பாடம் : 2 செல்வரின் மீதும் ஏழையின் மீதும் எப்போது பரிகாரம் கடமையாகும்? அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (தக்க பரிகாரங்களுடன்) முறித்துக்கொள்வதை உங்களுக்கு அனுமதித்திருக்கின்றான். அல்லாஹ்வோ உங்கள் எஜமானன். அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (66:2)
6709. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘நான் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டே) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்’ என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் முடியுமா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் முடியுமா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அவர் ‘இல்லை’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘அமர்வீராக!’ என்றார்கள். அவரும் அமர்ந்தார்.
பின்னர் நபி(ஸல்) அதவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ ஒன்று கொண்டுவரப்பட்டது.
-‘அரக்’ என்பது பெரிய கூடை ஆகும்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!’ என்று கூறினார்கள். அம்மனிதர் ‘(இறைத்தூதர் அவர்களே!) என்னைவிட ஏழையாக இருப்போருக்காக (நான் தர்மம் செய்ய வேண்டும்)?’ என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு ‘இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!’ என்றார்கள்.5
Book : 86