57:3094 குமுஸ்-ஐந்திலொரு பங்கு கடமை

3094. முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார். 
நான் மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அவர்களிடம் சென்று அந்த (ஃபதக் தொடர்பான) நிகழ்ச்சி பற்றிக் கேட்டேன் அவர்கள் கூறினார்கள். 
கடும் உச்சி வெயில் அடித்துக் கொண்டிருந்த நீண்ட ஒரு பகல் வேளையில் என் வீட்டாருடன் நான் அமர்ந்திருந்தபோது (கலீஃபா) உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் தூதர் ஒருவர் என்னிடம் வந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அழைக்கிறார், வாருங்கள்’ என்றார். நான் அவருடன் சென்று உமர்(ரலி) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அவர்கள் அங்கே ஒரு கட்டிலில் ஈச்ச ஓலையாளலான மேற்பரப்பில் அதற்கும் தமக்கும் இடையே பாய் எதுவுமிலலாமல் ஒரு தோல் தலையணையின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தேன். அப்போது அவர்கள், ‘மாலிக்கே! உங்கள் குலத்தாரில் சில குடும்பத்தார் நம்மிடம் வந்தனர். அவர்களுக்கு (அளவு குறிப்பிடாமல்) சிறிய ஓர் அன்பளிப்புத் தரும்படி நான் உத்தரவிட்டுள்ளேன். அதை உங்கள் கைவசமாக்கிக் கொண்டு அவர்களிடையே நீங்கள் பங்கிடுங்கள்’ என்றார்கள். நான், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! வேறெவரிடமாவது இந்தப் பொறுப்பை நீங்கள் ஒப்படைத்தால் நன்றாயிருக்குமே’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘நீங்கள் அதைக் கைவசமாக்கிக் கொண்டு சென்று அவர்களிடையே பங்கிடுங்கள்’ என்று (மீண்டும்) உமர் அவர்கள் சொன்னார்கள். நான் உமரிடம் அமர்ந்து கொண்டிருந்தபோது, அவர்களிடம் அவர்களின் மெய்க் காவலர் ‘யர்ஃபஉ’ என்பவர் வந்து, ‘உஸ்மான்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்களா?’ என்று கேட்டார். உமர்(ரலி), ‘ஆம்’ என்று கேட்டார். உமர்(ரலி), அவர்கள், ‘ஆம்’ என்று அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து சலாம் சொல்லி அமர்ந்தார்கள். பிறகு ‘யர்ஃபஉ’ சற்று நேரம் தாமதித்து வந்து, ‘அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் தாங்ள் சந்திக்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டதற்கு உமர் அவர்கள், ‘ஆம்’ என்று அவ்விருவருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதியளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் சலாம் சொல்லி அமர்ந்தனர். அப்பாஸ்(ரலி), ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்’ என்றார்கள். அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு பனூ நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து (‘ஃபய்உ’ நிதியாகக்) கொடுத்த சொத்துகள் தொடர்பாக இருவரும் சச்சரவிட்டு வந்தனர். அப்போது உஸ்மான்(ரலி) மற்றும் அவர்களின் தோழர்களின் குழு, ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்து விடுங்கள்’ என்று கூறியது. உமர்(ரலி), ‘பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கிறேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான எங்களுக்கு) எவரும் வாரிசாக மாட்டார். நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தருமமே’ என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், ‘அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்’ என்று பதிலளித்தனர். உடனே, உமர்(ரலி), அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, ‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அவ்விருவரும், ‘ஆம், அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்’ என்று பதிலளித்தனர். உமர்(ரலி), ‘அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இச்செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக் கொடுக்கவில்லை.’.. (என்று கூறிவிட்டு,) ‘அல்லாஹ் எச்செல்வத்தை அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் துதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அச்செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகிறவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கிறான்’ என்னும் (இந்த 59:06) இறைவசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து, ‘எனவே, இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமுமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை; அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில், அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே மீதமாயிற்று. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடச் செலவை அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டு வந்தார்கள்’ (இவ்வளவும் சொல்லிவிட்டு,) ‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை கேட்கிறேன். இதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘ஆம் (அறிவோம்)’ என்று பதிலளித்தார்கள். பிறகு, அலீ அவர்களிடமும் அப்பாஸ்(ரலி) அவர்களிடமும், ‘உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன். நீங்கள் இதை அறிவீர்களா?’ என்று கேட்டுவிட்டு (தொடர்ந்து), ‘பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது அபூ பக்ர்(ரலி), ‘நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநியாவேன்’ என்று கூறி அ(ந்த செல்வத்)தைக் தம் கைவசம் எடுத்தார்கள். அது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போல் செயல்பட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார்கள்; நல்ல விதமாக நடந்தார்கள்; நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது நான் அபூ பக்ர்(ரலி) அவர்களின் பிரதிநிதியாக ஆனேன். அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதில் நடந்து கொண்ட முறைப்படியும் அபூ பக்ர்(ரலி) நடந்து கொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டு வந்தேன். நான் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன்; நல்ல விதமாக நடந்து கொண்டேன்; நேரான முறையில் நடந்து கொண்டேன்; உண்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு, நீங்கள் இருவரும் என்னிடம் வந்து பேசினீர்கள்; நான் உங்களிடம் ஒரு முறை பேசினேன். உங்கள் இருவரின் விஷயமும் (கோரிக்கையும்) ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேரவேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்ட படி வந்தீர்கள். இவரும் என்னிடம் தன் மனைவிக்கு அவரின் தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கை (பெற) விரும்பிய படி வந்தார்… அலீ(ரலி) அவர்களைத் தான் அப்படிச் சொன்னார்கள். நான் உங்கள் இருவரிடமும், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான நாங்கள்விட்டுச் செல்லும் சொத்துக்களில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தருமமே’ என்றார்கள்’ என்றேன். எனினும், ‘அதை உங்கள் இருவரிடமே கொடுத்து விடுவது தான் பொறுத்தமானது’ என்று எனக்குத் தோன்றியபோது நான், ‘நீங்கள் இருவரும் விரும்பினால் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, ‘நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூ பக்ர்(ரலி) எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன் படியே நீங்கள் இருவரும் செயல்படுவீர்கள்’ என்னும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்து விடுகிறேன்’ என்று சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும், ‘எங்களிடம் அதைக் கொடுத்து விடுங்கள்’ என்று சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்து விட்டேன்’ என்றார்கள். பிறகு (குழுவினரை நோக்கி), ‘எனவே, நான் உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன். நான் இவ்விருவரிடமும் அந்த நிபந்தனையின்படி அச்சொத்தைக் கொடுத்து விட்டேனா?’ என்று கேட்டார்கள். குழுவினர், ‘ஆம் (கொடுத்து விட்டீர்கள்)’ என்று பதிலளித்தனர். பிறகு அலீ(ரலி) மற்றும் அப்பாஸ்(ரலி) ஆகியோரை நோக்கி, ‘நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன். நான் அதை உங்கள் இருவரிடமும் அந்த நிபந்தனையின்படியே கொடுத்து விட்டேனா?’ என்று கேட்க, அவ்விருவரும், ‘ஆமாம்’ என்றார்கள். உமர்(ரலி), ‘இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகிறீர்களா? எவனுடைய அனுமதியுடன் வானமும் பூமியும் நிலை பெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் அந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தர மாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்து விடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்’ என்றார்கள். 
Book :57