34:2049 வியாபாரம்

2049. அனஸ்(ரலி) அறிவித்தார். 
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மதீனாவுக்கு வந்தபோது, அவர்களையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) வசதி படைத்தவராக இருந்தார். அவர் அப்துர் ரஹ்மானிடம், ‘என்னுடைய செல்வத்தைச் சரி பாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்து செய்து) உமக்கு மண முடித்துத் தருகிறேன்!’ எனக் கூறினார். அதற்கு அப்துர் ரஹ்மான்(ரலி), ‘உம்முடைய குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!’ எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்! எனக் கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ‘என்ன விசேஷம்?’ எனக் கேட்டார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்!’ என்றார். நபி(ஸல்) ‘அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்?’ எனக் கேட்டார்கள். ‘ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!’ என அவர் பதில் கூறினார். அதற்கு ‘ஓர் ஆட்டையேனும் மணவிருந்ததாக அளிப்பீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
Book :34