7372. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்’ என்றார்கள்.3
Book :97