதை அருளினான்)” என்றும் கூறுவீராக! பின்னர் தமது வீணான விஷயங்களில் விளையாடிக் கொண்டிருக்குமாறு அவர்களை விட்டு விடுவீராக!
92. இது வேதம். ஊர்களின் தாயா(ன மக்காவில் வசிப்போ)ரையும், அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காக இதை நாம் அருளினோம். (இது) பாக்கியம் நிறைந்ததும், தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்துவதும் ஆகும். யார் மறுமையை நம்புகிறார்களோ அவர்களே இதனை நம்புகின்றனர். அவர்களே தமது தொழுகையைப் பேணுவார்கள்.
93. அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவன், தனக்கு எந்த இறைச்செய்தியும் அறிவிக்கப்படாத நிலையிலும், ‘எனக்கு இறைச்செய்தி அறிவிக்கப்பட்டது’ என்று கூறுபவன், ‘அல்லாஹ் இறக்கிய (வேதத்)தைப் போன்று நானும் இறக்குவேன்’ என்று கூறுபவன் ஆகியோரைவிட மிகப்பெரும் அநியாயக்காரன் யார்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனைகளில் இருக்கும்போது நீர் காண்பீராயின் “உங்கள் உயிர்களை வெளியேற்றுங்கள்! நீங்கள் அல்லாஹ்வின்மீது உண்மைக்குப் புறம்பானதைக் கூறுவோராக இருந்ததாலும், அவனது வசனங்களைப் புறக்கணித்துப் பெருமையடிப்போராக இருந்ததாலும் இன்றைய தினம் இழிவுமிக்க வேதனையால் தண்டிக்கப்படுகிறீர்கள்” என்று (கூறி) வானவர்கள் தமது கைகளை விரிப்பார்கள்.
94. “நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டுவிட்டு, உங்களைத் தொடக்கத்தில் நாம் படைத்ததைப் போன்று தனியாக நம்மிடம் வந்து விட்டீர்கள். உங்களில் இணைக் கடவுள்கள் என நீங்கள் எண்ணிக் கொண்டிருந்த உங்கள் பரிந்துரையாளர்களை உங்களுடன் நாம் காணவில்லையே! உங்களுக்கிடையில் (தொடர்பு) அறுந்து விட்டது. நீங்கள் நம்பிக் கொண்டிருந்தவை உங்களை விட்டும் மறைந்து விட்டன” (என அல்லாஹ் கூறுவான்.)177
95. (தானிய) வித்துக்களையும், (பழங்களின்) விதைகளையும் அல்லாஹ்வே பிளக்கச் செய்பவன்; உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துபவன். அவன்தான் அல்லாஹ். நீங்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?
96. அவன் வைகறைப் பொழுதை வெளிப்படுத்துபவன்; இரவை நிம்மதியளிப்பதாகவும், சூரிய, சந்திரனை காலக்கணக்காகவும் ஆக்கினான். இது மிகைத்தவனான நன்கறிந்தவனின் ஏற்பாடாகும்.
97. தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழியறிந்து கொள்வதற்காக அவனே நட்சத்திரங்களை உங்களுக்கு ஏற்படுத்தினான். அறிந்து கொள்ளும் சமுதாயத்திற்காகச் சான்றுகளை விவரித்துள்ளோம்.
98. அவனே உங்களை ஒரேயொரு மனிதரிலிருந்து உருவாக்கினான். (ஒவ்வொருவருக்கும்) தங்குமிடமும், ஒப்படைக்கப்படும் இடமும் உண்டு. விளங்கிக் கொள்ளும் சமுதாயத்திற்காகச் சான்றுகளை விவரித்துள்ளோம்.
99. அவனே வானிலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் அனைத்து வகையான தாவரங்களையும் வெளிப்படுத்தினோம். அதில் பசுமையானவற்றை முளைக்கச் செய்து, அவற்றிலிருந்து அடுக்கடுக்காக அமைந்த தானியங்களை வெளிப்படுத்துகிறோம். பேரீச்ச மரத்தின் பாளைகளில் தாழ்வாகத் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒத்ததாகவும் மாறுபட்டதாகவும் அமைந்த ஸைத்தூன் மற்றும் மாதுளையையும் (வெளிப்படுத்துகிறோம்.) அது பயனளிக்கும் சமயத்தில் அதன் பயனையும், அது கனிவதையும் கவனியுங்கள்! நம்புகின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
100. ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் நிலையில், அவற்றை அவனுக்கு இணைகளாக ஆக்கி விட்டனர். அறிவின்றி, அவனுக்கு மகன்களையும், மகள்களையும் கற்பனை செய்கின்றனர். அவன் தூயவன்; அவர்கள் வர்ணிப்பதை விட்டும் உயர்ந்தவன்.
101. அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவியே இல்லாதபோது எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
102. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனைத் தவிர வேறுஎந்தக் கடவுளுமில்லை; ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே, அவனையே வணங்குங்கள்! அவன் ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளன்.
103. பார்வைகள் அவனை அடையாது. அவனே பார்வைகளை அடைகிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.178
104. “உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் உங்களிடம் வந்து விட்டன. யார் சிந்திக்கிறாரோ அது அவருக்கே (நல்லது.) யார் குருடாகி விட்டாரோ அது அவருக்கே எதிரானது. நான் உங்களைப் பாதுகாப்பவன் அல்ல!” (என்று நபியே கூறுவீராக!)
105. (அவர்கள் சிந்திப்பதற்காக) இவ்வாறே சான்றுகளை விவரிக்கிறோம். “நீர் (பிறரிடம்) பாடம் படித்துள்ளீர்” என அவர்கள் கூறுவதாலும், அறிந்து கொள்ளும் சமுதாயத்திற்கு அதை நாம் தெளிவுபடுத்துவதற்காகவுமே (இதைச் செய்கிறோம்.)
106. (நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வேறுஎந்தக் கடவுளும் இல்லை. இணை வைப்பவர்களைப் புறக்கணித்து விடுவீராக!
107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்க மாட்டார்கள். உம்மை அவர்களின் பாதுகாவலராக நாம் ஆக்கவில்லை. நீர் அவர்களுக்குப் பொறுப்பாளரும் அல்ல!
108. அல்லாஹ்வையன்றி அவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்களைத் திட்டாதீர்கள்! இதனால் அவர்கள் அறிவின்றி, பகைமையால் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களின் செயலை அலங்கரித்துக் காட்டினோம். பின்னர் அவர்கள் தமது இறைவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்ததை அவர்களுக்கு அப்போது அவன் அறிவிப்பான்.
109. தங்களிடம் ஓர் அற்புதம் வந்தால் அதை நம்புவதாக அல்லாஹ்வின்மீது உறுதியிட்டுச் சத்தியம் செய்கின்றனர். “அற்புதங்கள் யாவும் அல்லாஹ்விடமே உள்ளன” என்று கூறுவீராக! அது நிகழ்ந்தாலும் அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவிக்கும்?
110. அவர்கள் முதலில் இ(வ்வேதத்)தை நம்பாததைப் போன்றே அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் புரட்டுவோம். தமது வரம்பு மீறலிலேயே தடுமாறும்படி அவர்களை விட்டு விடுவோம்.179
111. நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கி வைத்தாலும், இறந்தவர்கள் அவர்களுடன் பேசினாலும், அனைத்துப் பொருட்களையும் அவர்களின் கண்ணெதிரே நாம் ஒன்றுசேர்த்தாலும் அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
112. இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் மனிதர்கள் மற்றும் ஜின்களிலுள்ள ஷைத்தான்களை எதிரிகளாக ஆக்கியுள்ளோம். அவர்கள், ஒருவருக்கொருவர் ஏமாற்றுவதற்காக அலங்காரச் சொற்களைக் கூறுகின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்களையும், அவர்கள் கற்பனை செய்பவற்றையும் விட்டு விடுவீராக!180
113. மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் அதன் பக்கம் சாய்ந்து, அதைத் திருப்தி கொள்வதற்காகவும், அவர்கள் எதைச் செய்து கொண்டிருந்தார்களோ அதையே (தொடர்ந்து) செய்வதற்காகவும் (இவ்வாறு அறிவிக்கின்றனர்.)
114. “அல்லாஹ் இவ்வேதத்தைத் தெளிவுபடுத்தப்பட்டதாக உங்களுக்கு அருளியிருக்கும்போது அவனையன்றி மற்றவரை நீதிபதியாக எடுத்துக் கொள்வேனா?” (என்று நபியே கேட்பீராக!) நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இது உமது இறைவனிடமிருந்து உண்மையுடன் அருளப்பட்டதுதான் என்பதை அறிகின்றனர். எனவே சந்தேகிப்போரில் ஒருவராக ஆகி விடாதீர்!
115. உமது இறைவனின் வாக்கு உண்மையாலும், நீதியாலும் முழுமையாகி விட்டது. அவனது வார்த்தைகளை மாற்றுபவர் எவருமில்லை. அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
116. பூமியில் இருப்பவர்களில் பெரும்பான்மையினருக்கு நீர் கட்டுப்பட்டால் அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தைத் தவிர எதையும் பின்பற்றவில்லை. அவர்கள் கற்பனை செய்வோர் தவிர வேறில்லை.
117. உமது இறைவன், தனது வழியை விட்டும் தவறியவர் யார் என்பதை மிக அறிந்தவன். அவன் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன்.
118. அவனது வசனங்களை நீங்கள் நம்பக்கூடியவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றையே உண்ணுங்கள்!
119. அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? எதில் நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டீர்களோ அதைத் தவிர, அவன் உங்களுக்குத் தடுத்தவற்றை விவரித்துக் கூறியுள்ளான். அதிகமானோர் அறிவின்றி, தமது சுய விருப்பத்தினால் (மக்களை) வழிகெடுக்கின்றனர். உமது இறைவன் வரம்பு மீறியவர்களை மிக அறிந்தவன்.
120. பாவத்தில் பகிரங்கமானதையும், அந்தரங்கமானதையும் விட்டு விடுங்கள்! யார் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் சம்பாதித்து வந்ததற்காகக் கூலி கொடுக்கப்படுவார்கள்.181
121. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது பாவம். உங்களுடன் வாக்குவாதம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்களும் இணை வைப்பவர்கள்தான்.182
122. இறந்துவிட்ட ஒருவனை நாம் உயிர்ப்பித்து, அவனுக்கு ஒளியையும் ஏற்படுத்தி, அதன் மூலம் மக்களுக்கிடையில் அவன் நடமாடுகிறான். அவனும், இருள்களில் சிக்கி அதிலிருந்து வெளியேற இயலாத மற்றொருவனும் சமமாவார்களா? இவ்வாறே இறைமறுப்பாளர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை அலங்காரமாகக் காட்டப்பட்டுள்ளன.
123. இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் அதிலுள்ள குற்றவாளிகளில் பெரும்புள்ளிகளை அங்குச் சதி செய்வதற்காக ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் தங்களுக்கே சதி செய்து கொள்கிறார்கள். ஆனால் (இதனை) அவர்கள் உணர மாட்டார்கள்.
124. அவர்களிடம் ஏதேனும் ஒரு வசனம் வந்தால், “அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டதுபோல் எங்களுக்கும் கொடுக்கப்படும் வரை (அதனை) நாங்கள் நம்பவே மாட்டோம்” எனக் கூறுகின்றனர். தனது தூதுத்துவத்தை எங்கு வைக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வே மிக அறிந்தவன். குற்றவாளிகளுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த சூழ்ச்சியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கடும் வேதனையும் வந்தடையும்.
125. யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட நாடுகிறானோ அவரது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகிறான். யாரை அவன் வழிகேட்டில் விட்டுவிட நாடுகிறானோ அவரது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவரைப் போன்று இறுக்கமாகவும் நெருக்கடியாகவும் ஆக்குகிறான். இவ்வாறே அல்லாஹ், இறைநம்பிக்கை கொள்ளாதவர்கள்மீது வேதனையை ஏற்படுத்துகிறான்.
126. இதுவே உமது இறைவனின் நேரான வழியாகும். சிந்திக்கும் சமுதாயத்திற்கு நமது வசனங்களை விவரித்துள்ளோம்.
127. அவர்களுக்குத் தமது இறைவனிடம் நிம்மதியளிக்கும் இல்லம் உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவனே அவர்களின் பாதுகாவலனாக இருக்கிறான்.
128. அவர்கள் அனைவரையும் அவன் ஒன்றுதிரட்டும் நாளில் “ஜின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களை (வழிகெடுத்து) அதிகப்படுத்திக் கொண்டீர்கள்” (என்று இறைவன் கூறுவான்.) மனித இனத்திலுள்ள அவர்களின் நண்பர்கள், “எங்கள் இறைவனே! எங்களில் சிலர், சிலரைக் கொண்டு பயனடைந்தனர். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையை அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள். “நரகமே உங்கள் தங்குமிடமாகும். அல்லாஹ் நாடியதைத் தவிர அதில் நிரந்தரமாக இருப்பார்கள்” என்று அவன் கூறுவான். உமது இறைவன் நுண்ணறிவாளன்; நன்கறிந்தவன்.
129. இவ்வாறே, அநியாயக்காரர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களில் ஒருவரை மற்றவருடன் சேர்த்து விடுவோம்.
130. “ஜின், மனிதக் கூட்டத்தாரே! எனது வசனங்களை உங்களுக்கு எடுத்துரைக்கும் தூதர்கள் உங்களிடமிருந்தே உங்களுக்கு வரவில்லையா? உங்களுடைய இந்த நாளின் சந்திப்பைப் பற்றி அவர்கள் உங்களை எச்சரிக்கவில்லையா?” (என்று இறைவன் கேட்பான்.) அதற்கு “எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றி விட்டது. தாங்கள் இறைமறுப்பாளர்களாக இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே சாட்சியளிப்பார்கள்.
131. இ(வ்வாறு தூதர்களை அனுப்புவ)தற்குக் காரணம், ஓர் ஊரார் விபரமற்றோராக இருக்கும் நிலையில் அவர்களை உமது இறைவன் அநியாயமாக அழிக்க மாட்டான் என்பதுதான்.
132. ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்குத் தக்க படித்தரங்கள் உண்டு. அவர்கள் செய்வதைப் பற்றி உமது இறைவன் கவனமற்றவனாக இல்லை.
133. உமது இறைவன் தேவைகளற்றவன்; அருளுடையவன். மற்றொரு சமுதாயத்தின் தலைமுறையிலிருந்து உங்களை உருவாக்கியது போன்றே, அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு, உங்களுக்குப் பின்னர் தான் நாடியோரை உங்களுக்கு மாற்றாக்கி விடுவான்.
134. உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்தே தீரும். நீங்கள் தப்பிப்போர் அல்ல!
135. “எனது சமுதாயமே! உங்கள் நிலைப்பாட்டின்படி நீங்கள் செயல்படுங்கள்! நானும் செயல்படுகிறேன். மறுமையின் முடிவு யாருக்குச் சாதகமாக அமையும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறுவீராக!
136. அல்லாஹ் உற்பத்தி செய்த விளைச்சல் மற்றும் கால்நடைகளில் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்தி, “இது அல்லாஹ்வுக்குரியது” என்றும், “இது எங்களுடைய இணைக்கடவுள்களுக்குரியது” என்றும் தமது நம்பிக்கையின்படி கூறுகின்றனர். அவர்களின் இணைக் கடவுள்களுக்குரியது அல்லாஹ்வுக்குச் சேராது; அல்லாஹ்வுக்குரியது அவர்களின் கடவுள்களுக்குச் சேரும். (இவ்வாறு) அவர்கள் தீர்ப்பளிப்பது மிகக் கெட்டது.
137. இணை வைப்போரில் அதிகமானோருக்கு, அவர்களை அழிப்பதற்காகவும், அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்குக் குழப்புவதற்காகவும் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களுடைய இணைக்கடவுள்கள் இவ்வாறே அழகாக்கிக் காட்டி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்களையும், அவர்கள் புனைந்து கூறுவதையும் விட்டு விடுவீராக!
138. “இவை தடுக்கப்பட்ட கால்நடைகளும் விளைச்சலுமாகும். நாம் நாடியோரைத் தவிர (மற்றவர்கள்) அவற்றை உண்ணக்கூடாது” என்று தமது நம்பிக்கையின்படி கூறுகின்றனர். சில கால்நடைகளை வாகனமாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்றும், சில கால்நடைகளின்மீது (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறக்கூடாது என்றும் அவன்மீது புனைந்து கூறுகின்றனர். அவர்கள் புனைந்து கூறிக் கொண்டிருந்ததற்காக அவர்களுக்குக் கூலி கொடுப்பான்.
139. “இந்தக் கால்நடைகளின் வயிறுகளில் உள்ளவை நம்மில் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானவை. நம்மில் பெண்களுக்குத் தடுக்கப்பட்டவை. ஆனால் அவை செத்துப் பிறந்தால் அவர்கள் (இரு பாலரும்) அதில் கூட்டாளிகள்” என்றும் கூறுகின்றனர். அவர்களின் இந்தக் கூற்றுக்காக அவர்களுக்கு அவன் கூலி கொடுப்பான். அவன் நுண்ணறிவாளன்; நன்கறிந்தவன்.
140. அறிவின்றி, மூடத்தனத்தால் தமது குழந்தைகளைக் கொலை செய்தவர்களும், தமக்கு அல்லாஹ் வழங்கியதை அல்லாஹ்வின்மீது பொய் கூறித் தடை செய்து கொண்டவர்களும் நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் வழிகெட்டு விட்டனர்; நேர்வழி பெற்றவர்களாகவும் இல்லை.
141. படர விடப்பட்டவையும், படர விடப்படாதவையும் கொண்ட சோலைகளையும், பேரீச்ச மரங்களையும், பலவகை உணவுகளைக் கொண்ட விளைச்சலையும், ஒத்ததாகவும் மாறுபட்டதாகவும் அமைந்த ஸைத்தூன் மற்றும் மாதுளையையும் அவனே படைத்தான். அவை பயனளிக்கும்போது அதன் பயனிலிருந்து உண்ணுங்கள்! அதன் அறுவடை நாளில் அதற்கான கடமையைக் கொடுத்துவிடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிப்பதில்லை.183
142. கால்நடைகளில் சுமப்பவற்றையும், சுமக்க இயலாத சிறியவற்றையும் (அவனே படைத்தான்.) அல்லாஹ் உங்களுக்கு அளித்ததை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.
143. (ஆடு, மாடு, ஒட்டகத்தில்) எட்டு வகைகள் உள்ளன. (ஆண், பெண் என) செம்மறியாட்டில் இரண்டும், வெள்ளாட்டில் இரண்டும் உள்ளன. “அவன் அவ்விரு வகையில் ஆண் பிராணிகளைத் தடை செய்துள்ளானா? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவறைகளில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவைக் கொண்டு எனக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்பீராக!
144. (ஆண், பெண் என) ஒட்டகத்தில் இரண்டும், மாட்டில் இரண்டும் உள்ளன. “அவன் அவ்விரு வகையில் ஆண் பிராணிகளைத் தடை செய்துள்ளானா? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவறைகளில் உள்ளவற்றையா? அல்லது அல்லாஹ் இப்படி ஆணையிடும்போது நீங்கள் உடன் இருந்தீர்களா?” என்று கேட்பீராக! அறிவின்றி மக்களை வழிகெடுப்பதற்காக அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுவோரைவிடப் பெரும் அநியாயர்காரர்கள் யார்? அநியாயக்காரக் கூட்டத்தாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
145. “தாமாகச் செத்தவையும், ஓட்டப்பட்ட இரத்தமும், பன்றியின் இறைச்சி அசுத்தமாக இருப்பதால் அதுவும், அல்லாஹ் அல்லாதோரின் பெயர் கூறி அறுக்கப்பட்டது பாவமாக இருப்பதால் அதையும் தவிர வேறெதுவும் உண்பவருக்கு உண்ணத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட இறைச்செய்தியில் நான் காணவில்லை” என்று கூறுவீராக! எனினும் விரும்பிச் செல்லாதவராகவும் வரம்பு மீறாதவராகவும் யாரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
146. (பிளவில்லாத விரலமைப்பையுடைய) நகமுடைய பிராணிகள் அனைத்தையும் யூதர்களுக்குத் தடை செய்தோம். ஆடு, மாடுகளின் கொழுப்புகளைத் தடை செய்தோம். அவற்றின் முதுகுகளிலும் சிறுகுடல்களிலும் ஒட்டிக் கொண்டிருப்பவை அல்லது எலும்புடன் கலந்திருப்பவை தவிர! அவர்களின் அநியாயத்திற்காக இதனை அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தோம். நாம் உண்மை கூறுவோரே!184
147. உம்மை அவர்கள் பொய்யரெனக் கூறினால் “உங்களுடைய இறைவன் விசாலமான அருளுடையவன். (எனினும்) குற்றம் புரியும் கூட்டத்தாரை விட்டும் அவனது தண்டனை திருப்பப்படாது” என்று கூறுவீராக!
148.“அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் முன்னோரும் இணைவைத்திருக்க மாட்டோம். எந்த ஒன்றையும் நாங்கள் தடை செய்திருக்கவும் மாட்டோம்” என இணை வைப்போர் கூறுவார்கள். இவர்களுக்கு முன்சென்றோரும் நமது வேதனையை சுவைக்கும் வரை இவ்வாறே பொய்யெனக் கூறினார்கள். “உங்களிடம் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? இருந்தால் அதை எங்களுக்கு வெளிப்படுத்துங்கள்! நீங்கள் வெறும் ஊகத்தையே பின்பற்றுகின்றீர்கள். நீங்கள் கற்பனை செய்வோர் தவிர வேறில்லை” என்று கூறுவீராக!
149. “நிறைவான ஆதாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் நேர்வழியில் செலுத்தியிருப்பான்” என்று கூறுவீராக!
150. “அல்லாஹ்தான் இதைத் தடை செய்தான் என்று சாட்சி கூறும் உங்கள் சாட்சியாளர்களை அழைத்து வாருங்கள்!” என்று கூறுவீராக! அவர்கள் (பொய்) சாட்சி கூறினாலும் நீர் அவர்களுடன் சேர்ந்து சாட்சி கூறாதீர்! நமது வசனங்களைப் பொய்யெனக் கூறியோர் மற்றும் மறுமையை நம்பாதோரின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்! அவர்கள் தமது இறைவனுக்கு (படைப்பினங்களை) நிகராக்குகின்றனர்.
151. “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்கு எவற்றைத் தடுத்துள்ளான் என்பதை எடுத்துரைக்கிறேன்” என்று (நபியே!) கூறுவீராக! அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்! பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்! (அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்!) வறுமையின் காரணமாக உங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யாதீர்கள்! நாமே உங்களுக்கும், அவர்களுக்கும் உணவளிக்கிறோம். மானக்கேடானவற்றில் வெளிப்படையானதையும், மறைமுகமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் புனிதமாக்கிய எந்த உயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதனை உங்களுக்கு ஆணையிடுகிறான்.185
152. அநாதைகள் பருவமடையும் வரை அவர்களின் செல்வத்தை நியாயமான முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! அளவையும் நிறுவையையும் நீதத்துடன் நிறைவேற்றுங்கள்! எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர சிரமப்படுத்த மாட்டோம். நெருங்கிய உறவினராக இருந்தாலும் பேசினால் நீதியைப் பேசுங்கள்! அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்! நீங்கள் சிந்திப்பதற்காக அவன் இதனை உங்களுக்கு ஆணையிடுகிறான்.
153. இதுவே எனது நேரான வழியாகும். எனவே இதனைப் பின்பற்றுங்கள்! (வேறு) வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அது அவனது வழியை விட்டும் உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சமுடையோர் ஆவதற்காக அவன் இதனை உங்களுக்கு ஆணையிடுகிறான்.186
154. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அது, நன்மை செய்பவருக்கு நிறைவானதாகவும், ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துவதாகவும், நேர்வழி காட்டியாகவும், அருளாகவும் இருந்தது. இதன் மூலம் அவர்கள் தமது இறைவனின் சந்திப்பை நம்புவோராகலாம்.
155. இது பாக்கியம் நிறைந்த வேதம். இதை நாம் அருளினோம். எனவே இதைப் பின்பற்றுங்கள். நீங்கள் அருள் செய்யப்படுதவற்காக (என்னை) அஞ்சுங்கள்!
156, 157. “எங்களுக்கு முன்சென்ற (யூத, கிறித்தவர்களாகிய) இரு சாராருக்கே வேதம் அருளப்பட்டது. நாங்கள் அவர்களிடம் கற்பதை விட்டும் கவனமற்றோராக இருந்தோம்” என்று நீங்கள் கூறாதிருப்பதற்காக, அல்லது “எங்களுக்கு வேதம் அருளப்பட்டிருந்தால் நாங்கள் அவர்களைவிட நேர்வழி பெற்றவர்களாக ஆகியிருப்போம்” என்று கூறாதிருப்பதற்காக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான ஆதாரமும் நேர்வழியும் அருளும் வந்து விட்டது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கூறி, அவற்றைப் புறக்கணித்தவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? நமது வசனங்களைப் புறக்கணித்தோருக்கு, அவர்கள் புறக்கணித்துக் கொண்டிருந்ததால் கடும் வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.
158. வானவர்கள் அவர்களிடம் வருவதையோ, அல்லது உமது இறைவன் வருவதையோ, அல்லது உமது இறைவனின் சில அடையாளங்கள் வருவதையோ தவிர (வேறெதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? உமது இறைவனின் சில அடையாளங்கள் வரும் நாளில், அதற்கு முன்பே இறைநம்பிக்கை கொள்ளாமல் இருந்தவருக்கும், அல்லது தனது இறைநம்பிக்கையுடன் எந்த நன்மையும் செய்யாமல் இருந்தவருக்கும் அவரது இறைநம்பிக்கை பயனளிக்காது. “நீங்கள் எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்க்கிறோம்” என்று கூறுவீராக!187
159. யார் தமது மார்க்கத்தைப் பிரித்துப் பல பிரிவினராகி விட்டனரோ அவர்களின் எந்த விஷயத்திலும் உமக்குத் தொடர்பில்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே இருக்கிறது. பின்னர், அவர்கள் செய்து கொண்டிருந்ததை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
160. யார் நன்மை செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு (கூலி) உண்டு. யார் தீமை செய்கிறாரோ அவர் அதுபோலவே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டார். அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.188
161. “எனது இறைவன் என்னை நேரான வழியில் செலுத்தியுள்ளான். (அது) நிலையான மார்க்கம். சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை” என்று கூறுவீராக!
162, 163. “எனது தொழுகையும், எனது வழிபாடுகளும், எனது வாழ்வும், எனது மரணமும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவை. அவனுக்கு இணையாக யாருமில்லை. இவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டோரில் நான் முதன்மையானவன்” என்று கூறுவீராக!
164. “அல்லாஹ்வையன்றி மற்றவரை இறைவனாக எடுத்துக் கொள்வேனா? அவனே அனைத்துப் பொருட்களுக்கும் இறைவன். ஒவ்வொருவரும் தனக்கு எதிராகவே தவிர (பாவத்தைச்) சம்பாதிப்பதில்லை. ஒருவர், பிறரது சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. நீங்கள் எதில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதை உங்களுக்கு அறிவிப்பான்” எனக் கூறுவீராக!
165. அவனே உங்களைப் பூமியில் தலைமுறைகளாக ஆக்கினான். அவன் உங்களுக்கு வழங்கியதில் உங்களைச் சோதிப்பதற்காக உங்களில் சிலரை, வேறு சிலரைவிடப் பதவிகளில் உயர்வாக்கினான். உமது இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவனே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.