2301. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
‘மக்காவிலுள்ள என் உறவினர்களையும் சொத்துக்களையும் உமய்யா இப்னு கலஃப் (என்ற இறைமறுப்பாளன்) பாதுகாக்க வேண்டும்’ என்றும் ‘மதீனாவிலுள்ள அவனுடைய உறவினர்களையும் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன்’ என்றும் அவனுடன் எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்டேன். (ஒப்பந்தப் படிவத்தில்) ‘அப்துர் ரஹ்மான்’ (ரஹ்மானின் அடிமை) என்று என் பெயரை எழுதியபோது, ‘ரஹ்மானை நான் அறியமாட்டேன். அறியாமைக் காலத்து உம்முடைய பெயரை எழுதும் என்று அவன் கூறினான். நான் அப்து அம்ர் என்று (என் பழைய பெயரை) எழுதினேன். பத்ருப் போர் நடந்த தினத்தில் மக்களெல்லாம் உறங்கிய உடன் அவனைப் பாதுகாப்பதற்காக மலையை நோக்கி சென்றேன். அவனை பிலாலும் பார்த்துவிட்டார். பிலால் உடனே வந்து அன்ஸாரிகள் குழுமியிருந்த இடத்தை அடைந்து, ‘இதோ உமய்யா இப்னு கலப்! இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது எனக் கூறினார். (இவன் பிலாலுக்கு எஜமானனாக இருந்து அவரைச் சித்திரவதை செய்தவன்) பிலாலுடன் அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்து விடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்நிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்ஸாரிகள் கொன்றனர். பிறகும் என்னைத் தொடர்ந்து வந்தனர். உமய்யா உடல் கனத்தவனாக இருந்தவன். (அதனால் ஓட இயலாவில்லை) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், ‘குப்புறப்படுப்பீராக!’ என்று கூறினேன். அவன் குப்புற விழுந்ததும் அவனைக் காப்பாற்றுவதற்காக அவன் மேல் நான் விழுந்தேன். அன்ஸாரிகள் எனக்குக் கீழ்ப்புறம் வாளைச் செலுத்தி அவனைக் கொன்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் என் காலையும் தம் வாளால் வெட்டினார்.
‘அப்துர் ரஹ்மான்(ரலி) தம் பாதத்தின் மேல் பகுதியில் அந்த வெட்டுக் காயத்(தின் வடு இருப்ப)தை எங்களுக்குக் காட்டினார்!’ என்று அவரின் மகன் கூறுகிறார்.
Book :40