அல்அஹ்காஃப் – மணற் குன்றுகள்

அத்தியாயம் : 46

வசனங்களின் எண்ணிக்கை: 35

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. ஹா, மீம்.
2. மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
3. வானங்கள், பூமி, அவ்விரண்டுக்கு இடைப்பட்டவற்றை நியாயமான காரணத்துடனும், நிர்ணயிக்கப்பட்ட தவணையுடனுமே படைத்துள்ளோம். இறைமறுப்பாளர்கள், தமக்கு எச்சரிக்கப்பட்டதைப் புறக்கணிக்கின்றனர்.
4. “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிச் சிந்தித்தீர்களா? அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்பதை எனக்குக் காட்டுங்கள். அல்லது வானங்களில் அவர்களுக்கு ஏதேனும் பங்கு உள்ளதா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன்பிருந்த வேதத்தையோ, அல்லது அறிவார்ந்த தடயத்தையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) கூறுவீராக!
5. அல்லாஹ்வை விடுத்து, மறுமை நாள்வரை தனக்குப் பதிலளிக்காதவர்களிடம் பிரார்த்திப்பவனைவிட மிக வழிகெட்டவன் யார்? அவர்களோ இவர்கள் பிரார்த்திப்பதைப் பற்றி அறியாதோராக உள்ளனர்.
6. மனிதர்கள் ஒன்றுதிரட்டப்படும்போது, (வணங்கப்பட்ட) அவர்கள், (வணங்கிய) இவர்களுக்கு எதிரிகளாகி விடுவர். இவர்கள் வணங்கியதையும் மறுத்து விடுவார்கள்.
7. நமது வசனங்கள் தெளிவாக அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, அவர்களிடம் உண்மை வந்தபோது அதைப் பற்றி, “இது பகிரங்கமான சூனியம்” என இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர்.
8. அல்லது இதை இவர் புனைந்துரைக்கிறார் என்று சொல்கிறார்களா? (நபியே!) “இதை நான் புனைந்து கூறியிருந்தால் அல்லாஹ்விடமிருந்து எனக்கு (ஏற்படும் எதையும் தடுக்க) நீங்கள் சிறிதும் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் எதில் ஈடுபடுகிறீர்கள் என்பதை அவனே நன்கறிந்தவன். எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அவனே போதுமானவன். அவன் மன்னிப்பவன்; நிகரிலா அன்பாளன்” என்று கூறுவீராக!
9. (நபியே!) “நான் தூதர்களில் புதியவனாக இல்லை. எனக்கும் உங்களுக்கும் என்ன செய்யப்படும் என்பதை நான் அறிய மாட்டேன். எனக்கு இறைச் செய்தியாக அறிவிக்கப்படுவதைத் தவிர எதையும் நான் பின்பற்றுவதில்லை. நான் பகிரங்கமாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை” என்று கூறுவீராக!469
10. “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களில் உள்ள ஒரு சாட்சியாளர் இதுபோன்ற (வேதமான தவ்ராத்)தின் அடிப்படையில் சாட்சியமளித்து நம்பிக்கை கொண்டுள்ளார். நீங்களோ இ(வ்வேதத்)தை மறுத்துக் கர்வம் கொண்டு விட்டீர்கள். இந்நிலையில் இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தால் (உங்கள் மறுமை நிலை) என்னவாகும் என்பதைச் சிந்தித்தீர்களா? அநியாயக்காரக் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்” என்று (நபியே) கூறுவீராக!470
11. “இது நன்மையாக இருந்திருந்தால் இவர்கள் அதை நோக்கி(ச் செல்வதில்) எங்களை முந்தியிருக்க மாட்டார்கள்” என்று இறைநம்பிக்கை கொண்டோரைப் பற்றி இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் அவர்கள் நேர்வழி பெறாதபோது, “இது பழைய கட்டுக் கதை” என்றே கூறுவார்கள்.
12. இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தது. (குர்ஆனாகிய) இது அநியாயக்காரர்களை எச்சரிக்கை செய்தவற்காக, அரபு மொழியில் அமைந்த உண்மைப்படுத்தும் வேதமாகும். நன்மை செய்வோருக்கு நற்செய்தியாகவும் இருக்கிறது.
13. எங்கள் இறைவன் அல்லாஹ் என்று சொல்லி, (அதன்) பின்னர் உறுதியாக இருந்தோருக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் கவலையும்பட மாட்டார்கள்.
14. அவர்கள்தான் சொர்க்கவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இதுவே) அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குரிய கூலியாகும்.
15. தன் பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனது தாய் சிரமத்துடன் அவனைச் சுமந்து, சிரமத்துடன் அவனைப் பெற்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடி மறக்கச் செய்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது இளமைப் பருவத்தை அடைந்து, நாற்பது வயதை அடைந்ததும், “என் இறைவனே! எனக்கும், என் பெற்றோருக்கும் நீ வழங்கிய அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நற்செயலைச் செய்வதற்கும் எனக்கு வழிகாட்டுவாயாக! எனது பிள்ளைகளை எனக்குச் சீர்படுத்துவாயாக! நான் உன்னை நோக்கித் திரும்பி விட்டேன். நான் முஸ்லிம்களில் உள்ளவன்” எனக் கூறுகிறான்.
16. அவர்கள் சொர்க்கவாசிகளில் இருப்பார்கள். அவர்கள் செய்த நற்செயல்களை அவர்களிடமிருந்து நாம் அங்கீகரித்து, அவர்களின் தீமைகளை அலட்சியப்படுத்தி விடுவோம். (இதுவே) அவர்களுக்கு அளிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதியாகும்.
17. ஒருவனது பெற்றோர் இருவரும் (அவனது நேர்வழிக்காக) அல்லாஹ்விடம் உதவி தேடியபோது, அவர்களிடம் அவன், “சீ! உங்கள் இருவருக்கும் (என்ன நேர்ந்தது?) நான் (இறந்த பின்) உயிர்ப்பிக்கப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகிறீர்களா? எனக்கு முன் பல தலைமுறையினர் சென்றுவிட்டனர்!” எனக் கூறினான். “உனக்குக் கேடுதான். நீ இறைநம்பிக்கை கொள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது”(என்று அவர்கள் கூறினர்.) அப்போது அவன், “இது முன்னோரின் கட்டுக் கதைகளைத் தவிர வேறில்லை” என்று கூறினான்.
18. இவர்களுக்கு முன்சென்ற ஜின்கள், மனிதர்கள் ஆகிய சமுதாயத்தினருடன் இவர்களுக்கு எதிராகவும் (தண்டனை பற்றிய) வாக்கு உறுதியாகிவிட்டது. அவர்கள் நஷ்டமடைந்தோராகி விட்டனர்.
19. ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்தவற்றுக்குரிய தகுதிகள் உண்டு. அவர்களின் செயல்(களுக்குரிய கூலி)களை முழுமையாக வழங்குவதற்காகவே (இவ்வாறு செய்கிறான்.) அவர்கள் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
20. இறைமறுப்பாளர்கள் நரகத்தின் முன்பு கொண்டுவரப்படும் நாளில், “உங்களது உலக வாழ்வில் உங்களுக்குரிய நல்லவற்றை வீணாக்கி விட்டீர்கள். அவற்றைக் கொண்டு சொகுசாக வாழ்ந்தீர்கள். நீங்கள் பூமியில் நியாயமின்றி கர்வம் கொள்வோராகவும், பாவம் செய்து கொண்டும் இருந்ததால் இன்று உங்களுக்கு இழிவுமிக்க வேதனை கூலியாகத் தரப்படும்” (என்று கூறப்படும்)
21. மணற்குன்றுகளில் இருந்த ஆது சமுதாயத்தாரை எச்சரித்த அவர்களின் தோழர் (ஹூத்) பற்றி நினைவூட்டுவீராக! அவருக்கு முன்னரும், பின்னரும் எச்சரிக்கை செய்வோர் பலர் சென்றுள்ளனர். “அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! உங்கள்மீது மகத்தான நாளின் வேதனை ஏற்படுவதை அஞ்சுகிறேன்” (என்று அவர் கூறினார்)
22. “எங்கள் கடவுள்களை விட்டும் எங்களைத் தடுப்பதற்காகவா நீர் எங்களிடம் வந்துள்ளீர்? நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு எச்சரித்ததைக் கொண்டு வாரும்” என்று அவர்கள் கூறினர்.
23. “(இதுகுறித்த) அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் எதனைக் கொண்டு தூதராக அனுப்பப்பட்டேனோ அதை உங்களிடம் எடுத்துரைக்கிறேன். எனினும், நான் உங்களை அறிவற்ற சமுதாயமாகவே காண்கிறேன்” என்று அவர் கூறினார்.
24. தமது பள்ளத்தாக்குகளை முன்னோக்கி வரும் மேகமாக அதைக் கண்டபோது, “இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகம்தான்” என்று அவர்கள் கூறினர். “அவ்வாறல்ல! எதை நீங்கள் விரைவாகத் தேடினீர்களோ அது இதுதான். (இது) காற்று. இதில் துன்புறுத்தும் வேதனை உள்ளது” (எனக் கூறப்பட்டது.)471
25. அது, தன் இறைவனின் ஆணைப்படி ஒவ்வொரு பொருளையும் அடியோடு அழித்தது. அவர்களின் வசிப்பிடங்களைத் தவிர வேறெதுவும் காணப்படாதவாறு ஆகிவிட்டனர். குற்றவாளிகளின் கூட்டத்திற்கு இவ்வாறே கூலி கொடுப்போம்.
26. உங்களுக்கு நாம் கொடுக்காத வசதிகளையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்குச் செவிகளையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினோம். ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுப்போராக இருந்தபோது அவர்களின் செவிகளும், பார்வைகளும் உள்ளங்களும் அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்கவில்லை. அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது.
27. உங்களைச் சுற்றியுள்ள ஊர்களை நாம் அழித்துள்ளோம். இவர்கள் (பாவங்களிலிருந்து) மீள்வதற்காகச் சான்றுகளை விவரிக்கின்றோம்.
28. அல்லாஹ்வை விடுத்து, (அவனை) நெருங்குவதற்காக எவற்றை அவர்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டார்களோ அவை அவர்களுக்கு உதவியிருக்க வேண்டாமா? மாறாக அவர்களை விட்டும் அவை மறைந்துவிட்டன. இது அவர்களின் பொய்யும், இட்டுக்கட்டியவையும் ஆகும்.
29. (நபியே!) இந்தக் குர்ஆனைச் செவியேற்பதற்காகச் சில ஜின்களை உம்மிடம் நாம் வரச் செய்ததை நினைவு கூர்வீராக! அவை அங்கு வந்தபோது “வாய் மூடியிருங்கள்!” என்று (தமக்குள்) கூறிக் கொண்டன. (குர்ஆன் ஓதி) முடிக்கப்பட்டதும் அவை எச்சரிக்கை செய்பவையாகத் தமது சமுதாயத்தினரிடம் திரும்பிச் சென்றன.472
30. “எங்கள் சமுதாயத்தினரே! மூஸாவுக்குப் பிறகு இறக்கப்பட்டுள்ள ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். (அது) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்தக் கூடியதாகும். அது வாய்மையை நோக்கியும், நேரான பாதையை நோக்கியும் வழிகாட்டுகிறது” என்று கூறின.
31. “எங்கள் சமுதாயத்தினரே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதில் கூறுங்கள்! அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்! அவன் உங்களின் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். உங்களைத் துன்புறுத்தும் வேதனையிலிருந்து காப்பாற்றுவான்”
32. “யார் அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதிலளிக்கவில்லையோ, அவன் பூமியில் தப்பிப்பவனாக இல்லை. அவனுக்கு அல்லாஹ்வையன்றி எந்தப் பாதுகாவலரும் இல்லை. அவர்கள் பகிரங்க வழிகேட்டில் உள்ளனர்” (என்றும் ஜின்கள் கூறின.)
33. அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் படைத்தான். அவற்றைப் படைத்ததால் அவன் களைப்படையவில்லை. அத்தகையவன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? ஆம்! ஒவ்வொரு பொருளின்மீதும் அவன் ஆற்றலுடையவன்.
34. இறைமறுப்பாளர்கள் நரகத்தின்முன் கொண்டு வரப்படும் நாளில் “இது உண்மையல்லவா?” (என்று இறைவன் கேட்பான்.) “ஆம்! எங்கள் இறைவன்மீது சத்தியமாக!” என்று கூறுவார்கள். “நீங்கள் (இதை) மறுத்துக் கொண்டிருந்ததால் வேதனையை அனுபவியுங்கள்!” என்று அவன் கூறுவான்.
35. (நபியே!) உறுதிமிக்கத் தூதர்கள் பொறுமையை மேற்கொண்டது போல் நீரும் பொறுமையை மேற்கொள்வீராக! இவர்களைப் பற்றி அவசரப்படாதீர். தமக்கு வாக்களிக்கப்பட்டதைக் காணும் நாளில் பகலில் சிறிது நேரமே தவிர (உலகில்) வசிக்காதத்தைப் போன்று இருப்பார்கள். (இது) ஒரு பிரகடனம். பாவிகளின் கூட்டத்தினரைத் தவிர (வேறெவரும்) அழிக்கப்படுவார்களா?