5064. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அநாதை(ப் பெண்களை மணந்து அவர்)களின் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணமுடித்துக கொள்ளலாம். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணந்துகொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்ணையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே ஏற்றதாகும்” எனும் (திருக்குர்ஆன் 04:3 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்.
என் சகோதரியின் (அஸ்மாவின்) புதல்வரே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண் தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தின் மீதும், அழகின் மீதும் ஆசைப்பட்டு அவளை (காப்பாளாரான) அவர், மற்றவர்கள் அவளுக்கு வழங்குவது போன்ற (விவாகக் கொடையான) மஹ்ரை விடக் குறைவானதை வழங்கி அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் (எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்.) இவ்விதம் காப்பாளர்கள் (தம் பொறுப்பிலிருக்கும்) அநாதைப் பெண்களுக்கு நிறைவான மஹ்ரை அளித்து அந்தப் பெண்களுக்கு நீதி செய்யாமல் அவர்களை மணந்துகொள்ள (இந்த வசனத்தின் மூலம்) அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற (மனதுக்குப் பிடித்த) பெண்களை மணமுடித்துக்கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது” என்று பதிலளித்தார்கள். 3
Book :67