பாடம் : 3 பரிகாரத்தை நிறைவேற்றுவதற்காக ஏழைக்கு உதவுதல்
6710. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் அழிந்து விட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘என்ன அது?’ என்று கேட்டார்கள். ‘நான் ரமளானில் (நோன்பு வைத்துக் கொண்டே) என் மனைவியைப் புணர்ந்துவிட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘(விடுதலை செய்வதற்கு) ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘இல்லை’ என்றார். பின்னர் அன்சாரிகளில் ஒருவர் ‘அரக்’ ஒன்றைக் கொண்டு வந்தார். -‘அரக்’ என்பது பேரீச்சம் பழம் உள்ள கூடை ஆகும். -அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இதைக் கொண்டு சென்று தர்மம் செய்வீராக!’ என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் எங்களைவிடப் பரம ஏழை வீட்டார் யாருமில்லை!’ என்று கூறினார். பிறகு ‘நீ போய் இதை உம் குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுப்பீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.6
Book : 86