8:351 தொழுகை

பாடம் : 2 ஆடை அணிந்து தொழுவதன் அவசியமும், ஆதமுடைய மக்களே! தொழும் இடந் தோறும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள் எனும் (7:31ஆவது) இறைவசனமும், ஒரே ஒரு துணியை அணிந்து தொழுவதும். (ஒரே ஒரு துணி மட்டும் அணிந்து தொழும் ஒருவர்) ஒரு முள்ளினாலாவது அதை மூட்டிக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சலமா பின் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சர்ச்சைக்குரியதாக உள்ளது. ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு மேற் கொண்ட ஆடையில் அசிங்கம் எதையும் காணாத வரை அதை அணிந்து கொண்டு தொழலாம். நிர்வாணர்கள் எவரும் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். 
351. இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்’ என்றும் கட்டளையிடப்பட்டோம். 
நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?’ எனக் கேட்டதற்கு, ‘அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்’ என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். 
Book : 8