52:2637 சாட்சியங்கள்

பாடம் : 1 வாதி தான் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! ஒரு குறிப்பிட்ட காலத் தவணைக்கு நீங்கள் உங்களுக்குள் கடன் கொடுத்து வாங்கிக் கொள்வீர்களாயின் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடையே எழுத்தர் ஒருவர் அதை நீதியுடன் எழுதட்டும். எழுதத் தெரிந்தவர், அல்லாஹ் அவருக்குக் கற்றுத் தந்ததைப் போன்று (பிறருக்காக அவரும்) எழுதித் தரட்டும். அவர் எழுதித் தர மறுக்க வேண்டாம். எவர் மீது (கடன் சுமையைத் தீர்க்கும்) பொறுப்புள்ளதோ அவர் (எழுதுவதற்காக) வாசகம் சொல்லித் தரட்டும். (அந்த நேரத்தில்) தன் அதிபதிக்கு அவர் அஞ்சட்டும். மேலும், கடன் விஷயமாகத் தீர்மானிக்கப்பட்டதிலிருந்து எதையும் அவர் மறைக்க வேண்டாம். (உள்ளதை உள்ளபடி சொல்லட்டும்.) கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்புடையவர் பேதையாகவோ (மூளை வளர்ச்சி குன்றியவராகவோ) பலவீனராகவோ,வாசகம் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது காப்பாளர் நீதியுடன் (வாசகம்) சொல்லட்டும். மேலும், உங்களில் இரு ஆண்களை சாட்சி களாக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால் ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்; அவ்விருவரில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி அவளுக்கு நினைவூட்டுவதற்காக. இவர்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாட்சிகளாய் இருக்க வேண்டும். சாட்சிகள் (சாட்சிய மளிப்பதற்காக) அழைக்கப்படும் போது (வர) மறுக்கக் கூடாது. (கடன் தொகை) சிறிதாயினும் பெரிதாயினும் அதை எழுதி வைத்துக் கொள்வதில் கவனக் குறைவாக இருந்து விடாதீர்கள். இதுவே, அல்லாஹ் விடத்தில் நீதிமிக்க வழிமுறையாகும். மேலும், சாட்சியத்தை நிலைநாட்டக் கூடியதும் நீங்கள் சந்தேகம் கொள்ளாமலிருக்கப் பொருத்தமானதும் ஆகும். ஆனால், அது உங்களுக்கிடையே நீங்கள் (வழக்கமாக) செய்து கொள்கின்ற உடனடி கொடுக்கல் வாங்கலாக இருக்குமாயின், அதை எழுதி வைத்துக் கொள்ளாமல் இருப்பதில் உங்கள் மீது குற்றமேதும் இல்லை. எனினும், வியாபார ஒப்பந்தங்கள் செய்து கொண்டால் அவற்றிற்கு சாட்சியம் வைத்துக் கொள்ளுங்கள். எழுத்தரும் சாட்சிகளும் துன்புறுத்தப்படக் கூடாது. அவ்வாறு நீங்கள் துன்புறுத்தினால் அது நீங்கள் செய்யும் பாவமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவன் உங்களுக்குச் சரியான வழிமுறைகளைக் கற்றுத் தருகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்து விஷயங் களையும் நன்கறிந்தவன் ஆவான். (2:282) மேலும், அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவர்களாக வும் அல்லாஹ்வுக்காக சாட்சி சொல்பவர் களாகவும் திகழுங்கள். (நீங்கள் செலுத்து கின்ற நீதியும் சொல்லும் சாட்சியமும்) உங்களுக்கோ உங்கள் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கோ எதிராக இருப்பினும் சரியே. (நீங்கள் யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ) அவர் வசதியுடையவராகவோ ஏழையாகவோ இருப்பினும் சரியே. அல்லாஹ் அவர்களை (உங்களை விட) அதிகமாகப் பாதுகாப்பவனாக இருக்கிறான். எனவே, நீதி செலுத்தத் தவறி இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். நீங்கள் நீதிக்குப் புறம்பாக சாட்சி சொன்னாலோ (நீதியைக் காப்பாற்ற மனமின்றி) சாட்சியமளிக்காமல் விலகிக் கொண் டாலோ நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்துள்ளான். (4:135) பாடம் : 2 ஒருவரை நல்லவர் என்று அறிவிப் பதற்காக (அவரைப் பற்றி) நான் நல்ல தையே அறிந்துள்ளேன் என்று ஒருவர் சொன்னால்… …அது (சாட்சியாக) ஏற்கப்படும் என்று கூறியவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களின் மீதான அவதூறு குறித்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வருகிறார்கள். அதில், நபி (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களிடம், ஆயிஷா மீது கூறப்படும் இந்தக் குற்றச் சாட்டின் காரணத்தால், அவரை (விவாகரத்து செய்து) பிரிந்து விடலாமா என்று ஆலோசனை கேட்ட போது, அவர்கள் தங்கள் மனைவி. அவர்களைப் பற்றி நாங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் அறிய மாட்டோம் என்று உஸாமா (ரலி) அவர்கள் கூறினார்கள். 
2637. இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார். 
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), இப்னுல் முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்) மற்றும் உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோர் எனக்கு (மக்கள் சிலர்) ஆயிஷா(ரலி) அவர்களை (அவதூறு பேசியது) பற்றிய ஹதீஸை அறிவித்தார்கள். ஒருவர் அறிவித்த ஹதீஸ் மற்றவர் அறிவித்த ஹதீஸை உறுதிப்படுத்துவதாக இருந்தது. ‘அபாண்டப் பழி சுமத்தியவர்கள் தாங்கள் பேசிய அவதூறுகளையெல்லாம் சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (ஆயிஷாவை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கலப்பதற்காக அலீ(ரலி) அவர்களையும், உஸாமா(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது ‘வஹீ’ (தற்காலிகமாக நின்று போய், வரத்) தாமதமாகிக் கொண்டிருந்தது. உஸாமா(ரலி), ‘அவர்கள் (ஆயிஷா), தங்கள் மனைவி. (அவர்களைப் பற்றி) நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிய மாட்டோம்’ என்று கூறினார்கள். மேலும், (ஆயிஷா(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீரா(ரலி), ‘அவர்கள் (ஆயிஷா), தம் வீட்டாரின் குழைத்தமாவை (அப்படியே)விட்டுவிட்டு உறங்கி விடுகிற இளவயதுச் சிறுமி என்பதையும் (அப்படி அவர்கள் தூங்கும் போது) வீட்டு ஆடு வந்து அதைத் தின்றுவிடும் என்பதையும் தவிர அவர்களின் மீது குறைசொல்லக் தக்க விஷயம் எதையும் நான் பார்க்கவில்லை’ என்று கூறினார்கள். (அதன்பின்னர்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் வீட்டாரின் விஷயத்தில் எனக்கு (மன) வேதனை தந்துவிட்ட ஒரு மனிதனை தன் சார்பாக தண்டிக்கக் கூடியவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடமிருந்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை. மேலும், எந்த மனிதரைக் குறித்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேனோ அவரைப் போய் (ஆயிஷாவுடன் இணைத்து) அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர்’ என்றார்கள். 
Book : 52