அல்அஃலா – மிக உயர்ந்தவன்

அத்தியாயம் : 87

வசனங்களின் எண்ணிக்கை: 19

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.629
1. மிக உயர்ந்தவனாகிய உமது இறைவனின் பெயரைப் போற்றுவீராக!630
2. அவனே படைத்து, ஒழுங்குபடுத்தினான்
3. அவனே சரியாக அமைத்து, நேர்வழி காட்டினான்.
4. அவனே மேய்ச்சலுக்கான புல்வெளியை வெளிப்படுத்தினான்.
5. பின்னர் அதைக் காய்ந்த சருகுகளாக்கினான்.
6. (நபியே!) நாம் உம்மை ஓதச் செய்வோம். நீர் மறக்க மாட்டீர்.
7. அல்லாஹ் நாடியதைத் தவிர! அவனே வெளிப்படையானவற்றையும், மறைந்திருப்பவற்றையும் அறிகிறான்.
8. (நபியே!) உமக்கு எளிதானதை நோக்கி வழிகாட்டுவோம்.
9. அறிவுரை பயனளிக்குமாயின் நீர் அறிவுரை கூறுவீராக!
10. யார் (இறைவனை) அஞ்சுகிறாரோ அவர் அறிவுரையை ஏற்பார்.
11. பாக்கியமிழந்தவன் அதைவிட்டு விலகிக் கொள்வான்.
12. அவன் பெரும் நெருப்பில் நுழைவான்.
13. பின்னர் அதில் மரணிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.631
14. தூய்மையாக நடப்பவர் வெற்றி பெற்று விட்டார்.
15. அவர் தமது இறைவனின் பெயரை நினைவுகூர்ந்து, தொழுதார்.
16. எனினும், நீங்கள் இவ்வுலக வாழ்வையே தேர்ந்தெடுக்கிறீர்கள்.
17 . மறுமைதான் மேலானதும், நிலையானதுமாகும்.
18, 19. இது, முந்தைய வேதங்களாகிய இப்ராஹீம், மூஸா ஆகியோரின் வேதங்களில் உள்ளது.