பாடம் : 1 மக்களிடையே சமாதானம் செய்து வைத்தல். அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களின் பெரும்பாலான இரகசியப் பேச்சுகளில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தான தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும் படியோ, மக்களிடையே சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர் களின் பேச்சுக்களைத் தவிர. (அவற்றில் நன்மை உண்டு.) மேலும், எவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவ்வாறு செய்கின்றாரோ அவருக்கு நாம் விரைவில் மகத்தான பிரதிபலனை வழங்குவோம். (4:114) மேலும், மக்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்பதற்காகத் தலைவர் தன் தோழர்களுடன் (சண்டை சச்சரவுள்ள) இடங்களுக்குச் செல்வது.
2690. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குள் ஏதோ தகராறு இருந்து வந்தது. எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் புடைசூழ அவர்களிடையே சமாதானம் செய்து வைப்பதற்காக அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். (நபி(ஸல்) அவர்கள் அங்கு சென்றிருந்த போது) தொழுகை நேரம் வந்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் இன்னும் (திரும்பி) வரவில்லை. அப்போது பிலால்(ரலி) பாங்கு சொன்னார்கள். (அதன் பிறகும்) நபி(ஸல்) அவர்கள் வரவில்லை. எனவே, பிலால்(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, ‘நபி(ஸல்) அவர்கள் (வேலையின் காரணத்தால் உடனே வர முடியாமல்) தாமத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். தொழுகை நேரம் வந்துவிட்டது. எனவே, தாங்கள் மக்களுக்குத் (தலைமை தாங்கித் தொழுவிக்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘சரி, நீங்கள் விரும்பினால் தொழுகை நடத்துகிறேன்’ என்று கூறினார்கள். உடனே, பிலால்(ரலி) தொழுகைக்கு இகாமத் சொல்ல, அபூ பக்ர்(ரலி) (தொழுகை நடத்துவதற்காக) முன்னால் சென்றார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் வரிசைகளுக்கிடையே நடந்தவர்களாக வந்து, இறுதியில் முதல் வரிசையில் நின்றார்கள். உடனே, மக்கள் கைதட்டத் தொடங்கி இறுதியில் கைத்தட்டலை அதிகரித்தார்கள். அபூ பக்ர்(ரலி) தொழுகையின்போது திரும்பிப் பார்க்காதவராக இருந்தார்கள். இருந்தாலும் (மக்கள் கைதட்டும் ஓசையைக் கேட்டு) திரும்பிப் பார்த்தார்கள். தமக்குப் பின்னே, அங்கே நபி(ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கிச் சைகை செய்து, அப்படியே தொழுகை நடத்தும்படி கட்டளையிட்டார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) தம் கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, திரும்பாமல் அப்படியே பின்பக்கமாக நகர்ந்து, இறுதியில் வரிசைக்குள் புகுந்து கொண்டார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் முன்னால் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்த பின் மக்களை நோக்கி, ‘மக்களே! நீங்கள் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபகரமான விஷயத்தைக் காண) நேர்ந்தால் கைதட்டத் தொடங்கி விடுகிறீர்கள். பெண்கள் தான் கைதட்ட வேண்டும். (ஆண்களில்) ஒருவர் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபணைக்குரிய விஷயத்தைக்) காண நேர்ந்தால், அவர் ‘சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ்வே தூய்மையானவன்’ என்று கூறட்டும். ஏனெனில், அதைக் கேட்பவர் எவரும் திரும்பிப் பார்க்காமல் இருக்க மாட்டார்’ என்று கூறிவிட்டு, ‘அபூ பக்ரே! நான் உங்களுக்குச் சைகை செய்தபோது நீங்கள் ஏன் மக்களுக்குத் தொழுகை நடத்தவில்லை?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுகை நடத்துவதற்கு அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை’ என்று பதிலளித்தார்கள்.
Book : 53