பாடம் : 2 முஹாஜிர்களின் சிறப்புகளும் அவர்களின் மேன்மையும்.8 அபூபக்ர் அப்துல்லாஹ் பின் அபீ குஹாஃபா அத்தைமீ (ரலி) அவர்களும் முஹாஜிர்களில் ஒருவர் தாம்.9 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், (ஃபய்உ10 எனும் அந்தச் செல்வம்) தங்களின் இல்லங்களை விட்டும் – சொத்துக்களை விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு உரியதுமாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் அவனது உவப்பையும் விரும்புகின்றார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவிபுரிந்திடத் தயாராயிருக்கின்றார்கள். இவர்களே வாய்மையாளர்களாவர். (59:8) மேலும் அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் இந்த நபிக்கு உதவி செய்யா விட்டால் (அதனால் என்ன?), இறை மறுப் பாளர்கள் அவரை வெளியேற்றிய போது, திண்ணமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்துள்ளான். அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்த போது இருவரில் இரண்டாமவ ராய் இருந்த அவர் – தன் தோழரை நோக்கி,கவலை கொள்ளாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று கூறினார். (9:40) அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஸவ்ர்) குகையில் இருந்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களும், அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறுகின்றனர்.11
3652. பராஉ(ரலி) அறிவித்தார்.
அபூ பக்ர்(ரலி) (என் தந்தை) ஆஸிப்(ரலி) அவர்களிடமிருந்து பதின்மூன்று திர்ஹம்கள் கொடுத்து ஓர் ஒட்டகச் சேணத்தை வாங்கினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என் தந்தை) ஆஸிபிடம், ‘(உங்கள் மகன்) ‘பராவூ’க்குச் கட்டளையிடு’கள். என் சேணத்தை என்னிடம் அவர் சுமந்து வரட்டும்’ என்று கூறினார்கள். அதற்கு ஆஸிப்(ரலி), ‘இணைவைப்போர் உங்களைத் தேடிக் கொண்டிருக்க, நீங்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் மக்காவைவிட்டு வெளியேறியபோது எப்படி செயல்பட்டீர்கள் என்று எனக்கு நீங்கள் அறிவிக்காத வரை நான் (‘பராஉ’க்கு சேணம் கொண்டு வரும்படி) கட்டளையிட மாட்டேன்’ என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), பின்வருமாறு பதிலளித்தார்கள்: நாங்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு இரவு பகலாகக் கண்விழித்துப் பயணித்தோம்… அல்லது எங்கள் இரவிலும் பகலிலும் நாங்கள் நடந்தோம். இறுதியில், நண்பகல் நேரத்தை அடைந்தோம். உச்சிப் பொழுதின் கடும் வெயில் அடிக்கலாயிற்று. ஒதுங்குவதற்கு நிழல் ஏதும் தென்படுகிறதா என்று நான் நோட்டமிட்டேன். அப்போது பாறையொன்று தென்பட்டது. அங்கு நான் சென்றேன். அப்போது அங்கிருந்த நிழலைக் கண்டு அந்த இடத்தைச் சமப்படுத்தினேன். பிறகு, நபி(ஸல்) அவர்கள் படுத்தார்கள். பிறகு நான் எவரேனும் எங்களைத் தேடி வந்திருக்கிறார்களா என்று என்னைச் சுற்றிலும் நோட்டமிட்டபடி நடந்தேன். அப்போது ஆடு மேய்ப்பவன் ஒருவன் தன் ஆட்டை (நாங்கள் தங்கியிருந்த) பாறையை நோக்கி ஓட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். நாங்கள் (ஓய்வெடுக்க) விருமபியது போன்று அவனும் (ஓய்வெடுக்க) நாடி வந்து கொண்டிருந்தான். நான் அவனிடம், ‘நீ யாருடைய பணியாள்? இளைஞனே!’ என்று கேட்டேன். அவன், ‘குறைஷிகளில் ஒருவரின் பணியாள்’ என்று கூறி அவரின் பெயரைக் குறிப்பிட்டான். நான் அவர் இன்னாரெனப் புரிந்து கொண்டேன். எனவே, ‘உன் ஆடுகளில் சிறிது பால் இருக்குமா?’ என்று கேட்டேன். அவன், ‘ஆம், (இருக்கிறது)’ என்று பதிலளித்தான். நான், ‘நீ எங்களுக்காகப் பால் கறந்து தருவாயா?’ என்று கேட்டேன். அவன், ‘ஆம் (கறந்து தருகிறேன்)’ என்று பதிலளித்தான். நான் அவனுடைய ஆட்டு மந்தையிலிருந்து ஓர் ஆட்டைப் பிடிக்கும் படி உத்தரவிட அவ்வாறே அவன் பிடித்தான். பிறகு நான் அதன் மடியைப் புழுதி போக உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். பிறகு அவனுடைய இருகைகளையும் உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். ‘இப்படி’ என்று பராஉ(ரலி) தம் இருகைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது தட்டினார்கள். என அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரலி) கூறினார்: அவன் எனக்குச் சிறிது பாலைக் கறந்து தந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக தோல் குவளை ஒன்றை நான் வைத்திருந்தேன். அதன் வாய் ஒரு துண்டுத் துணியால் மூடப்பட்டிருந்தது. நான் (அதிலிருந்த) நீரை அந்தப் பால் (குவளை) மீது, அதன் அடிப்பகுதி குளிர்ந்து விடும் வரை ஊற்றினேன். பிறகு அதை எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் செல்ல அப்போது அவர்களும் விழித்தெழுந்து விட்டிருந்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்று நான் சொல்ல அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மக்கள் எங்களை (வலை வீசித்) தேடிக் கொண்டிருக்க, நாங்கள் புறப்பட்டோம். (அது வரை இஸ்லாத்தை ஏற்றிராத) சுராக்கா இப்னு மாலிக் இப்னி ஜுஃஷும் என்பவர் தன் குதிரை மீதமர்ந்தபடி எங்களைக் கண்டுவிட்டதைத் தவிர எதிரிகளில் எவரும் எங்களைக் காணவில்லை. (எதிரிகள் எங்களைத் தேடி வந்தபோது) நான், ‘இதோ நம்மைத் தேடி வந்தவர்கள் நம்மை வந்தடைந்துவிட்டார்கள், இறைத்தூதர் அவர்களே!’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘கவலைப்படாதீர்கள், அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்’ என்று கூறினார்கள்.
Book : 62