பாடம் : 1 லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக, நாம் அதை (-குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் வானவர்களும் ரூஹும் (-ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை நீடிக்கும்! (97:1:5) குர்ஆனில் ஒன்றைப் பற்றி மா அத்ராக்க (உமக்கு எது அறிவித்தது?) என்று கூறப்பட்டால் அதை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விட்டான் என்று பொருள்; வ மாயுத்ரீக்க (எது உமக்கு அறிவிக்கும்?)என்று கூறப்பட்டால் அதை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கவில்லை என்று பொருள்! என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2014. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 32