7:337 தயம்மும்

பாடம் : 3 சொந்த ஊரில் தங்கியிருக்கும் போது தண்ணீர் கிடைக்காமலிருந்து தொழுகையின் நேரம் சென்றுவிடுமோ என்று அஞ்சினால் தயம்மும் செய்து கொள்ளலாம். இவ்வாறே அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நோயாளியிடம் தண்ணீர் இருந்தும் அதை அவருக்கு ஊற்றித்தர ஆள் கிடைக்காவிட்டால் அவர் தயம்மும் செய்து கொள்ளலாம். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மதீனாவின் புறநகரிலிருந்த) ஜுருஃப் எனும் தம் நிலத்திலிருந்து (மதீனாவை நோக்கி) வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் (மதீனாவிற்கு அருகில் ஒருமைல் தொலைவிலிருந்த) மர்பதுந் நஅம் எனுமிடத்தை அடைந்த போது அஸ்ர் தொழுகையின் நேரம் வந்து விட்டது. உடனே (தண்ணீர் கிடைக்காததால் தயம்மும் செய்து) தொழுதார்கள். பிறகு மதீனாவிற்குள் வந்தார்கள். அப்போது சூரியன் உயர்ந்தே இருந்தது (மறையவில்லை). ஆயினும் அவர்கள் அந்த அஸ்ர் தொழுகையை திரும்பத் தொழவில்லை. 
337. ‘நானும் நபி(ஸல்) அவர்களின் மனைவியான மைமூனாவின் அடிமை அப்துல்லாஹ் இப்னு யஸாரும் அபூ ஜுஹைம் இப்னு அல்ஹாரிது இப்னு அஸ்ஸிம்மத்தில் அன்ஸாரி(ரலி) அவர்களிடம் சென்றோம். ‘எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் ‘பீர்ஜமல்’ என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களை சந்தித்து ஸலாம் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் சென்று (அதில் கையை அடித்து) தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவிய பின்னர் அவரின் ஸலாத்திற்கு பதில் கூறினார்கள்’ என்று அபூ ஜுஹைம்(ரலி) கூறினார்’ என உமைர் என்பவர் அறிவித்தார். 
Book : 7