அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவது எதிர்ப்பு கிளம்பினாலும் பிற்காலத்தில் அத்திட்டத்தினால் நன்மை உண்டு என்று மோடி சொல்கிறாரே?

சில திட்டங்கள் அப்போதைக்கு சரியில்லாதது போல தோன்றும். ஆனால் பிற்காலத்தில் அதே திட்டம் நாட்டிற்கு நன்மை பயப்பவையாக அமையும் என்று பெங்களூரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மக்களை வதைக்கும் வகையில் திட்டத்தை அறிவிப்பதும் மக்கள் அதற்கு எதிராக போராடும் போது இப்போது உங்களுக்கு புரியாது பிற்காலத்தில் இது நன்மை தரும் என்று கூறி சமாளிப்பதும் பிரதமருக்கு நன்கு பழக்கப்பட்டதாகும்.
இது போன்ற சமாளிப்புகளை மோடியிடமிருந்து மக்கள் கேட்பது ஒன்றும் புதிது கிடையாது.
ஐநூறு ஆயிரம் செல்லாது என்று அறிவித்த போது மக்கள் சிரமப்பட்டார்கள். சொல்லெனா துன்பங்களை அனுபவித்தார்கள். அப்போதும் இப்படித்தான் மக்கள் காதில் பூ சுற்றினார்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். கருப்பு பணத்தை எல்லாம் கொண்டு வந்து விடுகிறேன். அதற்கு பிறகு பாருங்கள் இதன் நன்மையை என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
ஆனால் என்னவானது?
கலர் கலராக நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டனவே தவிர கருப்பு பணம் கடைசி வரை வெளிவரவில்லை.
ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்ட போதும் இவ்வாறே இதன் நன்மை இப்போது புரியாது, விரைவில் பாருங்கள் நாடு சொர்க்கபுரியாக மாறப் போகிறது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்கள்.
ஜிஎஸ்டியால் அன்று வீழ்ந்த வியாபாரிகள் இன்று வரை எழவேயில்லை.
வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போது விவசாயிகள் நாடு முழுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இது நல்ல சட்டம். பின்னாளில் இச்சட்டத்தினால் பல நன்மைகள் ஏற்படும். ஆனால் பாவம் விவசாயிகளுக்கு இது புரியவில்லை என்றார் மோடி.
விவசாயிகள் மோடியின் பேச்சை நம்ப தயாராக இல்லை. எனவே போராட்டம் தொடர்ந்தது. ஒன்றிய அரசால் அச்சட்டம் திரும்ப பெறப்பட்டது.
புதிய தேசத்தைக் கட்டமைக்க இது போன்ற சட்டங்கள் தேவை என்று கூறியே இதுவரை நாட்டை சீரழித்துள்ளனர். பாஜக அரசு கொண்டு வந்த கருப்பு சட்டங்களால் நாட்டிற்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. அச்சட்டங்களால் கட்சிக்கும் பெருமுதலாளிகளுக்கும் தான் நன்மையளித்தன என்பதை மக்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.
இப்போது அக்னிபத் திட்டத்தையும் அது போல பேசி மக்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றார்.
அக்னி வீரர்களுக்கு ஒப்பந்தக்கால நான்கு வருடங்களுக்கு பிறகு பாஜக அலுவலகத்தைப் பாதுகாக்கும் வேலை கிடைக்கும் என்றும் மஹிந்திராவில் வேலை வாய்ப்பு, உள்துறையில் வேலை வாய்ப்பு என்றெல்லாம் சம்பந்தமே இல்லாமல் ஆசை வார்த்தைகளை கூறிவருகின்றனர்.
பாஜக அலுவலகத்தை பாதுகாக்க எதற்கு நான்கு வருட இராணுவ பயிற்சி?
மஹிந்திரா நிறுவனத்தில் வேலை பார்க்க இராணுவ பயிற்சி தேவையா?
அப்படியென்றால் இவர்கள் இந்த நான்கு வருடத்தில் இராணுவ வீரர்களை உருவாக்கவில்லை. பாஜகவின் எடுபிடிகளை உருவாக்கப்பார்க்கிறார்கள்.
வடமாநிலங்களில் பற்றி எரியும் போராட்டத்தைப் பார்க்கும் போது மோடியின் பேச்சை, ஆசை வார்த்தைகளை மக்கள் நம்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.