பாடம் : 4 கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமை யாளர் ஒரு வருட காலத்திற்குப் பின்பும் கிடைக்கா விட்டால்,அது அதைக் கண்டெடுத்தவருக்கே உரியதாகும்.
2429. ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக் கொள். பிறகு, ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக் கொள்’ என்றார்கள். அந்த மனிதர், ‘வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்கு உரியது.’ என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப்பையும் (வயிறும்) அதன் குளம்பும் உள்ளது. அதை அதன் எஜமான் சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது; (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்கிறது;) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கிறது’ என்று கூறினார்கள்.
Book : 45