பாடம் : 2 நீங்கள் அவன் பக்கமே (பாவமன்னிப்புக் கோரி) திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்துகொள் ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போ ரில் நீங்களும் ஆகிவிடாதீர்கள் எனும் (30:31ஆவது) இறைவசனம்.
523. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துல் கைஸ் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘நாங்கள் ரபீஆ எனும் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். (போரிடுதல்) விலக்கப்பட்ட மாதத்தில் தவிர (ஏனைய மாதங்களில்) உங்களிடம் நாங்கள் வர இயலாது. எனவே உங்களிடமிருந்து பெற்றுச் சென்று எங்களுக்குப் பின்னாலுள்ளவர்களையும் அதன் பால் அழைக்கக்கூடிய விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிடுங்கள்!’ என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான்கு காரியங்களை உங்களுக்கு ஏவுகிறேன். அவையாவன: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதியாக நம்புவது தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் கொடுத்து வருவது, கனீமத் (போரில் வென்ற பின் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட) பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியை பொதுமக்கள் நன்மைக்காக) என்னிடம் ஒப்படைத்து விடுதல், நான்கு காரியங்களைவிட்டு உங்களை நான் தடுக்கிறேன். அவையாவன: (மது பானங்கள் வைத்திருந்த) சுரைக்குடுக்கை, வாய் குறுகலான சுட்ட மண் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம், பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியைக் குடைந்து செய்யப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(ப் பயன்படுத்துவதை)விட்டும் உங்களைத் தடுக்கிறேன்’ என்று கூறினார்கள்.
குறிப்பு: போதைப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப் பட்ட இப்பாத்திரங்களைப் பயன்படுத்தலாகாது என்ற தடை, பின்னர் நபி(ஸல்) அவர்களால் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்க!)
Book : 9