அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன?

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் இடையே நடக்கும் அதிகாரப் பதவியின் மீதான நீயா நானா போட்டியின் தொடர்ச்சிதான் இந்த ஒற்றைத்தலைமை பிரச்சனை.
கடந்த சில காலங்களாகவே அவ்விருவருக்குமிடையே கருத்தொற்றுமை இல்லை.
அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை அவரே முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவராக, கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார்.
அவரது மறைவிற்குப் பிறகு சிறிது காலம் சசிகலா அப்பொறுப்பு வகித்தார்.
அதன் பின் கட்சியில் ஏற்பட்ட பல்வேறு களேபரங்களுக்குப் பிறகு சசிகலா அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன.
ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தேர்வு செய்யப்பட்டு கட்சி விவகாரங்கள் எதுவாக இருந்தாலும் இவ்விருவருக்கும் முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.
எனினும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கட்சியின் பல்வேறு விவகாரங்களில் எதிரும் புதிருமாகவே செயல்பட்டு வந்தனர்.
ஒரு பிரச்சனைக்கு இருவரும் தனித்தனியாக அறிக்கை விடுமளவு சண்டை முற்றியது. எனவே தான் இந்தக் குழப்பம்.
தற்போது அதிமுகவின் பொதுக்குழு நெருங்குவதால் இந்த குழப்பத்திற்கு முடிவு காண முற்படுகிறார்கள்.
ஆட்சியில் இருந்த காலம் வரை இந்தப் பிரச்சனைக்கு முடிவு காண யாரும் விரும்பவில்லை. ஏனெனில் அப்போது கட்சிப்பூசல் ஏற்பட்டால் அது ஆட்சியை பாதிக்கும். அதிகாரத்தில் இருந்து கொண்டு பெறும் நன்மைகளை எவரும் பெற முடியாமல் போகும். அதற்காக குடுமிப்பிடி சண்டையை ஜென்டிலாக தவிர்த்து வந்தனர்.
ஓபிஎஸ் ஐ சரிகட்ட துணை முதல்வர் பதவியை அவருக்கு வழங்கும்படி கூறிய பாஜகவின் அறிவுரையை அதிமுக ஏற்றுக் கொண்டது. மத்திய அரசிடமிருந்து எந்த நெருக்கடியும் வரக்கூடாது என்பதற்காக பாஜக நீட்டிய இடங்களில் எல்லாம் அதிமுக கையெழுத்திட துணிந்ததால் இந்த அறிவுரையை ஏற்பது அதிமுகவிற்கு சிரமமாக இல்லை.
இவ்வாறு தொடர்ந்து இரட்டைத் தலைமையில் சவாரி செய்த அதிமுக தமிழக நலனுக்கு எதிராகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் பல்வேறு சட்டங்கள் நாட்டில் அமலாக பாஜகவிற்கு உறுதுணையாக இருந்தது.
கட்சியின் பிடியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் ஓரளவு கொண்டு வந்து விட்ட எடப்பாடி இனியும் இரட்டைத்தலைமை சரிவராது என்று கருதியதாலே இப்போது ஒற்றைத்தலைமை பிரச்சனை எழுந்துள்ளது.
அது தானாக எழவில்லை. பொதுக்குழுவை முன்னிட்டு திட்டமிட்டு எழுப்பப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளை கவனிக்கும் போது எதிர்வரும் 23 ம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவில் எப்படியும் கட்சியின் அதிகாரம் எடப்பாடி வசம் சென்று விடும். ஏனெனில் கட்சியின் முக்கிய பிரமுகர்களின் பெருவாரியான ஆதரவு ஓபிஎஸ்க்கு இல்லை என்பதாகத்தான் தெரிகிறது.
ஓபிஎஸ் ஐ சமாதானம் செய்ய முன்பை போலவே அதிகாரமற்ற ஏதேனும் பொறுப்பை வழங்குவர். ஒன்று அதை ஏற்றுக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு காலம் கடத்தலாம் அல்லது அதை எதிர்த்துக் கலகம் செய்யலாம்.
அவர் கலகம் செய்தாலும் தொண்டர்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறதா? கட்சியில் அது எந்தளவு தாக்கத்தை உண்டாக்கும் என்பது சந்தேகமே.
எது நடந்தாலும் அது பாஜகவிற்கு சாதகமாகவே அமையும்.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி பாஜகதான் எனும் பிம்பத்தை ஊடகங்களின் துணை கொண்டு கட்டமைத்து வருகின்றனர்.
ஓபிஎஸ் ஈபிஎஸ்ஐ விட அண்ணாமலையை பெரும் ஆளுமையாக ஊதிப்பெரிதாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு தமிழக ஊடகங்களும் துணை போகின்றன.
இந்த நிலையில் அதிமுக பிளவுபடும் போது அதில் அதிருப்தியுறும் கணிசமான அதிமுக தொண்டர்கள் பாஜக வசம் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளது.
அதிமுகவை கபளீகரம் செய்து அதன் பலனை தான் அறுவடை செய்ய வேண்டும் எனும் திட்டத்தை பாஜக எப்போதோ துவங்கி விட்டது. அதில் இதுவும் ஒரு அங்கம்.
ஒரு வாதத்திற்கு ஓபிஎஸ் தனித்து விடப்பட்டாலோ அல்லது ஈபிஎஸ் ன் ஒற்றைத்லைமையை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டாலோ அப்போதும் பாஜகவிற்கு பெரிதான இழப்பு ஏதுமில்லை.
ஏனெனில் தற்போது வரை பாஜகவின் கூட்டணி (பிடி) யில் தான் அதிமுக உள்ளது.
முன்பு இரட்டைத்தலைமையில் அதிமுக உள்ள போது தமிழக மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எப்படி துரோகமிழைத்தார்களோ அதையே தான் தற்போது ஒற்றைத்தலைமையில் செய்யப் போகிறார்கள்.
பாஜகவுடன் கூட்டணி வைத்து இதுவரை செய்த துரோகங்களுக்கு பரிகாரம் செய்யும் விதமாக பாஜகவின் பிடியிலிருந்து முழுவதுமாக விடுபட்டு அதிமுக செயல்படத்துவங்கினால் தமிழக மக்களின் ஆதரவை கொஞ்சமேனும் பெறலாம்.
ஏனெனில் பாஜகவுடன் கூட்டு வைத்த காரணத்தால் தான் மக்களவை தேர்தலில் 39 ல் ஒரு இடத்தை மட்டுமே பெற முடிந்தது. ஆட்சி அதிகாரத்தை இழக்கும் நிலையும் ஏற்பட்டது.
இனியும் பாஜகவை தமது முதுகில் ஏற்றிக் கொண்டு தமிழகத்தில் பவனி வந்தால் அது அதிமுகவை குழிதோண்டி புதைப்பதற்கு சமமானதாகும்.
எதிர்வரும் பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விட தங்களை இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்திய பாஜகவுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீர்வு காண வேண்டும்.
அதுவே அதிமுக எனும் கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது