பாடம் : 1 அல்லாஹ் கூறுகிறான்: அவனே ஆரம்பத்தில் படைக்கின் றான். பிறகு அவனே அதை மீண்டும் படைக்கின்றான். இது அவனுக்கு மிகவும் எளிதானதாகும். (30:27) பார்க்க இறை வசனங்கள்: 1)50 : 15 2)35 : 35 3)71 : 14
3190. இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார்.
பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘பனூ தமீம் குலத்தாரே! நற்செய்தி பெற்று மகிழுங்கள்’ என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘எங்களுக்கு நற்செய்தி கூறினீர்கள். அவ்வாறே எங்களுக்கு (தருமமும்) கொடுங்கள்’ என்று கேட்டார்கள். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது.
அப்போது யமன் நாட்டினர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘யமன் வாசிகளே! (நான் வழங்கும்) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை’ என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோம்’ என்று பதிலளித்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் படைப்பின் ஆரம்பத்தைக் குறித்தும் அர்ஷ் (இறைசிம்மாசனம்) குறித்தும் பேசலானார்கள். அப்போது ஒருவர் வந்து (என்னிடம்), ‘இம்ரானே! உன் வாகனம் (ஒட்டகம்) ஓடிவிட்டது’ என்று கூறினார். (நான் ஒட்டகத்தைத் தேடச் சென்று விட்டேன்.) நான் எழுந்து செல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Book : 59