ஏர் இந்தியா விற்பனை அரசுக்கு லாபமா? நஷ்டமா?

பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியமான ஒன்றான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முயற்சியில் நீண்ட காலமாக ஒன்றிய அரசு ஈடுபட்டு வந்தது.
குறிப்பிட்ட சதவிகிதப் பங்குகளை அரசு தன் வசம் வைத்துக் கொண்டு மீதமுள்ள பங்குகளை விற்பதாக அறிவித்த நிலையில் யாரும் வாங்க முன்வரவில்லை.
எனவே புதிய நிபந்தனைகளுடன் 100 சதவித பங்கையும் விற்கும் முடிவில் ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏலத்தில் விடப்பட்டது.
ஏலத்தில் அரசு அறிவித்த ரிசர்வ் தொகை 12,906 கோடி.
ஸ்பைஸ் ஜெட் குழுமம் 15,100 கோடிக்கு விண்ணப்பித்து ஏலத்தில் தோல்வியை தழுவியது.
டாடா குழுமம் 18,000 ஆயிரம் கோடிக்கு விண்ணப்பித்து ஏலத்தில் வென்று ஏர் இந்தியா நிறுவனத்தை தன் வசமாக்கி விட்டது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துவக்கம் என்றுப் பார்த்தால் டாடா குழுமத்தினுடையது தான் அது.
1932 இல் டாடா குழுமத்தால் டாடா ஏர்லைன்ஸ் என்று துவக்கப்பட்ட விமான நிறுவனம் தான் பின்னாளில் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசால் அந்நிறுவனம் அரசுடமையாக ஆக்கப்பட்டது.
புதிதாக அமையப் பெற்ற இந்திய அரசுக்கு என்று ஒரு தேசிய விமான நிறுவனம் வேண்டும் எனும் நோக்கில் வாங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸ் -ஏர் இந்தியா என்று பெயர் மாற்றமும் பெற்றது.
துவக்கத்தில் சரியாக போனாலும் நீண்ட காலத்திற்கு லாபகரமாக விமான நிறுவனத்தை நடத்த முடியவில்லை.
தனியார் விமான நிறுவனங்களின் படையெடுப்பிற்கு பிறகு ஏர் இந்தியா விமான நிறுவனம் களையிழந்து மக்களிடத்தில் வரவேற்பு இல்லாமல் போனது.
நாளொன்றுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இதுவரை சுமார் 70 ஆயிரம் கோடி கடன் சுமையில் ஏர் இந்தியா நிறுவனம் சிக்கித் தவித்தது.
எனவே தான் 1953 முதல் அரசின் முக்கிய பொதுத்துறை நிறுவனமாக விளங்கிய ஏர் இந்தியாவை விற்கும் முடிவை அரசு கையிலெடுத்து தற்போது விற்று விட்டது.
இது அரசுக்கு லாபமா? நஷ்டமா? என்பதை விட அரசின் நிர்வாக போதாமை என்று தான் பார்க்க வேண்டும்.
ஒரு தனியார் நிறுவனம் அரசின் புறத்திலிருந்து பல்வேறு சலுகைகளைப் பெற்று வெற்றிகரமாக தன் நிறுவனத்தை நடத்த முடிகிறது என்றால் அதுவே ஒரு அரசுக்கு ஏன் நடத்த இயலவில்லை.
சரியான உள் கட்டமைப்பு இல்லாதது, வாடிக்கையாளர்களைக் கவர்வதில் ஆர்வமில்லாதது, தரமற்ற விமானச் சேவை போன்றவையே நஷ்டத்திற்கு பெரிதும் காரணங்களாக உள்ளன.
மக்களுக்கு எந்தச் சேவையையும் சிறப்புடன் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தற்போதைய ஒன்றிய அரசுக்கு இல்லை.
இதைக் கேட்டால் அரசின் வேலை விமானச் சேவை அளிப்பதா என்கிறார்கள்.
அப்படி என்றால் அரசின் வேலை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்பது தானா?
இதையே காங்கிரஸ் கட்சி செய்த போது அன்று கடும் விமர்சனத்தை முன்வைத்த பாஜக, இப்போது காங்கிரஸை மிஞ்சும் அளவு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்கி வருகின்றது.
இப்போது ஒரு வழியாக ஏர் இந்தியாவை விற்றாகி விட்டது.
டாடா நிறுவனம் அளித்த தொகையின் மூலம் மொத்த கடனில் சுமார் 20 ஆயிரம் கோடி கழிகிறது. அவ்வளவு தான்.
அது தவிர நாளொன்றுக்கு ஏற்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்ட 20 கோடி ரூபாய் நஷ்டம் தவிர்க்கப்படுகிறது.
14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மதிப்பு மிக்க சொத்துகள் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உள்ளன. அந்தச் சொத்துகள் விற்கப்படவில்லை. அது அரசு வசமே உள்ளன.
எல்லாம் போக சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அரசுக்கு இன்னும் மீதமுள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை திறம்பட நிர்வகித்து அரசே லாபகரமாக நடத்தி இருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.
இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் பொதுத்துறை விமானச் சேவை இல்லை என்பது எப்படிப் பார்த்தாலும் அரசுக்கு நட்டமே.