4:135 உளுச் செய்வது

பாடம் : 1 உளூச் செய்வது குறித்து வந்துள்ளவை. அல்லாஹ் கூறுகிறான்: விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்கு தயாராகும்போது (முன்னதாக) உங்கள் முகங்களையும் கைகளை முழங்கை வரையும் கால்களை கணுக்கால்கள் வரையும் கழுவிக்கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக்கொள்ளுங்கள். (5:6). அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்: உளூ செய்யும்போது உறுப்புக்களை ஒரு தடவை கழுவுவது தான் கட்டாயம் என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மேலும் அவர்களே அவ்வுறுப்புக்களை இரண்டிரண்டு தடவைகளும் மும்மூன்று தடவைகளும் கழுவி உளூ செய்திருக்கிறார்கள். மூன்று தடவைக்குமேல் அதிகப்படுத்தியது இல்லை. நபி (ஸல்) அவர்களின் செயல்முறைக்கு மாற்றம் செய்வதையும் உளூ செய்வதில் (மூன்று தடவைகள் என்ற அந்த) வரம்பை மீறுவதையும் மார்க்க அறிஞர்கள் வெறுத்திருக்கிறார்கள். பாடம் : 2 உடல் தூய்மையின்றித் தொழுகை ஏற்கப்படாது. 
135. ‘சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது’ என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபுஹுரைரா(ரலி) கூறியபோது, ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் ‘அபூ ஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் ‘சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது’ என்றார்கள்’ ஹம்மாம் இப்னு முனப்பஹ் அறிவித்தார். 
Book : 4