3950. ஸஅத் இப்னு முஆத்(ரலி) வாயிலாக இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஅத் இப்னு முஆத்(ரலி) (அறியாமைக் காலத்தில் இணைவைப்போரின் முக்கிய தலைவர்களில் ஒருவனான) உமய்யா இப்னு கலஃபுக்கு நண்பராயிருந்தார். உமய்யா, மதீனா வழியாக (ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காக)ச் செல்லும்போது (மதீனாவில்) ஸஅத்(ரலி) அவர்களிடம் தங்குவான். (அதே போல்) மக்கா வழியாக ஸஅத்(ரலி) சென்றால் உமய்யாவிடம் தங்குவார்கள்.
(ஹிஜ்ரத் நடைபெற்று) நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்த சமயம், உம்ரா செய்யும் நோக்கத்தில் ஸஅத்(ரலி) மக்காவிற்குச் சென்றபோது உமய்யாவிடம் தங்கினார்கள். (அப்போது நடந்ததை ஸஅத்(ரலி) கூறினார்:) ‘இறையில்லம் கஅபாவை வலம் (தவாஃப்) வருவதற்கு (ஏதுவாக) ஆள் நாடமாட்டமில்லாத (அமைதியான) ஒரு நேரத்தை எனக்குக் கூறு’ என்று நான் உமய்யாவிடம் கேட்டேன். (மக்கள் ஓய்வெடுக்கும்) நண்பகலுக்கு நெருக்கமான நேரத்தில் என்னுடன் உமய்யா புறப்பட்டார். (நான் வலம்வந்து கொண்டிருந்த போது) எங்களை அபூ ஜஹ்ல் சந்தித்து (உமய்யாவின் குறிப்புப் பெயரைச் சொல்லி) ‘அபூ ஸஃப்வானேஸ உன்னோடு இருக்கும் இவர் யார்?’ என்று கேட்டார். உமய்யா, ‘இவர்தான் ஸஅத்’ என்றார். அப்போது என்னிடம் அபூ ஜஹ்ல், ‘மதம் மாறிச் சென்றவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிவதாக நினைத்துக் கொண்டு (அவர்களுக்கு மதீனாவில்) தஞ்சமளித்த நீங்கள் கொஞ்சமும் அஞ்சாமல் மக்கா(விற்குள்) வந்து (கஅபாவை) சுற்றிக் கொண்டிருப்பதை நான் காண்பதா…? அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ ஸஃப்வானோடு (மட்டும்) நீ இல்லாவிட்டால் நீ உன் வீட்டாரிடம் சுகமாகப் போய்ச் சேர்ந்திருக்க மாட்டாய்’ என்று கூறினார்.
அதற்கு அபூ ஜஹ்லைப் பார்த்து, நான் உரத்த குரலில், ‘அல்லாஹ்வீன் மீதாணையாக!’ (கஅபாவைச்) சுற்ற விடாமல் மட்டும் என்னை நீ தடுத்தால், நீ (வாணிபக் குழுவுடன் கடந்து) செல்லும் மதீனாவின் தடத்தை நான் இடைமறிப்பேன். இதைவிட அது உனக்கு மிகவும் கடினமானதாயிருக்கும்’ என்று சொன்னேன்.
அப்போது என்னிடம் உமய்யா, ‘ஸஅத்! (மக்காப்) பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் தலைவரான அபுல் ஹகம் (அபூ ஜஹ்ல்) எதிரில் சப்தமிட்டுப் பேசாதே!’ என்று கூறினார்.
அதற்கு நான், ‘உமய்யாவே! (அபூ ஜஹ்லுக்கு வக்கலாத்து வாங்காமல்) எம்மைவிட்டுவிடு. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (நபித்தோழர்கள் உன்னைக் கொலை செய்வார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூற கேட்டேன்’ என்று சொன்னேன்.
‘மக்காவிலா… (நான் கொல்லப்படுவேன்?)’ என்று உமய்யா கேட்டதற்கு, ‘எனக்குத் தெரியாது’ என்று நான் பதிலளித்தேன்.
இதனால் உமய்யா மிகவும் பீதியடைந்தார். தன் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது, (தன் மனைவியிடம்), ‘உம்மு ஸஃப்வானே! என்னைப் பார்த்து ஸஅத் என்ன கூறினார் தெரியுமா?’ என்று கேட்டார்.
‘அவர் (அப்படி) என்ன கூறினார்?’ என்று அவள் கேட்டதற்கு உமய்யா, ‘அவர்கள் (நபித்தோழர்கள்) என்னைக் கொலை செய்வாக்ள் என்று அவர்களிடம் முஹம்மது தெரிவித்தாராம். நான், ‘மக்காவிலா?’ என்று (சஅதிடம்) கேட்டேன். ‘தெரியாது’ என்று ஸஅத் கூறினார்’ (என்று கூறிவிட்டு,) ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! நான், ‘மக்கா’வைவிட்டு (இனிமேல்) வெளியேறப் போவதில்லை’ என்றும் கூறினார்.
பத்ருப் போர் நாள் வந்தபோது, போருக்குப் புறப்படும் படி மக்களைத் தூண்டிக் கொண்டிருந்த அபூ ஜஹ்ல், ‘உங்கள் வணிகக் குழுவைச் சென்றடையுங்கள் (அதைக் காப்பாற்றுங்கள்)’ என்று கூறினார்.
ஆனால், உமய்யா (மக்காவிலிருந்து) வெளியே செல்வதை வெறுத்தார். (இதை அறிந்த) அபூ ஜஹ்ல் அவரிடம் வந்து, ‘அபூ ஸஃப்வானே! (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவரான நீங்களே (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவரான நீங்கள் (போருக்குச் செல்லாமல்) பின்வாங்குவதை மக்கள் கண்டால் உங்களுடன் அவர்களும் பின்வாங்கி (போருக்குச் செல்லாமல் இருந்து) விடுவார்களே’ என்று கூறினார். அபூ ஜஹ்ல், உமய்யாவிடம் இதை (வலியுறுத்திச்) சொல்லிக் கொண்டே இருந்தார்.
முடிவாக, உமய்யா ‘இப்போது நீ, என்னை வென்றுவிட்டாய் (உன் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்). எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நான் மக்கா நகர சாதி ஒட்டகம் ஒன்றை வாங்கப் போகிறேன்’ என்று கூறினார்; (தனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் நிலை வந்தால் தப்பி வந்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஒட்டகம் என்றும் வாங்கினார்.) பிறகு (தன் மனைவியிடம் வந்து) ‘உம்மு ஸஃப்வானே! (போருக்குச் செல்லத் தேவையான சாதனங்களை) எனக்குத் தயார் செய் என்றார் உமய்யா. அப்போது அவள், ‘அபூ ஸஃப்வானே! உங்கள் யஸ்ரிப் (மதீனா) நண்பர் (ஸஅத், நீங்கள் கொல்லப்படுவது குறித்து) உங்களிடம் சொன்னதை மறந்துவிட்டீர்களா? என்று கேட்டாள். அதற்கு உமய்யா, ‘இல்லை. (மறக்கவில்லை.) இவர்களுடன் கடைசி ஆளாகச் செல்வதைத் தவிர வேறெந்த எண்ணமும் எனக்கில்லை’ என்றார்.
(பத்ருப் போருக்கு) உமய்யா புறப்பட்டுச் சென்றபோது (படையினர் முகாமிட்டுத்) தங்கும் ஒவ்வோர் இடத்திலும் (தப்பியோட ஆயத்தமாக தனக்கு அருகிலேயே) தன்னுடைய ஒட்டகத்தைக் கட்டி வைத்துக் கொள்ளலானார். பத்ருப்போர்க்களத்தில் உமய்யாவை வலிமையும் உயர்வும் மிகுந்த அல்லாஹ் (முஸ்லிம் படையால்) கொலை செய்யும் வரையில் தொடர்ந்து அவர் இப்படியே செய்து கொண்டிருந்தார்.
Book :64