79:6228 அனுமதி கோருதல்

பாடம் : 2 அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு சலாம் (முகமன்) சொல்லாத வரை (அவற்றினுள்) பிரவேசிக் காதீர்கள். (அவ்வாறு நடப்பதே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவ தற்காக (இது உங்களுக்குக் கூறப்படுகிறது). அதில் நீங்கள் யாரையும் காணா விட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப் படும் வரை அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், திரும்பிப் போய்விடுங்கள்’ என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால்,அவ்வாறே திரும்பிவிடுங்கள். அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன். (யாரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்தால், அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; மேலும், அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாய்ச் செய்வதையும் நீங்கள் மறைத்துவைப்பதையும் நன்கறிவான். (24:27-29) -சயீத் பின் அபில்ஹஸன் (ரஹ்) அவர்கள் (தம் சகோதரர்) ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்களிடம்,அந்நியப் பெண்கள் தங்கள் நெஞ்சுப் பகுதியையும் தம் தலை களையும் திறந்தவண்ணம் இருக்கிறார்கள்என்று சொன்னார்கள். அதற்கு ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள், அப்பெண்களை(ப் பார்க்காதே. அவர்களை) விட்டு உன் பார்வையைத் திருப்பிக்கொள். (ஏனெனில்,) அல்லாஹ் (குர்ஆனில்), (நபியே!) இறை நம்பிக்கையுடைய ஆண்களுக்கு, அவர்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளு மாறும் தங்கள் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கூறுங்கள். இது அவர்களைத் தூய்மையாக்கி வைக்கும்’ (24:30) என்று கூறுகின்றான் என்றார்கள். அவர்களுக்கு எதுவெல்லாம் அனுமதிக்கப் படவில்லையோ அதிலிருந்து தங்கள் கற்பை அவர்கள் பேணிக்காத்திட வேண்டும் என கத்தாதா (ரஹ்) அவர்கள் விளக்கமளித்தார்கள். மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும் இறைநம்பிக்கையுடைய பெண்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் கற்பைப் பேணிக் காத்துக்கொள்ள வேண்டும். (24: 31) (40:19ஆவது வசனத்திலுள்ள) கண்கள் செய்யும் சூதுகள்’ என்பது எவற்றைப் பார்க்கக் கூடாதோ அவற்றை(க்கள்ளத் தனமாக)ப் பார்ப்பதைக் குறிக்கிறது. ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பருவ வயதை அடையாத பெண்களி(ன் உறுப்புகளி)ல் எதைப் பார்ப்பது பாலுணர்வைத் தூண்டுமோ அதைப் பார்ப்பது முறையல்ல. அவள் சிறுமியாக இருந்தாலும் சரியே! அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், மக்காவில் விற்கப்படும் அடிமைப் பெண்களைப் பார்ப்பதும் வெறுக்கத்தக்க செயலாகும். (அவளை விலை கொடுத்து) வாங்கும் எண்ணம் இருந்தாலே தவிர! என்று கூறினார்கள்.4 
6228. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் இப்னு அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தம் வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) ‘கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி(ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தம் கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரின் முகத்தைத் திருப்பிவிட்டார்கள். 
அப்போது அப்பெண், ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் அடியார்களின் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. எனவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (நிறைவேறும்)’ என்று பதிலளித்தார்கள்.5 
Book : 79