எட்டு ஆண்டு கால ஆட்சியில் தலைக்குனிவை ஏற்படுத்தும் நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை என்கிறாரே பிரதமர் மோடி?

குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது தான் இவ்வாறு கூறியுள்ளார்.
பாஜகவின் இந்த எட்டுவருட ஆட்சியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையேனும் நடத்தியிருந்தால் மோடி இவ்வாறு கூறமாட்டார்.
ஊடகவியலாளர்கள் நறுக்குத்தெரித்தாற் போல கேட்கும் கேள்வியின் மூலம் தலைகுனிந்து நின்றிருப்பார்.
அயல்நாட்டில் பத்திரிக்கையாளரை பார்த்து ஓ மை காட் என அதிர்ச்சி அடைந்ததன் பின்னணியும் அதுவே.
இருந்தாலும் ஒரு பிரதமருக்கு இவ்வளவு பொய் ஆகாது.
எட்டு வருட காலமாகியும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த நம் பிரதமருக்கு துணிவில்லை என்பதே பெரும் தலைக்குனிவு தானே!
பொதுக்கூட்ட உரைகளில் வாயில் வடை சுடுவது வேறு. பத்திரிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது வேறு என்பது மோடி அவர்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.
இந்த எட்டுவருட கால ஆட்சியில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தலைகுனிவை உண்டாக்கிய பல நிகழ்வுகள் உள்ளன.
ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து மக்களை வதைத்தது..
கருப்பு பணத்தை மீட்பதற்கே இந்நடவடிக்கை என்று கூறி அதில் தோல்வியுற்றது..
பல்வேறு குளறுபடிகளைக் கொண்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் சிறு, குறு வியாபாரிகளை மீளவே முடியாதபடி நசுக்கியது
கொரோனா பேரிடர் காலத்தை அறிவார்ந்து அணுகாமல் ஒலி எழுப்பக் கூறியும் டார்ச் லைட் எரியச் செய்யும் படி சொல்லியும் மக்களை முட்டாளாக்கியது
புலம்பெயர் தொழிலாளர்களை நெடுந்தூரம் நடக்கவிட்டே சாகடித்த முறையற்ற ஊரடங்கு
கங்கை நதியில் கணக்கற்ற அளவில் மிதந்த கொரோனா பிணங்கள், பிணங்களை எரியூட்டுவதற்கே வரிசையில் நின்ற டிஜிட்டல் இந்தியாவின் பேரவலம்
பல நூறு விவசாயிகளை காவு வாங்கிய வேளாண் திருத்த சட்டம், இலங்கையை விட அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி பன்மடங்கு உயர்வு, விமான நிலையம் தனியாருக்கு தாரைவார்ப்பு
பிஎஸ்என்எல், எல்ஐசி, ஏர் இந்தியா விமான சேவை போன்றவைகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்றது
இவைகள் எல்லாம் மோடிஜிக்கு தலைகுனிவாக தெரியவில்லை.
லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை அனுமதிப்பது,
நாட்டின் எல்லையை சீனாவிற்கு தாரை வார்த்து விட்டு விளையாட்டுத்தனமாக டிக்டாக் செயலியை தடை செய்வது
எதிர்க்கட்சி தலைவர்களையும் ஊடகவியலாளர்களையும் உளவு பார்ப்பதற்காக பெகாசஸ் செயலியை விலைக்கு வாங்கி உலக அரங்கில் தலைகுனிந்து நின்றது
இப்படி தனது திறமையற்ற ஆட்சி முறையால் இந்தியாவிற்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டு எட்டு வருடத்தில் எந்த தலைகுனிவும் ஏற்படவில்லை என்று சொல்வதற்கு பிரதமர் வெட்கப்பட வேண்டும்.
இந்த எட்டாண்டுகளில் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறைகள் அதிகரித்துள்ளன. இந்தியாவிற்கு வெளியில் இருந்து அதற்கெதிரான கண்டன குரல்கள் எழுகின்றன. ஆனால் பிரதமரிடமிருந்து ஒரு வார்த்தைக்கூட வெளிவரவில்லை.
இதுதான் பெரும் தலைகுனிவு. பெருத்த அவமானம்.
இந்திய நாட்டில் குடிமக்கள் அனைவரும் சமம். அவர்களிடையே மத, இன, மொழி, கலாச்சார ரீதியில் அரசு பாகுபாடு காட்டக்கூடாது.
ஆனால் சமீப காலமாக தொடந்து சிறுபான்மை மக்கள் இரண்டாந்தர குடிமக்களைப் போன்று நடத்தப்படுகிறார்கள்.
அவர்களின் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். அவர்களின் மத நம்பிக்கையும் வழிபாட்டு முறைகளும் அரசியலுக்குரிய பொருளாக ஆக்கப்படுகின்றன.
முஸ்லிம் பெண்கள் அணியும் தலைமுக்காடு பிரச்சனையாக்கப் படுகின்றன. மாட்டிறைச்சி விற்பனை செய்தால் அடித்தே கொல்லப்படுகிறார்கள்.ஜெய்ஸ்ரீ ராம் கூற வற்புறுத்தப்படுகிறார்கள்
ஹலால் இறைச்சியை வாங்காதீர்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிரான வியாபார யுத்தம் செய்யப்படுகிறது.
முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் குறிவைக்கப்பட்டு நீதிமன்றத்தின் துணையால் இழுத்து மூட வழிதேடப்படுகின்றன.
இப்படி தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் அடையாளங்களையும் குறிவைத்து அரசியல் செய்யப்படுகின்றது.
இத்தகு நேரத்தில் சிறுபான்மை மக்களின் பக்கம் நிற்க வேண்டிய அரசு இந்தக் கொடுமைகளுக்கு எதிராக கை கட்டி வேடிக்கை பார்க்கின்றது. சில நேரங்களில் அரசே அதற்கு காரணமாகவும் இருக்கின்றது.
இதை விட வேறென்ன தலைகுனிவு ஏற்பட வேண்டும்.
ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சாசனம் பின்னுக்கு தள்ளப்பட்டு ஜனநாயக விரோத கும்பலின் விருப்பத்திற்கேற்ப சட்டங்கள் இயற்றப்படுமேயானால் அதை விட தலைகுனிவு வேறொன்றுமில்லை.
இப்படி மூட்டை மூட்டையாக தலைகுனிவுகளை வைத்து விட்டு ஒன்று கூட இல்லை என்று கூறவும் ஒரு மனம் வேண்டும்.
அப்படியான 52 இன்ச் பரந்த மனம் நம் பிரதமருக்கு இருக்கிறது.