5375. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
எனக்கு (பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்டது. எனவே, நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து குர்ஆன் வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள்.4 (அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான் நான் நடந்திருப்பேன். அதற்குள் சோர்வினாலும் பசியினாலும் நான் முகம் குப்புற விழுந்துவிட்டேன். (மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது) என் தலைமாட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் (என்னை நோக்கி), ‘அபூ ஹுரைரா!’ என்று அழைத்தார்கள். நான், ‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன், இறைத்தூதர் அவர்களே; கட்டளையிடுங்கள்’ என்று பதிலளித்தேன். அவர்கள் என் கரத்தைப் பிடித்து என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். எனக்கேற்பட்டிருந்த நிலையைப் புரிந்துகொண்டார்கள். என்னைத் தம்முடன் அழைத்துக்கொண்டு தம் இல்லம் சென்றார்கள். எனக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் பால் வழங்க உத்தரவிட்டார்கள். நான் அதிலிருந்து (பால்) அருந்தினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘இன்னும் அருந்துங்கள், அபூ ஹிர்!’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் மறுபடியும் அருந்தினேன். பிறகு ‘மீண்டும் (அருந்துங்கள்)’ என்றார்கள். நான் வயிறு நிரம்பும் வரை மீண்டும் அருந்தினேன். எனவே, வயிறு (உப்பி) பாத்திரத்தை போன்றாம்விட்டது.
பிறகு, நான் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் எனக்கு நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தேன். ‘(என் பசியைப் போக்கும் பொறுப்பினை) உங்களைவிட அதற்கு மிகவும் தகுதியுடையவரிடம் அல்லாஹ் ஒப்படைத்துவிட்டான், உமரே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட நான் இறைவசனத்தை நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்துகொண்டே அதை எனக்கு ஓதிக் காட்டும்படி உங்களிடம் கேட்டேன்’ என்று சொன்னேன். உமர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (என் வீட்டிற்கு) அழைத்துச் சென்று (உங்களுக்கு உணவளித்து) இருந்தால், அதுவே எனக்கு (விலை உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட விருப்பமான தாய் இருந்திருக்கும்’ என்று கூறினார்கள்.5
Book :70