30:1891 நோன்பு

பாடம் : 40 ரமளானில் விடுபட்ட நோன்பை எப்போது நிறைவேற்ற வேண்டும்? வேறு நாட்களில் நோற்கலாம் என்று அல்லாஹ் கூறுவதால் விடுபட்ட நோன்புகளைப் பிரித்துப் பிரித்து நோற்பதில் தவறில்லை! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். விடுபட்ட ரமளான் நோன்புகளை நிறைவேற்றாமல் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது பொருந்தாது! என்று சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் அடுத்த ரமளான் வரும்வரை விடுபட்ட நோன்பை நோற்காதிருந்தால் இரண்டு நோன்புகளையும் அவர் நோற்பார்; அவர் உணவளிக்கத் தேவையில்லை! என்று இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நோன்பை விட்டவர் (அதற்குப் பரிகாரமாக) ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட நோன்புகளை வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்றுதான் அல்லாஹ் கூறுகிறான்;உணவளிக்குமாறு கூறவில்லை. 
1891. தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அறிவித்தார். 
ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்; ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்! என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஐந்து நேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர! (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; உபரியாக) நீயாக விரும்பித் தொழுதால் மட்டுமே உண்டு!’ என்று பதிலளித்தார்கள். அவர் ‘அல்லாஹ் என் மீது கடமையாக்கிய ஸகாத் எது என்று எனக்குக் கூறுங்கள்!’ என்றார். நபி(ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அவருக்குக் கூறினார்கள். அப்போது அவர், ‘சத்தியத்தின் வாயிலாக உங்களை கண்ணியப்படுத்திய இறைவன் மேல் ஆணையாக! நான் உபரியாக எதையும் செய்ய மாட்டேன்; அல்லாஹ் என் மீது கடமையாக்கியதில் எதையும் குறைக்கவும் மாட்டேன்!’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள். ‘இவர் கூறுவது உண்மையானால் வெற்றி பெற்றுவிட்டார்!’ என்றோ ‘இவர் கூறுவது உண்மையானால் இவர் சொர்க்கத்தில் நுழைவார்!’ என்றோ கூறினார்கள். 
Book : 30