அல்அலக் – சூல்கொண்ட கருமுட்டை

அத்தியாயம் : 96

வசனங்களின் எண்ணிக்கை: 19

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!648
2. சூல்கொண்ட கருமுட்டையிலிருந்து அவன் மனிதனைப் படைத்தான்.
3. ஓதுவீராக! உமது இறைவன் மிகவும் கண்ணியமிக்கவன்.
4. அவனே எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.
5. மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்றுக்கொடுத்தான்.
6, 7. ஆனால் மனிதனோ தன்னைத் தன்னிறைவு பெற்றவனாகக் கருதி வரம்பு மீறுகிறான்.
8. உமது இறைவனிடமே மீளுதல் உள்ளது.
9, 10. (நமது) அடியார் தொழும்போது தடுப்பவனை நீர் பார்த்தீரா?
11, 12. நீர் கவனித்தீரா? அவர் நேர்வழியில் இருந்தாலுமா? அல்லது இறையச்சத்தை ஏவுபவராக இருந்தாலுமா?
13, 14. நீர் கவனித்தீரா? அவன் பொய்யெனக் கூறிப் புறக்கணித்தால், அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
15. அவ்வாறில்லை! அவன் விலகிக் கொள்ளாவிட்டால் முன்நெற்றியைப் பிடித்திழுப்போம்.
16. அது தவறிழைத்துப் பொய்யுரைக்கும் முன்நெற்றியாகும்.
17. அவன் தன் அவையோரை அழைக்கட்டும்!649
18. நாம் நரகத்தின் காவலர்களை அழைப்போம்.
19. உறுதியாக, அவனுக்கு நீர் கட்டுப்படாதீர்! (இறைவனுக்கு) ஸஜ்தா செய்து, நெருங்குவீராக!650