84:6708 சத்திய (முறிவுக்கான) பரிகாரங்கள்

பாடம் : 1 அதன் பரிகாரமாவாது: உங்கள் குடும்பத்தாருக்கு நீங்கள் அளிக்கும் உணவில் நடுத்தரமான உணவைப் பத்து ஏழைகளுக்கு அளித்திட வேண்டும்; அல்லது அவர்களுக்கு ஆடை அளித்திட வேண்டும்; அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்திட வேண்டும். (இதில் எதற்குமே சக்தி) பெறாவிட்டால் மூன்று நாட்கள் நோன்பு நோற்றிட வேண்டும் எனும் (5:89ஆவது) இறைவசனமும், நோன்பு நோற்றல், அல்லது தர்மம் செய்தல், அல்லது ப-யிடல் (ஹஜ்ஜில் ப-யிடுவதற்கு முன்பே தலைமுடி களைவதற்குப்) பரிகாரமாகும் எனும் (2:196ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளையும்.2 இப்னு அப்பாஸ் (ரலி), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்), இக்ரிமா (ரஹ்) ஆகியோர் (மேற்கண்ட வசனங்களைப் போன்று) குர்ஆனில் அல்லது’, அல்லது’ என எங்கெல்லாம் வந்துள்ளதோ அங்கெல்லாம் சம்பந்தப்பட்டவருக்கு (அங்கு குறிப்பிடப் பட்டவற்றில் ஒன்றைக் தேர்ந்தெடுக்க) விருப்ப உரிமை உண்டு என்று கூறியுள்ளனர். நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில் தலைமுடி களைந்ததற்கான) பரிகாரம் தொடர்பாக கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களுக்கு விருப்ப உரிமை அளித்தார்கள்.3 
6708. கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார். 
நான் (ஹஜ்ஜின்போது) நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் ‘அருகில் வா!’ என்று அழைத்தார்கள். எனவே, நான் அவர்கள் அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘உம்முடைய (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அவர்கள் ‘நோன்பு நோற்றல், அல்லது தர்மம் செய்தல், அல்லது பலியிடல் பரிகாரமாகும்’ (திருக்குர்ஆன் 02:196) என்றார்கள். 
அய்யூப்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு என்பது மூன்று நாள்கள் நோன்பு நோற்பதையும், பலியிடல் என்பது ஓர் ஆட்டைக் குர்பானி கொடுப்பதையும், தர்மம் என்பது ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பதையும் குறிக்கும். 
Book : 84