பாடம் : 1 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் அருளப்பெற்ற இறைஅறிவிப்பு (வஹீ) உண்மைக் கனவாவே இருந்தது.
6982. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாள்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் திடீரென்று (ஒருநாள்) வரும்வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம், ‘ஓதும்’ என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே’ என்று அவருக்கு பதிலளித்தார்கள்.
(அப்போது நடந்த சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:)
அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு ‘ஓதும்’ என்றார். அப்போதும் ‘நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே’ என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு, ‘ஓதும்’ என்றார். அப்போதும், ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே’ என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு ‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதும்..’ என்று தொடங்கும் (96 வது அத்தியாயத்தின்) வசனங்களை ‘மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்’ என்பது வரை (திருக்குர்ஆன் 96:1-5) ஓதினார்.
(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்’ என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டகன்றது. அப்போது, ‘கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா(ரலி) அவர்கள், ‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவுகிறீர்கள்’ என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவரின் புதல்வர் ‘வரக்கா’விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.
‘வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை(ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்’ என்றார்கள். அப்போது வரக்கா நபி(ஸல்) அவர்களிடம் ‘என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி(ஸல்) அவர்களிடம் ‘(நீர் கண்ட) இவர்தாம் (இறைத் தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!’ என்று கூறினார்.
இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?’ என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் ‘ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்’ என்று பதிலளித்தார்.
அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி(ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தோன்றி, ‘முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம்’ என்று கூறுவார்கள். இதைக் கேட்கும்போது நபி(ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போன்றே கூறுவார்கள்.2
(இந்த ஹதீஸின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள ‘ஃபலகுஸ் ஸுப்ஹ்’ (அதிகாலைப் பொழுதின் விடியல்) என்பதைப் போன்றே குர்ஆனில் 6:96 வது) வசனத்தில் இடம் பெற்றுள்ள) ‘ஃபாலிகுல் இஸ்பாஹ்’ (என்பதிலுள்ள ‘இஸ்பாஹ்’) எனும் சொல்லுக்குப் பகலில் சூரிய வெளிச்சம்; இரவில் நிலா வெளிச்சம்’ என்று பொருளாகும் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Book : 91