அத்தியாயம் : 7 அல்அஃராஃப் – சிகரங்கள்

அத்தியாயம் : 7

வசனங்களின் எண்ணிக்கை: 206

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அலிஃப், லாம், மீம், ஸாத்.
2. (நபியே!) இது உமக்கு அருளப்பட்ட வேதம். எனவே இதுபற்றி உமது உள்ளத்தில் எவ்வித நெருக்கடியும் ஏற்பட வேண்டாம். இதன் மூலம் நீர் எச்சரிப்பதற்காகவும், இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரையாகவுமே (அருளப்பட்டது)
3. உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
4. எத்தனையோ ஊர்களை நாம் அழித்துள்ளோம். இரவிலோ அல்லது அவர்கள் முற்பகல் உறக்கத்தில் இருக்கும்போதோ நமது தண்டனை அவற்றை வந்தடைந்தது.
5. நமது தண்டனை அவர்களிடம் வந்தபோது “நாங்கள் அநியாயக்காரர்களாகி விட்டோம்” என்று கூறியதே அவர்களின் கூக்குரலாக இருந்தது.
6. (நமது) தூதர்கள் யாரிடம் அனுப்பப்பட்டார்களோ அவர்களையும் விசாரணை செய்வோம். அத்தூதர்களையும் விசாரணை செய்வோம்.
7. அறிவுடன் அவர்களுக்கு விளக்குவோம். நாம் கண்காணிக்காதவர்களாக இல்லை.
8. அந்நாளில் (நன்மை, தீமைகளை) எடை போடுதல் உண்மையாகும். யாருக்கு அவரது (நன்மையின்) எடைகள் கனத்து விட்டதோ அவர்களே வெற்றியாளர்கள்.
9. யாருக்கு அவரது (நன்மையின்) எடைகள் இலேசாகி விட்டதோ, அவர்களே நமது வசனங்களில் அநியாயம் செய்ததால் தமக்குத் தாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.
10. பூமியில் உங்களை வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தினோம். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
11. நாமே உங்களைப் படைத்து, பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் “ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களிடம் கூறினோம். இப்லீஸைத் தவிர மற்றவர்கள் பணிந்தனர். பணிந்தவர்களில் ஒருவனாக அவன் இருக்கவில்லை.
12. “உனக்கு நான் ஏவியபோது நீ பணியாமலிருக்கும்படி உன்னைத் தடுத்தது எது?” என்று (இறைவன்) கேட்டான். “நான் அவரைவிட மேலானவன். என்னை நெருப்பால் படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.
13. “நீ இங்கிருந்து இறங்கி விடு! இங்கு நீ பெருமையடிப்பது உனக்குத் தகுதியானதல்ல! எனவே வெளியேறி விடு! நீ சிறுமையடைந்தோரில் உள்ளவன்” என்று (இறைவன்) கூறினான்.
14. “அவர்கள் உயிர்ப்பித்து எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக” என்று (இப்லீஸ்) கேட்டான்.
15. “நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் உள்ளவன்” என (இறைவன்) கூறினான்.
16, 17. “நீ என்னை வழிகேட்டில் விட்டுவிட்டதால், அவர்களுக்காக உனது நேரான வழியில் உட்கார்ந்து கொள்வேன். பின்னர் அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும், வலப்புறங்களிலும், இடப்புறங்களிலும் (வழிகெடுப்பதற்காக) அவர்களிடம் வருவேன். அவர்களில் பெரும்பாலானவர்களை நன்றி செலுத்துவோராகக் காண மாட்டாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.
18. “இகழப்பட்டவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் நீ இங்கிருந்து வெளியேறி விடு! அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், (அவர்களுடன்) உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்” என்று (இறைவன்) கூறினான்.
19. “ஆதமே! நீரும், உமது மனைவியும் சொர்க்கத்தில் வசியுங்கள். நீங்கள் இருவரும் விரும்பியவாறு உண்ணுங்கள். இம்மரத்தை நெருங்காதீர்கள். (மீறினால்) நீங்கள் அநியாயக்காரர்களுள் ஆகி விடுவீர்கள்” (என்றும் கூறினான்.)
20. அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்கு வெளிப்படையாக்குவதற்காக அவர்களிடம் கெட்ட எண்ணத்தை ஷைத்தான் ஏற்படுத்தினான். “நீங்கள் இருவரும் வானவர்களாகி விடுவீர்கள்; அல்லது நிரந்தரமானவர்களில் ஆகி விடுவீர்கள் என்பதற்காகவே இம்மரத்தை விட்டும் உங்கள் இறைவன் உங்களைத் தடுத்திருக்கிறான்” என்று கூறினான்.
21. “நான் உங்களுக்கு நலம் நாடுவோரில் உள்ளவனே!” என அவ்விருவரிடமும் (ஷைத்தான்) சத்தியம் செய்தான்.
22. அவன் அவ்விருவரையும் வஞ்சகத்தால் வீழ்த்தினான். அவர்கள் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைத்தபோது தமது வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்தன. சொர்க்கத்தின் இலைகளால் தங்களை மூடிக் கொள்ளலானார்கள். “உங்கள் இருவரையும் இம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? மேலும் ‘ஷைத்தான் உங்களுக்குப் பகிரங்க எதிரி’ என்று நான் உங்களிடம் கூறவில்லையா?” என அவர்களின் இறைவன் அவ்விருவரையும் அழைத்துக் கேட்டான்.
23. “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அநியாயம் செய்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியாவிட்டால் நாங்கள் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவோம்” என இருவரும் கூறினர்.
24. “நீங்கள் இறங்கி விடுங்கள். உங்களில் சிலர், சிலருக்குப் பகைவராவீர்கள். உங்களுக்குப் பூமியில் தங்குமிடமும், குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கை வசதியும் உண்டு” என (இறைவன்) கூறினான்.
25. “அங்குதான் வாழ்வீர்கள்; அங்குதான் மரணமடைவீர்கள்; அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.
26. ஆதமுடைய மக்களே! உங்களுடைய வெட்கத்தலங்களை மறைக்கின்ற ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்காக அருளினோம். இறையச்சம் எனும் ஆடையே சிறந்தது. இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. இதனால் அவர்கள் படிப்பினை பெறுவார்கள்.189
27. ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் ஷைத்தான் உங்களைச் சோதனைக்குள்ளாக்கிவிட வேண்டாம். அவ்விருவரின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவர்களின் ஆடைகளை அவர்களிடமிருந்து அகற்றினான். அவனும் அவனது இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாத விதத்தில் உங்களைப் பார்க்கின்றனர். இறைநம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை நேசர்களாக ஆக்கியுள்ளோம்.
28. அவர்கள் ஏதேனும் மானக்கேடான காரியத்தைச் செய்தால், “எங்கள் முன்னோரை இவ்வாறே நாங்கள் கண்டோம். அல்லாஹ்வும் எங்களுக்கு இதை ஏவினான்” எனக் கூறுகின்றனர். “மானக்கேடானவற்றை(ச் செய்யுமாறு) அல்லாஹ் ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின்மீது புனைந்து கூறுகிறீர்களா?” என்று கேட்பீராக!
29. “எனது இறைவன் நீதியை(க் கடைப்பிடிக்குமாறு) ஆணையிட்டுள்ளான். ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் முகங்களை நேர்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உரித்தாக்கியவர்களாக அவனிடம் பிரார்த்தியுங்கள்! உங்களை (தொடக்கத்தில்) அவன் படைத்தது போன்றே (அவனிடம்) மீள்வீர்கள்” என்று கூறுவீராக!
30. ஒரு பிரிவினருக்கு நேர்வழி காட்டினான். மற்றொரு பிரிவினர்மீது வழிகேடு உறுதியாகி விட்டது. (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வை விடுத்து, ஷைத்தான்களைப் பொறுப்பாளர்களாக எடுத்துக் கொண்டனர். தாங்களே நேர்வழி பெற்றோர் எனவும் நினைக்கிறனர்.190
31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்!191 உண்ணுங்கள்! பருகுங்கள்! விரயம் செய்யாதீர்கள்! விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.192
32. “தன் அடியார்களுக்காக அல்லாஹ் அளித்த அலங்காரத்தையும் தூய உணவுகளையும் தடுப்பவன் யார்?” என்று கேட்பீராக! “இறைநம்பிக்கை கொண்டோருக்கு இவ்வுலக வாழ்வில் அவை உள்ளன. மறுமை நாளில் அது (அவர்களுக்கு மட்டுமே) தனித்துவமானது” என்று கூறுவீராக! அறியக்கூடிய சமுதாயத்திற்காக இவ்வாறே சான்றுகளை விவரிக்கிறோம்.
33. “மானக்கேடானவற்றில் வெளிப்படையானதையும், மறை முகமானதையும், பாவம் செய்வதையும், அநியாயமாக வரம்பு மீறுவதையும், எதுகுறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் இறக்கவில்லையோ அதை அவனுக்கு இணையாக்குவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின்மீது புனைந்து கூறுவதையும் எனது இறைவன் தடை செய்துள்ளான்” என்று கூறுவீராக!
34. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தவணை உள்ளது. எனவே, அவர்களின் தவணை வரும்போது சற்று நேரம் கூடப் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
35. ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்கு எடுத்துரைக்கும் தூதர்கள், உங்களிலிருந்தே உங்களிடம் வரும்போது, யார் இறையச்சம் கொண்டு சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
36. நமது வசனங்களைப் பொய்யெனக் கூறி, அவற்றை மறுத்துப் பெருமையடிப்போரே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
37. அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கூறுபவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? இத்தகையோருக்கு விதிக்கப்பட்ட அவர்களுக்குரிய பங்கு அவர்களை அடையும். இறுதியில், நம் தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற வரும்போது “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோர் எங்கே?” என்று கேட்பார்கள். “அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர்” எனக் கூறுவார்கள். தாங்கள் இறை மறுப்பாளர்களாக இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சியளிப்பார்கள்.
38. “ஜின் மற்றும் மனிதர்களில் உங்களுக்கு முன்சென்ற கூட்டத்தினருடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!” என்று (இறைவன்) கூறுவான். ஒவ்வொரு கூட்டத்தினரும் நுழையும்போதும் தமது சக கூட்டத்தினரைச் சபிப்பார்கள். முடிவில், அனைவரும் அதை அடைந்தபோது, அவர்களில் முந்தியவர்களைப் பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள்தான் எங்களை வழிகெடுத்தார்கள். அவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையைக் கொடுப்பாயாக!” என்று அவர்களிலுள்ள பிந்தியவர்கள் கூறுவார்கள். “அனைவருக்கும் இருமடங்கு உண்டு. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்று அவன் கூறுவான்.
39. அவர்களில் முந்தியவர்கள், பிந்தியவர்களிடம் “எங்களைவிட உங்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லை. எனவே, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காக வேதனையைச் சுவையுங்கள்!” என்று கூறுவார்கள்.
40. நமது வசனங்களைப் பொய்யெனக் கூறி, அவற்றை மறுத்துப் பெருமையடிப்போருக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளுக்குக் கூலி கொடுப்போம்.193
41. அவர்களுக்கு நரகத்தில் விரிப்புகளும், அவர்களுக்கு மேலே (நெருப்பாலான) போர்வைகளும் உண்டு. இவ்வாறே அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.
42. யார் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர சிரமப்படுத்த மாட்டோம்.
43. அவர்களின் உள்ளங்களில் உள்ள குரோதத்தை அகற்றி விடுவோம். அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடும். “இதற்கான நேர்வழியை நமக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிருக்கா விட்டால் நாங்கள் நேர்வழியை அடைந்திருக்க மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தனர்” என்று அவர்கள் கூறுவர். “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காக உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுதான்” என அவர்கள் அழைக்கப்படுவார்கள்.194
44. சொர்க்கவாசிகள், நரகவாசிகளை அழைத்து “எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை உண்மையாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் “ஆம்!” என்று கூறுவார்கள். அப்போது அவர்களுக்கிடையே ஓர் அறிவிப்பாளர் “அநியாயக்காரர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக” என்று அறிவிப்பார்.195
45. அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்து, அதைக் கோணலாக்கவும் முனைந்தனர். மேலும் அவர்கள் மறுமையை மறுப்பவர்கள்.
46. (சொர்க்கவாசிகள், நரகவாசிகள் ஆகிய) அவ்விரு சாராருக்கும் இடையே ஒரு தடுப்பு இருக்கும். (அதன்) சிகரங்களின்மீது சில மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள், ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களின் மூலம் அறிந்து கொள்வார்கள். “உங்கள்மீது அமைதி உண்டாகட்டும்” என்று அவர்கள் சொர்க்கவாசிகளை அழைத்துக் கூறுவார்கள். (சிகரங்களில் உள்ள) அவர்கள் சொர்க்கத்தில் நுழையவில்லை. எனினும் (அதற்கு) ஆவல் கொண்டோராக இருப்பார்கள்.
47. நரகவாசிகளை நோக்கி அவர்களின் பார்வைகள் திருப்பப்படும்போது “எங்கள் இறைவனே! அநியாயக்காரர்களின் கூட்டத்தில் எங்களை ஆக்கி விடாதே!” என்று கூறுவார்கள்.
48. அச்சிகரங்களில் உள்ளவர்கள், சில மனிதர்களை அவர்களின் அடையாளங்களின் மூலம் அறிந்து, அவர்களை அழைத்து “நீங்கள் திரட்டியவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும் உங்களைக் காப்பாற்றவில்லை” என்று கூறுவார்கள்.
49. “இவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய மாட்டான்” என்று நீங்கள் சத்தியமிட்டுக் கூறியது (சொர்க்கத்திலுள்ள) இவர்களைத் தானே!” (என்றும் கூறுவார்கள். பின்னர்) ‘நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்! உங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்’ (என்று சிகரங்களில் உள்ளவர்களிடம் இறைவன் கூறுவான்.)
50. நரகவாசிகள், சொர்க்கவாசிகளை அழைத்து “கொஞ்சம் தண்ணீரையோ, அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதில் சிறிதளவோ எங்கள்மீது ஊற்றுங்கள்!” எனக் கேட்பார்கள். “இறைமறுப்பாளர்களுக்கு அவ்விரண்டையும் அல்லாஹ் தடைசெய்து விட்டான்” என்று இவர்கள் பதிலளிப்பார்கள்.
51. அவர்கள் தமது மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். இவ்வுலக வாழ்வு அவர்களை ஏமாற்றி விட்டது. அவர்கள் நமது வசனங்களை மறுத்துக் கொண்டிருந்தைப் போன்றும், தமது இந்த நாளின் சந்திப்பை அவர்கள் மறந்ததைப் போன்றும் இன்றைய தினம் நாம் அவர்களை மறந்து விடுவோம்.
52. நாம் அவர்களிடம் ஒரு வேதத்தைக் கொண்டு வந்தோம். அறிவின்படி அதை விவரித்துள்ளோம். இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறது.
53. அந்நாள் நிகழ்வதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அது நிகழும் நாளில் இதற்கு முன் அதை மறந்து வாழ்ந்தோர் “எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையையே கொண்டு வந்தனர். எங்களுக்குப் பரிந்துரையாளர்கள் எவரும் உள்ளனரா? அப்படியிருந்தால் அவர்கள் எங்களுக்குப் பரிந்துரை செய்திருப்பார்களே! அல்லது நாங்கள் (உலகிற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அவ்வாறாயின், நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு மாற்றமான (நல்ல) செயல்களைச் செய்வோமே!” என்று கூறுவார்கள். அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் புனைந்து கூறிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்து விட்டன.
54. உங்கள் இறைவன் அல்லாஹ்வே! அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின்மீது அமர்ந்தான். அவனே இரவைப் பகலால் மூடுகிறான். அது இரவைப் பின்தொடர்கின்றது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தப்பட்டதாக(ப் படைத்தான்). அறிந்து கொள்ளுங்கள்! படைத்தலும், அதிகாரமும் அவனுக்கே உரியது. அகிலங்களின் இறைவனான அல்லாஹ் பாக்கியமிக்கவன்.
55. பணிவாகவும், இரகசியமாகவும் உங்கள் இறைவனைப் பிரார்த்தியுங்கள்! அவன் வரம்பு மீறுவோரை விரும்ப மாட்டான்.196
56. பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு அதில் குழப்பம் செய்யாதீர்கள்! அச்சத்துடனும் ஆவலுடனும் அவனைப் பிரார்த்தியுங்கள்! நன்மை செய்வோருக்கு அல்லாஹ்வின் அருள் அருகில் இருக்கிறது.
57. அவனே தனது (மழையெனும்) அருளுக்கு முன் நற்செய்தியாகக் காற்றுகளை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமந்ததும் அதை வறண்ட நிலத்திற்கு ஓட்டிச் சென்று, அங்கு மழையைப் பொழியச் செய்கிறோம். அதன் மூலம் அனைத்து வகை விளைச்சல்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தோரை (உயிர்ப்பித்து) எழுப்புவோம். இதனால் நீங்கள் படிப்பினை பெறுவீர்கள்.
58. வளமான பூமியில் அதன் தாவரங்கள் தனது இறைவனின் கட்டளைப்படி வெளிப்படுகின்றது. கெட்ட பூமியிலோ சொற்பமானதே வெளிப்படுகின்றது. நன்றி செலுத்தும் சமுதாயத்திற்காக இவ்வாறே சான்றுகளை விவரிக்கிறோம்.
59. நூஹை அவரது சமுதாயத்திற்குத் தூதராக அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. உங்களுக்கு மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார்.
60. “உம்மைப் பகிரங்க வழிகேட்டில்தான் பார்க்கிறோம்” என்று அவரது சமுதாயத் தலைவர்கள் கூறினர்.
61. “என் சமுதாயத்தினரே! எந்தவொரு வழிகேடும் என்னிடம் இல்லை. மாறாக, நான் அகிலங்களின் இறைவனுடைய தூதராவேன்” என்று அவர் கூறினார்.
62. “எனது இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். உங்களுக்கு நல்லதையே நாடுகிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்”
63. “உங்களை எச்சரிப்பதற்காகவும், நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும், நீங்கள் அருள் செய்யப்படுவதற்காகவும் உங்களில் ஒருவர்மீது, உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அறிவுரை வருவதுபற்றி நீங்கள் வியப்படைகிறீர்களா?” (என்று கேட்டார்.)
64. அவர்கள் அவரைப் பொய்யரெனக் கூறினர். அவரையும் அவருடன் இருந்தோரையும் கப்பலில் காப்பாற்றினோம். யார் நமது வசனங்களைப் பொய்யெனக் கூறினார்களோ அவர்களை மூழ்கடித்தோம். அவர்கள் (சிந்திக்காத) குருட்டுக் கூட்டத்தாராகவே இருந்தனர்.
65. ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் (அவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கேட்டார்.
66. “நீர் அறியாமையில் இருப்பதாகவே நாங்கள் காண்கிறோம். மேலும் நீர் பொய்யர்களில் உள்ளவர் என்றே எண்ணுகிறோம்” என இறைமறுப்பாளர்களான அவரது சமுதாயத் தலைவர்கள் கூறினர்.
67. “என் சமுதாயத்தினரே! என்னிடம் எந்த அறியாமையும் இல்லை. மாறாக, நான் அகிலங்களின் இறைவனுடைய தூதராவேன்” என்று அவர் கூறினார்.
68. “எனது இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு நான் எடுத்துரைக்கிறேன். நான் உங்கள் நம்பிக்கைக்குரிய நலம் நாடுபவன்”
69. “உங்களை எச்சரிப்பதற்காக, உங்களில் ஒருவர்மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அறிவுரை வருவது பற்றி நீங்கள் வியப்படைகிறீர்களா? நூஹுடைய சமுதாயத்திற்குப் பிறகு அவன் உங்களைத் தலைமுறைகளாக ஆக்கியதையும், உங்களுக்கு உடலில் வலிமையை அதிகரித்ததையும் நினைத்துப் பாருங்கள்! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்!” (என்றும் கூறினார்.)
70. “அல்லாஹ் ஒருவனையே நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காகவும், எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் கைவிட்டுவிட வேண்டும் என்பதற்காகவுமே நீர் எங்களிடம் வந்துள்ளீரா? நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்” என்று அவர்கள் கூறினர்.
71. “உங்கள் இறைவனின் தண்டனையும், கோபமும் உங்கள்மீது உறுதியாகி விட்டது. நீங்களும், உங்கள் முன்னோரும் சூட்டிக் கொண்ட (கற்பனைக் கடவுள்களின்) பெயர்களைப் பற்றியா என்னிடம் வாதம் செய்கிறீர்கள்? அதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறினார்.
72. அவரையும், அவருடன் இருந்தோரையும் நமது அருளின் மூலம் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கூறியோரை வேரறுத்தோம். அவர்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
73. ஸமூது சமுதாயத்திற்கு அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. இது உங்களுக்குச் சான்றாகவுள்ள அல்லாஹ்வின் ஒட்டகம். அதை விட்டு விடுங்கள்! அது அல்லாஹ்வின் பூமியில் மேயட்டும்! அதற்குத் தீங்கிழைத்து விடாதீர்கள்! அவ்வாறு செய்தால் துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.
74. “ஆது சமுதாயத்திற்குப் பிறகு அவன் உங்களைத் தலைமுறைகளாக ஆக்கியதை நினைத்துப் பாருங்கள்! இப்பூமியில் அவன் உங்களைக் குடியமர்த்தினான். அதன் சமவெளிப் பகுதிகளில் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள். மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்! பூமியில் குழப்பம் செய்துகொண்டு அலையாதீர்கள்!” (என்றும் கூறினார்)
75. அவரது சமுதாயத்திலுள்ள கர்வம் கொண்ட தலைவர்கள், அவர்களில் இறைநம்பிக்கை கொண்ட பலவீனர்களிடம் “ஸாலிஹ், அவரது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டனர். “எதைக் கொண்டு அவர் அனுப்பப்பட்டாரோ அதை நாங்கள் நம்புவோரே!” என அவர்கள் பதிலளித்தனர்.
76. “நீங்கள் எதை நம்பிக்கை கொண்டீர்களோ அதை நாங்கள் மறுக்கக் கூடியவர்களே!” என்று கர்வம் கொண்ட அவர்கள் கூறினர்.
77. அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்தனர். தமது இறைவனின் ஆணையை மீறினர். “ஸாலிஹே! நீர் தூதர்களில் உள்ளவர் என்றால் எங்களுக்கு நீர் எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று கூறினர்.197
78. எனவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தமது வீடுகளில் முகம் குப்புற வீழ்ந்து கிடந்தனர்.
79. அவர்களை விட்டும் (ஸாலிஹ்) விலகிக் கொண்டார். “என் சமுதாயத்தினரே! எனது இறைவனின் தூதுச் செய்தியை உங்களுக்கு எடுத்துரைத்தேன். உங்களுக்கு நலம் நாடினேன். எனினும் நலம் நாடுவோரை நீங்கள் நேசிப்பதில்லை” என்று கூறினார்.
80, 81. லூத்தையும் (தூதராக அனுப்பினோம்.) அவர் தமது சமுதாயத்தை நோக்கி “அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் செய்யாத, மானக்கேடான காரியத்தைச் செய்கிறீர்களா? நீங்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களிடம் இச்சைக்காகச் செல்கிறீர்கள். மேலும் நீங்கள் வரம்பு மீறும் கூட்டமாக இருக்கிறீர்கள்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
82. “இவர்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள்! இவர்களோ பரிசுத்தமான மனிதர்கள்” என்று கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
83. அவரையும் அவரது குடும்பத்தினைரையும் காப்பாற்றினோம். அவரது மனைவியைத் தவிர! அவள் (வேதனையில்) தங்கிவிடுவோரில் ஆகி விட்டாள்.
84. அவர்கள்மீது (கல்) மழையைப் பொழிந்தோம். குற்றவாளிகளின் முடிவு எப்படி ஆனது என்பதைக் கவனிப்பீராக!
85. மத்யன்வாசிகளிடம் அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்.) “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. அளவையும் நிறுவையையும் முழுமையாக்குங்கள்! மக்களுக்கு அவர்களுக்குரிய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு அதில் குழப்பம் செய்யாதீர்கள்! நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று அவர் கூறினார்.
86. “அல்லாஹ்வின் பாதையை கோணலாக்க முனைந்து, அதை விட்டும் இறைநம்பிக்கை கொண்டோரைத் தடுப்போராகவும், அச்சுறுத்துவோராகவும் ஒவ்வொரு வழியிலும் அமராதீர்கள்! நீங்கள் குறைவாக இருந்தபோது அவன் உங்களைப் பெருகச் செய்ததை நினைத்துப் பாருங்கள்! குழப்பவாதிகளின் முடிவு எப்படி ஆனது என்பதைக் கவனியுங்கள்!”
87. “நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கை கொண்டு, மற்றொரு பிரிவினர் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தால் நமக்கிடையே அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுத்திருங்கள்! தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்” (என்றும் கூறினார்.)
88. அவரது சமுதாயத்தைச் சார்ந்த கர்வம் கொண்ட தலைவர்கள், “ஷுஐபே! உம்மையும், உம்முடன் இருக்கும் இறைநம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினர். அதற்கு “நாங்கள் (அதை) வெறுப்போராக இருந்தாலுமா?” என அவர் கேட்டார்.
89. “உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிய பிறகு நாங்கள் மீண்டும் அதற்குத் திரும்பினால் அல்லாஹ்வின்மீது பொய்யைக் கற்பனை செய்தவர்களாவோம். எங்கள் இறைவனான அல்லாஹ் நாடினாலே தவிர அதற்குத் திரும்புவது எங்களுக்குத் தகாது. எங்கள் இறைவன் அனைத்துப் பொருட்களையும் ஞானத்தால் சூழ்ந்துள்ளான். நாங்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் சமுதாயத்திற்குமிடையே உண்மையைக் கொண்டு தீர்ப்பளிப்பாயாக! நீயே தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவன்” (என்றும் கூறினார்.)
90. அவரது சமுதாயத்தைச் சார்ந்த இறைமறுப்பாளர்களான தலைவர்கள், “ஷுஐபைப் பின்பற்றினால் அப்போது நீங்களே நஷ்டமடைந்தோர்!” என கூறினர்.
91. எனவே அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தமது வீடுகளில் முகம் குப்புற வீழ்ந்து கிடந்தனர்.
92. ஷுஐபைப் பொய்யரெனக் கூறியோர் அங்கு வாழ்ந்திராதவர்களைப் போன்று ஆகி விட்டனர். ஷுஐபைப் பொய்யரெனக் கூறியோர் நஷ்டமடைந்தோராகி விட்டனர்.
93. அவர்களை விட்டும் (ஷுஐப்) விலகிக் கொண்டார். “என் சமுதாயமே! எனது இறைவனின் தூதுச் செய்திகளை நான் உங்களுக்கு எடுத்துரைத்தேன். உங்களின் நலம் நாடினேன். எனினும் இறைமறுப்பாளர்களான கூட்டத்திற்காக எவ்வாறு கவலைப்படுவேன்?” என்று கூறினார்.
94. நாம் எந்த ஊருக்கு ஒரு நபியை அனுப்பி வைத்தாலும், அவ்வூர்வாசிகள் பணிந்து நடக்க வேண்டும் என்பதற்காக அவர்களை வறுமையாலும் நோயாலும் பிடிக்காமல் இருந்ததில்லை.
95. பிறகு, அவர்கள் பெருகும் அளவுக்கு, கெட்டதற்குப் பதிலாக நல்லதை மாற்றிக் கொடுத்தோம். (அப்போது) அவர்கள், “நமது முன்னோருக்கும் (இவ்வாறே) துன்பமும் இன்பமும் ஏற்பட்டது” என்று கூறினார்கள். எனவே அவர்கள் அறியாத விதத்தில் திடீரென அவர்களைப் பிடித்தோம்.
96. அவ்வூர்வாசிகள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்துடன் நடந்திருந்தால், வானம் மற்றும் பூமியிலிருந்து அருள்வளங்களை அவர்களுக்குத் திறந்து விட்டிருப்போம். மாறாக, அவர்கள் பொய்யெனக் கூறினார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காக அவர்களைப் பிடித்தோம்.
97. அவ்வூர்வாசிகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, இரவில் நமது தண்டனை அவர்களிடம் வருவதில் பயமின்றி இருக்கிறார்களா?
98. அவ்வூர்வாசிகள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, முற்பகலில் நமது தண்டனை அவர்களிடம் வருவதில் பயமின்றி இருக்கிறார்களா?
99. அவர்கள் அல்லாஹ்வின் சூழ்ச்சியைப்பற்றிப் பயமின்றி இருக்கிறார்களா? நஷ்டமடைந்த கூட்டத்தைத் தவிர (வேறெவரும்) அல்லாஹ்வின் சூழ்ச்சியைப் பற்றி பயமின்றி இருக்க மாட்டார்கள்.
100. அவ்வூராருக்குப் பின் அப்பூமிக்கு வாரிசான இவர்களை நாம் நாடியிருந்தால் இவர்களின் பாவங்களுக்காக (முன்னோரைத் தண்டித்தது போன்றே) நாம் தண்டித்திருப்போம் என்பது இவர்களை நேர்வழிப்படுத்தவில்லையா? (இவ்வாறு படிப்பினை பெறாவிட்டால்) அவர்களின் உள்ளங்களில் நாம் முத்திரையிடுவோம். எனவே அவர்கள் செவியுற மாட்டார்கள்.
101. நாம் அவ்வூர்கள் பற்றிய செய்திகளை உமக்கு எடுத்துரைக்கிறோம். அவர்களுக்கான தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். ஆயினும் ஏற்கனவே அவர்கள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்ததால் இறைநம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே இறைமறுப்பாளர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
102. வாக்குறுதியை (நிறைவேற்றுவதை) அவர்களில் பெரும்பாலோரிடம் நாம் காணவில்லை. மாறாக, அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.
103. அவர்களுக்குப் பின்னர், மூஸாவை நமது சான்றுகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனது பிரமுகர்களிடமும் அனுப்பினோம். அவர்கள் அவற்றை (மறுத்து) அநியாயம் செய்தனர். “குழப்பவாதிகளின் முடிவு எப்படி ஆனது?” என்பதைக் கவனிப்பீராக!
104. “ஃபிர்அவ்னே! நான் அகிலங்களின் இறைவனுடைய தூதராவேன்” என்று மூஸா கூறினார்.
105. “அல்லாஹ்வின்மீது உண்மையைத் தவிர (எதையும்) நான் கூறாமல் இருப்பது கடமையாகும். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். எனவே இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை என்னுடன் அனுப்பி விடு!” (என்றும் கூறினார்.)
106. “நீர் ஏதேனும் அற்புதத்துடன் வந்திருந்தால் (அதில்) உண்மையாளராகவும் இருந்தால் அதைக் கொண்டு வருவீராக!” என்று அவன் கூறினான்.
107. அப்போது அவர் தனது கைத்தடியைப் போட்டார். உடனே அது தெளிவான பெரிய பாம்பாகி விட்டது.
108. தமது கையை (அக்குள் பகுதியிலிருந்து) வெளியில் எடுத்தார். அப்போது அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது.
109, 110. “இவர் திறமையான சூனியக்காரர். உங்கள் நாட்டிலிருந்து உங்களை வெளியேற்ற நினைக்கிறார். எனவே என்ன ஆணையிடுகிறீர்கள்?” என ஃபிர்அவ்னின் சமுதாயத் தலைவர்கள் கேட்டனர்.
111, 112. “இவருக்கும் இவரது சகோதரருக்கும் தவணையளிப்பாயாக! (ஆள்) திரட்டுவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவாயாக! அவர்கள் திறமையான சூனியக்காரர்கள் அனைவரையும் உன்னிடம் அழைத்து வருவார்கள்” என அவர்கள் கூறினர்.
113. சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து, “நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்கு ஏதேனும் வெகுமதி உண்டா?” என்று கேட்டனர்.
114. “ஆம்! (அப்போது) நீங்கள் நெருக்கமானோர் ஆவீர்கள்” என அவன் கூறினான்.
115. “மூஸாவே! நீர் போடுகிறீரா? அல்லது நாங்கள் (முதலில்) போடவா?” என அவர்கள் கேட்டனர்.
116. “நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். அவர்கள் போட்டதும் மக்களின் கண்களை மயக்கி, அவர்களைப் பயமுறுத்தினர். அவர்கள் மாபெரும் சூனியத்தைக் கொண்டு வந்தனர்.
117. “உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று நாம் மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது (பாம்பாக மாறி) அவர்கள் பொய்யாகத் தோற்றுவித்ததை விழுங்கியது.
118. உண்மை உறுதியானது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை பொய்யாகி விட்டன.
119. அவர்கள் அவ்விடத்திலேயே தோற்கடிக்கப்பட்டுச் சிறுமை அடைந்தோராக மாறினர்.
120. சூனியக்காரர்கள் (அல்லாஹ்வுக்கு) ஸஜ்தா செய்தோராக விழுந்தனர்.
121. “அகிலங்களின் இறைவனை நாங்கள் நம்பினோம்” என்று கூறினர்.
122. “(அவன்) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் இறைவன்” (என்றும் கூறினர்.)
123. “நான் உங்களுக்கு அனுமதியளிக்கும் முன்னரே நீங்கள் அவரை நம்பி விட்டீர்களா? இந்நகரவாசிகளை இங்கிருந்து வெளியேற்றுவதற்காக இங்கு நீங்கள் செய்த சூழ்ச்சியே இது! நீங்கள் (இதன் பலனை) அறிந்து கொள்வீர்கள்” என ஃபிர்அவ்ன் கூறினான்.
124. “நான் உங்கள் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்துப் பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்” (என்றும் கூறினான்.)
125, 126. “எங்கள் இறைவனிடமே நாங்கள் திரும்பிச் செல்வோர். எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்தபோது அவற்றின்மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காகவே தவிர நீ எங்களைப் பழிவாங்கவில்லை!” என அவர்கள் கூறினர். “எங்கள் இறைவனே! எங்கள்மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!” (என்று பிரார்த்தித்தனர்.)
127. “மூஸாவும், அவரது சமூகத்தாரும் இந்தப் பூமியில் குழப்பம் செய்து, உன்னையும் உன் கடவுள்களையும் புறக்கணிப்பதற்காக அவர்களை நீ விட்டு வைக்கிறாயா?” என்று ஃபிர்அவ்னின் சமுதாயத் தலைவர்கள் கேட்டனர். “அவர்களின் ஆண் குழந்தைகளைக் கொன்றுவிட்டுப் பெண்களை உயிருடன் வாழ விடுவோம். நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவோரே!” என்று அவன் கூறினான்.
128. “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையை மேற்கொள்ளுங்கள்! இப்பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தன் அடியார்களில் தான் நாடியோருக்கு அதைச் சொந்தமாக்குகிறான். இறையச்சமுடையோருக்கு (நல்ல) முடிவு உள்ளது” என்று மூஸா தம் சமுதாயத்தினரிடம் கூறினார்.
129. “நீர் எங்களிடம் வருவதற்கு முன்பும், எங்களிடம் வந்த பிறகும் நாங்கள் துன்புறுத்தப்படுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “உங்கள் இறைவன் உங்கள் எதிரியை அழித்து, இப்பூமியில் அவர்களின் இடத்தில் உங்களைக் கொண்டு வந்து, நீங்கள் எப்படிச் செயல்படுகிறீர்கள் என்று கவனிப்பான்” என அவர் கூறினார்.
130. ஃபிர்அவ்னின் கூட்டத்தார் படிப்பினை பெறுவதற்காக, அவர்களைப் பஞ்சங்களைக் கொண்டும், விளைச்சல்களைக் குறைத்தும் தண்டித்தோம்.
131. அவர்களுக்கு நல்லது நடந்தால் “இது எங்களுக்குரியது” என்று கூறினர். அவர்களுக்குக் கேடு ஏற்பட்டால் மூஸாவையும், அவருடன் இருந்தோரையும் கெட்ட சகுனமாகக் கருதினர். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் கெட்ட சகுனமாகக் கருதுவது அல்லாஹ்விடமே உள்ளது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதனை) அறிய மாட்டார்கள்.
132. “எங்களைக் கவர்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்தாலும் நாங்கள் உம்மை நம்புவோராக இல்லை” என்று அவர்கள் கூறினர்.
133. எனவே அவர்களுக்கு எதிராகப் பெருவெள்ளம், வெட்டுக் கிளி, பேன், தவளைகள், இரத்தம் ஆகியவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பினோம். ஆனால் அவர்கள் கர்வம் கொண்டு, குற்றம் செய்யும் கூட்டமாகவே இருந்தனர்.
134. அவர்களுக்கு வேதனை ஏற்படும்போதெல்லாம் “மூஸாவே! உமது இறைவன் உமக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவனிடம் எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக! எங்களை விட்டும் நீர் இவ்வேதனையை நீக்கி விட்டால் உம்மீது நம்பிக்கை கொள்வோம். உம்முடன் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை அனுப்பி விடுவோம்” என அவர்கள் கூறினர்.
135. அவர்கள் அடையக்கூடிய ஒரு தவணைவரை அவர்களை விட்டும் நாம் வேதனையை நீக்கும்போது, உடனே (வாக்குறுதியை) முறித்து விடுகின்றனர்.
136. நாம் அவர்களைத் தண்டித்தபோது, அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம். ஏனெனில் அவர்கள் நமது சான்றுகளைப் பொய்யெனக் கூறி, அவற்றை அலட்சியம் செய்வோராக இருந்தனர்.
137. நாம் அருள்வளம் புரிந்த அப்பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும், மேற்குப் பகுதிகளுக்கும், பலவீனர்களாக்கப்பட்ட அச்சமுதாயத்தை வாரிசுகளாக்கினோம். இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் பொறுமையாக இருந்ததால் அவர்களுக்கு உமது இறைவனின் அழகிய வாக்கு முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும், அவனது சமுதாயமும் உருவாக்கிக் கொண்டிருந்தவற்றையும், அவர்கள் உயரமாகக் கட்டிக் கொண்டிருந்தவற்றையும் அடியோடு அழித்தோம்.
138, 139. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடந்து செல்ல வைத்தோம். அவர்கள், தமது சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்திடம் வந்தபோது, “மூஸாவே! இவர்களுக்குக் கடவுள்கள் இருப்பதைப் போல எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துவீராக!” என்று கேட்டனர். “நீங்கள் அறிவில்லாத கூட்டமாகவே இருக்கிறீர்கள். அவர்கள் எதில் இருக்கிறார்களோ அது அழிக்கப்படக் கூடியது. அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் வீணானவையே” என்று அவர் கூறினார்.198
140. “அல்லாஹ்வையன்றி உங்களுக்கு (வேறு) கடவுளைத் தேடுவேனா? அவனே அகிலத்தாரைவிட உங்களைச் சிறப்பித்தான்” என்றும் கூறினார்.
141. கடும் வேதனையால் உங்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றியதை நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களின் ஆண் குழந்தைகளைக் கொன்று, பெண்களை உயிருடன் வாழ விட்டார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து பெரும் சோதனை இருந்தது.
142. மூஸாவுக்கு முப்பது இரவுகளை வாக்களித்தோம். மேலும் பத்து இரவுகளைக் கொண்டு அதை முழுமைப்படுத்தினோம். அவரது இறைவன் வாக்களித்த காலம் நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. மூஸா தமது சகோதரர் ஹாரூனிடம் “என் சமுதாயத்திற்கு எனது பிரதிநிதியாக இருந்து சீர்திருத்தம் செய்வீராக! குழப்பவாதிகளின் வழியைப் பின்பற்றாதீர்!” என்று கூறினார்.
143. நாம் நிர்ணயித்த நேரத்தில் மூஸா வந்து, அவரது இறைவன் அவரிடம் உரையாடியபோது, “என் இறைவனே! எனக்கு நீ காட்சியளிப்பாயாக! நான் உன்னைப் பார்ப்பேன்” என்று கூறினார். “நீர் என்னைப் பார்க்கவே முடியாது. எனினும் இம்மலையைப் பார்ப்பீராக! அது தனது இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று (இறைவன்) கூறினான். அவரது இறைவன் மலைக்குத் தோற்றமளித்தபோது அதைத் தூளாக்கி விட்டான். மூஸா மயக்கமுற்று விழுந்தார். அவர் மயக்கம் தெளிந்தபோது “நீ தூயவன்! உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். இறைநம்பிக்கையாளர்களில் நான் முதன்மையானவன்” என்று கூறினார்.
144. “மூஸாவே! எனது தூதுச் செய்திகள் மற்றும் எனது பேச்சின் மூலம் பிற மக்களைவிட உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே, நான் உமக்கு வழங்கியதை எடுத்துக் கொள்வீராக! நீர் நன்றி செலுத்துவோருள் ஆகிவிடுவீராக!” என்று அவன் கூறினான்.199
145. அறிவுரையாகவும், ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கமாகவும் உள்ள அனைத்து விஷயங்களையும் அவருக்காகப் பலகைகளில் எழுதினோம். “இவற்றை உறுதியாகப் பிடித்துக் கொள்வீராக! இதிலிருக்கும் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு உமது சமுதாயத்திற்கு ஏவுவீராக! பாவிகளின் தங்குமிடத்தை உங்களுக்கு நான் காட்டுவேன்” (என்று இறைவன் கூறினான்.)
146. பூமியில் நியாயமின்றிக் கர்வம் கொள்வோரை எனது சான்றுகளை விட்டும் திருப்பி விடுவேன். சான்றுகள் அனைத்தையும் அவர்கள் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். அவர்கள் நேரான வழியைக் கண்டால் அதை (தமது) வழியாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தவறான பாதையைக் கண்டால் அதையே (தமது) வழியாக எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் நமது சான்றுகளைப் பொய்யெனக் கூறி, அவற்றை அலட்சியம் செய்வோராக இருந்ததே இதற்குக் காரணம்.
147. யார் நமது வசனங்களையும், மறுமை சந்திப்பையும் பொய்யெனக் கூறினார்களோ அவர்களின் (நற்)செயல்கள் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர (வேறெதற்கும்) கூலி வழங்கப்படுவார்களா?
148. மூஸா சென்ற பிறகு அவரது சமுதாயத்தினர் தமது ஆபரணங்களாலான (வெறும்) உடலைக் கொண்ட காளைக் கன்றை (கடவுளாக) எடுத்துக் கொண்டனர். அதற்கு சப்தமும் இருந்தது. அது அவர்களிடம் பேசாது, அவர்களுக்கு வழியையும் காட்டாது என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் அதை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டு, அநியாயக்காரர்களாகி விட்டனர்.
149. தாம் வழிகெட்டு விட்டதை அறிந்து, அவர்கள் கைச்சேதப்பட்டபோது, “எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரியா விட்டாலோ எங்களை மன்னிக்கா விட்டாலோ நாங்கள் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவோம்” என்று கூறினர்.
150. மூஸா தமது சமுதாயத்தினரிடம் கோபமும் கவலையும் கொண்டவராகத் திரும்பி வந்தபோது, “நான் சென்ற பிறகு எனது பிரதிநிதிகளாக இருந்து நீங்கள் செய்தது மிகக் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளைக்கு அவசரப்படுகிறீர்களா?” என்று கேட்டார். பலகைகளைப் போட்டுவிட்டுத் தமது சகோதரரின் தலையைப் பிடித்து அவரைத் தன் பக்கம் இழுத்தார். (அப்போது அவரது சகோதரர் ஹாரூன்) “என் தாயின் மகனே! இக்கூட்டத்தினர் என்னை பலவீனப்படுத்தி, என்னைக் கொலை செய்ய முயன்றனர். எனவே, என்னைக் கொண்டு எதிரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடாதீர்! இந்த அநியாயக்கார கூட்டத்தாருடன் என்னையும் சேர்த்து விடாதீர்!” என்று கூறினார்.
151. “என் இறைவனே! என்னையும் எனது சகோதரரையும் மன்னிப்பாயாக! உன்னுடைய அருளில் எங்களை நுழையச் செய்வாயாக! நீயே கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்!” என்று (மூஸா) கூறினார்.
152. காளைக் கன்றை யார் (கடவுளாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்கள்மீது, அவர்களுடைய இறைவனின் கோபமும் இவ்வுலக வாழ்வில் இழிவும் வந்தடையும். இட்டுக்கட்டுவோருக்கு இவ்வாறே கூலி கொடுப்போம்.
153. யார் தீமைகளைச் செய்து, அதன்பின்னர் பாவ மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொள்கிறாரோ அதற்குப் பிறகு (அவரது பாவத்தை) உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரிலா அன்பாளன்.
154. மூஸாவுக்குக் கோபம் தணிந்தபோது அந்தப் பலகைகளை எடுத்தார். அதில் எழுதப்பட்டவற்றில், யார் தமது இறைவனை அஞ்சுகிறார்களோ அவர்களுக்கு நேர்வழியும், அருளும் இருந்தது.
155. நாம் வாக்களித்த நேரத்தி(ல் இறைவனைச் சந்திப்பத)ற்காக மூஸா தமது சமுதாயத்தில் எழுபது பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டபோது “என் இறைவனே! நீ நாடியிருந்தால் இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் அழித்திருக்கலாம். எங்களில் அறிவீனர்கள் செய்ததற்காக எங்களை அழிக்கிறாயா? இது உன் சோதனையே அன்றி வேறில்லை. இதன்மூலம் நீ நாடியோரை வழிகேட்டில் விடுகிறாய். நீ நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறாய். நீயே எங்கள் பாதுகாவலன். எனவே எங்களை மன்னிப்பாயாக! எங்களுக்கு அருள் புரிவாயாக! மன்னிப்பவர்களில் நீயே மிகச் சிறந்தவன்” என்று கூறினார்.
156. “எங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் நன்மையை எழுதுவாயாக! நாங்கள் உன்னிடமே திரும்பி விட்டோம்” (என்றும் மூஸா கூறினார். அதற்கு இறைவன்,) “என் தண்டனையைக் கொண்டு நான் நாடியோரைத் தண்டிப்பேன். ஒவ்வொரு பொருளையும் எனது அருள் சூழ்ந்துள்ளது. யார் இறையச்சம் கொண்டு, ஸகாத்தையும் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அதை விதிப்பேன். அவர்கள் நமது வசனங்களையும் நம்புவார்கள்” என்று கூறினான்.200
157. அவர்கள், எழுதப் படிக்கத் தெரியாத (முஹம்மது) நபியாகிய இத்தூதரைப் பின்பற்றுகின்றனர். தம்மிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் அவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதாகக் காண்கின்றனர். அவர்களிடம் நல்லவற்றை ஏவி, தீயவற்றை விட்டும் அவர்களைத் தடுப்பார். தூயவற்றை அவர்களுக்கு அனுமதிப்பார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடை செய்வார். அவர்களிடமிருந்து, அவர்களின் சுமையையும், அவர்கள்மீதிருந்த விலங்குகளையும் அகற்றுவார். யார் அவர்மீது நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கப்பட்ட ஒளியையும் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றோர்.
158. “மனிதர்களே! உங்கள் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன். வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே சொந்தம். அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளுமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே மரணிக்கச் செய்கிறான்” என்று (நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனுடைய தூதரான எழுதப்படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! அவர் அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும் நம்புகிறார். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அவரைப் பின்பற்றுங்கள்!201
159. உண்மையைக் கொண்டு வழிகாட்டி, அதன்படி நீதி செலுத்தும் ஒரு சாராரும் மூஸாவின் சமுதாயத்தில் உள்ளனர்.
160. அவர்களைப் பன்னிரண்டு குலங்களைக் கொண்ட சமுதாயங்களாகப் பிரித்தோம். மூஸாவிடம் அவரது சமுதாயத்தினர் தண்ணீர் கேட்டபோது “உமது கைத்தடியால் பாறையில் அடிப்பீராக!” என்று அவருக்கு அறிவித்தோம். உடனே அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டு ஓடின. ஒவ்வொரு பிரிவினரும் தமது நீரருந்தும் இடத்தை அறிந்து கொண்டனர். அவர்கள்மீது மேகங்களை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வாவை (உணவாக) அவர்களுக்கு இறக்கினோம். “நாம் உங்களுக்கு வழங்கியதில் தூயவற்றை உண்ணுங்கள்” (என்று கூறினோம்.) அவர்கள் நமக்கு அநியாயம் செய்யவில்லை. மாறாக அவர்கள் தமக்கே அநியாயம் செய்து கொண்டனர்.
161, 162. “இந்த ஊரில் வசியுங்கள்! அதில் நீங்கள் விரும்பியவாறு உண்ணுங்கள்! ‘ஹித்ததுன்’ (மன்னிப்பாயாக!) என்று கூறுங்கள். (அதன்) நுழைவாயிலில் பணிந்தவர்களாகச் செல்லுங்கள்! உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது அவர்களில் அநியாயம் செய்தவர்கள், தமக்குச் சொல்லப்பட்டது அல்லாத வேறு வார்த்தையாக மாற்றி விட்டனர். எனவே அவர்கள் அநியாயம் செய்வோராக இருந்ததால் அவர்கள்மீது வானிலிருந்து வேதனையை இறக்கினோம்.
163. கடலுக்கு அருகிலிருந்த ஓர் ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையன்று வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! ஏனெனில், அவர்களிடம் சனிக்கிழமையன்றுதான் அவர்களுக்குரிய மீன்கள் நீரின் மேற்பரப்பில் அதிகமாக வந்தன. சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
164. “அல்லாஹ் அழிக்கவிருக்கின்ற அல்லது கடுமையான வேதனையால் தண்டிக்கவிருக்கின்ற ஒரு கூட்டத்திற்கு நீங்கள் எதற்காக அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒருசாரார் (மற்றொரு சாராரிடம்) கேட்டபோது “உங்கள் இறைவனிடம் (மறுமையில் நாங்கள்) தகுந்த காரணம் கூறுவதற்காகவும், அவர்கள் இறையச்சமுடையோர் ஆவதற்காகவும் (இவ்வாறு அறிவுரை கூறுகிறோம்)” என்று பதிலளித்தனர்.
165. தமக்குச் சொல்லப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது, தீமையைத் தடுத்தோரை நாம் காப்பாற்றினோம். அநியாயம் செய்தோரை அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக கடுமையான வேதனையால் பிடித்தோம்.
166. எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை அவர்கள் மீறியபோது “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்!” என அவர்களுக்குக் கூறினோம்.
167. அவர்களைக் கடும் வேதனையால் துன்புறுத்துவோரை மறுமை நாள்வரை அவர்களிடம் அனுப்புவதாக உமது இறைவன் அறிவித்ததை நினைவூட்டுவீராக! உமது இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
168. அவர்களைப் பூமியில் பல பிரிவினராகப் பிரித்து விட்டோம். அவர்களுள் நல்லவர்களும் உள்ளனர். இதுவல்லாத (கெட்ட)வர்களும் அவர்களுள் உள்ளனர். அவர்கள் (பாவங்களிலிருந்து) மீள்வதற்காக, அவர்களை நல்லவற்றைக் கொண்டும், தீயவற்றைக் கொண்டும் சோதித்தோம்.
169. அவர்களுக்குப் பின் வேறொரு கூட்டத்தினர் வழித்தோன்றல்களாக வந்தனர். அவர்கள் வேதத்திற்கும் வாரிசானார்கள். (அதைக் கொண்டு) இந்த (உலகின்) மிக அற்பமான பொருளைப் பெற்றுக் கொள்கின்றனர். “எங்களுக்கு மன்னிக்கப்படும்” என்று கூறுகின்றனர். அதுபோன்ற பொருள் அவர்களிடம் மீண்டும் வந்தால் அதையும் பெற்றுக் கொள்வார்கள். ‘அல்லாஹ்வின்மீது உண்மையைத் தவிர கூறக் கூடாது’ என வேதத்தின்மூலம் அவர்களிடம் உடன்படிக்கை எடுக்கப்படவில்லையா? அதில் உள்ளதை அவர்கள் படித்தும் இருக்கிறார்கள். இறையச்சமுடையோருக்கு மறுமை வீடே மிகச் சிறந்தது. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
170. வேதத்தை பற்றிப் பிடித்து, தொழுகையை நிலைநிறுத்துகின்ற அந்த சீர்திருத்தவாதிகளின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
171. நிழற்குடையைப் போன்று (தூர் எனும்) மலையை அவர்களுக்கு மேலாக நாம் உயர்த்தி, தங்கள்மீது அது விழுந்து விடும் என்று அவர்கள் எண்ணியபோது “நாம் வழங்கியதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இறையச்சமுடையோர் ஆவதற்காக அதில் உள்ளவற்றை நினைவு கூருங்கள்” (என்று கூறினோம்.)
172, 173. உமது இறைவன், ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் வழித்தோன்றல்களை வெளிப்படுத்தியதை நினைவூட்டுவீராக! “நான் உங்களுடைய இறைவனல்லவா?” என்று (கேட்டு) அவர்களுக்கு அவர்களையே சாட்சியாக்கினான். “ஆம்! நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். மறுமை நாளில், “நாங்கள் இதைவிட்டும் அலட்சியமானவர்களாக இருந்து விட்டோம்” என்று நீங்கள் கூறாதிருக்கவும், அல்லது “இதற்குமுன் எங்கள் முன்னோர்தான் இணை வைத்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின்வந்த வழித்தோன்றல்களாகவே இருந்தோம்; அந்த வழிகேடர்கள் செய்ததற்காக எங்களை நீ அழிக்கப் போகிறாயா?” என்று நீங்கள் கூறாதிருக்கவும் (இவ்வாறு சாட்சியாக்கினோம்.)202
174. இவ்வாறே வசனங்களை விவரிக்கிறோம். இதனால் அவர்கள் (பாவங்களிலிருந்து) மீள்வார்கள்.
175. நமது சான்றுகளை யாருக்கு வழங்கினோமோ அவனைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவன் அதிலிருந்து விலகி விட்டான். அவனை ஷைத்தான் பின்தொடர்ந்தான். எனவே அவன் வழிகேடர்களில் ஒருவனாகி விட்டான்.
176. நாம் நாடியிருந்தால் அவற்றின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். எனினும் அவன் இவ்வுலகத்தின் பக்கம் சாய்ந்து, தனது சுய விருப்பத்தைப் பின்பற்றினான். அவனுக்கு எடுத்துக்காட்டு, ஒரு நாயைப் போன்றது. நீர் அதனை விரட்டினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. இதுவே நமது வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கு எடுத்துக்காட்டாகும். அவர்கள் சிந்திப்பதற்காக இந்த வரலாறுகளை எடுத்துரைப்பீராக!
177. நமது வசனங்களைப் பொய்யெனக் கூறிய கூட்டத்தார் மிகக் கெட்ட உதாரணமாகி விட்டனர். அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டனர்.
178. யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். யாரை அவன் வழிகேட்டில் விட்டு விட்டானோ அவர்களே நஷ்டமடைந்தோர்.
179. ஜின்கள் மற்றும் மனிதர்களில் அதிகமானோரை நரகத்திற்காகவே படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் விளங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. அவற்றின் மூலம் கேட்க மாட்டார்கள். அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள். அவ்வாறல்ல! (அவற்றைவிட) அவர்கள் வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.
180. அல்லாஹ்வுக்கு அழகான பெயர்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே அவனை அழையுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டுவிடுங்கள்! அவர்கள் செய்து கொண்டிருந்ததற்காகக் கூலி கொடுக்கப்படுவார்கள்.203
181. உண்மையைக் கொண்டு வழிகாட்டி, அதன்படி நீதி செலுத்தும் ஒரு சமுதாயத்தினரும் நாம் படைத்தவர்களில் உள்ளனர்.
182. நமது வசனங்களைப் பொய்யெனக் கூறுவோரை அவர்கள் அறியாத விதத்தில் சிறிது சிறிதாகப் பிடிப்போம்.
183. அவர்களுக்கு நான் அவகாசம் வழங்கியுள்ளேன். எனது சூழ்ச்சி உறுதியானது.
184. (நம் தூதராகிய) அவர்களின் தோழருக்கு எவ்விதப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? அவர் தெளிவாக எச்சரிப்பவர் தவிர வேறில்லை.
185. வானங்கள், பூமியின் ஆட்சியையும், அல்லாஹ் படைத்திருக்கும் பொருட்களையும், அவர்களுக்கான தவணை நெருக்கத்தில் இருக்கக்கூடும் என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லையா? இதற்குப் பிறகு எந்தச் செய்தியின்மீதுதான் அவர்கள் நம்பிக்கை கொள்ளப் போகிறார்கள்?
186. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. அவர்களின் வரம்பு மீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான்.
187. “உலகம் அழியும் நேரம் எப்போது ஏற்படும்?” என உம்மிடம் கேட்கின்றனர். “அதைப் பற்றிய அறிவு என் இறைவனிடம்தான் இருக்கின்றது. அதற்கான நேரத்தில் அவனையன்றி (யாராலும்) அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும் பூமியிலும் அது பெரும் பாரமாக இருக்கும். திடீரென்றே அல்லாமல் அது உங்களிடம் வராது” என்று கூறுவீராக! நீர் அதைப்பற்றி மிகவும் தெரிந்தவரைப் போன்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அதைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது” என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
188. “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே எந்த நன்மையோ, தீமையோ செய்வதற்கு சக்தி பெற மாட்டேன். நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால் நன்மைகளையே அதிகம் பெற்றிருப்பேன். எனக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டிருக்காது. இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனும் நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
189. அவனே ஒரேயொரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான். மேலும் அவரிடமிருந்து அவரது துணையை, அவளிடம் அவர் நிம்மதி பெறுவதற்காகப் படைத்தான். அவளுடன் அவ(ளது கணவ)ன் சேர்ந்தபோது, அவள் இலேசான கருவைச் சுமந்து, அதனுடனே அவள் நடந்தாள். அது கனத்தபோது “நீ எங்களுக்கு நல்லதொரு குழந்தையை வழங்கினால் நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவோம்” என்று தமது இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தித்தனர்.
190. அவர்களுக்கு நல்லதொரு குழந்தையை அவன் வழங்கியபோது, அவர்களுக்கு அவன் வழங்கியதில் அவனுக்கு இணைகளை ஏற்படுத்தினர். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.
191. எந்தப் பொருளையும் படைக்காதவற்றையா அவர்கள் இணையாக்குகின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர்.
192. இவர்களுக்கு எந்த உதவியும் செய்ய அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். இன்னும் தமக்கே அவர்களால் உதவ முடியாது.
193. நீங்கள் அவர்களை நேர்வழியை நோக்கி அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்றமாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது வாய்மூடி இருப்பதும் உங்களுக்குச் சமமே!
194. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ, அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களைப் பிரார்த்தியுங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்!
195. நடக்கும் கால்கள் அவர்களுக்கு உண்டா? அல்லது பிடிக்கும் கைகள் அவர்களுக்கு உண்டா? அல்லது பார்க்கும் கண்கள் அவர்களுக்கு உண்டா? அல்லது கேட்கும் காதுகள் அவர்களுக்கு உண்டா? “உங்களுடைய இணைக்கடவுள்களை அழையுங்கள்! பின்னர் எனக்கு (எதிராக)ச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்!” என்று (நபியே!) கூறுவீராக!
196. “இவ்வேதத்தை இறக்கி வைத்த அல்லாஹ்தான் என் பாதுகாவலன். அவனே நல்லோரைப் பாதுகாக்கிறான்” என்றும் கூறுவீராக!
197. அவனையன்றி நீங்கள் யாரிடம் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய சக்தி பெற மாட்டார்கள். இன்னும் தமக்கே அவர்களால் உதவவும் முடியாது.
198. அவர்களை நீங்கள் நேர்வழியை நோக்கி அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பதாக நீர் நினைப்பீர்! ஆனால் அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
199. மன்னிக்கும் தன்மையை எடுத்துக் கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களைப் புறக்கணிப்பீராக!204
200. உமக்கு ஷைத்தானிடமிருந்து ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவீராக! அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
201. இறையச்சமுடையோருக்கு ஷைத்தானிடமிருந்து தீய எண்ணம் ஏற்பட்டால் (அல்லாஹ்வை) நினைவுகூர்வார்கள். உடனே அவர்கள் விழிப்படைவார்கள்.
202. (ஷைத்தான்களான) அவர்கள் தமது சகோதரர்களை வழிகேட்டிற்கு இழுத்துச் செல்கின்றனர்; மேலும் (அதில்) குறை வைக்க மாட்டார்கள்.
203. நீர் அவர்களிடம் சான்றைக் கொண்டு வராதபோது, “நீரே (சுயமாக) அதை உருவாக்க மாட்டீரா?” என்று கேட்கின்றனர். “எனது இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுகிறேன். இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த ஆதாரங்களாகவும், இறைநம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர்வழியாகவும் அருளாகவும் இருக்கிறது” என்று (நபியே!) கூறுவீராக!
204. குர்ஆன் ஓதப்படும்போது அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! வாய்மூடி இருங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்.
205. உமது மனதிற்குள் பணிவுடனும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமின்றியும் உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும் நினைவு கூர்வீராக! அலட்சியம் செய்வோருள் ஒருவராக ஆகிவிடாதீர்.
206. உமது இறைவனிடமிருப்போர் (வானவர்கள்) அவனை வணங்குவதை விட்டும் கர்வம் கொள்ள மாட்டார்கள். அவர்கள் அவனைப் போற்றுகின்றனர்; அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர்.