பாடம் : 1 அநீதிகளுக்காகப் பழிவாங்கல். அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) வேதனை வரக் கூடிய அந்நாளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அன்று இந்த அக்கிரமக் காரர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவனே! இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! அவ்வாறு அளித்தால், உனது அழைப்பினை நாங்கள் (விரைந்து) ஏற்றுக் கொள்வோம்; மேலும், (உன்) தூதர்களையும் பின்பற்றுவோம். (அப்போது அவர்களுக்கு இவ்வாறு தெளிவாக பதில் கூறப்படும்:) எங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன்னர் (பலமுறை) சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தவர்கள் தாமே நீங்கள்! உண்மையில் தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்கள் வாழ்ந்த ஊர்களில் தான் நீங்கள் வசித்து வந்தீர்கள். அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டிருந்தது. மேலும், அவர்களை உதாரணமாகக் கூறியும் உங்களுக்கு உண்மையைப் புரிய வைத்திருந்தோம். அவர்கள் வித விதமான சூழ்ச்சிகளைச் செய்து பார்த்தனர். அவர்களுடைய சூழ்ச்சிகள் மலை களையே பெயர்த்து விடக் கூடியவையாக இருப்பினும் அவர்களுடைய ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிக்கும் சூட்சுமம் அல்லாஹ்விடம் இருந்தது. (நபியே!) அல்லாஹ், தன் தூதர்களிடம் அளித் துள்ள வாக்குறுதிக்கு மாறு செய்வான் என்று ஒரு போதும் நீங்கள் கருத வேண்டாம். திண்ணமாக, அல்லாஹ் வல்லமையுடையவனும் பழி வாங்கு பவனும் ஆவான். (14:44-47)
2440. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.
என அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.
Book : 46