அத்தியாயம் : 80
வசனங்களின் எண்ணிக்கை: 42
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1, 2. பார்வையற்ற ஒருவர் தன்னிடம் வந்ததற்காக (நபியாகிய) இவர் கடுகடுத்தார்; புறக்கணித்தார்.611
3, 4. ‘அவர் தூய்மையடையலாம்; அல்லது (உம்மிடமிருந்து) நற்போதனையைப் பெற்று, அந்த நற்போதனை அவருக்குப் பயனளிக்கலாம்’ என்பதைப் பற்றி (நபியே) உமக்கு எது அறிவிக்கும்?
5, 6. யார் (உமது அறிவுரையைத்) தேவையற்றதாகக் கருதுகிறாரோ அவரிடம் நீர் கவனம் செலுத்துகிறீர்!
7. அவர் தூய்மையடையா விட்டால் உம்மீது குற்றமில்லை.
8, 9, 10. (அல்லாஹ்வை) அஞ்சியவராக உம்மிடம் விரைந்து வந்தவரை நீர் கண்டுகொள்ளவில்லை.
11. அவ்வாறல்ல! இது ஓர் அறிவுரையாகும்.
12. யார் விரும்புகிறாரோ அவர் இதைச் சிந்திப்பார்.
13, 14. (இது) கண்ணியமிக்க, உயர்வான, தூய ஏடுகளில் இருக்கிறது.
15, 16. (அவை வானவர்கள் எனும்) சங்கைக்குரிய நல்லோர்களாகிய எழுத்தர்களின் கைகளில் உள்ளன.612
17. மனிதன் சபிக்கப்பட்டு விட்டான். அவன் எவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கிறான்?
18, 19. அவனை எதிலிருந்து (அல்லாஹ்) படைத்தான் (என்பதைச் சிந்தித்தானா)? விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்தான். பின்னர் அவனைச் சரியாக அமைத்தான்.
20. பின்னர் அவனுக்குப் பாதையை எளிதாக்கினான்.
21. பின்னர் அவனை மரணிக்கச் செய்து, அவனை மண்ணறையில் கொண்டு சேர்த்தான்.
22. பின்னர் அவன் நாடும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
23. எனினும், அல்லாஹ் ஏவியவற்றை அவன் நிறைவேற்றவில்லை.
24. தனது உணவைப் பற்றி மனிதன் சிந்திக்கட்டும்.
25. நாமே மழையை நன்கு பொழியச் செய்தோம்.
26. பின்னர் பூமியை நன்றாகப் பிளந்தோம்.
27, 28, 29, 30, 31, 32. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக அதில் தானியத்தையும், திராட்சையையும், காய்கறிகளையும், ஆலிவ், பேரீச்சை மரங்களையும், அடர்ந்த தோட்டங்களையும், பழத்தையும், புற்பூண்டையும் முளைக்கச் செய்தோம்.
33, 34. 35, 36. அந்நாளில் பெரும் சப்தம் ஏற்படும்போது, தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு மனிதன் வெருண்டோடுவான்.
37. அந்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும், (பிறரைக் கவனிக்காமல்) தன்னைப் பற்றியே கவனம் செலுத்தும் ஒரு நிலைதான் இருக்கும்.613
38, 39. அந்நாளில் சில முகங்கள் ஒளிமயமாக இருக்கும்; மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருக்கும்.
40, 41. அந்நாளில் வேறுசில முகங்களின்மீது புழுதி படிந்திருக்கும். அவற்றை இருள் சூழ்ந்திருக்கும்.
42. அவர்களே இறைமறுப்பாளர்கள்; பாவிகள்.