பலதார மணம், நிகாஹ் ஹலாலாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதே ?

சங்பரிவார கும்பல்களின் பிரதிநிதி அஸ்வினி உபாத்யாய எனும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இவர் பொதுநல வழக்கு என்று தாக்கல் செய்பவற்றில் எதிலொன்றிலும் உண்மையில் எவ்வித பொதுநல நோக்கும் இருக்காது.
முஸ்லிம்களின் உரிமைகளைக் குறிவைத்தே இவர் தொடுக்கும் வழக்குகள் ஒவ்வொன்றும் இருக்கும் என்பது கடந்த காலத்தில் இவர் தொடுத்த வழக்குகளைக் கவனித்தாலே தெரியும்.
இந்த முறையும் விதிவிலக்கல்ல.
முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பலதார மணம் மற்றும் நிகாஹ் ஹலாலா ஆகியவற்றை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அவர் வழக்கு தொடுத்துள்ளார்.
ஏற்கனவே இந்த மனு ஐவர் அடங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அமர்வுக்கு வந்தது. அதில் நீதிபதி பானர்ஜி மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளதால் அதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அஸ்வினி உபாத்யாய மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.
பல முக்கிய வழக்குகள் ஐந்து நீதிபதிகளின் அமர்வில் இருப்பதால் இந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட புதிய அரசியல் சாசன அமர்வு உருவாக்கப்படும்” என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வாகும். எனவே இப்போது பலதார மணம் குறித்தும் நிகாஹ் ஹலாலா குறித்தும் பல்வேறு கருத்துகள் வெளிவரத் துவங்கியுள்ளன.
பலதார மணத்தை தடை செய்ய வேண்டும் என்ற அவர்களின் முதல் வாதத்தை எடுத்துக் கொள்வோம்.
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை திருமணம் செய்து கொள்ள நாட்டின் சட்டம் அனுமதிக்கவில்லை. ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு மனைவியையோ மூன்று மனைவியையோ வைத்திருக்க சட்டத்தில் இடமில்லை. சட்டப்படி குற்றமாகும். ஆனால் முஸ்லிம் தனியார் சட்டப்படி முஸ்லிம்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியை திருமணம் செய்து கொள்ள அனுமதி உள்ளது. அதிகபட்சம் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்து கொள்ள அரசியல் சாசனம் அனுமதி வழங்குகின்றது.
இதைத்தான் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள்.
இரண்டு மனைவியை வைத்திருந்தால் மற்றவர்களுக்கு எது குற்றமோ அது முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி என்பது சரியல்ல என்பது அவர்களின் வாதம்.
முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பலதார மணம் என்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயம்தான். மனைவியரிடையே நீதமாக நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இஸ்லாம் அதை அனுமதிக்கின்றது.
மற்றபடி எல்லா முஸ்லிம்களும் இரண்டு மூன்று மனைவியரை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.
நமது நாட்டில் முஸ்லிம்களுக்கு பல திருமணம் செய்து கொள்ள அனுமதி உள்ளது என்பதால் எல்லா முஸ்லிம்களும் இரண்டு மூன்று மனைவிகளுடன் சுற்றித்திரிந்துக் கொண்டிருக்கவில்லை. எல்லோரையும் போல ஒரு மனைவியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அரிதாக ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரை திருமணம் செய்திருப்பார்கள். அது கூட ஒப்பீட்டளவில் மிக மிக குறைவு. இந்து கிறித்தவ சமுதயாத்தை விடவும் முஸ்லிம்களிடம் பலதார மணம் என்பது மிக குறைந்த அளவிலேயே உள்ளது.பல்வேறு ஆய்வுகள் புள்ளிவிபரங்கள் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றன.
முஸ்லிம்களிடம் அரிதிலும் அரிதாக உள்ள ஒன்றைத் தடுக்க எதற்கு சட்டம் என்பதை யோசித்தால் பலதார மணத்தை தடுக்க எந்தச் சட்டமும் தேவையில்லை என்பதை அறியலாம்.
முஸ்லிம்களின் நடைமுறையில் இல்லாத ஒன்று என்றால் அதை சட்டத்தின் மூலம் தடுப்பதால் முஸ்லிம்களுக்கு என்ன பாதிப்பு என்று கேட்கலாம்.
பலதார மணம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சில பழங்குடிகளுக்கும் சட்டத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்போது அதைத் தடுத்து சட்டம் கொண்டு வந்தால் இதன் மூலம் பொய் வழக்குகளை சுமத்தி முஸ்லிம்களையும் பழங்குடிகளையும் சிறையில் தள்ள சட்டத்தின் மூலம் வழியேற்படும்.
பாஜக அரசு தற்போது கொண்டு வருகிற எல்லா சட்டமும் முஸ்லிம்களை ஒடுக்கும் நோக்கிலேயே கொண்டு வருகிறது.
முத்தலாக் தடை சட்டம், என்.ஐ.ஏ சிறப்பு அதிகாரம், சிஏஏ கருப்பு சட்டம் என அனைத்தும் பாஜக அரசால் முஸ்லிம்களை அச்சுறுத்த மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பதை கவனித்தால் பலதார மணத்தை தடுக்க சட்டம் கொண்டு வருவதன் நோக்கம் புரியும்.
டெல்லி, உ.பி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்கிரமிப்பு எனும் பெயரில் முஸ்லிம்களின் குடியிருப்புகளை மட்டும் புல்டோசர்களால் பதம் பார்ப்பதிலிருந்தே இவர்களின் யோக்கியதை என்ன என்பது பளிச்சிடுகிறது.
எனவே இவர்கள் இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துவார்கள்
பாஜகவை எதிர்க்கும் முஸ்லிம்களையும் பழங்குடிகளையும் ஒடுக்கவே இச்சட்டம் பயன்படும். மற்றபடி வேறு யாரையும் இந்தச் சட்டம் கண்டு கொள்ளாது.
அறிவு ரீதியாக சிந்தித்துப் பார்த்தால் பலதார மணம் என்பது சட்டத்தின் மூலம் தடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக அவசியமான சந்தர்ப்பங்களில் சில நிபந்தனைகளுடன் சட்டத்தின் மூலம் அனுமதி வழங்க வேண்டிய ஒன்றேயாகும்.
சட்டம் போட்டு தடுக்கும் அளவு பலதார மணத்தில் எதுவும் இல்லை.
பலதார மணத்தை ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்டால் அதற்கு இவர்கள் கூறும் காரணம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான்.
கள்ளக்காதல் தவறில்லை என்று சொல்லும் போது பெண்கள் பாதிக்கப்படுவதில்லையா?
ஓரினச் சேர்க்கை தவறில்லை என்று சொல்லும் போது பெண்கள் பாதிக்கப்படுவதில்லையா?
வயதுக்கு வந்த இருவர் விரும்பி விபச்சாரம் செய்வது குற்றமில்லை என்று சொல்லும் போது பெண்கள் பாதிப்படைவதில்லையா?
சட்டம் இவைகளை அனுமதித்துள்ளதே?
இவைகள் மூலமாக எல்லாம் பாதிப்பு அடையாத பெண்கள் பலதார மணம் அனுமதிப்பதன் மூலம் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்பது அறிவார்ந்த வாதமா?
உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முறைப்படுத்தி சட்டத்தின் மூலம் அனுமதி வழங்கும் போது பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது.
இரண்டாவது மனைவியை திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை என்று சொல்லும் போது திருமணம் இல்லாமல் முறையற்ற உறவுகளில் ஈடுபடுகிறார்கள். முதல் மனைவிக்கு தெரியாமல் மற்ற பெண்களுடனும் உறவில் இருக்கிறார்கள். கேடு கெட்ட இந்த நடைமுறையை சட்டமும் தடை செய்யவில்லை.
இதன் மூலம் முதல் மனைவி பாதிப்படைவதுடன் இரண்டாவது மனைவிக்கும் முறைப்படி எந்த உரிமையும் இல்லாமல் போய்கிறது.
மனைவி என்கிற அந்தஸ்து கிடைப்பதில்லை.
அவனின் சொத்தில் பங்கு கோர முடியாது.
அவன் மூலம் குழந்தை பெற்றெடுத்தால் அந்தக் குழந்தைக்கு சமுதாயத்தில் கெட்ட பெயர் ஏற்படுவதுடன் அவனுக்கும் பொருளாதார ரீதியாக தந்தையின் சொத்தில் எந்த உரிமையும் இல்லாமல் போகிறது.
இதுவே முறைப்படி இரண்டாவது திருமணத்தை அனுமதிக்கும் போது அவளுக்கும் அங்கீகாரம் கிடைக்கின்றது. அவளது பிள்ளைகளுக்கும் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்கின்றது.
இந்த வகையில் இரண்டாவது திருமணத்தை அனுமதிப்பது பெண்களுக்கு பாதுகாப்பாகவே அமைகின்றது.
பெண்களுக்கு கடும் பாதிப்பை உண்டாக்கும் கள்ளக்காதல், ஓரினச்சேர்க்கை, விபச்சாரம் உள்ளிட்டவைகளை தடுக்காமல் முறைப்படி திருமணம் புரிவதை தடுக்க முனைவது கேலிக்குரியதும் உள்நோக்கம் கொண்டதுமாகும்.
நிகாஹ் ஹலாலா என்றால் என்ன என்பதையும் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.
இஸ்லாத்தில் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் விவாகரத்து முறைகள் சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மைகளையும் சட்டங்களையும் கொண்டதாகும்.
ஒரு ஆண் தனது மனைவியை விவகாரத்து செய்வதற்கு பல நிபந்தனைகள் உள்ளன.
அனைத்து நிபந்தனைகளும் பொருந்திப்போகும் போது அவன் தன் மனைவியை விவகாரத்து செய்யலாம். அது தான் தலாக் என்று சொல்லப்படுகிறது.
ஒரு கணவன் தலாக் சொல்லும் போது உடனே தம்பதியருக்குள் மணமுறிவு ஏற்பட்டு விடாது. அதற்கு பிறகு மூன்று மாத கால இடைவெளி உள்ளது. அந்த மூன்று மாத இடைவெளியில் விரும்பினால் கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து கொள்ளலாம்.
தலாக் கூறி மூன்று மாதங்களாகியும் இருவரும் சேர வில்லை எனில் அவர்கள் இருவரும் முறைப்படி பிரிந்து விடுவார்கள். அவர்களுக்குள் கணவன் – மனைவி என்கிற பந்தம் இல்லை என்றாகி விடும்.இவ்வாறு தலாக் எனும் விவகாரத்து ஆன தம்பதியர்கள் சில வருடங்கள் கடந்த பிறகு இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் இஸ்லாம் அதற்கு தடையாக இல்லை. அவர்கள் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழலாம்.
அவ்வாறு சேர்ந்து வாழும் போது மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு கணவன் தலாக் கூற விரும்பினால் முன்பு சொன்னதை போல நிபந்தனைகள் பொருந்திப் போகும் போது தலாக் கூறலாம்.
சாட்சிகள் முன்னிலையில் தலாக் கூறிய உடனேயே கணவன் மனைவி உறவு முறிந்து விடாது.
முன்பு சொன்னதைப் போலவே இதற்கும் மூன்று மாத கால அவகாசம் உள்ளது.
விரும்பினால் அந்த அவகாசத்திற்குள் தாராளமாக சேரலாம். அந்த அவகாசம் தாண்டி விட்டால் அவர்களுக்குள் இருந்த திருமண பந்தம் முறிந்து விடும்.
இவ்வாறு இரண்டாவது தலாக் கூறிய நிலையில் சில வருடங்கள் கடந்த பிறகு அதே கணவன் – மனைவி மீண்டும் சேர விரும்பினால் அப்போதும் சேர வாய்ப்பு உள்ளது.
மீண்டும் திருமணம் செய்துக் கொண்டு சேர்ந்து கொள்ளலாம்.
மூன்றாவது முறையும் அவர்களுக்கும் கடும் பிரச்சனை ஏற்பட்டு தலாக் சொல்லும் நிலை வந்தால் மூன்றாவது தலாக்கிற்கு தான் இஸ்லாம் கடும் நிபந்தனையை விதிக்கின்றது.
மூன்றாவது தலாக் என்பது கணவனுக்கு வழங்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பாகும். அதை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி விடக்கூடாது.
மூன்றாவது தலாக் கூறிவிட்டால் முன்பு சொன்னதைப் போல மூன்று மாத கால அவகாசம் ஏதும் இந்த முறை கிடையாது.
சாட்சிகள் முன்னிலையில் தலாக் கூறியதும் (அதாவது இந்த மூன்றாவது வாய்ப்பை பயன்படுத்தியதும்) உடனே திருமண பந்தம் முறிந்து விடும்.
அதன்பிறகும் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் அப்போது கடும் நிபந்தனை அமலாகி விடும்.
முந்தைய கணவனால் தலாக் சொல்லப்பட்ட பெண் இன்னொரு ஆணை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் தான் முந்தைய கணவன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்திய பிறகு அந்தப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமானால் அவள் இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் திருமணம் செய்ய முடியாது என்பது தான் அந்த நிபந்தனை.
இதைத் தான் சொல்வழக்கில் நிகாஹ் ஹலாலா என்கிறார்கள்.
ஒரு ஆண் தனது மனைவியை சேர்வதற்கு இவ்வளவு கடும் நிபந்தனை தேவை தானா? என்பதே இதை எதிர்ப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஒரு ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டாலேயே இது தான் நடைமுறை என்று சொல்லப்படுவதில்லை.
முதல் இரண்டு வாய்ப்புகளின் போது இவ்வாறு எந்த நடைமுறையும் நிபந்தனையும் இல்லை. ஆணுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று வாய்ப்புகளில் இறுதி வாய்ப்பை பயன்படுத்தினால் தான் இந்த நடைமுறை அமலாகும்.
இப்படியொரு கடும் நிபந்தனை விதித்தால் தான் ஆண் தனது மனைவியை எடுத்ததெற்கெல்லாம் விவாகரத்து என்று செல்ல மாட்டான்.
உண்மையில் இந்த நடைமுறை சொல்லப்படும் போது ஆணுக்கு கடிவாளம் போடப்படுகிறது.
மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்திவிட்டால் விவாகரத்து சொல்லும் உன் மனைவியை அவ்வளவு எளிதில் சேர முடியாது என்று சொல்லும் போது சின்ன சின்ன பிரச்சனைகளின் போதெல்லாம் ஒரு ஆண் விவகாரத்து எனும் பாதையை தேர்வு செய்ய மாட்டான்.
ஒன்றுக்கு பல முறை யோசிப்பான். அதற்காகவே இந்தச் சட்டம் கூறப்படுகிறது.
இது தேவையான கடிவாளம் தான். இந்தப் பெண்களுக்கு எந்த அநீதியும் இல்லை.
இதை கடும் நிபந்தனை, பெண்களுக்கு பாதிப்பு என்பவர்கள் இஸ்லாத்தில் இல்லாத முத்தலாக் கூறினால் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை என்று சட்டமியற்றியதை வரவேற்றது எவ்விதம் என்பதை விளக்குவார்களா?
பத்தாண்டுகள் அவன் சிறைக்கு சென்றால் அந்தப் பெண் பாதிக்கப்பட மாட்டாளா?
அதை வரவேற்று விட்டு மூன்று தலாக்கிற்கு பிறகு இஸ்லாத்தில் சொல்லப்பட்ட நடைமுறையை விமர்சிப்பது முரணில்லையா?
இதில் உண்மை என்னவென்றால் மூன்று தலாக்கிற்கு பிறகு இஸ்லாத்தில் கடைபிடிக்குமாறு சொல்லப்பட்ட நடைமுறையே சிறந்த நடைமுறையாக உள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டத்தை மொத்தமாக காலி செய்ய வேண்டும்; அதற்கு என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்.
ஒட்டு மொத்தமாக முஸ்லிம் தனியார் சட்டம் செல்லாது என்று சொல்வதை விடவும் அதில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு சலுகையாக பறித்து இல்லாமல் ஆக்கும் குள்ளநரித்தனத்தையே தற்போது அரங்கேற்றிவருகிறார்கள் பாஜகவின் கைக்கூலிகள்.
பலதார மணம், நிகாஹ் ஹலாலா சர்ச்சையும் தற்போது அதையே வெளிப்படுத்துகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம். உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளை எவ்வாறு கையாள்கிறது என்று!