பாடம் : 1 உணவிலும் பயணச் செலவிலும் பிற பண்டங்களிலும் கூட்டுச் சேருதல். மற்றும் அளக்கப்படும் பொருள் களையும் நிறுக்கப்படும் பொருள் களையும் பங்கிடுவது எப்படி? (அளக்காமல் நிறுக்காமல்) குத்து மதிப்பாகப் பங்கிட வேண்டுமா? அல்லது சமமான ஒவ்வொரு பிடியாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமா? ஏனெனில், பிரயாணக் கட்டுச் சாதங்களைப் பிரயாணிகள் தமக்குள் பொதுவாக வைத்திருக்கும் போது, ஒருவர் அவற்றில் ஒன்றை எடுத்துச் சாப்பிட, மற்றொருவர் இன்னொன்றை (சற்று கூடுதலாகவோ சற்றுக் குறைவாகவோ) எடுத்துச் சாப்பிடுவதில் முஸ்லிம்கள் குற்றம் ஏதும் காணவில்லை. இவ்வாறே, தங்கம் வெள்ளியை நிறுக்காமல் (தங்கத்திற்குப் பகரமாக வெள்ளியை அல்லது வெள்ளிக்குப் பகரமாக தங்கத்தைக்) குத்துமதிப்பாகப் பங்கிடுவதும், கூட்டாக அமர்ந்து உண்ணும் பொழுது இரண்டு பேரீச்சம் பழங்களை ஒரு சேர (எடுத்து) உண்பதும் (கூட்டான பயண உணவாக இருக்கும் போது) அனுமதிக்கப்படும்.
2483. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அந்தப் படையினருக்கு அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களைத் தளபதியாக ஆக்கினார்கள். அவர்கள் (படையினர்) முந்நூறு பேர் இருந்தனர். அவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். நாங்கள் புறப்பட்டோம். பாதி வழியிலேயே எங்கள் கையிருப்பில் இருந்த (பயண) உணவு தீர்ந்து போய்விட்டது. அபூ உபைதா(ரலி) அந்தப் படையின் (கைவசமிருந்த) கட்டுச் சாதங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டும் படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டன. இரண்டு பைகள் (நிறைய) பேரீச்சம் பழங்கள் சேர்ந்தன. அபூ உபைதா(ரலி) அவற்றை எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கொடுத்து வந்தார்கள். இறுதியில், அவையும் தீர்ந்து போய்விட்டன. எங்களுக்கு (ஆளுக்கு) ஒவ்வொரு பேரீச்சம் பழம்தான் கிடைத்து வந்தது.
…இதை ஜாபிர்(ரலி) சொன்னபோது, இதைக் கேட்டுக் கொண்டிருந்த அறிவிப்பாளர் வஹ்ப் இப்னு கைஸான்(ரஹ்), ‘ஒரு பேரீச்சம் பழம் எப்படி போதும்?’ என்று கேட்டதற்கு ஜாபிர்(ரலி), ‘அதுவும் தீர்ந்து போன பின்புதான் அதன் மதிப்பை நாங்கள் உணர்ந்தோம்’ என்று பதிலளித்தார்கள்..
பிறகு நாங்கள் கடல் வரை வந்து சேர்ந்து விட்டோம். அங்கு தற்செயலாக சிறிய மலை போன்ற (திமிங்கல வகை) மீன் ஒன்று கிடைத்தது. அதிலிருந்து (எங்களுடைய) அந்தப் படை பதினெட்டு நாள்கள் உண்டது. பிறகு அபூ உபைதா(ரலி) அதன் விலா எலும்புகளிலிருந்து இரண்டு விலா எலும்புகளை பூமியில் நட்டு வைக்கும்படி உத்திரவிட்டார்கள். அவ்வாறே, அவை இரண்டும் நட்டப்பட்டன. பிறகு, ஒட்டகத்தை அதன் கீழே ஓட்டிச் செல்லும்படி உத்திரவிட்டார்கள். அவ்வாறே ஓட்டிக் செல்லப்பட்டது. அது (அந்தத் திமிங்கலத்தின்) விலா எலும்புகளின் கீழே சென்றது. ஆனால், அவற்றை அது தொடவில்லை.
Book : 47