பாடம் : 1 அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக் கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். உண்மையில் அதிக கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். (49:13) மேலும் அல்லாஹ் கூறுகிறான்: எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். இன்னும் இரத்த பந்த உறவுகளை (சீர்குலைப்பதை) அஞ்சுங்கள். திண்ணமாக அல்லாஹ் உங்களைக் கண் காணித்துக் கொண்டிருக்கிறான். (4:1) மேலும், அறியாமைக் காலத்து வாதங்களில் விலக்கப்பட்டவை (பற்றிய பாடமும்)
3649. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார் மீது படையெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், ‘உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா?’ என்று கேட்பார்கள். ‘ஆம், இருக்கிறார்கள்’ என்று (போரிடச் சென்ற) அவர்கள் பதில் செல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), ‘உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், ‘ஆம், இருக்கிறார்கள்’ என்று சொல்வார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதருடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா?’ என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ‘ஆம், இருக்கிறார்கள்’ என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.
என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book : 62